அதிரூபன் தோன்றினானே வாசகர் கவிதைகள் பகுதி 1

தோன்றின் புகழாய்த் தோன்ற வேண்டும் சொன்னார் வள்ளுவர்
அதிரூபன் தோன்றினானே வாசகர் கவிதைகள் பகுதி 1

அதிரூபன் தோன்றினானே !

மிதிலைவீதி மிதித்திடும் கால்கள் பூவாய்த் தோன்ற
சதிராடும் கண்களிலே சாகாத ஆற்றல் தோன்ற
விதியோடு போராடும் வில்லம்பில் வல்லமை தோன்ற
அதிரூபன் தோன்றினானே அதோ அந்த தேவதை தேடி!

முதிராத பயிராக முகமெல்லாம் நாணச் சிவப்பாக
மதிமேவும் முகில்போல மலர்மேனி தழுவும் குழலாட
நதிமேலே நீந்திவரும் நறுமலர்க் கொன்றை மாலை
அதுபோலே தமயந்தி பார்த்தபடி அதிரூபன் தோன்றினானே!

கன்வரிஷி கன்னிமகள் காட்டினிலே மானோடு ஆட
பொன்னரிசி கண்களிலே பூப்பூக்கும் ஆச்சரியம் மேவ
விண்ணரசன் வெண்ணிலாத் தேரினிலே வந்தது போல
பெண்ணரசி கண்விரிய பித்தாக்கி அதிரூபன் தோன்றினானே!

வரம்கேட்டு யுகம்பல வனத்தில் தவம்செயும் முனிவன்
சிரமெல்லாம் கரமெல்லாம் சிலந்திவலை பூட்டி வைக்க
தரையெல்லாம் அக்கினித் தவழுகின்ற வெப்பக் காட்டில்
அறக்கடவுள் ஆணைப்படி அதோஅந்த அதிரூபன் தோன்றினானே!

- கவிஞர் மஹாரதி

**

கீழ்வானில் என் அதிரூபன் தோன்றினானே !--எழுவண்ணக்
கதிர்வாரி என் மேல் இறைத்தே, சதிராடினானே  ! 
மரக்கிளைகளில் ஊடுருவி, உவப்பூட்டினான் !
மலைமுகட்டினில் பனியின் பகையாகினான்  ! 
வயல்வெளிகள், செடிகொடிகளோடு நட்பாகினான் !
வரம்பின்றி நீர்த்துளிகளை வைரமாக்கினான் !  
குயில்கள்  இனிதேப் பண்ணிசைக்கப் பவ்யமானான் !
கூட்டமான மேகங்களைக் களைத்து விட்டான்  ! 
பூ மணக்கத் தென்றலுக்குத் தாரை வார்த்தான் ! -- எனை,
பூமியே ! பேரழிகியே ! எனக் கொஞ்சி நின்றான் !.. 
கும்பலாய்ச்  செங்கதிர் உறவுகளை அழைத்து வந்தான் !
என்னோடு, கூடிப்பேச, அவர்தம் துணை நாடி நின்றான் !
ஒருவனுக்கு ஒருத்தியென்ற இராமனாகினான் !--தன்,
ஒளிக்கரங்களால், பூமி எந்தன் கைப்பிடித்தான் !
நிலமடந்தை நானுந்தான் நாணி  நின்றேன் !
நீலவானம் குடைபிடிக்கத் திருமணம் கொண்டேன் !

- கவி.அறிவுக்கண்  

**
அன்பென்னும் அருட்கடலில் அவள்யானும் சிவனானோம் !
இன்பத்தின் எல்லையிலே எந்நாளும் ஒன்றானோம் !
என்னென்ன இருந்தாலும் ஏற்றங்கள் மலர்ந்தாலும்
ஒன்றான உலகத்தில் உவந்ததெலாம் உடன்வருமோ ?

ஆறிருந்தும் நீரில்லேல் ஆற்றாலே அழகுண்டோ ?
நூறிருந்தும் நோயிருந்தால் நுவல்பொருளால் சிறப்புண்டோ ?
காரிருந்தும் மழையில்லேல் காட்சியதும் காணவுண்டோ ?
பேரிருந்தும் பேறில்லேல் பேர்புகழால் பெருமையுண்டோ ?

வில்லிருந்தும் கணையில்லேல் வில்லுக்கு விழிப்புண்டோ ?
சொல்லிருந்தும் பொருளில்லேல் சுடர்பாவால் சொல்லவுண்டோ ?
நெல்லிருந்தும் மணியில்லேல் நெல்லாலே நிறைவுண்டோ ?
இல்லத்தில் எதிரெதிராய் இருப்பதிலோர் இனிமையுண்டோ ?

- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு.

**

அதிரூபன் தோன்றினானே என்று கூட்டம் கூடியது 
அதில் நால்வர் மரணம் அடைந்தனர் வேதனை !

கடவுளே காப்பாற்று என்று வேண்டிட சென்றபோது 
கடவுள் காப்பாற்றவில்லை உயிர்கள் பிரிந்தன !

முதியவர்கள் கர்ப்பிணிகள் நோயாளிகள் 
முற்றிலும் வரவேண்டாம் என்று அறிவிப்பு !

கடவுளின் பெயரால் வருடம் ஒரு வதந்தி 
கண்டபடி பரப்பி வசூல் வேட்டை நடக்குது !

அத்தி வரதரைக் காண வேண்டுமென்று 
அடங்காத கூட்டம் தினமும் கூடுது !

உள்ளூரில் உள்ள பெருமாளைக்  காண  
ஒருவரும் வரவில்லை வருத்தத்தில் அவர் !

ஆட்டு  மந்தைக் கூட்டமென கூட்டம் 
அல்லல் பட்டு இடிபட்டு வருத்தத்தில் !

காவலரகளும் பிடித்து இழுத்து விடுகின்றனர் 
காணும்போது பாவமாக இருக்கின்றது !   

- கவிஞர் இரா .இரவி

**

இவர்களின் எண்ணக்காவிரியில்
என்றோ கலந்துவிட்ட
எமக்கழிவுகள் - !!
“வாய்மை” மறந்ததால்
‘வாய்’ என்ற சொல்லை
அகராதியிலிருந்தே அகற்ற
அறிஞர் குழு பரிந்துரை - !!
இவர் செயல்களை உற்று நோக்கு,
தாங்கியவனையே பின்னுக்குத்தள்ளி
முன்னேறும் படகுப்பரம்பரையோ ??
நடத்தையே இல்லாமல்
நடக்கப்பழகிவிட்டோமோ ??
நம் வாழ்க்கை நூலிற்குள்
உண்மை, கருணை, கொடை, அடக்கம் – இப்படி,  
பல அத்தியாயங்கள் அடங்கும் நாள் என்று  -??
ஒரு அதிரூபன் தோன்றி
ஒவ்வொருவர் பாதையையும்
ஒளிரச்செய்யும் தினம் பிறக்குமோ  ??
அன்று தான், பூமிப்பெண் நிம்மதி ஆடையை
அணியத்தொடங்குவாளோ ??

- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி

**

விண்ணில் தவழ்ந்து வரும் வெண்முகிலாய்
மண்ணுலகில் அன்பும் பண்பும் தவழ்ந்துவர,
இன்முகம் கொண்டு பன்முக நாயகன்
அருளும் அதிரூபனாய் தோன்றினானே !
மெல்லின மென்மை தன்னுள் மலர
வல்லின பெண்மை தன்னரணாக கொண்ட
இடையின சிறப்புடன் மெல்லிடையாள்
போற்றப்படும் பூவுலகில் அதிரூபன் தோன்றினானே !
பொய்புரட்டு உரமூட்டி வளர்ந்த வன்கொடுமை
வேரோடு களையெடுக்கப்பட ,
விதைக்கப்பட்ட அறம் தளைத்தோங்கும்
புண்ணிய பூமியில் அதிரூபன் தோன்றினானே !
அறியாமையால் கிளைவிட்ட சாதிமத வேற்றுமையும்,
ஏற்ற தாழ்வுகளும் முளையிலேயே கிள்ளியெறிய
ஏழையின் முகத்தில்  சிரிப்பைக் காண
அன்பே உருவான அதிரூபன் தோன்றினானே !

- தனலட்சுமி பரமசிவம்

**

அன்பு என்ன விலையென கேட்ட ரோமப் பேரரசுக்கு,
ஈவு இறக்கம் என்னவெனக் காட்டினார்;
அவரையே சிலுவையில் அறைந்துகொண்டு, 
உலகுக்கே அன்பை போதித்தார்
இன்று மனிதரிடத்தில்,
அன்புமில்லை,பண்புமில்லை
பணத்துக்காகவும்,சுகத்துக்காகவும்
எந்த விலையையும் கொடுக்கத்தயாராகிவிட்டான்;
எந்த எல்லைக்கும் செல்லத்துணிந்துவிட்டான்;
எந்த எல்லையென்றால்?
வெளியில் சொல்லக்கூடாத அந்த எல்லைவரை
மீண்டும் வந்து 
மக்களை காப்பது யார்?
நல்ல மேய்ப்பரே  
உம்மையன்றி வேறு யார்!
மீண்டும் வருக,
அருள் புரிக.

- ம.சபரிநாத்,சேலம்

**

அதிரூபரோ - 
அத்திவரதரோ - 
அருவமானவரோ -
எல்லாம் ஒன்றுதான் -எனக்கு
எல்லாம் ஒன்றுதான்

துன்பங்கள் சூழ்ந்த நிலையிலும்
இதயம் வலிகொண்ட நிலையிலும்
இறை பேதம் பாராமல்
இறைவன் எண்ணங்களே சூழ்ந்திருக்கும்
எல்லாம் ஒன்றுதான் -எனக்கு
எல்லாம் ஒன்றுதான்

தரணியில் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும்
தோற்றுவிக்கவே விவேகானந்தரும் தோன்றினார்...!
அண்ணல்  நபிகளும் தோன்றினார்...!
அன்பிற்குரிய அதிரூபனும் தோன்றினார்...!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**

ஆறறிவு ஜீவராசிகளின்
ஆறாத துயர்களுக்கு
தீராத ஆசையே காரணமென
ஆசையை துறக்க
ஆசை கொண்டே
அரச  வாழ்வு 
மற்றும் மனைவி
மக்களைத் துறந்து
அமைதி தேடி 
அலைந்து திரிந்து
போதி மரத்தடியமர்ந்து
போதிய ஞானம் பெற்றெழுந்த
புத்தபிரான்
அகிலத்து உயிர்கள்
அகஇருள் நீங்க
அன்பின் ஒளி பரப்பத்தோன்றிய
அதி ரூபன் அன்றோ ?

- கே.ருக்மணி

**

கண்ணுக்குள் முழுநிலவு நுழைந்து பார்க்கிறது
பெண்ணுக்குள் இரக்கம் ஊற்றாய்ச் சுரக்கிறது
எண்ணுக்குள் எழுத்துகள் எழிலாய்த் தெரிகிறது
விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலமிடலாமோ

வானில் ஒளிரும் குளிர்நிலவொன்று கீழிறங்கி
தேனில் நனைந்து தினைமாவில் குளித்ததோ
மேனி எழிலாகி மின்னும் மின்னலில் கலந்து
நாணி மீண்டும் வானுலகே சென்று மறைந்ததோ

அன்பில் நனைந்து பண்பில் மிளிர்ந்து வள்ளலாய்
இன்பம் நல்கியே துன்பங்களைத் தான் ஏற்கவே
புன்னகை முகத்தில் பொங்கிட உலகைக் காக்க
கன்றெனக் கனிவுடன் அதிரூபன் தோன்றினானே

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

அதி ரூபனாகத்  தோன்றி அருளும் 
அத்தி வரதன் சொல்லும் செய்தி 
என்ன தெரியுமா ?
இந்த மண்ணில் நான் வாசம் செய்யும் சமயம்  
நான் முடிக்க வேண்டிய பணியோ ஏராளம் !
உடன் முடிக்க வேண்டும் அந்த அருட்பணி 
அத்தனையும் மீண்டும் என் ஜல வாசம் 
தொடங்கும் முன்!
என் மண்ணின் வாசம் எத்தனை நாள் 
தெரியும் எனக்கு ! இந்த மண்ணில் 
உன் வாழ்க்கை  எத்தனை நாள் இன்னும் ?
தெரியுமா உனக்கு  மனிதனே ?
புரிந்து நடந்து கொள்  மனிதா நீ !
நாளை  நாளை என்று நாளைக் கடத்தாமல் 
இன்றே இப்போதே உன் கடமையை 
செய்து முடித்துவிடு மனிதா நீ ! 
நிரந்தரம் என்று எதுவும் இல்லை எனக்கும் 
உனக்கும் ! 

- K .நடராஜன் 

**
அதிரூபன் தோன்றினானே!
ஆழ்குளத்தின் உள்ளிருந்து
அதிரூபன் தோன்றினானே!
தாழ்நிலை மழைப்பொழிவைச்
சரிசெய்து தோன்றினானே!
பாழ்நிலை மக்களையே
பாங்குடனே வாழவைக்க
ஓர்நிலை கொண்டேயவன்
ஒளிந்திருந்து தோன்றினானே!

நீர்ப்பஞ்சம் தலையெடுத்தால்
நிம்மதி  ஓடிப்போகும்!
ஊர்ப்பஞ்சம் ஒன்றுகூடி
உணவுக்கும் பஞ்சமாகி 
தேரோடும் பலவீதிகளும்
திருவோடு ஏந்துவோரால் 
போராடும் களமாகும்
பொருந்தாத இடமாகும்!

தோன்றிவிட்ட அதிரூபன்
துயரத்தைப் போக்கிடுவான்!
பெருமழை பெய்வித்து
பெருக்கிடுவான் வளத்தினையே!
நீருக்காய் அலையும்நிலை
நின்றுபோக வழிவகுப்பான்!
காருக்காய் இனிமனிதர்
கலங்கி நிற்க விடமாட்டான்!

-ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

**
மேகம் போல் தோற்றம் கொண்டு கல்வித்
தாகம் தீர் அருமை நல்கி பசிச்
சோகம் கொல் கருணை செய்து பாயும்
வேகம் கொள் நதிகள் தேக்கி நீரின்
பாகம் சேர் அணைகள் கட்டி பஞ்ச
ராகம் தீர் பசுமை செய்தாய்;  நாக
ரீகம் தான் வளரநல்ல தொழிற்கூ
டகம் பல வமைத்தாய்  அந்த
ஊகம் தான் உடைத்தெறிந்து நல்ல
ஏகம் செய் அரசமைத்தாய் கரும
யோகம் சேர் வீரனானாய் நிந்தன்
தேகம் தேய் பெருந்தலைவனானாய் இப்பா
ரகம் பயன்பெறவே அதிரூபனாய்த் தோன்றினாயே!

(ஏகம் - ஒப்பற்ற; பாரகம் - பூமி)

- கு. இரா, வடக்கு அயர்லாந்து

**

சின்ன சின்ன  ஏசு! 
சிரிக்கும் குழந்தை  ஏசு!
டிசம்பரில்  பிறந்த ஏசு!
குளிரில் பிறந்த ஏசு   அவர்தான் 
அதிரூபன்  என்ற ஏசு!

தொழுவத்தில்  பிறந்த  ஏசு!
மேரி ஈன்றெடுத்த  ஏசு!
கிரிஸ்துவர்  போற்றும் ஏசு!
மற்றவர்  பாராட்டும்  ஏசு  அவர்தான்
அதிரூபன் என்ற  ஏசு!

சிலுவையை  சுமந்த  ஏசு!
நம் பாவங்களை  போக்கும் ஏசு!
தேவாலயம் வணங்கும் ஏசு!
தேவரும் வணங்கும்  ஏசு  அவர்தான் 
அதிரூபன்  என்ற  ஏசு!

யூதர்களால்  கொல்லப்பட்ட ஏசு!
மறுமுறை உயிர்த்தெழுந்த  ஏசு!
புத்தம்  புதிய  ஏசு 
புதியவரையும்  ஏற்கும்  ஏசு  அவர்தான் 
அதிரூபன்  என்ற  ஏசு!

- பிரகதா நவநீதன்.  மதுரை

**

அதிரூபன்  என்ற   கடவுள் 
ஆர்வமுடன்  தோன்றினானே!
இக்கடவுள்   இன்றும்  நம்மிடம் 
ஈவு இரக்கம்  சொல்லிக்கொடுக்கும்
உற்சாகத்தை  மட்டுமல்லாமல் 
ஊக்கத்தையும்  கொடுக்கும்  
என்றுமே  தன்னம்பிக்கையுடன்
ஏவல்  செய்யும் தூதனாக
ஐயம் என்ற  சொல்லை 
ஒதுக்குங்கள்  என்று  
ஓங்கிய  குரலில்  சொன்ன  தூதுவன்!
ஒளடத்தில்  பயணம்  செய்யும் 
எஃகு  போன்ற  உறுதியான  மனதுடன் 
வாழ்க்கையினை  நடத்த 
அதிரூபன் தோன்றினானே!
சோர்வில்லா  வாழ்வில்  
அதிரூபன்  அருள்  
உலகை  நல்   வழி  நடத்தவே 
அதிரூபன் தோன்றினானே

- உஷாமுத்துராமன்,  திருநகர்

**

கம்சனை வதைத்து பெற்றவரைக்
காத்த கண்ணன் நீலவண்ணன் !
வெண்ணை தின்று விளையாடி
மண்ணையுண்டு உலகைக்
காட்டிய மாயவன்!

வெள்ளை விளி சங்கும்
வெஞ்சுடர்த் திருச்சக்கரமும்
ஏந்தியவன் !
புல்லைத்தின்னும் ஆநிரையும் மயங்க 
புல்லாங்குழல் இசைத்த புருஷோத்தமன் !

குன்றைக் குடையாய் பிடித்து
ஆயர் 
குலம் காத்த கோவர்த்தனன்!
கீதையுரைத்து பாதை காட்டிய
மாதவன் அவன் மதுசூதனன்!

அதர்மம்  அழிக்கச் செய்து
தர்மம் நிலைக்க வந்த
அத்தி வரதன் !
அவதாரம் பல எடுத்து
அடியார்களைக் காக்கத் தோன்றிய
அதிரூபனும் அவனே !

- ஜெயா வெங்கட்.

**

சதிரூபம் நிறைந்திட்ட உலகில் 
விஸ்வரூபம் தலை விரித்தாடிட 

விதிரூபம் தொடங்கி இயங்கியது 
மதிரூபம் மங்கியது கலங்கியது அக் 

கதிரூபம் கலைத்திட பிறவி பெறாத 
நீதிரூபன் பிறப்பான் எனவோரசரீரு 

தபரூபம் கொண்டோர் மூலமாய் கூற 
ஸ்திரிரூபம் ஒருவளை தேர்ந்தெடுத்து 

பதிரூபம் தொடாது அவள் வயிற்றில் 
கருரூபம் கொண்டு பிறப்பெடுத்திட்ட 

இழந்த சவத்திற்கு உயிரீந்தார் தானே 
சடலமாகி பின் உயிர்த் தெழுந்தார் அவ்

வதிரூபன் தோன்றினானே ஒப்பற்று 
இறைரூபன் மகனாக மனுரூபமதில் 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான் 

**

தாரகன் , கஜமுகன் ,
சூரபத்மன் அசுரர்களால்
இன்பம் தொலைந்து
துன்பம் மிகப் பெருகி
இந்திரலோக தேவர் , பிரமன்
கந்தர்வர் அனைவரும்
நொடித்தவராய் ‌மனம்
ஒடிந்தவராய் கலங்கி நடுங்க
அபயம் அருளிய. சிவன்
சபாநாயகனவன் முக்கண்
கோபவிழி சிவந்து திறக்க
சாபம் விமோசனம் யாம்
பெற்றோம் , ஓம் என வானுலக
உற்றோர் மனம் களித்துக் கூத்தாட
ஜோதி கனலாய், சுடராய், தவமாய்
ஓதி உணரத் தக்க தெய்வமாய்
வீர சேனாதிபதி , அழகுமுருகன் ,
சரவணன் , குகன் சிவகுமாரன்,
மதிவதன சக்தி வேலவன் நம்
அதிரூபன் தோன்றினானே !

- ராணி பாலகிருஷ்ணன்
 

**

அத்தி மரத்தில் ஆன அவரே
     அத்தி வரதராம் ! - அவர் 
முத்து அழகைக் காணக் காண
     மோதும் கூட்டமாம் !

காஞ்சி நகரில் கடலைப் போல
     காணும் அலைகளாய் ! - மக்கள் 
வாஞ்சை யோடு கூடி வந்து 
     வணங்கி மகிழ்கிறார் !

நான்கு பத்து ஆண்டு காலம் 
     நீரில் இருந்தார் ! - அவர் 
மீண்டும் அழகாய் மேன்மை யாக
     மேலே எழுந்தார் !

வேற்று நாட்டார் படையெ டுப்பால்
     வேண்டும் கடவுளும் - எதிரி
கூற்று வனாய் ஆவா னென்று
     குளத்தில் ஒளிந்தார் !

தோன்றின் புகழாய்த் தோன்ற வேண்டும் 
     சொன்னார் வள்ளுவர் ! - கடவுள்
தோன்றும் அழகின் தோற்றம் காண
     மக்கள் தோற்கிறார் !

மீண்டும் நாற்ப தாண்டு காலம் 
     நீரில் ஒளிவரா ? - கடவுள்
வேண்டும் படியாய் விருப்பம் போல
     காட்சி தருவரா ?

- ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி).

**

பூக்களின் குறையா வாசம்போல
…..பூமியெங்கும் வாசமாய் நிறைந்தவனே
மக்களின் பாவங்கள் தீர்ந்திட
…..மரணத்தை மகிழ்ச்சியாய் ஏற்றவனே
தேவனின் மகனாய்ப் பிறந்து
…..தெய்வமாய் மண்ணில் ஆனவனே
தேவதைகள் எல்லாம் வாழ்த்திட
…..தூயவனாய் மனதில் நின்றவனே
மனிதரோடு மனிதனாய் வாழ்ந்து
…..மனிதநேயம் காட்டிச் சென்றவனே
புனிதராய் நீயும்இங்கு வாழ்ந்து
…..புண்ணிய பூமியாய் மாற்றியவனே
இரக்கத்தின் வடிவமாய் வந்து
…..இதயத்தில் ஒளியாய் வீசினானே
இரத்தத்தால் இவ்வுலகை சுத்தமாக்க
….இயேசுவாகிய அதிரூபன் தோன்றினானே

- கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

**

அன்பு மழை தூவி
அனைவரையும் ரட்சிக்க
அன்றொருநாள்
அதிரூபன் தோன்றினானே!

காலம் கடந்தாலும்! கலியுகமே பிறந்தாலும்!
அரிதாரம் இல்லாமல்
அரிதாக அவன் தோன்றினான்!
அத்திவரதராய் அவன் தோன்றினான்!

மாநிலமே காண்பதற்கு
மண்டலமாய் காட்சிதர
அதிரூபன் தோன்றினானே!
அத்திவரதராய் தோன்றினானே!

நாற்பது ஆண்டுகளாய்
குளமகளின் கருவிலிருந்து
நித்திரை கோலத்தில்
அதிரூபன் தோன்றினானே!

- கு.முருகேசன்

**
ஆதிக்கு
முன்னைக்கும் முன்பிருந்தே
அன்பின் துகள்கள்
அனாதியென நிரம்பி வழிய...

துயருறு பேதமை
தொடங்கிய நொடி முதலாய்
தொடர்தலில்
துடித்தலையும் வெளி...

அல்லலும் ஆனந்தமும்
அலகிலாது
அரவணைப்பின் இராபகல்
பிரகாசமற்றதில் வெதும்பும்
மனம்...

யாவுமான சங்கடங்கள்
ஏதுமில்லா புதுவெளியில் நிறம்ப
கூவி இறைஞ்சும் புலன்கள்...

இரட்சிக்க
யாரேனும் ஏதேனும்
அரவணைத்துப் பரிபாலிக்க
அதிரூபம் தோன்றுமாதோ...

என நினைத்துத் திரும்பிப் பார்க்க,
யாவுமான 
சூன்யத்தின் இரகசியமென
அம்மையப்பனாய் சூழ்ந்து
தொடர்ந்து விளையாடுகிறது காலம்...

- கவிஞர்.கா.அமீர்ஜான் திருநின்றவூர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com