'கருப்பு’ வாசகர் கவிதை பகுதி 2

அங்க சாஸ்திரத்தில் துஷ்டாங்கமென ஒதுக்கப்பட்டதாக
'கருப்பு’ வாசகர் கவிதை பகுதி 2

கருப்பு!

உழைப்பின் உன்னத நிறம் கருப்பு
உதிரத்தின் நிறம் அனைவருக்கும் சிவப்பு!

ஏற்றத் தாழ்வு வேண்டாம் நிறத்தால்
இரண்டையும் ஒன்றாகப் பார்த்திடல் வேண்டும்!

வெள்ளை உயர்வு என்பதும் தவறு
கருப்பு தாழ்வு என்பதும் தவறு!

வெள்ளைதான் வேண்டுமென்ற பிடிவாதத்தால்
வாலிபர்கள் மணமாகாமல் தவிக்கின்றனர்!

நிறபேதம் விடுத்து நேசிக்க வேண்டும்
நிறத்தில் பேதமில்லை யோசிக்க வேண்டும்!

கருப்பு வேண்டாம் என்று சொல்லியதால்
காளையர் பலர் முதிர்காளை ஆகினர்!

தவறான கற்பிதங்களைத் தகர்த்தெறியுங்கள்
தன்னம்பிக்கை பெறுங்கள் கருப்பு நிறத்தோர்!

கருப்பினத்தில் பிறந்து சாதித்தோர் பலருண்டு
கருப்பு தாழ்வு அல்ல கர்வம் பெறுங்கள்!

- கவிஞர் இரா. இரவி.

**

மொழிகள் அரங்கேறும் வெண்மேடையில்
விழிகள் நிறமும் கருப்பு !

கானமயில் தன் அழகு தோகை விரித்தாட
கண்ட கார்முகிலும் கருப்பு !
மாலை கதிரவன் மலைமுகிலிடை மறைய
விண் மாறிய நிறமோ கருப்பு !
சிற்பி செதுக்கிய கற்சிலைகளும்
தன்னழகில் மிளிரும் நிறமோ கருப்பு !

உலகின் முதல் திரைப்படம் திரையில்
வெளிவந்ததும் கருப்பு வெள்ளையில் !

மங்கல நிகழ்ச்சிகள் ஒதுக்கிய நிறமாய்
கனத்த மனதுடன் புன்னகைத்ததே கருப்பு !

- தனலட்சுமி பரமசிவம்

**

கருவாம் நோய்கள் உடலை வாட்டின்
     கருத்த மருந்தை வெறுப்போமா ? - முன் 
கருத்த பெண்ணை வெறுக்கும் அவளின் 
     கவினார் மகவை தவிர்ப்போமா ?

கருத்த முடிதான் என்ற போதும் 
     கண்டே எவரும் வெறுப்போமா ? - முடி
கருக்கத் தானே வெளுத்தார் கூட
     கருப்புச் சாயம் பூசுகிறோம் !

கருப்பு கருப்பு கருப்பே என்று
     கண்டே பலரும் கவல்கின்றோம் ! - அவர் 
பொருத்த மான பொறுப்பி னாலே
     புவியே போற்ற பூக்கின்றோம் !

கருப்பாய் எவரும் இருந்தால்  என்ன ?
     கடமை வீரர் அவரென்றால் - உலகம் 
ஒருங்கே கூடி உயர்த்திப் போற்றும் 
     உண்மை நிலையை ஊன்றிடுவோம் !

- து.ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி

**

( கருப்பு = பஞ்சம், கறுப்பு = நிறம் )

பயிர்விளைந்த வயல்களினை மனைக ளாக்கிப்
-----பாய்ந்துவந்த ஆறுகளை மலடாய் ஆக்கி
உயிர்ப்போடே இருந்தகுளம் ஏரி தம்மை
-----ஊர்ப்புறத்தே வளர்ந்திருந்த தோப்பு தம்மை
வயிறெரிய அழிப்பதாலே மழையு மின்றி
-----வாய்க்கரிசி நமக்குநாமே போட்டுக் கொள்ள
வெயில்தீயாய் பஞ்சம்தான் எரிக்கும் நாட்டை
-----வெந்துயிர்கள் பட்டினியால் வீழும் மாய்ந்தே !
இயற்கையினை அழிப்பதனால் வரும்பஞ் சம்போல்
-----இங்கிருக்கும் தன்னலத்து வணிகக் கூட்டம்
செயற்கையாகப் பஞ்சத்தை ஏற்ப டுத்திச்
-----செழித்தபொருள் அனைத்தையுமே பதுக்கி வைத்துக்
கயமையுடன் பெரும்லாபம் ஈட்டு கின்ற
-----காட்சிகளைக் கண்டும்நாம் தடுத்தோ மில்லை
வியர்வைக்கே மதிப்பளித்துத் திருடர் தம்மை
-----விரட்டுதற்கே நாமெழுந்தால் வளமாய் வாழ்வோம் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**
'கருப்பு'  பல சரித்திரம் பேசும்நிறம் -
இருண்ட கண்டத்தில் இனம்காட்டி தள்ளப்பட்டாா்
அவர் விழுந்தபோது சாதாரணமாயிருந்தாா் - ஆனால்
அவர் எழுந்தபோது சரித்திரமானாா் மகாத்மாவாக!!!

இருண்ட கண்டத்தின் இன்னொரு காந்தி -
வனவாசம்கூட பதினான்கு ஆண்டுகள்தான் -ஆனால்
இவரின் சிறைவாசம் இருபத்தேழு ஆண்டுகள்
கருப்பினத்தின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலா!!!

ஆபிரகாம் - மாா்டின்யென இன்னும் போராளிகள் -
ஆங்காங்கே தோன்றினர் கருப்பினத்தின் விடிவெள்ளிகள் -
இனி விலகட்டும் கருப்பு-வெள்ளை இடைவெளிகள் -
கருப்போ-வெள்ளையோ யாவருமே கடவுளின் பிள்ளைகள்!!!

கருமேகம் கருப்பென்று மழையை வெறுப்பவருண்டோ?
தேகம் கருப்பென்று வெண்மனதை வெறுப்பதுண்டோ?
கடைசியில் கட்டையில்வெந்து கருஞ்சாம்பலாய் போவோரே
நிலக்கரியும் கருப்பென்று மின்சாரம் வேண்டாமென்பீரோ???

-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**

மரக்கிளையில் கூடு கட்டி குடியிருக்க 
மரம் சாஞ்சிப் போச்சி||

கட்டாந்தரையில் வீடுகட்டி குடியிருக்க 
வெள்ளம் அடித்து போச்சி||

மலையின் மேல் வீடு கட்டி குடியிருக்க 
மலையும் சரிந்துப் போச்சி||

ஒருத்தி உள்ளத்தில் குடியமர்ந்தேன் 
வீதியில் தூக்கிப் போட்டாள்||

உடம்பில் குடியிருக்கும் உயிரை
பிரித்து மயானம் சேர்த்து - உயிரை||

சொர்கத்தில் குடியிருக்கும் தெய்வமே
உம்காலடியில் கிடக்க விடமாட்டாயா||

இருந்ததை நினைவு கொள் இருப்பது 
நலமாகும் இனிமேலும் சுகமாகும்||

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

**

தாயின் கருவறையில் துயில் !
தெரியாது அப்போது உலகம் 
கருப்பா இல்லை சிவப்பா என்று !
மண்ணில் பிறந்ததும் இந்த குழந்தை 
கருப்பு இந்த குழந்தை சிகப்பு என்பார் 
அதன் முகம் பார்த்து !
குழந்தைக்கு அப்போதும் தெரியாது தான் 
கருப்பா சிகப்பா என்று !  மற்றவர் 
குழந்தையை மட்டும் கருப்பு சிகப்பு என்று 
அடையாளம் காட்டும் அவர் குழந்தை 
மட்டும் கருப்பாய் பிறந்தாலும் கருப்பில்லை !
என் குழந்தை மா நிறம் என்பார் !
காக்கைக்கு தன் குஞ்சு மட்டுமே 
பொன் குஞ்சு!

- K.நடராஜன் 

**

உறுப்புகள் உள்ளிருப்பவையெல்லாம் ஒரே நிறம்
மறுப்பில்லை யார்க்கும் இந்தக் கருத்தினிலே
வெறுப்பு புறத்தோற்றம் கண்டா வருவது
பொறுப்புடன் யோசிக்க உண்மை விளங்குமே

கரு மேகம் தான் கனமழை கொண்டு வருகிறது
கருப்பு உடை பொருத்தத்திற்குப் பொருந்துகிறது
செருப்புகூட கருப்பில் தான் காலில் ஒளிர்கிறது
கருப்பு அழகி கிளியோபாட்ரா சரித்திரத்திலே

கண்ணின் மணிகள் கருப்பாய் உருள்கிறது
பெண்ணின் கூந்தல் கருப்பாய்க் கவர்கிறது
மண்ணிலும் கருப்பில் பருத்தி விளைகிறது
வண்ணங்களிலும் கருப்பே முதன்மையாகிறது

கருப்பை வெறுக்காதீர் நல்லன்பு கொள்வீர்
விருப்பு வெறுப்புக்கு அது பொறுப்பில்லையே
உருப்பு கருப்பாயினும் உள்ளம் வெளுப்பாகட்டும்
திருப்புமுனையாக நல்லன்பே நிறமாகட்டுமே.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

இருள் கூட கருப்பு தான்
அது இரவு என்ற வரவு தான்.
நம் நிழல்கூட கருப்பு தான்
வெளிச்சம் படும் பொழுது தெரியும் தான்..
உயிர் போனபிறகு
நம் உடம்பை எரித்தால்
கிடைக்கின்ற சாம்பல் கூட  கருப்பு தான்.

துக்கதினத்தை
கருப்பு தினம் என்று
சொல்வது வாடிக்கை தான்.
பிறந்த மழலைக்கு
கண்ணத்தில் வைத்திடும் முதற்பொட்டு கருப்புதான்.
கண்ணுக்கு  அழகு தரும் மை கூட
 கருப்பு தான்.
கருப்பு அது இல்லாத
இடம் வெளுப்புதான்.

- களக்காடு வ.மாரிசுப்பிரமணியன்.

**

கருவறையைப் போல
அண்டத்தின் கருவறையும்
இருளெனக்
கருப்பாய் ஆனதாக இருக்குமோ...

பிரபஞ்சத்தின் மய்யப் புள்ளியாகவும்
தாயின்
கருவறையின் ஜனனப் புள்ளியாகவும்
ஒன்றெனவாக நினைக்க
வியந்து போகிறது
அறிவும் அறியாமையும்...

நவகிரகம் நவரசம் நவரத்தினமென
எண்திசைகளில்
ஏழு சுரங்களாக எழும் வெளியில்
நிறங்கள் ஏழால் 
நிர்மாணிக்கப்பட்டதாக இருக்குமோ
அறுசுவைகளின் உயிர்ப்பபால்
அய்ம்புலன்களின் பிண்டமானதோ
அண்டம்...

அணுக்களின் அதிர்வு 
உரசிக் கொண்டே இருக்கிறதில்
அறிந்து பார்க்க
அறிய முடியாத எதையும் போல
தெரிய முனைந்து புரிய முடியாமல்
திசைகளாகும்போது
கண்ணைக் கட்டுகிறது கருப்பு...

- அமிர்தம்நிலா, நத்தமேடு.

**

அங்க சாஸ்திரத்தில்
துஷ்டாங்கமென ஒதுக்கப்பட்டதாக
இருக்குமோ கருப்பு...

பாதங்களில்
பிரதஷ்டைச் செய்யப்பட்ட
பிரதான நிறங்களில்
வர்ணாஸ்மர சிலேத்துமங்களில்
பணியும் நிறமாகிவிட்டதோ 
கருப்பு வர்ணம்...

மங்கலமாகவும் அமங்கலமாகவும்
பிரதேச வெளியில்
பிரஸ்தாபிக்கப்படுகிறதாக இருக்கிறது
கருப்பின் நிறம்...

துக்கமும் சந்தோஷமும்
தொடரும் மானிட வகுப்புகளில்
வர்ணாசிரமாகி விட்டதை
ஏற்பதாக இல்லை
ஞான பிரகஸ்பதிகளில் அறிவு ஜீவிகள்...

கருப்பு நிறம், சிலருக்கு
மனதில் மறைத்து வைக்கப்பட்ட
வஞ்சம்;
சிலருக்கோ
அரவணைக்கும் கரம்...

எது
எப்படியாயினும்
நிறங்களில் கருப்பின்றி நிகழாது
ஜனனமும்
மரணமும் கூட

- கவிஞர்.கா.அமீர்ஜான், திருநின்றவூர்

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com