சுய தரிசனம் வாசகர் கவிதை பகுதி 1

சுயதரிசனம் காண்பவன்தான் மனிதன் வாழ்வில் சோர்ந்துவிடும் காலமதில் நம்பிக்கை தான்
சுய தரிசனம் வாசகர் கவிதை பகுதி 1

சுய தரிசனம்

தரிசனம்  கிடைப்பது 
கரிசனம்  உடைய மென்மையானவர்களுக்கு 
மட்டுமே..... உணர்ந்தவர்கள் 
தட்டில்லாமல்  கொடுப்பது  "சுய தரிசனம்"
உள்ளத்தில்  நல்ல  எண்ணம் 
கள்ளமில்லாமல்  வருபவர்களின் 
தரிசனமே  "சுய  தரிசனம்"
உள்  ஒன்று வைத்து புறமொன்று பேசும் 
தீய  எண்ணம் உடையவர்களிடம் 
சுய  தரிசனத்தை  பார்க்கவே  முடியாது!
காதலில்  சுய  தரிசனம்  பார்த்தவர்களால் மட்டுமே 
மோதல்  இல்லா  இல்வாழ்க்கை 
வாழ்ந்து  வெற்றிக் கனியினை 
சுவைக்க முடியும்.............
சுய  தரிசனம்  காட்டுபவர்கள் 
நய வஞ்சகம்  என்ற  சொல்லே  அறியா 
நல்லவர்கள்.......முடிந்தவரை...
வல்லமையுடன்  சுய தரிசனம்  காட்டி 
நல்ல  வாழ்வு  வாழ்வோம்!

உஷாமுத்துராமன்,  திருநகர்

**

கண்ணுடன்  கண் பார்த்து 
எண்ணங்களை  சொல்பவரே 
தங்கள்  "சுய  தரிசனம்" 
உங்களுக்கு  காட்டும்  உத்தமர்!
புற முதுகு  ஓட செய்யும் 
சுயநலவாதியிடம்  எதிர்  நோக்காதே 
கயவனின்  "சுய  தரிசனத்தை"
மணம் முடித்த  மங்கையின்  
குணம்  அறிய  நமக்கு 
தினம்  உணர்த்தும்  அவளின்  "சுய  தரிசனமே!"
அம்மாவின்  அன்பை  உணர்த்தும் 
அவளின்  அன்பு நிறைந்த  "சுய  தரிசனம்"
அப்பாவின்  ஆசையை  உணர்த்தும் 
அவரின்  ஆசை  நிறைந்த  "சுய  தரிசனம்"
அம்மா அப்பாவின்  சுய  தரிசனம் 
கிடைத்த  பிள்ளைகள் 
மடை  திறந்த  அறிவோடு 
தடையில்லா  வாழ்வு  பெறுவரே!
"சுய  தரிசனம்  காட்டுவோம் 
பயமில்லை  தைரிய  வாழ்வு  வாழ்வோம்!

- பிரகதா நவநீதன், மதுரை

**

உள்ளத்தைக் கிளறி
உண்மையைக் காண
உலகத்தைத் தாண்டிய
உருவில்லாத மனத்தைத் திரட்டி
உயிரசையாத நிலையில்
உடலைக் கட்டி
ஓங்காரம் அமைதியில் அதிர
ஒளி வெள்ளஞ் சுற்றி
ஒரு வட்டமாக
விரிந்து பரவிட
எழும் குண்டலினியால்
உன்னை உணர்வாய்
உண்மை வழியாய்...
தெளிவாய் உள்விழிப்பாய்........

- சுழிகை ப.வீரக்குமார்

**

உள்ளம் எண்ணி வியந்தது சிலநாள் 
தன்னை எண்ணி நொந்ததும் சிலநாள்
வியப்பும் நோவும் தந்தது மென்ன?
அழ்ந்தே சிந்தித் தறிந்தது மென்ன?
மனமே புலனைக் காக்கும் கலனாம்
மனத்தைத் திருத்தி மடிமை விரட்டி
நலமாய் வாழ நன்மை நாடி
என்னைக் கண்டேன் என்னுள் கண்டேன்!

- கு. இரா, வடக்கு அயர்லாந்து.

**

தனி மரம் ஆனேன் தனியாள் ஆனேன் ;
சனி பிடித்த அரசன் நளன் போலானேன் .
வேண்டும் சுயதரிசனம் எனைப்பற்றி யே ;
மீண்டும் நான் தலை நிமிர்ந்து நிற்கவே.!
நல்குடியில் பிறந்தேன் , வளர்ந்தேன் ;
பல்கல்வியும் கற்று பண்டிதன் ஆனேன் .
நேர்மறை எண்ணம் மனவளத்துடனே ;
தேர்ந்த பதவியும் பெற்று உயர்ந்தேன் !
பட்டமும் பதவியும் தேடி வரவும்
சட்டமாய் குடும்பம் அமைந்தது வரமாய்
நீண்ட நல்வாழ்வும் தவத்தின் பயனாய்
மாண்புற வாழ்ந்து பல்கி ப்பெருகி பின்
பத்தினியோடு மன உரம் எல்லாம் போயின
எத்தனை சிறந்த மக்கள் பேறாயினும்
ஆண்மகன் வாழ்வும் என்றும் தனிமையே ;
ஆண்டுதோறும் இனி சமுதாயப் பணியே .

- ராணி பாலகிருஷ்ணன்

**

தேவை சுய தரிசனமே !
தேடல் மிக அவசியமே !
உன்னை, நீயேச் சீர் தூக்கிப் பாரு !
உண்மையும், நன்மையும் யாதெனக் கேளு !-நீ
செய்வதெல்லாம் அறமோ ?
வாழுதல் தர்மத்தின் வழியோ ?
உன்னையே சீர்தூக்கிப் பாரு !
உன்னை நேர்மைத் தீயில் புடமிட்டுக் கொள்ளு !
உயரிய வாழ்வை நீ வாழு ! -இந்த
உத்தமமே, சுய தரிசனம் சுய தரிசனமே 
தத்துவம் இவைச் சொல்லும் பாதை,
தவறுகள் தம்மைத் திருத்திய வாழ்வை,
வாழ்ந்திடு மானுடா ! நீ மகத்துவமானவன்!
பிறர் வாழ்ந்திட, குற்றம் களைந்திட, வழி நடத்து; நீ    
மகத்துவமானவன்!
மானுடர் யாவருக்கும்  தேவை சுய தரிசனமே !
மண்ணில் தீவிரவாதம் ஒழியத் தேவை,சுய தரிசனமே !

- கவி.அறிவுக்கண்.

**
உன்னில் கோடி ஆற்றல் எல்லாம் 
     ஒளிந்து கிடக்கிறது !
உன்னை நீயே தாழ்த்திக் கொண்டால்
      உயர்வே கிடையாது !

பண்ணின் இசைநீ பாட்டுப் பொருள்நீ
      பயந்தேன் குமைகின்றாய் ?
கண்கள் இருந்தும் கண்திறக் காமல் 
     கவிழ்த்தேன் கரைகின்றாய் ?

எண்ணில் லாத ஏற்றம் உன்னில் 
        எமுவான் கதிராகும் !
எண்ணிச் செயலில் இறங்கி விட்டால் 
        இமயம் சிறிதாகும் !

உன்னை நீயே உயர்த்திக் கொள்ளும் 
         உளியாய் நீயாவாய் !
உன்னைப் பார்த்து நீயே வியப்பாய்
        உலக மதிப்பாவாய் !

- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு.

**
உலகையே  சுற்றி வந்தால் நீ வெல்வாயா?
அதற்கு உத்தரவாதமில்லை( முருகன்);
உன்னருகிலுள்ள உன்னைப் பார்த்தால்,
கண்டிப்பாக வெல்வாய்(அருகன்)

காரணம்?
உனக்குள்ளிருப்பது,
சுயமான
நீ

உனக்குள்ளிருப்பதை வெளிக்கொணர்ந்தால்
அது திறமை;
இல்லாததை நினைத்தேங்குவது வெறுமை

மனிதனே நீ உன்னை நம்பு,
அது உண்மை;
உன் திறமையை நம்பு,
அது மேன்மை

- ம.சபரிநாத்

**

உட்கார்ந்து நினைத்துப் பார்த்தால்
உதிரமே   வருத்தப்    பட்டு
பிறவியை வீணாய் ஆக்கிப்
பிரியும் நேரம் வந்தபின்னால்
தரிசிக்க ஏதும் செய்யாத்
தரித்திரப் பிறவி யென்றே
உள்மனம் உதைத்துச் சொல்லும்
-ஊரிலோ நல்லான் என்பர்!

யாருக்கும்   அறிந்து   தீங்கு
யானென்றும் செய்த தில்லை!
தேடியே  வந்தோர்  தம்மை
 திரும்பிடச் செய்த தில்லை!
பாவியாய் என்னை யாரும்
பாவித்து உமிழ்ந்த தில்லை!
ஆனாலும் அடி மனத்தில்
ஆத்மாவின் திருப்தி இல்லை!
-ரெ.ஆத்மநாதன்,
  காட்டிகன்,சுவிட்சர்லாந்து

- ரெ.ஆத்மநாதன்,காட்டிகன்,சுவிட்சர்லாந்து

**

எனக்குள் நுழைந்து
என்னைப் பார்க்க நிரம்பியிருக்கிறது
"நான்''...

''நானை'' புறந்தள்ளி
இன்னும்  ஆழத் துழாவிப்பார்க்க
காணவில்லை என்னை...

வேண்டற்பாலது எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை
வேண்டாதன பரவிக் கிடக்கிறது
எனக்குள்...

ஒதுக்கித் தெளிவு பெற பார்த்தேன்
''நான்'' என்பது நம்பிக்கை
''நான்'' என்பது தலைகனம்
இதில் நான் யார்...

அகமும் புறமும்
எதிரெதிர்த் திசைப் பார்க்க
நண்டுகளின் கதையாக ஆகிவிடுகிற 
என்னை
சுயதரிசனம் காண முடியாமல்
தொடர்கிறது
பயணம்...

- கவிஞர்.கா.அமீர்ஜான், திருநின்றவூர்

**
 
உங்களைப்  பற்றிய எண்ணம் எப்போதும் 
உங்களிடம் உயர்வாகவே இருக்கட்டும் !

தாழ்வு மனப்பான்மை இருந்தால் உடன் 
தகர்த்து எறிந்து தன்னம்பிக்கைப் பெறுங்கள் !

பலவீனம் எதுவும் இருந்தால் நீக்கிடுங்கள் 
பலம் பெற முயற்சிகள் செய்யுங்கள் !

கெட்ட பழக்கம் ஏதேனும் இருந்தால் 
கெட்ட கனவாக நினைத்து மறந்திடுங்கள் !

திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள் 
தன்னை நம்பும் வளமையைப்  பெறுங்கள் !

உங்களை நீங்களே எடைப் போட்டுப் பாருங்கள் 
உங்கள் எடை குறைவென்றால் உயர்த்துங்கள் !

முடியாது   நடக்காது தெரியாது என்பதற்கு 
முற்றுப்புள்ளி உடன் வைத்து முயலுங்கள் !  
.
என்னால் முடியும் மற்றவரால் முடிவது 
என்றே முயன்று சாதனை நிகழ்த்துங்கள் !

- கவிஞர் இரா .இரவி

**

மண்ணுயிர்  செழித்து  யிர்க்க,  உவந்தே
மாண்புடன்  பொழியும்  மழையில், 
தண்ணொளி  ஈந்தே  குளிர்ச்சிக்  கூட்டும்
வெண்ணில  வில்சுய  தரிசனம் கண்டேன்! 

பகலைப்   படைத்து  பாரினைக்  காத்திடும்
பரிதியின்  பார்வையில்,  உழவ ரெல்லாம்
அகமும்  மகிழ  வயலும்  விளைய
ஆற்றினில்  என்சுய  தரிசனம் கண்டேன்! 

வேற்றுமை  இன்றி  விளையும்  வயலில், 
மாற்ற  மில்லா  வளமிகு  நெஞ்சில், 
ஏற்ற   இரக்கம்  பாரா  சமண்மை
இதயத்   தில்சுய   தரிசனம் கண்டேன்! 

என்மனம்  போன்றே  எல்லோர்   மனமும்
நன்மை  விளைக்கும்  நாடே செழிக்கும்
என்றே துறைகள் தோறும் நினைந்தே
கண்டேன் என்னில் சுயதரி சனமே! 

- நெருப்பலைப் பாவலர்,  இராம இளங்கோவன்,  பெங்களூரு

**

சுயதரிசனம் காண்பவன்தான் மனிதன் வாழ்வில்
      சோர்ந்துவிடும் காலமதில் நம்பிக் கை தான்
பயமழித்துப் பாதையினைச் சீராய்க் காட்டும்
      பக்குவத்தைச் சேர்க்கின்ற வலிமை யூட்டும்
மயங்காத மனநிலையை மனிதர் பார்க்கும்
      மகிழ்வதனைப் புடம்போட்டுச் சேர்க்கும் யாரும்
தயங்காதத் தோற்றமதைத் தனித்துக் கூட்டும்.
      தன்னலமே யில்லாத தலைவ ராக்கும்.

மாமனிதர் ரமணமுனி யார்தான் இந்நான்
      மகத்துவமாய் இக்கேள்வி மனிதர் முன்னே
தாமறியக் கேட்கவைத்து யுணர்த்தி நின்றார்
      தம்மையுணர்ந் திடத்தமக்கே யொருகே டில்லை
மாமந்தி ரத்திருமூ லருண்மை சொன்னார்
     வையகத்தில் தமையுணரும் தரிச னத்தில்
தேமதுர வரமதனைப் பெறுவர் மீண்டும்
      திகழ்வையப் பிறப்பில்லா நிலைகாண் பாரே!

கவிமாமணி " இளவல் " ஹரிஹரன், மதுரை

**

சுடர்விடும் விளக்கு
சுற்றிக் கொண்டிருக்கும் ராட்டை..
சுமைகளற்ற உடல்
சுயநலமற்ற மனது
சுறுசுறுப்பான நடை
சுற்றமாக நாட்டுமக்கள்
சூழலில் அஹிம்சை
சூடிக்கொண்ட சத்தியம்
சுகித்து வாழ பெற்றுத்தந்த
சுதந்திரம் என
சுவாசித்து மடிந்த
அண்ணலின் வடிவில்
ஆண்டவனின் 
சுயதரிசனம்..........

கே.ருக்மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com