தண்ணீர் வாசகர் கவிதை பாகம் 2

அன்று சென்னையை மூழ்கடித்தது தண்ணீர்இன்று சென்னையை தவிக்கவிட்டது தண்ணீர்!
தண்ணீர் வாசகர் கவிதை பாகம் 2


தண்ணீர்!

அன்று சென்னையை மூழ்கடித்தது தண்ணீர்
இன்று சென்னையை தவிக்கவிட்டது தண்ணீர்!

மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்குங்கள்
மழைநீர் உயிர்நீர் சேகரித்து வையுங்கள்!

மழைநீரைப் பிடித்து குடிநீராகவும் குடிக்கலாம்
மழைநீரை வீணாக்காது சேமித்து வையுங்கள்!

சிங்கார சென்னை இன்று தண்ணீரின்றி
சீரழியும் சென்னையாக மாறிவிட்டது!

நிலத்தடி நீரையும் நிர்மூலமாக்கிய காரணத்தால்
நீர் இன்றி எங்கும் தவித்து வருகின்றனர்!

விருந்தினரை வரவேற்ற தமிழ்ப் பண்பாடு
வரவேண்டாம் என்று வேண்டும்படி ஆனது!

தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தில் காட்டிய காட்சிகள்
தண்ணீர் இன்றி நேரடியாக காணும்படியானது இன்று!

நீர் இன்றி அமையாது உலகு என்று அன்றே
நெத்தியடியாக உரைத்திட்டார் நம் திருவள்ளுவர்.

- கவிஞர் இரா. இரவி.

**

பொய்க்காது வானம் பொழிந்தால் அதுதான்
மெய்யாக அமிழ்தம் என்றுணர்வோம்
தாய்ப்பாலை நிகர்த்தது நின்று பொய்ப்பின்
தள்ளாடுகிறது உலகம் சேயைப்போல

  உய்வோம் இதிலிருந்து மீள் வோம்
     மக்களனைவரும் உறுதியாக நாமிருந்தால்
  பொய்யாய்க் காராணம் சொல்லி மழுப்பி
     கையாலாகாத அரசியலால் பயனில்லை!

  நேரக்கணக்கு வைத்து திட்டமிட்டு நேர்மையாய்
      மக்கள் நாம் நடந்து கொண்டால்
  வாராது பஞ்சம் வந்தாலும் ஓட்டிடாலாம்
     வரும் நீரை அனைவரும் பகிர்ந்து கொண்டால்
  கடல் நீரைக் குடினீராக்கும் திட்டத்தை தடைசெய்துள்ளார்
       மாற்றாட்சி கொண்டுவந்த கரணத்தால்
  கயமை அரசியல் உணர்ந்து மீண்டும் கொணர்வோம்!
       கடல் உள்ள ஊரிலெல்லாம் ஏற்படுத்திடுவோம்
  மடைதிறந்தாற்போல் குழாயினின்று தண்ணீர் திறக்கமாட்டடோம்
      மற்றவர்க்கும் தண்ணீர் வேண்டும் என்ற சுயதரிசனத்தோடு
  தடைகளகற்றுவோம் மழை வேண்டி தவமிருப்போம்
      தண்ணீர் அளிப்போம் அனைவருக்கும் வெல்வோம் !

- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்,இராஜபாளையம்

**

மூன்றாம் உலக யுத்தம்
தண்ணீரருக்காக நிகழுமென்றால்
நம்பித்தான் ஆகவேண்டும் யாரும்

அவர்களின் திட்டப்படி
கார்ப்ரேட்டுகளுக்காகக் 
கம்பளம் விரித்த போது அனுமதித்த நாம்
குளிர்பானங்களைக்குடித்து
அனலில் நடந்து மிதக்கிறோம் கானலில்...

மீத்தேன் போன்றவைகளாலும்
கழிவுகளாய் ஆக்கி
நோய்கள் அருந்தும் திரவமாக்கியதில்
சுகாதாரத்தைக் காப்பதாக
பொருளாதார மண்டலமாக்கி நம்மை
போதைக்குள் புதைக்கிறார்கள்...

தண்ணீரை
புட்டியில் சிறைப்படுத்தியவர்கள்
பூமியை எரித்துவிட்டு
வறட்சியாக்குகிறார்கள் வானத்தை...

மக்களுக்கானதாக இல்லாமல்
மண்ணையும் விண்ணையும் தமதாக்கி
கொண்டாட
மகிழ்வதிலேயே இருக்கிறது
நாடாளும் எவர்க்கும்...

- கவிஞர்.கா.அமீர்ஜான்

**

எங்கும் பனியே எழிலாய்த் தோன்றும் 
      இனிமை காண முடியாது ! -அங்கே 
எங்கே என்ன எப்போ தாகும் 
      எவர்க்கும் ஏதும் தெரியாது !

எல்லை தன்னில் இரவு பகலாய் 
     இனிதே நாட்டை காக்கின்றோம்-அங்கே 
எல்லாம் உறைந்த நீரின் பரப்பு
      எடுத்துக் குடிக்க முடியாதே !

வெள்ளிப் பனியை எடுத்துக் காய்ச்சி 
      வேண்டும் நீராய் பருகிடுவோம் -இமய
வெள்ளி வெளியில் விழிதுஞ் சாமல்
       வீரர் பணியில் விளைகின்றோம் !

தண்ணீர் எல்லாம் உறைந்தே போகும் 
       தாகம் தணிக்க முடியாது !-நடந்தால் 
கண்ணில் தண்ணீர் தானே கொட்டும் 
        கொடிய குளிரே தாங்காது !

- து.ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி)

**

ஐம்பூதங்களில் ஒன்றாய் தண்ணீரும்
உயிரினங்களின் இருதயத் துடிப்பாய் !
இரு வேதிப்பொருட்களின் கூட்டமைப்பில்
நிறமில்லா,மணமற்று, நிலைகள் மூன்றிலும்
சுழலும் பூமியில் தன்னிகரில்லா தனித்தன்மையுடன்
சுழன்று வருமே மூன்றில் இருபங்காய் !
நாவறண்டு உடல் சோர்கையில்
ஏற்ற தாழ்வு பகுக்காமல்
சாதி மத பேதமின்றி உதவி கரம் நீட்டி
தாகம் தீர்க்குமே பக்குவமாய் !
இன்று நிலத்தடி நீர் வற்ற, வறட்சி காலூன்ற,
தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட
மனம் தளர்ந்த பூமித்தாய் விரிசல் கொண்டாளே !
இனியேனும் அறியாமை விலக்கி கற்ற கல்வி பயனுற
நாடு செழிக்க காடு வளர்ப்போம்
பயன்பாட்டில் சிக்கனம் காட்டி தண்ணீர் காப்போம் !!

- தனலட்சுமி பரமசிவம்

**

வான மழையை வகையாய்த் தேக்கி
     வாழும் வழியை நாம்மறந்தோம் !
ஆன வரையில் அதனைத் தேக்கும்
     அணைகட் டாமல் கடல்விட்டோம் !

ஏரி குளங்கள் குட்டை எல்லாம் 
      இல்லா தாக்கி நாமழித்தோம் !
மாரி வெள்ளம் மறிப்பார் இன்றி
      மண்தேங் காமல் வீணழித்தோம் !

நீரின் தேக்கம் இல்லா மண்ணில் 
      நீருக் காக அலைகின்றோம் !
நீரில் லாமல் உலகம் இல்லை 
      நீதி மறந்தே நெளிகின்றோம் !

தண்ணீர் தன்னைக் காசு கொடுத்துத்
      தானே வாங்கி வாழ்கின்றோம் !
தண்ணீர் தேக்கும் தனிவழி வகுப்போம் 
      தண்ணீர் பஞ்சம் போக்கிடுவோம் !

- ஆர்க்காடு ஆதவன்.

**

தண்ணீரே,
துளி  துளியாய் பெய்தால் நீ மழை,
உறைந்தால் நீ  பனி!
கொட்டினால் நீ அருவி, பாய்ந்து  ஓடினால் ஆறு !
அன்பாய் என் காலை தொட்டால் அலை, ஆவேசமாய்  சீரினால்  சுனாமி!
தாகத்துக்கும் நீ, விக்கலுக்கும் நீ,
மரம்  வளர்ப்புக்கும் நீ, விருந்தோம்பலுக்கும்  நீ !
உடலிலும் நீ, உலகிலும் நீ !
ஆனால், என்  காதலியின் கண்ணில் வடிந்தாலோ, நீ கண்ணீர்,
அதை கண்டாலோ  போகும்  என்  உயிர்!

 - பிரியா ஸ்ரீதர்   

**

குளிர்மேகம் தருகின்ற மழையும் இல்லை
கூர்கனலாய்ச் சுடுகின்ற கதிரின் எல்லை
தளிர்கின்ற கொடிவளர ஈரம் இல்லை
தவிக்கிறதே வனஉயிரும் தாகம் என்று
வளியினையும் கெடுத்திங்கே மனிதர்க் கூட்டம்
வன்செயலே புரிகின்றார் வசமாய் நின்று
துளிஅளவும் துப்புரவு காப்ப தில்லை
தினந்தோறும் நீர்நிலைக்கே துன்பத் தொல்லை

நிலங்களையும் குளங்களையும் ஞெகிழி யாலே
நீர்வற்றும் நிலவரத்தை ஆக்கி வைத்தார்
பலகற்றும் கல்லார்போல் மனிதர் கூட்டம்
பயனில்லா வழிகளிலே பயணம் ஆனார்
புலம்பெயர்ந்து நீதியெல்லாம் எங்கோ போக
புரியாத செயல்வேகம் புன்மை யாக
உயர்கின்ற குரல்வளையும் உடைந்தே போக
உயிர்துடிக்கும் துன்பத்தால் “தண்ணீர்” கேட்கும்

- கவிஞர் “நம்பிக்கை” நாகராஜன்

**

மேகம் தரும் மழைநீர் - பூமிக்கு
........மேன்மை தரும் உயிர்நீர்
தாகம் தீர்க்கும் தண்ணீர் - அதனால்
........தரணிக்கு இல்லை கண்ணீர்
தண்ணீர்தான் நிலத்தின் உயிர்-அதனால்
........தலைநிமிர்ந்து வளர்கிறது பயிர்
தண்ணீர்தான் நிலத்தின் செந்நீர்-அது
........தவழ்ந்து பாய்ந்திடும் முந்நீர்
தண்ணீர்தான் மனிதனுக்கு வரம்-அது
........தாகமின்றி வாழ்வதற்கான உரம்
தண்ணீர்தான் உலகிற்கு சிரம்-அது
........தரணியைத் தாங்கும் கரம்
தாய்தான் நமக்குசுழலும் பூமி-தாய்வாழ
........தண்ணீரை நாளும்நீ சேமி
தாய்போல் நீரும்நமக்கு சாமி-அதை
......தீர்மானமாய் சொல்வோம்உரக்கக் கூவி

- கவிஞர் நா.நடராஜ், கோவை

**

வெண்டளை விரவிய தரவு கொச்சகக் கலிப்பா

.எடுத்தேப்பம் விட்டிடவே இங்கில்லை ஆற்றுமணல்.!
தடுத்திடவும் சட்டமில்லை தங்குதடை ஏதுமில்லை.!
கடும்தண்ணீர் பஞ்சத்தால் கண்டதிங்கு துன்பமழை.!
கொடுத்தாலும் சேமிக்க கொள்ளளவு இங்கில்லை.!
.
தரணியிலே ஓர்வாளித் தண்ணீரும் பஞ்சமாக
இரவுபகல் பாராது இங்குமங்கும் ஓடுகின்றார்.!
வரவிருக்கும் பஞ்சத்தை வந்தபின்னே ஏற்காமல்
தரமான திட்டத்தால் தள்ளிவிடு தட்டாமல்.!
.
விஞ்சிநிற்கும் அன்புள்ளம் விந்தையான பஞ்சபூதம்.!
கெஞ்சவுமே வேண்டாமே கேட்காமல் தந்தருளும்.!
தஞ்சமடை எப்போதும் தந்திடுமே தாராளம்.!
பஞ்சபூத நல்லுறவே பாருலகைக் காப்பாற்றும்.!
.
நிலம்நீரும் மண்காற்று நீலவானம் என்றென்றும்
நிலவுலகில் வாழுமுயிர் நீண்டுவாழ முக்கியமே.!
பலவாறாய் ஐந்துமே பல்பொருளை ஈந்தருள
சிலவற்றைச் சேமிக்கும் சிந்தனையை வாழவிடு.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**
இயற்கையை கெடுத்த
மனிதா உன்
இயக்கத்தின் ஆதாரம்
எங்கே பழமொழி
மறந்தவனே கேள்
தாயைப் பழித்தாலும்
தண்ணீரைப் பமிக்காதே
மறந்து விட்டாயா இல்லை
மதுவால் மயங்கி விட்டாயா!
தமிழ னெனும் பெயரில்
தறிகெட்ட ஆட்டத்தால்
அகலை மறந்து கொள்ளிக் கட்டையால்
சொறிந்து விட்டு
பணமெனும் தோளை மாட்டி
இப்போது எதற்கு கண்ணீர்
வற்றிய தண்ணீருக்கா!

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**
பள்ளத்தில் பாய்ந்தோடும்
சமரச அமுதம்
முட்டாளின் கையால்
விற்பனைக்கு வந்து
சுத்தமாய் கரித்து
பித்தத்தைத் தூண்டும் விலையால்
சத்தை இழந்து சமூலங் கெட்டு
இயற்கையின் கற்பை அழித்து
இராமன் வேடமேற்ற 
குடமுனியாய் காட்டி
சமூக விலங்கினம்
அடர் வனத்தை வேட்டையாடி
நகர் வலமாய் உருவாக்கி
நீராதாரம் நின் ஆதாரமாய் மாற்றித் திரிந்த
தொகுப்பின் தொடரே
கண்ணீரான தண்ணீர்
தண்ணீரான கண்ணீர்........

- சுழிகை ப.வீரக்குமார்.

**

தண்ணீர் பஞ்சம்
தலைவிரித்தாடும் நேரத்தில்
நகரத்து வீதிகளில்
நத்தையாக தண்ணீர் சுமக்கும் லாரிகள்!
பனிக்குடத்தை சுமந்து
இடுப்புவலி வந்த பெண்களுக்கு- இன்று
தண்ணீர் குடம் சுமந்தே
இடுப்புவலி வந்தது!
தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை
மந்திரிகள் தீர்ப்பதாய் முழங்குகிறார்கள்!
தீர்க்கக்கூடிய மழை மட்டும்
மௌனம் காக்கிறது!
தண்ணீர் பஞ்சத்தால் பள்ளிகள்
நடத்த தவிக்கிறது!
மதுபான ஆலைகளும்
குளிர்பான ஆலைகளும்
பலமா நடக்குது!
கடல் நீரை குடிநீராக்கும் தொழில் நுட்பம்
எங்கள் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவில்லை!
எங்கள் கண்ணீரையும் வியர்வையையும்
குடிநீராக்கும் தொழில்நுட்பம் காண்பீர் – அதுவாவது
எங்கள் கஷ்டம் தீர்க்கட்டும்!

- -கு.முருகேசன்

**

நதிகளில் இல்லாத தண்ணீர் இன்று
விழிகளில் வழிகிறது – காலம்
வெக்கையில் அழுகிறது – மனிதன்
மதியினில் தீமை மமதை பொங்கி
மாண்பும் அழிகிறது – இங்கே
மண்ணும் சுடுகிறது

மனிதன் பொய்த்தால் வானம் பொய்க்கும்
பாடம் கிடைத்ததடி – நதியும்
பாடை ஆனதடி – மரமும்
கனிகள் தரவிலை என்றால் பூமி
காடாய்ப் போகுமடி – தண்ணீர்
கானல் ஆகுமடி

நிறைமணல் கொள்ளை அடித்தால் நதியில்
நீரும் தீயாகும் – மிச்ச
நீரும் நீறாகும் – பூமிக்

கறையென ஏரியும் கரைந்து போகும்
காலம் கூற்றாகும் – விழிகள்
கண்ணீர் ஊற்றாகும்

காக்கை தட்டிய கமண்டலம் அன்று
காவிரி ஆனதடி- இன்று
கானல் ஆனதடி – மனிதன்
போக்கை மட்டும் மாற்றா விட்டால்
பூமி சாகுமடி – நம்மைக்
குடித்திடும் தாகமடி

- கவிஞர் மஹாரதி

**

குளிர்மேகம் தருகின்ற மழையும் இல்லை
     கூர்கனலாய்ச் சுடுகின்ற கதிரின் எல்லை
தளிர்கின்றக் கொடிவளர ஈரம் இல்லை
    தவிக்கிறதே வனவுயிரும் தாகம் என்று
வளியினையும் கொடுத்திங்கே மனிதர் கூட்டம்
    வன்செயலே புரிகின்றார் வசமாய் நின்று
துளியளவும் துப்புறவு காப்ப தில்லை
    தினந்தோறும் நீர்நிலைக்கே துன்பத் தொல்லை


நிலங்களையும் குளங்களையும் நெகிழி யாலே
    நீர்வற்றும் நிலவரத்தை ஆக்கி வைத்தார்
பலர்கற்றும் கல்லார்போல் மனிதர் கூட்டம்
    பயனில்லா வழிகளிலே பயணம் ஆனார்
புலம்பெயர்ந்து நீதியெல்லாம் எங்கோ போக
    புரியாத செயல்வேகம் புன்மை யாக
உயர்கின்ற குரல்வளையும் உடைந்தே போக
    உயிர்துடிக்கும் துன்பத்தால் தண்ணீர் கேட்கும்.

- கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

**

தாகம் என்றாலே தண்ணீரைத் தான் தேடும் புவியில் உயிர்கள்.
கடும் சுடும் வெயிலின்
தாக்கத்தால் தண்ணீர்  தண்ணீர் என்று தவிக்கிறோம்.
ஏரிகள் எல்லாம் ஏரியா(area) ஆனது.
நீர் நிலைகளில் வீடுகள்
பூத்தது.
இதற்கு காரணம் யார் என்பது? ?
நதிகளை இணைக்க
விதிகளை மாற்ற வேண்டும்.
வீடுகள் ஒன்றானால்
ஊருகள் ஒன்றாகும்
நாடே ஒன்றானால்
நடப்பதெல்லாம் நன்றாகும்.
தண்ணீர் மட்டுமல்ல
எதற்கும் நாம் யாரிடமும்
கையேந்த வேண்டாம்.
நம் நாடு வல்லரசும்
ஆகிவிடும்.
இருப்பவர் கொடுத்து
இல்லாதவர் அதை எடுத்து வாழ
நாமெல்லாம் விட்டுக்கொடுப்போம்.
முதலில் நதிகளை
இணைத்து
தண்ணீர் வளத்தை
பெறுவோம் பெருக்குவோம்.

- களக்காடு வ.மாரிசுப்பிரமணியன்.

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com