கடந்த வாரத் தலைப்பு தாமரை! வாசகர் கவிதைகள்!

மலரச் செய்திட்டது அழுத்தம் அந்த அழுத்தம் தாங்கியும் சிறப்பு.. தண்ணீரைத் த‌ழுவிச் சிரித்தது..
கடந்த வாரத் தலைப்பு தாமரை! வாசகர் கவிதைகள்!

                                       
தாமரை

ஒரு குளம், ஆயிரம் முகங்கள் - தாமரைகள்
குளத்தில் இறங்கி நீராடினாள் கோதை
அறிய முடியவில்லை ஆயிரத்தில் அவளை
சூரியனின் சுடுவிரல்கள் குளிர்கின்றவாம்
மலர்முகம் வருடுகையில் கதிரவன் வரவுக்குக் 
கதவு திறந்து வைத்த தாமரை
அவன் போனதும் சாத்திக் கொண்டாள் 
வெண்தாமரை கலைமகளுக்கும் செந்தாமரை திருமகளுக்கும்
சொந்தமெனச் சொன்ன போது...
அலைவட்டம் போட்டு மெல்லச் சிரித்தது
தடாகம் தரைகுளிர நீர்தெளித்துத்
தாமரைக் கோலம் போட்டாள் வண்டுகள் மொய்க்கின்றன

- கோ. மன்றவாணன்

**

வாசமலர்த் தேன்மலரை வாயார வாழ்த்தவந்து..

தேசமலர்த் தாமரையின் தன்மையிலே மனமுவந்து..

பாசமுடன் சமர்ப்பித்த பூக்களையும் பாக்களாக..

தாசனாகப் பாடவந்தேன் தண்தமிழின் சொற்களிலே.!

தண்ணீரின் மேலெழுந்து தன்முகத்தைக் காட்டிநின்று

மண்நீரில் கால்வைத்து மாசுநீக்கும் தன்மைகொண்டு

கண்குளிரக் காட்சிதந்து காலத்தை வெல்லவந்தாய்

எண்ணமுமே மேலோங்க இன்பமுமே தந்துநின்றாய்.!

.

அலர்மேலே ஆசையுடன் அன்புடனே வந்தமர்ந்தாள்

மலரின்மேல் அவதரித்த மங்கையான மஹாலஷ்மி

அலங்காரம் செய்வித்த அன்றலர்ந்த மலரெல்லாம்

இலக்குமியை ஏந்தியதால் இறவாத புகழ்மலராம்..!

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

செல்வமகள் என்னும் திருமகளும்
     செந்தாமரையில் அமர்ந்து அருள்கின்றாள்..
கல்விமகள் என்னும் கலைமகளும்
     வெண்தாமரையில் அமர்ந்து ஒளிர்கின்றாள்..
கதிரவனின் வருகையைக் கண்டு
     காலையில் அழகாய் மலர்ந்தாய்..
மதியின் வருகையைக் கண்டு
     மாலையில் வெட்கத்தில் குவிந்தாய்..
சேற்றோடு வேர் இருந்தும்
     சோலைப் பூவாய்நீ சிரித்தாய்..
காற்றோடு இதழ்கள் விரித்தும்
     கன்னிப்பெண்ணாய் இதயம் பறித்தாய்..

- கவிஞர் நா. நடராசு, கோவை.

**

சேற்றில் மலர்ந்த செந்தாமரை மலரே
ஆற்றின் நடுவே  அழகு காட்டும்  நீ
காற்றில் கலக்கும் கவிதை எழுதிடவே
ஊற்றாய் கற்பனை உதிர்க்க வைப்பாயே!

நீலம்   வெண்மை செம்மை   யென்று 
நின்னிலும் பிரிவை மனிதன் வைத்தானே!
காலம்   பலவும்  சென்ற   பின்னாலும்
கண்ணியம் தவறா மலர்  நீதானோ!

மலர்களின்  ராணி  மகிழ்வாய்  நீயே
மண்ணையும் நீரையும் இணைப்பவள் நீயே
உனைப்பாடி மகிழ உண்மையாய் ஆசை
உலகமும் இதற்கு உடன்படும் மலரே!

- ரெ.ஆத்மநாதன், அலக்சாண்ட்ரியா,அமெரிக்கா

**

தண்ணீர் பரப்பில்
 தாண்டவமாடும் தாரகைநான்;
திங்கள் உதித்தால்
  தீந்தமிழாய் மலர்வேன்...
தும்பிகள் சூழ
  தூவிதழ் விரிப்பேன்....
தென்றலின் இசைக்கு
  தேர்போல  அசைவேன்...
தையலவள் கைகளினால்
  தொழுவதற்காக கொய்தால்
தோழியவளுக்கு நானோ
  தௌவையாவேன் இங்ஙனம்

தௌவை - தமக்கை.

- தேவிகா, தென்காசி

**

அடி அறியாது நீண்ட 
கொடியுடன் வளர்ந்து
தடாகத்து நீரில்
தலை நிமிர்ந்து நிற்கும் தாமரையே !
காலையில் மலர்ந்து
மாலையில் உதிர்ந்தாலும்
விரித்திருக்கும் இதழ்களுடன்
சிரித்துக  கொண்டிருக்கும் 
தாமரையே உந்தன் மறு பெயர்
தன்னம்பிக்கையோ  ?

- ஜெயா வெங்கட், கோவை .

**

எல்லோரும் வியந்து
பார்க்கும் அழகி
இவள்
வானம் முகம்
பார்க்கும் தண்ணீரில் 
வாழ்க்கை
 இவள் 
காற்றில் அசையும்
ஓவியம்
 இவள் 
கதிரவனின் காதலி 
என்றுகூட சொல்லலாம்
மனம் வீசும் மலரின்
 பெயர்
 'தாமரை'
      
- பிருத்திவ்ராஜ், சேலம்

**

நீரில் மிதக்கின்றாய்,
நிலவை வெறுக்கின்றாய்.
சூடாய் இருக்கும் அவன்
சுடரில் மலர்கின்றாய்.
மாயன் மனைவி அவள்
மலர்க்கரம் தவழ்க்கின்றாய்
பிரம்மன் மனையாளை
மகிழ்ந்து சுமக்கின்றாய்
எங்கள் திருநாட்டின்
எழில்மிகு பூவன்றோ
எல்லோர் மனங்களிலும்
இனித்திடுவாய் நீயன்றோ படைப்பு

- பி.எல். குமார்

**


அலைமகள் வாசம் செய்யும் 
உன்னிடம் நேசமும் இருப்பதாலதான் 
தேசத்தின் மலரானாயோ!
வாசம் மிக்க உன்னிடம் 
கற்க வேண்டியது பல 
உன் இலையின் மீது 
தண்ணீர் விழுந்தால் 
பன்னீர் போல முத்து முத்தாக 
விழுந்ததில் .....வாழ்க்கையில் 
ஆசையின் மீது இப்படி 
ஓசையில்லாமல் இரு என 
நீ சொல்லும் பாடம் புரிந்தால் 
வெற்றி நிச்சயம்!

- உஷா முத்துராமன், மதுரை  

**

வாழ்வின் தத்துவ 
நிலையை உணர்த்தும்
அற்புத மலர்
தண்ணீரைத் தொடாத 
இலைகளால் வாழ்வை
வாழ கற்பிக்கும் முறை;
பரிதியால் விரிந்து
பவளமாய் தெரிந்து
மணத்தோடு
இறையடி காட்டும்
கூம்பிடும் கைகளின்
வடிவாய் வணங்கிடத் தூண்டும் 

- முகில் வீர உமேஷ், திருச்சுழி

**

நீரோடு ஒட்டாமல்
நீரோட்ட மட்டத்தின்
உயர்வுக்கு மாறும்
வள்ளுவன் வாய் மொழி
வகுத்த தேன் மொழி
நன்னீரில் வளரும் பூ
முருகுவை வளர்த்த பூ
பகலில் சூரியனால் மலரும்
இறைக்குச் சூடும் மலர்
இறையான மலர்
கபிலர் சொன்ன மலர்
பாரதி பாடிய மலர்....

- ப.வீரக்குமார், திருநின்றவூர்

**

கள்ளமில்லாமல் அமர்ந்த  சரஸ்வதி  
வெள்ளை மனதுடன் உள்ளன்போடு 
வணங்கிய பக்தனை "கல்விமானாக"
துள்ளி படிக்க உதவுவாளே.......
செந்தாமரை மலரில் 
பந்தமில்லாமல் அமர்ந்த மகாலட்சுமி 
சொந்தங்களை ஆதரித்து 
பந்தங்களுடன் வாழ பணம் கொடுக்கும் 
குணம் படைத்த உத்தமி......
மலர்களை போற்றுவோம்.......
தாமரை மலரை வணங்குவோம்...
நல்வாழ்வு பெறுவோம்!

- பிரகதா நவநீதன், மதுரை  

**
சூரியனை பார்த்த தாமரை போல,
உன்னை பார்த்ததும் மலர்ந்தேன்!
தெய்வத்துக்கு மட்டுமே 
பூஜிக்கப்படும் தாமரை  போல,
எனக்கான பிறப்பு  நீ!
பொற்றாமரை குளம் போல,
எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ!
மெய்ஞ்ஞான நிலையின் ஆதாரம் தாமரை போல
நல்வழியில் நடத்தும் துணை நீ!
என்  இதய  தாமரையே!
விஷ்ணுவின் நாபி தாமரை  போல
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்!!

- பிரியா ஸ்ரீதர்   

**

கீழ்வானம் அலங்கரித்த கதிரோன் கண்டு
தலைவன் கண்ட தலைவியாய்
நாணம் கொண்டு உதிர்த்த 
முகிழ்நகையில் விரிந்தனவே
குவிழ்ந்த உன்தன் இதழ்கள் !
நீருள் பிணைந்த தண்டு போல்
பின்னிய மனச்சுமைகளை
உன் இலை மேல் நீர் போல்
திரைமறைவில் கொண்டு,
இன்னல் மறைத்து ,
இன்முகம் காட்டும் பெண் வாழ்வில் 
செந்தாமரையே ! நீயே முன்னுதாரணமோ !

- தனலட்சுமி பரமசிவம், நாகர்கோவில்

**

அடுக்கக அலங்கோலத்தில் சுவாசிக்க
 இடம் தேடி துளசி முறையிட
தலைகுனிந்து கண்ணீரால் பழுத்த
முதியோர் இலைகளை உதிர்த்து நிற்க
காற்றே தூதாய் செல்ல
குளிர் வாவி சூழ் தண்டமிழ்
தாமரை தங்கை இதழ் காதில் 
லேசாய் கிசுகிசுக்க 
தா மரையாய் ஓடி
வந்து உடன்பிறப்புகளின் 
உயிர் காக்க சட்டம்தான் இயற்றுவாளோ!
அமிர்தவர்ஷிணியாய் மேகம்தான் பொழியாதோ!

- சீனி

**
மாண்பில்லா மலர்கள் தலைவியானாள் பாரதநாட்டிலே! 
கதிரவன்வரவுகாண காலை காதலியாய்க் காத்திருப்பதாலோ!
பிரமனுக்கும் பெண்களுக்கும் கண்ணானாதலோதோ!
பிருந்தாவனக் கண்ணன் கழுத்து மாலையானதாலோ!
மயில் நடனமாடும்  மேடைகளுக்கு விளக்கானதாலோ!
மலைமகள் அலைமகள் கரங்கள் தங்கலானாதலோ!
ரோசா மலரை  தலைவியாய் ஆக்க விரும்பினால்
ஐகோ! அவளிடம் அழகிருந்தென்ன? கூர்முள் கீறினவே! 
மல்லிகை முல்லை மணமிருந்தாலும் சிறு காம்பே இருந்தன
ரோசாவின் அழகும் மல்லி முல்லையின் மணமும் 
நீண்டெழு காம்பும் கொண்ட தாமரையே மலர்களின் 
மாண்பில்லா  மலர்கள் தலைவியானாள் பாரதநாட்டிலே! 

- மீனாள் தேவராஜன், சிங்கை

**
மகா விஷ்ணுவிற்கே ஒளி கூட்டினாய்..
இலக்குமிக்கும் உண்டு
இருக்கை உன்னால்,  பத்மாசனமாய்—
உன்னைப்போல் தன்
உருவத்தையே மாற்றிய பரமசிவன் ---
சேற்றிலிருந்து எழுந்து
சூரியனை வணங்கினாய், இருந்தும்
அழுக்குகள் அண்டாத சுத்தம் நீ.
பூமியில் பற்றுதல் இன்றி வாழ்ந்தால்
நீயும் இறைவனை அடையலாம் --
மனிதனுக்கு இதை உணர்த்தவா
தினமும் பூக்கிறாய் ??

- கவிஞர் டாக்டர்.  எஸ்.பார்த்தசாரதி  -- MD DNB PhD

**
தாமரை இலைமேல்
தெறித்த நீர்த்துளியென
உள்ளக் கமலத்தில் 
மெல்லச் சேர்ந்தழுந்தும்
துன்பச் சுமைகளையும்
ஆத்திர சிலுவைகளையும்
வெறுப்பு மூட்டைகளையும்
வீம்பான பிடிவாதங்களையும்
புறந்தள்ளி - வாழ்வைக் கடக்க
கற்றுத் தேர்ந்தால்
மகிழ்ச்சி எனும் தங்கத் தாமரை
என்றும் நம் வசமே !

- பி.தமிழ் முகில்

**
மாந்தரின் உயர்வைச் சொல்வது தண்டு
காந்தமாய் இருக்கக் கூறுது இதழ்கள் 
சாந்தமாய் வாழ்வினைச் சொல்வது இலையே
பாந்தமாய் ஆசனம் ஆனது மலரே

வேந்தின் திருமலர் ஆனதும் நீயே
ஏந்திழை கண்களுக் குவமையும் தானே
பைந்தமிழ்ப் பெருமகள் கன்னங்கள் போலே
ஏந்திடும் புகழ்படு மாமலர் வாழீ!

- கு. இராமகிருஷ்ணன் - வடக்கு அயர்லாந்து

**

ஆகாயத் தாமரை உன்னைச்
சுற்றி படர்ந்தாலும்
தலைநிமிர்ந்து நிற்கிறாய்
உன்னைப் போல
தலைநிமிர்ந்து நின்றிட
முயல்கிறேன் முயல்கிறேன்.
நீரில்லை என்றால்
நீயும் இல்லை நானும் இல்லை.
தண்டோடு வளரும்
தாமரை மலரே
நீயும் தண்டும் பிரியாத
உறவின் இலக்கணம்.

- களக்காடுவ.மாரிசுப்பிரமணியன்

**

சேற்றில் பிறந்து சிலையில் கலக்கும் தாமரையே!
குளத்தில் உன் தொப்புள்கொடி
கோயிலில் உன் தாலிக்கொடி!
தண்ணீர் தேசத்தின் தலைமகளே!
நீ வண்டுகளின் மதுக்கூடம்!
வையகத்தின் கலைக்கூடம்!
செந்தாமரையோ!
செல்வமகளின் குடியிருப்பு!
வெண்தாமரையோ!
கலைமகளின் குடியிருப்பு!
தண்ணீர் குளமோ!
தாமரையே உன் குடியிருப்பு!

- கு.முருகேசன்

**
மௌனத்தின் மொழியை
யாரறிவார் இங்கே
புத்தருடன் - தாமரையும் - 
தியானத்தால் சிரிக்கும்.
உணர்வாளர் எவரும்
உள்ளுர சிலிர்ப்பர்
மௌனமே வார்த்தையாய் 
மன வானில் பறக்கும்
மறை பொருளின் விளக்கமது
எந்தத் தாமரையும் 
நீர் மீது 
ஒட்டாமலிருக்கும்!

- செந்தில்குமார் சுப்பிரமணியன்.

**

சேற்றில் பிறந்து 
தயங்கித் தயங்கி
தானாய் மலர்ந்த‌ தாமரை
தண்ணீரிடம் சொன்னது..
மடல்கள் தாங்கிய அழுத்தம்
இதழ்கள் விரிந்த தருணங்களில்
மலராய் மலர்ந்து உணர்ந்தேன்
மலர்ந்ததில் இல்லை சிறப்பு
மலரச் செய்திட்டது அழுத்தம்
அந்த அழுத்தம் தாங்கியும் 
நிமிர்ந்து வாழ்ந்ததுவே சிறப்பு..
தண்ணீரைத் த‌ழுவிச் சிரித்தது..

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ், அமெரிக்கா.

**

இலையில் இடம் தந்த தாமரை 
தன இதழில் இடம் தரவில்லை - எனச் 
சொல்லியழுதது தவளை!
உணரவில்லை அதன் தவறை!

தண்ணீரையே ஒட்ட விடாத தாமரை இலை 
தனக்கு இடம் தந்தைப் போற்றவில்லை!
தன்னை மதிக்கா தாமரையின் 
தலைக்கனம் அதற்குப் புரியவில்லை!

மடத்தவளை இதை போல 
மனிதத் தவளைகளும் உண்டு!
இருக்கும் இடங்களை மறந்து 
பறக்கும் ஆசைகள் கொண்டு!

- நிலவை பார்த்திபன் 

**

மலர்ந்திடு மலர்ந்திடு தாமரை !

நலந்தர மலர்ந்திடு தாமரை !

தேசிய மலரே தாமரை !

தேசம் ஒளிரவே தாமரை !

பாரதத் தாயின் முகமலர் நீ !

பரமனின் பாத மலரும் நீ  !

இறைவனின் பூசை மலரும் நீ !

இருநிலம் போற்றும் மலரும் நீ !

மருந்தாய் மருத்துவர் கைப்பொருளே !

மகளிரும் சூடி மகிழ்வரே !

மலர்ந்திடு சுகந்தர தாமரை !

மலர்ந்திடு மனங்கவர் தாமரை !

 - R. அறிவுக்கண்

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com