கடந்த வாரத் தலைப்பு நிலாக்காலக் கனவுகள்! வாசகர் கவிதைகள்!

பலாச்சுளையின் சுவைபோல பகல்கனவில் சுகம்தருவாள்.!நிலாக்கால நினைவுகளாய் நினைவிலவள் இடம்பெற்றாள்,! 
கடந்த வாரத் தலைப்பு நிலாக்காலக் கனவுகள்! வாசகர் கவிதைகள்!


நிலாக்காலக் கனவுகள்

பலாச்சுளையின் சுவைபோல பகல்கனவில் சுகம்தருவாள்.!
நிலாக்கால நினைவுகளாய் நினைவிலவள் இடம்பெற்றாள்,!
கலாரசிகை என்நிலவே கண்ணருகில் தோன்றிடத்தான்.!
துலாபாரம் தந்திடநான் தொழுதிடுவேன் இறைவனிடம்.!
.
உன்னையன்றி யாருமில்லை உவமையாக்கத் துடிப்பாரே.!
உன்மத்தம் பிடித்ததுபோல் உறக்கமிலாக் கவிஞரெலாம்.!
மென்மையாகச் சொல்வதற்கே மிகவும்நீ பொருத்தமானாய்.!
பன்முகமும் தந்தாய்நீ பாவலர்க்கு நிலாப்பெண்ணாய்.!
-
நினைவெல்லாம் நிறைந்திடுவாள் நிலவைநீயும் நேசித்தால்.!
வினையில்லாச் சிந்தனைகள் வீழ்ந்துவருங் கவிதையாகும்.!
அனைத்துலகக் கவிஞரெலாம் அடிமையன்றோ உன்மடியில்.!
நினைவாற்றல் தந்திடுவாய் நிலாக்கால நினைவுகளாய்.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**
சித்திரையில்
முத்திரை தரும்
முகத்திரையிலா முழுமதியே
கடற்கரை மணலில்
வெளிச்சப் பொட்டில்
நித்திரை மறந்து
பத்தரை மாற்றுடன்
தென்றல் படர
தீந்தமிழ்க் காதல் சொல்லால்
ஏந்திடுவேன் 
என் மனமேந்திய
கள்ளியை கனிவாய்
செல்வியை துணை கொண்டு
நாட்களை வருடமாக்கி....

- ப.வீரக்குமார், திருநின்றவூர்


**

இரவுக்குறி நேரமாச்சு
அவளைத் தேடி 
போகணும்,
ஆளில்லாத வேளையில
வேறு ஒலி கொடுத்து
பூனையாய் பதுங்கிப் போகணும்
கொல்லைப் புற
நிலவொளியில்
கூடிக் கலந்து பேசணும்
ஒளி கொடுக்கும் தண்மை
சேர்ந்து இருந்த இனிமை
என்றும் மிறாது,
நிலாக் காலத்தில்
மனதில்
சுகமாக தினம் ஓடுது......

- முகில் வீர உமேஷ், திருச்சுழி

**

மொட்டை மாடியில்  
வெட்டை  வெளியில் 
கருமை சூழுந்த  இரவில்  
பெருமையுடன் அமர்ந்து 
கருமையான மேகத்தின்  
உள்ளே  மறைந்து மறைந்து 
வரும் நிலா..........  உன்னை 
ரசித்து  கொண்டே கண் அயர...
சட சட  என்ற தூறல்  வந்து  
தொட்டு எழுப்பியதால்   
சட்டென   விழிக்க .......
அப்பொழுதும் எதற்கும்  கவலையின்றி 
எப்பொழுதும்   நடமாடும்   உன்னிடம் 
முப்பொழுதும் கற்க வேண்டியது 
காலம் நேரம்  பார்க்காமல் 
ஞாலம்  விரும்பும் கடமையினை 
செய் என்ற பெரும் நீதி.  
நிலாக் கால  நினைவுகளை 
பலா போல  இனிப்பது  
துலாக்கோல்  போன்ற  நாம் 
நடக்கும்  விதத்தில்தான்!
புரிந்து  நிலாவினை   ரசிப்போம்!

- உஷாமுத்துராமன், மதுரை   

**

இரு பிறைகள் கொண்ட முழுமதியே
தேய்பிறை வளர்பிறை இல்லா 
பவுர்ணமியே
ராகு கேதுவால் மறையாத 
பிறை நிலவே
நிலாக்காலத்தில்
வீதியுலா வரும் அழகே
உன்னை கண்டால்
காயம் ஆறும்
காதல் பெருகும்
காதல் மொழி பாடி
காற்றில் ஆட தோன்றும்..

- ரகுநந்தன், மேலை

**

நீலவானில் நிலவைக் காட்டி
        பாட்டி ஊட்டிய சோறு
கோலமயிலும் நாணுமாறு அவள்
        எனக்கு உடுத்திய பட்டாடை
மாலைவெயிலில் என்மழலைக் கரம்பற்றி
        நாம்சென்ற பாதை, எல்லாம்
நிலாக்கால நினைவுகள் அவளில்லாமல்
        என்றும் கனாக்கால கனவுகளாய்

- பழனியப்பன், பெங்களூர்

**

தாய்க்கு மட்டும் தெரியும்
பகலில் காகம் காட்டுவாள்
அந்தியில் நிலவை காட்டுவாள்
வாய் திணித்து சோறூட்டுவாள் 
அது என் நினைவு நிலாக்காலம்.
பசி மறந்தேன் தூக்கம் இழந்தேன்
நள்ளிரவு வீதியில் நடை பயின்றேன்
முன்னும் பின்னும் மறைந்து வந்தான் 
அண்ணாந்து பார்த்தேன் வேகமாக
அதே வேகம் ஓடுகிறாள் நிலா
நின்றது நினைவு, ஓடியது 
நிலா மட்டுமல்ல..நினைவுகளும் தான்.

- இரா.அண்ணாமலை, திருவண்ணாமலை்

**

நிலாச் சோறு கூடியிருந்து
உண்டதும் மகிழ்ந்ததும்
பண்பான புராணக் கதை கூறி
வளர்த்த விதம் அருமையன்றோ?
தளர் நடை பாப்பாவும் இரவில்
வளர்மதி இனிய ஒளியினிலே
தளம் முழுவதும் ஒடியோடி
வாய் சோறும் சிந்தி சிரித்து
காய்கறி அமுதுடன் சோறுண்ட
நிலாக் கால நினைவுகள்
உலா வருமே நெஞ்சினிலே 

- ராணி பாலகிருஷ்ணன்

**

நடந்தவை எல்லாம் நிலா காலம்!
நிலாக்காலம் எல்லாம் விழாக்கோலம்!
நினைத்தாலே போதும், நினைவு உலாப் போகும்!
கஷ்டகாலம் சொல்லவா! இன்ப காலம் சொல்லவா!
மலர்ந்த மாலைப் பொழுதினிலே! 
மங்கையை பார்த்த கதை சொல்லவா!
ஆசிரியரின் அறிவுரையை சொல்லவா!
அன்னை,தந்தை அரவணைப்பை சொல்லவா
வீதியிலே நண்பனோடு விளையாண்ட கதை சொல்லவா!
வேலைக்காக வீட்டை  பிரிந்த கதை சொல்லவா!
எல்லாம் அது நிலாக்கால   நினைவாயின்!
இன்றும் அது - மகிழ்ச்சியின் ஆரவாரம்.

- மு. செந்தில் குமார் - ஓமன் 

**

முழுநிலவு காயும் நேரம்
ஆற்றங்கரையில் வீட்டில் 
சமைத்து உண்ணும் உணவுகளை 
சரிசமமாக அமர்ந்து உண்ட
அந்த நிலாக்கால நினைவுகள் 
மறப்பதில்லை—அது ஆடிப்பெருக்கு
ஆற்றிலும் நீர்பெருக்கு
உள்ளங்களிலே பூரிப்பு-- அன்று
வலம் வந்த,மனபலம் தந்த,
அந்த நிலாக்கால நினைவுகள் 
இனி வருமா? அசை போடும் 
கால்நடையாக மாறி நிற்கின்றேன்

- களக்காடுவ.மாரிசுப்பிரமணியன்

**

அம்மா, அப்பா,அண்ணன், தங்கையுடன் 
சிம்மாசனம் போட்டு அமர்ந்த 
திறந்தவெளி மாடியில் 
சிறந்த உணவினை அம்மா 
கொடுக்க மகிழ்ந்து உண்டது 
ஏக்கம் பெருகும் நினைவலைகள்.
திறந்த வெளி மாடி போய் 
பறந்து வந்து உட்கார 
பறவைக்கு கூட இடமின்றி 
திகைக்க  வைக்கும் 
அடுக்கு மாடி கட்டிடங்களினால் 
இந்த நிலாச் சோறு!

- பிரகதா நவநீதன்.  மதுரை 

**

மொட்டை மாடியின் காரிருள் இரவில்  
கோரைப்பாய் விரித்து ஓரமாய் படுத்து 
வானொலியில் வழிந்துருகும்   
எழுபதுகளின் ஏகாந்தப் பாடல்களை 
செவியினிக்கப் பருகியபடி   
கற்றையாய் படர்ந்த நட்சத்திரத் திரள் நடுவே 
ஒற்றையாய் பூத்துலவும் 
பால் நிலா இரசித்த பழைய நினைவுகள் 
அவ்வப்போது தலைகாட்டி ஆறுதல் படுத்தாதுபோனால் 
இவ்வெந்திர உலகின் இடுக்குகளில் சிக்கி 
என்றோ தொலைந்திருக்கக்கூடும் 
எஞ்சிய வாழ்வின் மிச்சப் பாகங்கள்!

 - நிலவை பார்த்திபன்

**

எட்டுச் சுற்று வீடுகள் இணைந்திருக்க
விட்டு விடாத நட்பில் கலந்திருக்க
மொட்டை மாடி மட்டும் பொதுவிலிருக்க
எட்டும் தூரத்தில் நிலவொளி வீசிய காலம்

சோற்றுருண்டைகள்  ஒவ்வொரு கைகளிலும்
மாற்றி மாற்றி பயணம் செய்து வயிறடைந்தன
போற்றிப் பாடும் பாட்டுகள் நடனங்களுடனே
தோற்றுப் போனது நிலவும் தண்ணொளி வீசி

கூடிக் கும்மாளமிட்ட கூட்டுறவுகளின் நினைவு
ஆடிமாதக் காற்றில் அடித்துப் போனதூசி போல
தேடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது நட்பும் அன்பும்
வாடிப் போன உளளத்தில் நிலாக்கால நினைவுகள்.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**
நித்தமும்
நிலவெழுதிச் செல்லும் தொடர்காவியத்தைத்
ரசித்து வாசித்துத் தலையாட்டுகிறது
நதிமேட்டுத் தென்னைமரக் கீற்று
அதே
நதிக்கரையில் நின்று
நிலாக்குளியல்  செய்து திரும்பிய
நாள்களைக்
கவிதையில் பொதிந்து பத்திரப்படுத்த நாம்
கவிஞர்களாவது எப்போது....
நிலவிலேறி இராத்தங்க ஆசை
கட்டிலோடு வரட்டும் கனவாவது

- கோ. மன்றவாணன்

**

நிலாக்கால நினைவுகள் ...காலம் 
பல கடந்தும் என் மனதின் ஒரு ஓரத்தில் !
நான் கடந்து வந்த பாதையை தடம் 
பிரித்து காட்டுது எனக்கு இன்னும் !
நிலாக்கால கனவெல்லாம் நனவாகவில்லை 
நனவான இனிய நிகழ்வெல்லாம் நான் 
கண்ட கனவிலும்  இல்லை ...இதுதான்  உண்மை !
நிலாக்கால கனவு வேறு ... நிகழ் கால நிஜம் 
வேறு ! இது புரிய இத்தனை  நாள் எனக்கு !
மகிழ்வுடன் வாழ்கிறேன் நான்  நிகழ் காலத்தில் இன்று 
எதிர் கால கற்பனை எதிர்பார்ப்பு எதுவும் இன்றி !

- K .நடராஜன் 

**
மனம் மயக்கும் மஞ்சள் நிலா
தன்னழகை சித்தரித்து உதிக்க,
பரந்து விரிந்த கருவானில்
சிதறிய நட்சத்திரங்களோ
ஆங்காங்கே கண்சிமிட்ட,
சீண்ட வரும் வெண்முகிலுடன்
கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி,
பலரின் கனவு தேவதையாய்
சிங்கார வெண்ணிலா உலாவர,
அடுத்து வரும் ஈரேழு நாட்களும்
அந்த அழகு பதுமையின் நினைவலைகள்
நம்மை வருடி செல்லுமே !

- தனலட்சுமி பரமசிவம்

**

நிலவு வந்தது போலவே
நினைவு நெஞ்சினில் வந்ததே..
உலவும் மேகம் போலவே
உறங்காமல் உள்ளமும் ஏங்குதே..
இரவு பயணிக்கும் மதியோடு
இன்பமாய் நாட்களும் போனதே..
கரம் பிடித்த காதலோடு
காலமும் பசுமையாய் ஆனதே..
கண்சிமிட்டி வானில் விண்மீனும்
கவிதையை நாளும் எழுதுதே..
கண்கள் மறைத்த கண்ணீரும்
கனவுகளின் துளியாய் விழுதே..

- கவிஞர் நா. நடராசு, கோவை

**

நிலாக்கால நினைவலைகள் நெஞ்சத்தில் அலைமோதும்
 உலாவரும் எங்களுக்கு உன்னத வாய்ப்பு இது
குட்டிக் கிராமம் குடியிருந்தோம் அங்கேதான் அந்நாளில்
 அரங்க நாதர் கோவிலொன்று அங்கே அழகு செய்யும்
அதற்கு எதிரே  அமைந்துள்ளது அழகான  மைதானம்
  அதில்தான் அனைத்து விழாக்களும் அரங்கேறும்
சாதரண நாட்களிலே பள்ளிப்பிள்ளைகள் விளையாடுவர்
  நிலாக்கால நாளில்மட்டும் குழுகுழுவாய் கபடி போட்டி
அசாதரண நாட்களின்  அரசியல் பிரச்சர மேடையாகும்
  அந்நாளில் எங்களின் நிலாக்கால களிப்பு பரிபோகும்
நிலாக்கால நினைவுகளைக் கொண்டே மகிழ்ந்திருப்போம்
   நிரந்தரமாய் மைதானம் செய்துதரும் ஆட்சிவேண்டும்

- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்

**

வாழ்ந்திருந்த  போதெல்லாம்  வசந்தம்  தந்தாள்
    வாஞ்சையுடன்  என்நலத்தை  பேணிக்  காத்தாள்
தாழ்வென்றே  என்நிலைகள்  தெரியா  வண்ணம்
    தடுத்திருந்து  நலமொன்றே  தந்தாள்  என்னுள்
ஆழ்மனதுள்  உயிரென்றே  இணைந்து  வாழ்ந்து
    அன்பினுக்கோர்  அடையாள  மகிழ்வைத்  தந்தாள்
வீழ்கின்ற  நேரமெல்லாம்  என்னைக்  காத்து
    வேதனைகள்  தீர்த்திருந்து  இன்பம்  தந்தாள்
மூழ்குகிறேன்  மோனத்தில்  மனதில்  நித்தம்
    மோதுகின்ற  எண்ணமெல்லாம்  அவள்தான்  நின்றாள்
ஏழ்பிறப்பும்  காத்திருப்பேன்  அவளைக்  காண
    என்வாழ்வின்  “நிலாக்கால  நினைவை”  எண்ணி

- கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

**
ஆடு மாடுகளோடு காட்டில்
காரப்பழம் சூரப்பழம் மேய்ந்து
சுனைநீர் குடித்து சுரத்தில் படுத்ததும்!
கொட்டும் மழையிலும் 
கோணிப்பை தலையிலும்
தேகம் நனைந்துநடுங்கியதும்!

துள்ளித்திரிந்து தும்பி பிடித்ததும்!
தூண்டில் போட்டு மீன்கள் பிடித்ததும்!
மழைக் காலத்தில் மதிய நேரத்தில்
கிணற்றில் குதித்ததில் கண்கள் சிவந்ததும்! 
வளர்பிறையாய் இருந்த பால்ய பருவத்தின் 
நீங்காத நினைவுகள்!

- கு.முருகேசன்

**

நிலவே - நீ வானில் பௌர்ணமியானால்
பக்தியோடு இறை வழிபாடு செய்கிறாா்கள்;
நீ அமாவாசையானால் நம்மவர்கள் - 'பய'
பக்தியோடு  இறை வழிபாடு செய்கிறாா்கள்;
வேண்டியவர் வீட்டில் இறந்தால் தெய்வமாகவும்-
வேண்டாதவர் வீட்டில் இறந்தால் பேயாகவும்-
முன்னோா்கள் - வருவாா்கள் என்ற முரண்பட்ட
அமாவாசை வழிபாட்டில்- ஒன்றுமட்டும் நிதர்சனம்
காக்கைக்கும் - பிற உயிர்க்கும் அன்றுமட்டும் 
அன்னதானம்  அமர்க்களமாய் உன்மூலம் நடைபெறுகிறது...
ஆகாயத்திலிருக்கும் அட்சயப்பாத்திரமே பத்திரம் - இன்று
வறட்சி உணவில்மட்டுமல்ல பாதுகாப்பிலும் உள்ளது.....!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி

**

கிழக்கிலும் கண்டேன் உன்னை
மேற்கிலும் கண்டேன் தலை நிமிர்ந்து
வான உச்சியிலும் கண்டேன் – நிலவே

பிறைத்துண்டாய்க் கோணலாய் நின்றாய்
முழுமையாய் வட்டமாய் நின்றாய் ஒரு நாள்
வானில் காணாது போனாய் – நிலவே

ஏற்றமும்  இறக்கமும் உயர்வும் தாழ்வும்
வறட்சியும் செழிப்பும் உலகிலுள்ளார்க்கு
எல்லாம் உண்டென தேய்ந்து வளர்ந்து
அல்லில் அசைந்து காட்டுகிறாய் நிலவே
நினைவுகளாய் உன் சுழல் காலச் சுற்றில்  
நினைவுகளாய் மலர்கின்றன மனதில்.

( அல் = இரவு)

- மீனா தேவராஜன் - சிங்கை  

**

கடலின் காதோரம் மிதக்கும் நிலவே 
கற்பனையின் ஆழியலைகள் எழவே !
மாதமொரு பாதியில் வரும் தேவதையே 
மாபெரும் மேக மேடையில் தோன்றும்!
  
ஒளி தரும் வெண்மதியே கண்மணியே !
உன் ஒளிமழையில் நனைந்தேன் சுகமே 
என் முகம் மகிழவே மங்கை போலவே 
உன்னைக்  காண்கிறேன் இமைக்காமலே !

உன் நினைவுகள் எழும் நேரமே மின்னும் 
பொன்மதி என் வெண்மணியே வாராய் !
கண்களுக்குள் காவியமாய் கலந்து நிற்கும் 
நிலவின் ஒளியே நினைவின் காலஓவியமே !

- டாக்டர் மகேந்திரபிரபு, சிவகாசி

**
ஒன்றென அமர்ந்து உறவுகள் கூடி
திங்களும் மலர்ந்த இனிய தோர்மாலை
வெண்ணிற ஒளியும் ஊரெல்லாம் பாயும்
பொன்னிற மணலிற்ப் பரப்பது மீதே
அன்னையும் தந்தையும் உருண்டைகள் பிடித்து 
என்சிறு வாயில் அமுதூட்டிடும் வேளை 
எண்ணிலா மகிழ்வும் உள்ளமே காண
உண்ட நன்நேரம் வருவது என்றோ?  

- கு. இரா, வடக்கு அயர்லாந்து 

**

செல்லும் இடமெல்லாம்
துணையாய் ! - எந்தன்
தனிமை வெறுமை போக்கினாய் !
சற்றே அயர்கையில்
மேகத்தினூடே ஓடியே
கண்ணாமூச்சி காட்டினாய் !
உன் முகம் பார்த்து
கட்டாந்தரையில் தலைசாயக்க
கதை பல பேசியே
கண்ணுறக்கம் ஊட்டினாய் !
இன்பக் கனவுகள் பல தந்து
இன்முகம் மனம் பதிந்து சென்றாயே !
அழகிய வண்ண நிலவே !

- தமிழ் முகில்

**

தென்றல் வீசும் இரவினில்,
விண்ணில் தவழ்ந்த நிலவினில்,
என்னில் பூத்த முகம் அதில்!
மின்னல் எந்தன் நெஞ்சினில்!
    அன்னை அமுதூட்டச் சிரித்த நிலா!
    விண்ணியல் படிக்கையில் வியந்த நிலா!
    காளை வயதினில் காந்த நிலா!
    கன்னி நினைவினில் தகிக்கும் நிலா!
நிலவமுது உண்டு களித்த நினைவினிக்குதே!
நிலவொளி விளையாட்டெல்லாம் நிழலாடுதே!
தண்ணிலவே எம்நினைவினில் நீ கசந்திடாதே!
வெண்ணிலவே எமையிணைக்க நீ மறந்திடாதே!

- கவிஞர் R.அறிவுக்கண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com