முதல் முத்தம்! வாசகர் கவிதை பகுதி 2

பூக்கள் நெகிழ்ந்து மகிழும் காடு. மெல்லப் பனி நனைத்த‌ பாதையில்
முதல் முத்தம்! வாசகர் கவிதை பகுதி 2

"கண்ணே! கண்மணியே!
உன் அன்னை சொல்வதை கேளாயோ...

"சுண்டி விரல் பிடித்து 
வந்தவுடன்...
பெற்றேனடி காதலால்
ஓர் முத்தம்...

"மணி வயிற்றில்
உதித்தாயென
அறாந்தவுடன்
தந்தானடீ......
அடிக்கோர் 
அன்பு முத்தம்!

"உனை
சுமந்தவள் நானென்றால்;
நித்தம் முத்தும்
மொத்தமாய்
தந்தானடீ....உன் தந்தை!

"பிறையாய்
இருந்தவளே...
முழுமதியாய்
வந்தவளே!

"மயங்கியே
இருந்தவள் நானடீ...
உனை
அள்ளி அணைத்து
ஆயிரமாயிரம்
முத்த மழைத் 
தந்தவன்.....
உன் அப்பா! அப்பா!

"என் செல்லமே...
பெற்ற முதல் முத்தம்
தந்தை முத்தமல்லவா?
மொத்தமாக.....
- செங்கை மனோ

**

பூக்கள் நெகிழ்ந்து மகிழும் காடு.
மெல்லப் பனி நனைத்த‌ பாதையில்
உள்ளங்கள் வழிந்தன‌ கதைமொழிகள்.
கைப்பிடித்து நடந்த பொழுது
மழையோடு பொழிந்தது பெரும்மகிழ்வும்.
அப்பொழுதினில்..
தேடுதல் துளிர்த்திடும் கணங்களில்
தன்னை மறந்து சலனங்க‌ளும்
பெருகிப் படர்ந்து அடர்ந்திட‌
மெல்லக் கரைகிறது.. இப் பெரும்மகிழ்வும்..
என்று சொன்னேன்..
தன்னை மறந்து தேடுகையில்
சலனங்களே மகிழ்வும்.. பெரும்மகிழ்வும்..
நெகிழ்ந்து மலர்ந்தது முதல் முத்தம்.. உன் பதிலாய்..
காமம் இன்றிச் சாரலாய்ச் சிலிர்க்கும்
உன் வார்த்தைகள்..எவ்வளவு உயிர்ப்புடன் இன்றும்..

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ், அமெரிக்கா.

**
 
ஈரைந்து மாதங்கள்
அன்னையவள் கருவறையுள்
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
வளர்ந்தே மெல்ல
கையசைத்து காலசைத்து
எட்டி உதைத்து
துள்ளியே நானாட
உயிர் நோக வலிகொடுத்து
அன்னையவள் கண்களை 
குளமாக்கி விட்டு
மண்ணில் ஜனித்த போதும்
அன்னையவள் கொடுத்தாள்
உள்ளத்து தூய அன்பில்
தோய்த்தெடுத்த
முதல் முத்தம் !

- பி.தமிழ் முகில்

**

விண்மீன்களுக்கு நடுவே
என்னவளும் நிலவெனவே
சன்னலுக்கு பின்னே
மின்னலாய் நின்றிருக்க,

முத்தம் கொடுக்க எண்ணி கன்ன த்தருகே - 
கன்னம் வைத்தேன், கூர்வேல் நாசியும் - 
கருக் கருவா புருவமும் - 
சிந்தையை மறக்கடிக்க - 
விந்தை செய்யும்
விழி க ளிரண்டும் - 
மேலே விழுந்து புரளச் செய்ய வந்ததை - 
மறக்கடித்து- மறந்து நின்றேன் - கால் நாழி -
செய்வதறியாது மெய்மறந்து
மெய்மறந்து,

என்ன - முத்தம் தானே - என நீயே முன் வந்தாய்,
தானே தந்தாய், இப்படியும் முட்டாள்கள் 
இருப்பாரோ - இப் புவியில்
என்றே நானும்
சிரிப்போடு நீயும்,
இப்படித்தான் இருந்தது எங்களின் முதல் முத்தம்.

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

சுட்டெரிக்கும் வெயில் ... அனல் பறக்கும் காற்று 
தண்ணீருக்கு தவியாய் தவிக்கும் என் நகர மக்கள் !
வாடும் பயிர் பார்த்து வானம் பார்த்தான் விவசாயி 
அன்று !  வறண்டு கிடைக்கும் குடிநீர் ஏரி கண்டு 
கதி கலங்கி மிரண்டு கிடக்கிறான் நகரவாசி இன்று ! 
மிரட்டியது போதும் ! இயற்கை அன்னையே ! 
கருமேகம் திரட்டி  ஒரு கோடை மழை என் நகருக்கு 
பெருமழை யாய்  பொழிந்து விடு அம்மா !
உன் அருள் மழை என் மண்ணை முத்தமிடும் 
நேரம் நானும் என் மண்ணில் மண்டியிட்டு  குனிந்து 
என் மண்ணை முத்தமிடுவேன் !  என் நகர மண்ணுக்கு 
நான் கொடுக்க இருக்கும்  முதல் முத்தம் அதுவே !
சீக்கிரமே உன் அருள் மழை ஒரு பெரு மழையாய் மாறி 
முத்தமிட வேண்டும் என் மண்ணை மாரி தாயே !

- K.நடராஜன்

**
உன் மூச்சுக்காற்று என் முக வியர்வையை
விசிறிக் கொண்டிருந்தது – ஒரு காற்றுப்பாதையில்
உன் உதடுகளும் என் கன்னமும் எதிரெதிரே
மோதிக் கொண்டன – அந்த விபத்தா?
சிந்தனையை பிழிந்து, பேனாவில் நிரப்பி,
முதல் முதலாய் நூல்  இயற்றி,
பதிப்பகத்திலேயே பதியவிட்டேனே ? – அதுவா ?
இப்படி முதல் முத்த ப்பட்டியல்
நீல வானத்தின் நீளமாய்
நீண்டு கொண்டே இருக்கும் – இருந்தும்
பிறந்த குழந்தையின்
உச்சி முகர்ந்து, வெள்ளை மாவை
உதட்டில் உறிஞ்சி கொடுப்பாளே ஒரு தாய் !
அதுவல்லவோ உண்மையில் முதல் முத்தம் !!  

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

**

அருந்தவம் புரிந்து
அடிமடியில் சுமந்த
அன்னையவள்...
ஈரைந்து மாதம் பத்தியமிருந்து
ஈன்றெடுத்த மகவைக் கண்டு
உதிரம் பூரிக்க
உதிரும் புன்னகையுடன்
உச்சி முகர்ந்து
இச்சென்று தரும்
முதல் முத்தம்...
உன்னதமான தாய் சேய்
உறவுக்கு அடையாளம்
உடலுக்கு சுவாசம்
உயிருக்கு கவசம்
முதல் முத்தம்......  
அன்பெனும் சொல்லுக்கு
அர்த்தம் தரும்
முதல் முத்தம்....
வார்த்தை அற்ற மொழியாகும்!
வலி நீக்கும் நிவாரணியாகும்!

- ஜெயா வெங்கட்

**

தாயின் படைப்புலகில் விடை பெற்று 
இப்பூவுலகில் சுவடுகள் பதித்ததும் 
என்னை ஈன்ற என்றன் மூலக்காரணி
அன்னை இதழ் பதித்தது முதல் முத்தம் 

துணையாக துணைவரை அமைத்திட்டு
தனக்கென இல்வாழ்வை வகுத்திட்டு 
பொன்னாளான அந்நாளில் என்னால் 
கணவனாருக்கு தந்தது முதல் முத்தம் 

எனக்கென ஒரு படைப்புலகை படைத்து 
வெளியுலகிற்கு அதை கொணர்ந்து 
நானும் அன்னையாகி பிள்ளைக்கு தாய்
பாசத்துடன் வழங்கியது முதல் முத்தம் 

மூடியிட்ட கஞ்சி கலையம் பொங்கி 
வழிவதற்கு ஒப்பாகும் அம்முத்தம் 
இவ்வுலகையே எழுதி கொடுத்தாலும்
ஈடு இணை ஏதுமில்லை அறிந்தேன் 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

**

கனவுக்குள் கரைந்தே காலத்தை
கடத்திடும் நங்கையர் மணமுடித்து
நனவுக்குள் முதலிரவில் நுழைய
நெஞ்சார்த்த முத்தமதை கணவன்
கன்னத்திலே தந்த தொரு இனிப்பாய்
மஞ்சத்திலே மகிழ்ந்தே இருக்கையில்
சன்னமாய் கேட்டதே சேவல் கூவல்
சலிக்கவே இல்லை முதல் முத்தம்!

அடிவயிற்று பாரமதை இறக்கி
அழகான மழலை ஈன்றவள்-தலை
வருடியே அன்பான முத்தமதை
வாஞ்சையாக தந்த்தொரு முத்தமே
முதல்முத்த மென்றே சொல்வோமே!
முத்த த்தின் இன்பத்திலே மூழ்கி
முத்தெடுத்தாளே அவளே அன்னை!
மென்னகை பூத்திடுமே மழலை!

-- கவிஞர் கே. அசோகன் மும்பை

**

கட்டிளம் காளையனே
காதல் எனும் மூன்றெழுத்தில்
கன்னியிவள் மனததனை
எந்தவித எதிா்பாா்பும் இன்றி
எவ்வித நிபந்தனையும் இன்றி
உன்னிடத்தில் தந்துவிட்டேன்
அதற்கு உன் பாிசாய் 
அன்பின் அடையாளமாய்
இல்லறத்தின் அடையாளமாய்
விட்டுக்கொடுத்தலின் அடையாளமாய்
காமம் மட்டுமே முத்தமின்றி
என் உச்சி முகா்ந்து தந்துவிடு
ஆரத்தழுவி சத்தமின்றி ஓா் முத்தம்
உடலைதொடும் வரை அல்ல
உயிரை விடும் வரை முதல் முத்தமாய்.

- ஈழநங்கை

**

அத்தையவள் பெற்றமகள் துள்ளும் மானாய்
அழகொளிரும் சிலையாக கண்முன் வந்தே
முத்துப்பல் முறுவலிலே மனத்தை ஈர்த்து
முகம்சிவக்க விழியிரண்டில் காதல் பேசிச்
சித்தத்தை மயக்கியென்றன் மனைவி யாகச்
சிருங்கார முதலிரவில் இதழ ழுத்தி
சத்தமின்றி நான்பதித்த முதலாம் முத்த
சங்கமத்தில் எனையிழந்து பறந்தேன் வானில் !
என்உயிரின் உயிராகப் பத்து மாதம்
என்மனைவி கருவறையில் உருவம் பெற்றே
இன்பமான அழுகுரலில் உலகம் பார்த்த
இனியமுதல் குழந்தையினை எடுத்த ணைத்தே
அன்பாக முதல்முத்தம் நான்ப தித்த
அச்சுவையின் மகிழ்ச்கிக்கோ இல்லை ஈடு
முன்பென்றும் அனுபவிக்கா உணர்வு தாக்கி
முழுவுடலும் சிலிர்த்திடவே இழந்தேன் என்னை !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர்
கெட்டுப் போவதில்லை என்று
கூட்டுக் குடும்பத்தில்
ஒட்டிக் கொண்டு நிறைவு கண்டோம் அன்று  !
அன்னை முதல்
அனைத்து உறவுகள் வரை
அள்ளி வழங்கிய 
ஆசை முத்தங்கள்
அன்பை விதைத்தன.!.
முப்பது வருடம் முன்பு
முறையாகப் பெண்கேட்டு
மணந்த மனைவிக்கு
மணம் முடித்த பிறகு
மூன்று நாட்கள் கழித்தே  தந்த 
முதல் முத்தம் 
இதழ்கள் இசைத்த
இன்ப ராகம் !
இன்று அவள் மறைந்தாலும்
இறுதி  வரை 
சத்தம் இல்லாமல்
நித்தம்  என் இதயத்தில்
அழகிய கவிதையாய்..
அழியாத ஓவியமாய்....
என்றும் இருக்கும்.!

- கே.ருக்மணி

**

பனிக்குடம் உடைய தலை திரும்பிய சிசு
குருதி வெள்ளத்தில் பிரசவிக்க,
பனித்த விழிகளுடன் உச்சி  முகர்ந்து
பதித்தாளே  அன்னை முதல் முத்தத்தை !
சத்தமின்றி பதித்த முத்தத்துள்
சத்தான அன்பு விதைக்கப்பட
அழகு சித்திரம் மேனி சிவக்க
நெகிழ்ந்து சிணுங்கியதே !
கரை தழுவும் கடலலையாய்
பிஞ்சு விரல் மெய் தீண்ட
விண்தொடும் மகிழ்ச்சியில்
தன்னையே அன்னை மறக்க
இதழ் விரிக்கும் மொட்டாய் சிசுவின்
விழி பெட்டகம் மெல்ல திறக்க,
உயிரெனும் சொத்தை மொத்தமாய்
தந்தாள் முதல் முத்தமாய் !!

- தனலட்சுமி பரமசிவம்

**
                                     
இன்றைக்கு  நினைத்தாலும் 
இதயமெல்லாம் வலிக்கிறது!
அன்றைக்கு நடந்ததெல்லாம்
அப்படியே பாட்டி வாயால் 
கேட்டுக் கேட்டு  மனம் 
கிளர்ந்துபோய்க் கிடக்கிறது!
பதினாறு ஆண்டாச்சு
பருவமும் வந்தாச்சு!

என்னைப் பெண்கேட்டு
ஏகமாய்ப் பெருங்கூட்டம்!
பாட்டி கண்மூடும் முன்னால்
பண்ணிடவே திருமணத்தை 
திட்டம்   வகுத்தாச்சு!
தீர்மானம் செஞ்சாச்சு!
எனக்கு முதல் முத்தமிட்ட
எனதுதாய் உலகிலில்லை!
அதுவே என் வருத்தம்!
ஆழ்மனத்தில் தினயுத்தம்!

- விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து

**

முதல் மனிதனின் முதல் மொழியின்
முதல் சொல் பற்றவைத்த கிளர்ச்சியோடு
மொட்டாய்க் குவிந்த இதழ்கள் முன்னோக்கி வந்தன
காலம் உறைந்து நின்று வேடிக்கைப் பார்த்தது
பதின்மவயதின் வைகறையில் கதிரவனின் முதல்கீற்றாய்
குவிந்த உதடுகள் திரண்ட தாகத்தோடு
எதிர்உதடுகள் நோக்கி பயணிக்க ஆரம்பித்தன
காலம் அப்போதும் நிதானித்து நின்றது
முற்றுப்பெறாத வாக்கியத்தின் இறுதியில் வைத்த
முற்றுப்புள்ளிகளாய், மரம்விட்டு விழமறுத்த
கனியாய், உதட்டிலே தேங்கிநின்றது அது
காலம் புன்னகை விகசித்த முகத்தோடு உற்றுநோக்கியது
சிந்தைமணலில் புதைந்த கவிதைச் சிற்பமாய்
மேகக் கோடுகளில் முகம்சிதைந்த நிலவாய்
உதடுகளின் கல்லறையில், காலத்தின் பேழையில்,
உறங்குகிறது இதயம் கொடுக்க நினைத்த முதல்முத்தம்!

- கவிஞர் மஹாரதி

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com