
முதல் முத்தம்
என் முதல் முத்தம் கவிதை மணிக்கே
நின்முகம் காணாது மனம் தவித்தேன்
தங்கு தடையின்றி வரம் அருளாயோ ?
எங்கு சென்றனை இத்தனை நாளாய் ?
பாடம் பயில பள்ளிதலம் சென்றனையோ ?
ஆடலரசு காண மதுரை சென்றனையோ ?
தத்தை போன்று நான் புலம்பி நின்றேனே !
சித்தம் கலங்கி மயங்கி வருந்தி நின்றேனே !
மனம் மீண்டும் உருக வைக்காதே மணியே !
புனம் தேடியலைய விடாதே மணியே !
என்றும் போல் வாராவாரம் வா மணியே !
நின்று நிலைத்த புகழ் தா, தா மணியே !
துன்பச் சாக்காடு வென்றதனால் முத்தம்
இன்ப பெரு வெள்ளமாய் புது முத்தம்
புவியாளும் மணியுனக்கு அன்பு முத்தம்
கவிதை மணியுனக்கே என் முதல் முத்தம்
- ராணி பாலகிருஷ்ணன்
**
முத்தமா...
சீய்ய்...எனும்போதே
தெரிந்து விட்டது
நீ வாங்குவதற்கு
தயாராகிவிட்டாய் என்று...!
- ச.கீர்த்திவர்மன்
**
பூக்கள் நெகிழ்ந்து மகிழும் காடு.
மெல்லப் பனி நனைத்த பாதையில்
உள்ளங்கள் வழிந்தன கதைமொழிகள்
கைப்பிடித்து நடந்த பொழுது
மழையோடு பொழிந்திட்டது பெரும்மகிழ்வும்
அப்பொழுதினில்..
தன்னை மறந்து சலனங்களும்
தேடுதல் துளிர்த்திடும் கணங்களில்
மெல்லப் படர்ந்து அடர்ந்திட
மெல்லக் கரைகிறது.. பெரும்மகிழ்வும்..
என்று சொன்னேன்..
தன்னை மறந்து தேடுகையில்
சலனங்களே மகிழ்வும்.. பெரும்மகிழ்வும்..
..முதல் முத்தம்..
காமம் இன்றிச் சாரலாய்ச் சிலிர்க்கும்
உன் வார்த்தைகள்..எவ்வளவு உயிர்ப்புடன் இன்றும்..
- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ், அமெரிக்கா.
**
வானிடை முதற்துளி மழையினைப் போலே; செந்
தேனிடைப் பூவில் வண்டது நுகர்வாம்
ஓங்கிய மலையில் மெல்லிய சாரல்;அடர்
சூழ்மிகு மலரில் தென்றலின் தீண்டல்
கார்மிகு இரவைக் கலைத்த பூபாளம்; மலர்
கோர்த்த நல்மாலை இணைதோளினில் துஞ்சல் - என
ஆயிரம் முத்தங்கள் ஆயினும் என்ன; உயர்
அன்னையின் முதல்முத்தம் அதற்கொரு ஈடே!
- கு. இரா, வடக்கு அயர்லாந்து
**
பிறந்த உடன்அன்னையிட்ட முதல் முத்தம்.
தந்தைக்கு முதல் முத்தம் __ அது
குழந்தை எனக்கு
2வது முத்தமே.
அன்புடன் யாவரும்
எனக்கு அவர்களின்
முதல் முத்தம் தந்தாலும்.
என்றும் என் தாயின்
முத்தமே முதல் முத்தமே.
அன்புடன் களக்காடு வ.மாரிசுப்பிரமணியன்.