இரட்டையர் வாசகர் கவிதை பகுதி 1

விண்தரையே  போர்க்களமாய்  மாறிப்  போக, மின்னலிடி  இரட்டையர்கள் மோதிக் கொள்ள
இரட்டையர் வாசகர் கவிதை பகுதி 1

இரட்டையர்கள்


விண்தரையே   போர்க்களமாய்  மாறிப்  போக, 
           மின்னலிடி  இரட்டையர்கள் மோதிக் கொள்ள, 
விண்ணெங்கும்   கார்மேகம்  குளிரும்  தென்றல்
           மனமுவந்து  இரட்டையராய்   இணைந்த  தாலே, 
மண்முழுதும்  மழைவீரர்   குருதி  வெள்ளம்
          மண்செழிக்க  ஈந்ததுபோல்   மாந்த ரிங்கே, 
கண்இமைகள்  இரட்டையராய்  மாந்தர் உண்டு;
          கடுகளவும்  ஒருமித்த  குணங்கள்  இல்லை! 
            
இரட்டையராய்  இணைந்தேதாம்  தாய்வ  யிற்றில்
            பிறந்தபோதும்,  இதயமொன்றாய்  இருந்த  போதும், 
இரட்டையராய்  உடலிணைந்து  இருந்த போதும்
            இருவருக்கும்  வேறுவேறாய்  குணமி  ருக்கும்;
முரண்பலவாய்  முகிழ்த்திருக்கும்;  வரலாற்  றில்தாம்
              முரணற்றக்  கதைபலவும் உண்டு; ஆனால், 
முரண்பட்ட  மாந்தயினம்   என்றே பாரில்
              இரட்டையர்போல்,   உண்டுயென  உணர்த்தும்  காணீர்!  


" நெருப்பலைப் பாவலர்" இராம இளங்கோவன்; பெங்களூரு.

**

"மனிதா!
உன் அகமே
துர் நாற்றமடா...
இதற்கு
நறுமண வாசனை
எதுக்கடா?

"பாயில் படுத்து
நோயில் வீழ்ந்தால்,
வாழ்வே
கானல் நீரடா...
இதற்கா?
பகல் வேஷம்
போடிகிறாயடா?

"எண்ஜான்
கூட்டுக்குள்
ஒன்பது ஓட்டையடா...
புறத் தோற்றத்தில்
மயங்கிக் கிடப்பது
வீணடா?

"மீன் செத்தால்
காசடா...
விலங்கினம் செத்தால்
மத்தளமடா...
மனிதா!
நீ
செத்தால்?
பிணமடா...

"கருவாட்டுக்கும்
வீட்டில்
இடமுண்டு...
விலங்கு தோலிலும்
இசையுண்டு...

"பிணமே!
ஒரு நாள் வீட்டில்
இருந்ததுண்டா?
மனிதா!
உன் பெரும், புகழும்
மறைந்ததே...
பிணத்தை
சீக்கிரம் தூக்கு
என்றனரே!...

"பிணமே!
உனை புதைத்தால்
வாயில்
ஒரு பிடி
மண்ணடா...

"எரித்ததும்
உறவு வாயில்
ஒருப் பிடி
சோறடா...

"உனை
எரித்தால்
ஒரு பிடி
சாம்பலடா...

"எந்த சொந்ததமும்
உனது அல்லடா...
தனியாய் 
வந்தவனே!
தனித்துப்
புறப்பட்டாயோ!

"எதுவும்
உலகில் 
நிலையில்லையடா...
உலகமும்
ஒரு நாள்
அழியுமடா...

"இதற்கா?
இத்தனை போராட்டடம்?
ஆடி அடங்கும்
வாழ்க்கையடா...
"ஆறடி நிலமும்
சொந்த மில்லையடா!!!

- செங்கை, மனோ

**

பேறுகால வலியை துச்சமென மதித்து 
ஈன்ற தாய்க்கு அதிர்ஷ்ட க்காரி என்று 
பட்டம் சூட்ட வைத்திட்ட இரட்டையர்

ஒத்தையாய் ப்பிறந்திருந்தா லதன் 
ஒத்தாசைக் கொன்றை யுருவாக்க 
உயிரைப் பணயம் வைக்கா திருக்க 
அன்னையைக் காத்திட்ட இரட்டையர் 

இரண்டுக்கு மேல் வேண்டா மென்ற தடை உத்தரவை கூடவே வாங்கி வந்து
இருமனதை கட்டி போட்ட இரட்டையர் 

எங்களுக்காக உங்கள் உயிரை 
பணயம் வைத்த எங்கள் தாயே இனி 
எங்கள் உயிரை பணயம் வைத்து 
உங்கள் கவலையை போக்குவோம் 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

**

முகம் ஒத்துப் பிறக்கும் குழந்தைகள் 
இரண்டு ....அவர் இரட்டையர் !
குழந்தைகள் முகம் பார்த்த உடன் தெரிந்து விடும் 
அவர் இருவரும் இரட்டையர் என்று !
புறம் ஒரு முகம்  அகத்தில் வேறு முகம் 
என்று இரு முகம் கொண்டு ஒரே ஒரு 
முகம் மட்டும் வெளியில் காட்டும் மனிதர் 
சிலரும் உண்டே  நம்மிடையே !
புரட்டி புரட்டிப் பேசும் இந்த "இரட்டியரை"
சொல்ல முடியுமா "இவர் இரட்டியர் " என்று ? 

- K .நடராஜன் 

**

இரட்டையராய்ப் பிறப்பதுவே
இனிமையான ஓர் நிகழ்வு!
தன்னைப்போல் ஒருவரையே
தாரணியில் கண்டிடலாம்!
எங்கேயோ பிறந்து
எடுத்த தொழிலதுவால்
இரட்டையராய் வாழ்ந்திடுதல் 
இனிதன்றோ நீளுலகில்!
விஸ்வநாதன்-இராமமூர்த்தி
வியப்பான இரட்டையர்கள்!
பாட்டிசையால் மக்களையே
பரவசப் படுத்தியவர்கள்!
கவிஞரின் பாட்டுக்குக்
கச்சிதமாய் இசையமைத்து
வாழ்வில் அமைதிபெற
வழிதேடித் தந்தவர்கள்!
-ரெ.ஆத்மநாதன்,
 காட்டிகன்,சுவிட்சர்லாந்து

- ரெ.ஆத்மநாதன்,காட்டிகன்,சுவிட்சர்லாந்து

**

அன்னையும் தந்தையும்
மண்ணும் விண்ணும் ஆவர்.
பகலும் இரவும்
ஒளியும் இருளும் ம் .
பிறப்பும் இறப்பும்
முதலும் முடிவும்  
உடலும்உயிரும்
இம்மையும மறுமையும்   .
ஆணும் பெண்ணும்
நீரும்நெருப்பும் ஆவர் .
செல்வமும்வறுமையும்
சுகமும்துக்கமும்ஆம்.
உயர்வும் தாழ்வும்
உழைப்பும்.  ஓய்வும்
எங்கும் இரட்டை
யாவும் இரட்டையே. !

-ராணி பாலகிருஷ்ணன்

**

ஒரு கருவில் இரு முட்டைகள்
உரு பெற்ற இருக்குழவிகள்
உடலொட்டியும் பிறக்கும் 
உடல் பிரிந்தும் பிறக்கும்
உடல் உரு மாறியும் இருக்கும்
உடல் உரு உரித்து வைத்திருக்கும்
ஒன்று போல் இருப்பதால் குழப்பமே
ஆனால் இருவர்க்கிடையே இராது குழப்பம்
அன்பும் பாசமும் பல்கிப் பெருகிடும்
இன்பமாய்ப் பாசமாய் வாழ்வர் உலகில்

- மீனா தேவராஜன், சிங்கை

**

ஒன்றெனவொன்றினில் இரண்டென இருந்து
இருவரோடுறவினர் மகிழ்ந்திடப்  பிறந்து
எட்டெனஎட்டதி லெட்டியே தவழ்ந்து
நாலெனநாளுமிப் பூமியில் நடந்து
இரட்டைக்கிளவியாய்  யொத்தொருசிந்தனை வளர்ந்து
இவர்போலவேபிள்ளைகள் யாரெனத் திகழ்ந்து
இப்பாரினில்உன்னதப் புகழையும் அடைந்து
இருசூரியர்சந்திரர் போலென்றும் வாழ்க!

- கு. இரா, வடக்கு அயர்லாந்து.

**

அச்சு அசலாக இருவரும் இருப்பதால்
அனைவருக்குமே குழப்பம் வருவது இயல்பு!

எங்களை வளர்த்து எடுக்கும் முன்
எங்கள் அன்னை படும்பாடு அரும்பாடு!

மூத்தவர் இளையவர் வேறுபாடு என்பது
முந்தி வந்த சில நொடிகள் மட்டுமே!

பிறப்பில் தொடங்கி இறப்பு வரை
பார்ப்பவர்கள் அனைவரும் பரவசம் அடைவர்!

ஆயிரத்தில் இருவராக பிறந்தவர் நாங்கள்
அடையாளம் காண முடியாத புதிர் நாங்கள்!

வளர்த்து எடுக்க பெற்றோருக்கு சிரமம் உண்டு
வளர்ந்த பின்னும் சிரமம் தொடர்வதுண்டு!

எங்களுக்குள் உருவ ஒற்றுமை உண்டு
எங்களுக்கும் மன வேற்றுமை உண்டு!

- கவிஞர் இரா .இரவி

**

கருவறையில் ஒன்றாக இணைந்தி ருந்து
----காற்றுலகைக் காண்பதற்கு வந்த போது
இருவுடலாய்ப் பிறந்தாலும் உணர்வு ஒன்றாய்
----இதயத்துள் இருப்பவர்தாம் இரட்டை யர்கள் !
உருவத்தில் வேறுபாடு காண்ப தற்கோ
----உயிர்கொடுத்த பெற்றோர்க்கும் இயன்றி டாது
அருகருகே இருவருமே இல்லாப் போதும்
----அவர்கள்தம் எண்ணங்கள் ஒன்றி ருக்கும் !
இருவேறு இடங்களிலே வாழும் போதும்
----இங்கொருவர்க் குடல்நலந்தாம் குன்றும் போதோ
அருகினிலே இலையெனினும் மற்ற வர்க்கும்
----அந்நிலையே மனவுடலில் எதிரொ லிக்கும் !
இருவர்தம் செயலறிவும் ஒன்று போல
----இயங்கியிங்கே அனைவருக்கும் வியப்பை யூட்டும்
அருமைமிகு இயற்கையதன் ரகசி யத்தை
----அறிந்தவர்யார் படைப்பிலிந்த அற்பு தத்தை !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**
இரட்டையராக  பிறப்பதில்..
இருப்பது  பல  நிறை என்றாலும்....
பார்ப்பது சில குறைகள்!
ஒரே நிறம்,,,,,,,  ஒரே முகம்....
ஒரே உயரம்   என 
ஒற்றுமை இருந்தாலும்   
வேற்றுமை  பார்ப்பது  குணத்தில்!
பெற்ற  தாய்  மட்டுமே  அறியும்  வித்தியாசம்....
சுற்றத்தினரை  குழப்பம்......இவர்கள் 
பார்ப்பது  நல்ல  நண்பர்களை!
பள்ளியில்.....கல்லூரியில்.....
யாரையும்  குழப்பும்  
இரட்டையர்.......
வாழ்க்கையில்  குழம்பாமல்  
முன்னேறும் உற்சாகமும்....
ஊக்கமும்  உடையவர்  என 
தயக்கமின்றி  சொல்லலாம்!
இரட்டையராக  பிறப்பது 
அவரின்  யோகம்!..........

- உஷாமுத்துராமன்,  திருநகர்

**
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com