கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1

அர்த்தப் பின்னனியில் துடிப்புகளற்று போய்விடுவதன் தரவரிசையை சரி செய்கிறது
கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 1

அர்த்தப் பின்னனியில் துடிப்புகளற்று போய்விடுவதன் 
தரவரிசையை சரி செய்கிறது
தரவு

துல்லியமின்மையின் மேல் உட்கார்ந்து கொண்ட
பயணம்
திரும்பி வரும் வழியை மறந்திருப்பதின்
புகாரை வாசிக்கத் தொடங்குகிறாய்

அதர பழசான 
நம் ஆரம்பத்தை இப்போதும்
இழுத்து வருகிறேன்

அது அத்தனை முக்கியமற்றது
என்பதைப் போல் அடுக்கத் தொடங்குகிறாய்
சமன் குலைந்த சொற்களின் விடுபடல்களால்

அதைக் கோர்த்துக் கொண்டே வந்தடைகிறேன்
பெரிதும் சிறிதுமான 
நம் முரண்களிடத்தில்

மன்னிப்புகள் மேல் விழுந்துகிடக்கும்
மடிப்புகளை
காலப் பின்னனியில் சரி செய்ய 
சரியென்ற ஒப்புதல்களை மறந்துவிட்டிருந்த 
ஒரு தரப்பு நியாயம் தான்
உன்னை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது

கச்சிதமாக்கப்பட்ட மெளனத்தை
பலவாறாய் நறுக்கி
பொடி தூவி பரிமாறுகிறாய்
யாவருக்குமான சிறுபசிக்கு

என் பங்கிற்கான
மெளனத்தின் காட்டத்தை
சொற்களைக் கொண்டு பொருள் சேர்க்கிறேன்

கடந்து விட்டேன்
என்பதாய்
வந்து நிற்கிறது அதன் அர்த்தம்

பின்னனியை
இசையொன்று அசைக்கத் தொடங்குகிறது

- ரேவா, மதுரை

**

நாம் எல்லாருமே கண்டெடுக்கப்பட்டவர்தாம்.
பிரமன் படைத்த இம்மானுடத்தைக்
கண்டெடுத்த அம்மனுக்கும் அப்பனுக்கும்
நன்றி சொல்லத்தான் வேண்டும்.
மழைத்துளி சிப்பியில் விழுந்து
முத்தாவது போல
நல்லவரால் கண்டெடுக்கப்பட்டவர்
நல்முத்தாகலாம்.
முத்தா அல்லது மூடமா
என்பதைக் காலம்தான்
நிர்ணயிக்க வேண்டும்
காலக்குறிப்புகள் தாம்
ஒருவரின் விதியைத்
தூண்டில் போட்டு இழுக்கும்.
குறிப்புகள்தாம் வழிகாட்டுதல்கள்.
அவற்றைப் படிக்கட்டுகள்
என எண்ணி வசப்படுத்தினால்
காலத்தை நாம் நடத்தி செல்லலாம்.
இல்லையேல் காலம் நம்மை
அதன் போக்கில் நடத்தும்.
முடிவு செய்வோம்
காலக்குறிப்புகளைக் கடைப்பிடிப்போம். 

- வளவ. துரையன்

**

கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் உரைப்பது
கன்னித் தமிழே உலகின் முதல்மொழி என்பது !
சிந்து சமவெளி நாகரிகம் உரைத்தது என்னவோ
சங்கத்தமிழ் உரைத்த தமிழ் நாகரிகமே முதன்மை!
வட இந்தியாவிலும் தெருப்பெயர்களில் தமிழ்
வண்டமிழ் பரவி உள்ளது உலகம் முழுமையும்!
ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தமிழே
ஆட்சிமொழியாக பல நாடுகளில் உள்ளது!
கீழடி அகழாய்வு உரைத்தது என்னவோ
கற்கண்டு தமிழ் எழுத்து பொறித்து இருந்தது!
மாபெரும் நகரமே மூழ்கி உள்ளது
மண்ணை ஆய்ந்தால் உண்மை புரியும்!
அணிகலன்கள் செய்வதில் சிறப்பானவன் தமிழன்
அன்னைத் தமிழ் எழுத்துக்களையும் பதித்து உள்ளான்!
உலகின் முதல்மொழி தமிழ் உணர்ந்திடுக
உலகின் முதல் மனிதன் தமிழன் அறிந்திடுக!

- கவிஞர் இரா .இரவி

**

அன்ன உருவம் வைத்த  சரஸ்வதி விளக்கு  
அண்ணாமலையின் உயர்ந்த ஜோதி விளக்கு 
அஷ்ட லக்ஷ்மி கூடிய காமாட்சி விளக்கு 
ஐந்து முகத்துடன் திரிசூலக் குத்து விளக்கு 
முகமொன்றும் இல்லா வாழைப்பூ விளக்கு  
மயில் தோகை விரித்த குமரனின். விளக்கு  
சூரிய சந்திரன் கூடிய பட்டை நாம, நாகவிளக்கு  
பிளிறும் யானையின் முதுகினில் மற்றும்
பாவையின் கரத்திலும் ஏந்திய விளக்கென
பலவகை விளக்குகள்  இதுபோலுண்டு 
ஆயினும் ஆதி முதல் விளக்கு என்பது 
இருளை  அகல்விக்கும் அகல்  விளக்கேயாம் 
கற்கால மனிதனின் படுக்கைப். பாறையில்  
குழிகள் செதுக்கி மாமிசக்  கொழுப்பில்
நார் திரியிட்டு, ஏற்றிய தீபம் என்பதே நாம்
கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் .

- திருமதி ராணி பாலகிருஷ்ணன்

**
மன்னர் ஆண்ட காலம்  
பொற்காலம் என 
சொற்குறிப்புகள் கொடுத்த 
காலக்குறிப்புகள் தேடினால் 
ஜாலமின்றி கிடைக்கும் கண்டெடுப்பில்!
அக்கால ஆட்சிக்கும்  
இக்கால ஆட்சிக்கும் உள்ள 
மாட்சிமைப் பற்றி சொல்லும் 
சாட்சிதான் "கண்டெடுப்பின் காலக்குறிப்புகள்"
மாதம் மும்மாரி பெய்து 
சாதகமாக இருந்த இயற்கை இன்று 
பாதகம் விளைவிக்கும்  சீற்றமாக 
மாறிருப்பதை உணர்த்தும் 
சாட்சிதான் "கண்டெடுப்பின்  காலக்குறிப்புகள்!
அகழியை தோண்டினால்  
புகழ் பெற்ற மன்னன்  குறிப்புகளும் 
திக்  விஜயம் செய்து வெற்றி பெற்ற 
மன்னன்  பற்றியும்  அறிய உதவும் 
சாட்சிதான்   "கண்டெடுப்பின்  காலக்குறிப்புகள்!"

- உஷாமுத்துராமன், திருநகர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com