வாசகர் கவிதை இந்த நாள் இனிய நாள் பாகம் 1

சாதனை நாட்களை தொட்டுவிட்டால் இந்தநாள்  இனியநாள்!குறைந்தபட்சம் சோதனை வராதவரை இந்தநாளும் இனியநாளே!
வாசகர் கவிதை இந்த நாள் இனிய நாள் பாகம் 1

இந்த நாள் இனிய நாள்!

அறுசீர் ஆசிரிய விருத்தம்

இந்த நாளும் இனிய நாளாய்
……….இன்பம் தரவே மகிழ்ந்திருந்தோம்..!
இந்த விடியல் இன்று சிறப்பாய்
……….இருந்த தென்று மனமகிழ்ந்தோம்..!
எந்த நாளும் என்ன நடக்கும்.?
……….ஏக்கம் கொண்டே காத்திருந்தோம்..!
வந்த நாள்கள் வருமே இனியும்
……….வளமை தருமே.? வாழ்வினிலே.?
.
அந்தம் சொந்தம் அறிவ தற்கே
……….ஆதி பகவன் துணையுமுண்டு..!
பந்தம் உண்டு பாசம் உண்டு
……….பற்று மிகுந்த உறவுமுண்டு..!
சொந்தம் எல்லாம் சுகமும் தரவே
……….சோகம் மறந்த காலமுண்டு..!
மந்த புத்தி மாந்த ரானால்
……….மனித நேயம் புரிந்திடுமா..?
.
எண்ணம் எல்லாம் எங்கும் விரவி
……….இனித்தி ருக்கும் போதினிலே..!
வண்ணம் ஆகும் வாழ்க்கை எல்லாம்
……….வளமை மிகும்நல் வார்த்தையாலே..!
மண்ணில் ஆசை மறுக்க மாதும்
……….மதுவும் சூதும் வெறுத்ததாலே..
எண்ணில் அடங்கா எழுச்சி பெறுமே
……….எந்தச் செயலும் செய்கையிலே..!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

இந்த நாள் இனிய நாளே,
காலை கண்விழித்தேன்,
உறுப்புகள் கொண்டுள்ளேன்,
வசிக்க கூரை இருக்கின்றது,
உடுத்த உடுப்புகள் இருக்கின்றது!
இத்தனை தொடர்வதே இந்நாளை இனிதாக்குகிறதே!

புத்துயிர்க்கும் சுவாச காற்றிற்கு நன்றி,
காண கிட்டும் வெளிச்சத்திற்கு நன்றி,
பருக சுவைக்கும் நீருக்கும் நன்றி!
எனை உயிர்ப்புடன் வைக்கும் பயிர்களுக்கும் நன்றி!
எனை வாழ்த்தி வளர்த்திட்ட உற்றாருக்கும் நன்றி!

நன்றி உரைக்க ஓராயிரம் பட்டியல் இருக்க,
இன்று துவங்கிய இந்த நாள் இனிய நாளே!

-செல்வா

**

இந்நாளில் எரிமலையே வெடிக்கும் என்றே
  எவரேனும் அறிவாரா ? இயம்பற் கில்லை !
இந்நாளில் நிலநடுக்கம் நடக்கும் என்றே
  ஏதேனும் அறிகுறிகள் ? இமியும் இல்லை !
இந்நாளில் கடுமழையே பெய்யும் என்றே
  இயம்பலினும் மிகப்பெய்யும், தடுப்பார் இல்லை !
இந்நாளின் ஆழ்துயரம் தடுப்போம் என்றே
  எவருள்ளார் இவ்வுலகில் ? சொல்வார் இல்லை !

இந்தநாளே இனியநாளாய் எண்ண வேண்டும் !
  இனிமையுடன் ஏற்றமுடன் இலங்க வேண்டும் !
இந்தநாளே இனியநாளாய் இயங்க வேண்டும் !
  எப்போதும் இனியவழி ஏற்க வேண்டும் !
இந்தநாள்போல் எந்நாளும் எழவே வேண்டும் !
  இயன்றவரை இனியவையே செய்தல் வேண்டும் !
இந்தநாளே இனியநாளாய் இயம்ப வேண்டும் !
  எந்ததமிழ்போல் எந்நாளும் இனிக்க வேண்டும் !

-ஆர்க்காடு. ஆதவன்

**

இந்த நாள் இனிய நாளே!

உலகில் யாதோர் மூலையில், 
நினையாதவை நிகழும் பொழுது,

உலகில் யாதோர் மூலையில்,
முடியாதவை நிகழும் பொழுது,

பூவாய் புலர்ந்த இந்நாள்
இலங்கும் பொன் நாளே!

புவிக்கோர் கதிரவன் உண்டு,
அவன் வந்து சென்று உயிரூட்டம் கொடுப்பதுண்டு!
மனிதனுக்கோர் மனமுண்டு அதில் நல்லெண்ணம் பல முளைப்பதுண்டு!

மனமென்னும் தோட்டத்தை 
மாயையில் மயங்காமல் பேணுவோம்!
நல் எண்ணம் தனை விதைத்து,
தீய எண்ணம் தனை அகற்றிடுவோம்! 
ஒரு உழவன் போல் மனதினை தேற்றுவித்தால்!
ஐம்புலமும் நலமாகும் நல்லவை சாத்தியமாகும்!

விழி.எழு.விருட்சமாகுக!

-இனிய தமிழ் செல்வா, ஓமன்

**
சென்ற நாள் மீண்டும் திரும்பிவரப் போவதில்லை
இன்றுதான் எங்களுக்கு இனிய நந்நாளாகும்
நாளை எதுநடக்கும்? நாமறியோம் ஆதலினால்
ஆற்றும் கடமைகளை அன்றே புரிந்துவிட்டால்
ஏற்கும் பொறுப்பெல்லாம் இலகுவாய் ஆகிவிடும்.
தாமசத்திலூறித் தவறவிட்டால் எம்பொறுப்பை
நாமிழக்கும் வாய்ப்பு நமையழித்து வீழ்த்திவிடும்.

காலம் அழிவதி்ல்லை காட்சிகள்தான் மாறுதென்பார்
ஞாலம் சுழல்கிறது நாமுமதிற் சுற்றுகிறோம்.
ஏலும் வரைக்கும் இவ்வுலகில் வாழ்ந்துவிட்டு
தூல உடலழிய சூனியத்திலே கலக்கும்
மாயப் பிரபஞ்ச வாழ்வைச் சதமென்று
எண்ணிக் கவலையின்றி என்றும் மகிழ்வோடு
ஆற்றிக் கடமைகளை அறத்தின் வழிநிற்க
ஏற்ற நாள் இந்நாள் எமக்கென்ற எண்ணமுடன்
போற்றித் தொடங்கல் பொறுப்பு.

- சித்தி கருணானந்தராஜா.

**

இனிய நாள் என்றுநான்
எந்தநாளைச் சொல்ல?
பிறந்த நாளைச் சொல்லவா? - அது
வெறும் செய்தி அல்லவா?
இந்த நாள் இனிய நாள் என்று
சொன்ன நாளது – பின்
வந்த நாளால் நொந்த நாளால்
துக்கநாள் ஆனது
சுவாசித்தல் அன்றி
வேறெதுவும் செய்யாத
நாட்கள் காலண்டரில் கிழிபடும்
தாள்கள்
வாழ்ந்த நாட்களைக் குப்பையில்
கொட்டியபின் காலம் வந்து
எரித்துவிடுகிறது
ஒருநாள்
சலவைசெய்த நாட்களைக்
கொடியில் தொங்கப் போட்டால்
ஈரத்துளிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன

காலாவதி ஆகிவிட்ட
நாட்களில்
இனிய நாள் என்ன
இனி நாள் என்ன?

- கவிஞர் மஹாரதி

**
இந்த நாள், இனிய நாளெனவே,
இலை மறைக் காயாய் மகிழ்ந்திடுவேன் !
சிந்தனை வானின் சித்திரமென்றே,
சிகரமாய் உயர்ந்திட முயன்றிடுவேன்!

குப்பைக் காகிதம் பொறுக்கிடினும்,
கோடியில் வருவாய் ஈட்டிடினும்,
நிதம் நிதம் ஊக்கம் கொண்டிடுவேன் !
நீதியின் மடியில் வென்றிடுவேன் ! (இந்த நாள்)

இந்த நாள் இனிய நாளெனத்தான்,
இயங்குது புவி, ஒளிருது சூரியன் !-எதையும், 
சாதிப்பேனே, எனதில்லைத் தோல்வியும் !  
சிந்திப்பேனே, என்னால் முடியும் ! என்னால் முடியும் !

ஆசைகள் எனது, எந்தன் கைகளிலே !
ஆண்டவன் தான் நானும், எந்தன் செயல்களிலே !(இந்த நாள்) .

- இலக்கிய அறிவு மதி

**

வசந்தகாலப் பறவைகளே கூடுகளை விடுத்து
வெளியில் வாருங்கள்
அறியாமை இருளை ஆதவன்
எரித்துவிட்டான்
கையூட்டு குளிரையும் காலன் கடத்தி
கொன்றுவிட்டான்
வேற்றுமை கிறுக்கல்களையும்
வெண் மேகங்கள் அழிந்துவிட்டன
அதில் உங்கள் அலகுகளால் அழகிய
ஓவியங்களை வரைந்து விடுங்கள்
உங்கள் குரல் சுமக்கா காழ்ப்புணர்ச்சி
காற்றுகளையும் மரங்கள் உறிஞ்சிக்கொண்டன
மூடநம்பிக்கை பூனைகளுக்கும்
வானவில் விழிகளால் பார்வை வந்துவிட்டது
கண்களை உறுத்தும் குற்ற தூசுகளை
கார்காலன் கழுவிச் சென்றுவிட்டான்
ஊழல் பெருச்சாளிகளும் நன்மை மருந்து
தூவப்பட்டதால் நாடு கடந்துவிட்டன
வெள்ளைக் கறை பூசிய கரை வேஷ்டிகளும்
சாயம் வெளுத்து கழுவேற்றப்பட்டன..

இன்று ஒரே சாம்ராஜ்யம் தான்
மேலே நீல நிறக் கொடியும்
கீழே பசுமை நிற பரிவாரமும்
குளிர்ச்சியடைந்த நிலத்தன்னை பூக்களாய்

புன்னகை மணம் பரப்புகிறாள்
உங்களுக்கான விடியல் இது உங்கள்
வரவை நோக்கி வானில் தவமிருக்கும்
பரிதியைக் காண வாருங்கள்
வசந்தகாலப் பறவைகளே கூண்டினை விடுத்து
வெளியில் வாருங்கள்
இந்நாள் மட்டுமல்ல இனிவரும் நாட்களும்
இனிய நாட்களே..

- ஹமி,, தேனி மாவட்டம்

**

தாய்மை அடைந்த பெண்ணுக்கு
குழந்தை பிறக்கும் வரை
தாய்க்கு ஒரு துன்ப நாட்களே!
பிஞ்சு குழந்தை பெண்ணுக்கு
மண்ணில் பிறக்கும் நாளே
அந்த தாய்க்கு இனிய நாள்!
படிக்கும் மாணவனுக்கு
தேர்வுகள் வந்து விட்டால்
பயத்தில் அவனுக்கு காய்ச்சல்.
படித்த கேள்விகளே
அவன் எழுதும் தேர்வுகளில்
வந்துவிட்ட நாட்களே
மாணவனுக்கு இனிய நாள்!
கருத்தொருமித்த காதலர்கள்
திருமணம் முடிக்கும் வரை
காதலுக்கு ஒரு கஷ்ட காலம்
தாய் தந்தையின் சம்மதத்தில்
திருமணம் செய்யும் தினமே
அந்த காதலர்களுக்கு
இன்ப நாள் இனிய நாள்!
காசி ராமேஸ்வரம் சென்று
கோவில் குளம் சுற்றும்
கும்பிடும் ஆன்மீகவாதிக்கு
விரும்பும் மனஅமைதி
கிடைக்கும் இனிய நாளே
ஆன்மீகவாதிக்கு இனிய நாள்!
உலகில் மனித மனங்கள்
கடந்தகாலம் எண்ணி கலங்காமல்
நிகழ்காலம் எண்ணி வாழ்ந்தால்
மனிதனுக்கு அதுதான்
என்றும் இனிய நாள்!

- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

**

வானம் பொழிந்து
பூமி நனைந்து
ஆறு ஏரி குளம் குட்டைகள் நிரம்பி
பயிர்கள் விளைந்து
வீடு வரும் நாளே!
விதைத்தவனுக்கு
இனிய நாள்!

வணிகம் செழித்து
இலாபம் கொழிக்கும் நாளே
வணிகனின் வாழ்வில்
இனிய நாள்!

ஊரும் உறவும் கூடி
தேரும் திருவிழாவும்
நிகழும் நாளே!
ஊருக்கு இனிய நாள்!

பஞ்சம் பட்டினி நீங்கி
நோயும் நொடியும் நீங்கி
அமைதியும் அன்பும்
வளமையும் செழுமையும்
பொங்கும் நாளே
நாட்டிற்கு இனிய நாள்!

- கு.முருகேசன்

**
ஆண்டவனின் அருகினிலே
அமர்ந்த பிள்ளையே
ஆடிப் பாடி ஓடும்
ஆனந்த முல்லையே
அரணாக இருக்கும்
அரன் வடிவமே
அமுதாக சுவைக்கும்
அன்புப் பிரியனை
அழகாக தொழுதால் போதும்
அடி காட்டி, முடி சூட்டும்
அம்பலவாணனின் அருமை கண்டு
ரசிக்கும் மனதுக்கு
எந்த நாளும் நல்ல நாளே;
அறிவோமே ஞானசம்பந்தம்
அளித்த கோளறு பதிகம் வடிவிலே.....

- சுழிகை ப. வீரக்குமார்

**

வேகமாய் முன்னேறு;
சோம்பலைத் தூக்கியெறி;
முயலாமையாய் இராமல்;
முயல்வதே நினைவாக;
உள்ளத்துள் உருமாற்றி;
ஊக்கத்தைத் துணையாக்கி;
உண்மையின் வடிவாகி;
விட்டிலாய் விழுகாமல்;
விளக்காய் ஒளிகொடு;
விண்ணையும் இழுக்கலாம்;
வீரனல்ல மகாவீரனாக மாறலாம்;
நாளை எனத் தாவாமல்;
இன்று நல்ல நாளாகக் கொண்டு.......

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

விபத்தில் கால்நசுங்கி
நகர முடியாத
நாய்க்குச் சோறளித்தேன்.
தட்டித் தட்டிக்
கம்புக்கண் கொண்டு நடந்தவரைச்
சாலையின் மறுபக்கம் கொண்டுசேர்த்தேன்.
ஆலயத்தின்
அன்னதான திட்டத்துக்கு
ஆயிரம் ரூபாய் நிதியளித்தேன்.
தெருவோர
ஏழைச் சிறுமிக்குப்
புத்தாடை வாங்கித் தந்தேன்.
எனினும்
இந்த நாள்களெல்லாம்
இனிய நாள்களாகுமா.....
விடுதியில் விட்டிருந்த அம்மாவை
வீட்டுக்கு அழைத்துவந்த
இந்த நாளைக் கொண்டாடுகையில்!

- கோ. மன்றவாணன்

**

அந்திமுடியும் அழகான வேளை
....அழகாய் பூத்திடும் அதிகாலை
இந்தநாள் இனியநாள் என்றுதினம்
....இன்பமாய் கதிரவன்பாடும் பாமாலை
கனிவாய் சிரிக்கின்ற பூக்களும்
....கனவுகளோடு ஒருநாள் வாழுமே
கனவுகளுடன் வாழும் மனிதனுக்கு
....காலமெல்லாம் பாடம் சொல்லுமே
காலையில் அழகாய் தினம்பாடும்
....கவலையில்லாது அதுதன் இரைதேடும்
பாலையிலும் பறவைகள் நீர்தேடும்
....பறந்து திரிந்துவானில் விளையாடும்
வந்தநாள் தெரியும் இங்குஉனக்கு
....வாழும்வரை கணக்குஇங்கு இருக்கு
எந்தநாளும் நல்லநாள்தான் உனக்கு
....ஏற்றால் வாழ்வுஇனிக்கும் நமக்கு

- கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

**

இந்த நாள் இனிய நாள் - என்ற எண்ணமே
இந்த நாளை இனிய தாக்கிவிடும் - தினமும்
இராசிபலன்  பாா்த்து வாழ தொடங்குவதை விட -
இரசித்து வாழ தொடங்கினாலே நாள் இனிதாகிவிடும் -

உச்சரிப்பு அழகானால் தமிழுக்கு இனிய நாள்!
உபசரிப்பு அழகானால் விருந்தினருக்கு இனிய நாள்!
படத்தை கொண்டாடினால் இந்தநாள் மட்டுமே இனியநாள்!
பாடத்தை கொண்டாடினால் வாழ்நாள் முழவதுமே இனியநாள்!

உழைப்பவன் முன்னேற்றம் கண்டால் இந்தநாள் இனியநாள்!
உழுதவன் விலை நிர்ணயித்தால் இந்தநாள் இனியநாள்!
வாழ்வில் அறத்தை பின்பற்றினால் இந்தநாள் இனியநாள்!
விழுந்தவர் நேரத்தோடு மீட்கபட்டிருந்தால் இந்தநாள் இனியநாள்!

நம்பிக்கையில் மண் விழாதவரை இந்தநாள் இனியநாள்!
நம்மால் பிறர் காயபடாதவரை இந்தநாள் இனியநாள்!
சாதனை நாட்களை தொட்டுவிட்டால் இந்தநாள்  இனியநாள்!
குறைந்தபட்சம் சோதனை வராதவரை இந்தநாளும் இனியநாளே!

-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com