பெண்ணென்று சொல்வேன் வாசகர் கவிதை பகுதி 3

பெண்ணென்று சொல்லுதற்கே பிறப்பெ டுத்தார்..........பெண்குலத்தைக் காத்துநின்று பெருமை சேர்த்தார்.!
பெண்ணென்று சொல்வேன்
பெண்ணென்று சொல்வேன்

எண்சீர் ஆசிரிய விருத்தம்

பெண்ணென்று சொல்லுதற்கே பிறப்பெ டுத்தார்
..........பெண்குலத்தைக் காத்துநின்று பெருமை சேர்த்தார்.!
கண்போல ஏழைநலம் கருத்தில் கொண்டார்
..........கடமைதனைச் செய்வித்துக் காலம் வென்றார்.!
புண்ணின்மேல் வேல்பாய்ச்சும் பாவி வென்றே
..........புண்ணியங்கள் பலசெய்தார் புவியில் நன்றே.!
எண்ணமெலாம் பொதுநலமே என்றே கொண்டார்
..........எப்போதும் தமிழ்நாட்டின் ஏற்றம் கண்டார்..!
.
கீர்த்திமையும் திறமையும்நம் கண்முன் நிற்கும்
..........கொடுமைதீரக் கொதித்தெழுந்த கோபச் சிங்கம்.!
கூர்மையான அறிவினையே கொண்ட கீர்த்தி
..........குடிமக்கள் நலமொன்றே குறிக்கோள் ஆக்கி.!
பார்முழுதும் பெண்ணினத்தின் பெருமை சொல்ல
..........பகவானின் அருளினையே பெற்றார் வெல்ல.!
சோர்வினையே அண்டாமல் சுற்றம் போற்ற
.......... சோகமான வாழ்முடிவைச் சுகமாய் ஏற்றார்.!
.
கருத்துடனே பணிசெய்து குறைக ளைந்தார்
..........கனிவுடனே தம்மக்கள் காத்து நின்றார்.!
பெரும்பழியே வந்தாலும் பொறுத்துப் போனார்
..........பகுத்தறிவால் அரசியெனப் பண்பில் ஆனார்.!
வருத்தமுற வைத்தாலும் வம்பு செய்யார்
..........வில்லங்கப் பேர்வழிக்கு மன்பு செய்வார்.!
பெரும்புகழே பெற்றவொரு பெண்ணைச் சொல்ல
..........பேரரசி அம்மாவின் பெயரைச் சொல்வேன்.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

உயிரூட்டும்
ஒவ்வொரு நதியின் பெயர்கேள்...
அலையேறி வந்து
கரையின் காதுகளுக்குச் சொல்லிப் போகும்
பெண்பெயர்களையே.
கனவையும் கற்பனையையும் கவிதையையும்
கலந்து பிசைந்து ஊட்டும்
நிலவின் பெயர்கேள்...
முகில்துணி விரித்து
மூடிக்கொள்வாள் முகத்தை...
அழகி என்றுரைத்து.
அன்பு
அருள்
மன்னித்தல்
வயிற்றுக்குச் சோறிடல்
இந்தச் சொற்களுக்குரிய பால்
எதுவெனக் கேள்...
பெண்பால் எனக்கூறும் வாழ்விலக்கணம்.
வீட்டு
விளக்கு ஒவ்வொன்றும்
ஒளியால் எழுதுகிறது
பெண்ணுக்கு வாழ்த்துப்பா
கோயில் கருவறை
தாயின் கருவறை
எது உயர்ந்தது என்று என்னிடம் கேள்...
பெண்ணென்று சொல்வேன்.

-கோ. மன்றவாணன்

**

பித்தர்களைச் சித்தர்களைப் பேயர்களை எத்தர்களைப்
பின்வந்த எத்தனையோ புத்தர்களைப் பக்தர்களை
முக்தர்களைச் சக்திமிகு சித்தமதில் ரத்தமதில்
மோகமதை வேகமுடன் மூச்சிரைக்கக் கொள்வார்களை
முத்தப்போதை நித்தம்கொண்ட உன்மத்தர்களை
மூன்றுலகை ஆளும்பல நல்லமன உத்தமர்களை
மொத்தத்தில் மண்ணுலகில் உருவாக்கி விட்டவர்யார்?
முழுமதிபோல் வாழ்கின்ற பெண்ணென்று சொல்வேன்

எரியும் தீபத்தின் நெருப்பு யார்தந்தது?
எழிலாக விழுகின்ற மழைநீர் யார்தந்தது?
விரியும் வானத்தின் வெள்ளொளி யார்தந்தது?
விதியின் போக்கைமாற்றும் சக்தி யார் தந்தது?
சரியும் கூந்தலுக்குள் சதிராடும் அழகோடு
சந்திரனைச் சந்ததமும் சிறைவைத்த விழியோடு
கரியும் வைரமாய் மாறுகின்ற சூட்சுமத்தைக்
கண்ணழகில் தருகின்ற பெண்ணென்று சொல்வேன்

ஆண்டவனைப் போலிங்கே தாண்டவம் ஆடி
அகிலத்தைக் கால்களில் சலங்கையாய் மாட்டி
தூண்டுகின்ற விளக்கதனைப் போல்நித்தம் எரிந்து
தூர்நிறைந்த மண்ணுலகைத் தூபத்தில் எரித்து
வேண்டுகின்ற வரம்தரும் வெண்ணிலாத் தேவதை
வீணர்களின் ஆணவத்தை வெங்காட்டில் அழித்து
மாண்டுபோன மாண்புகளை உயிர்ப்பித்துக் காலத்தில்
மாளாதவள் யாரென்றால் பெண்ணென்று சொல்வேன்

ஒருபஞ்சம் இல்லாத பிரபஞ்சம் ஒன்று
உருவாக்கும் வல்லமை யாரிடம் உண்டு
பெரும்வஞ்சம் தன்னைப் போரிட்டுக் கொன்று
பிறழாத நீதிவேண்டும் என்றுகேட்டுக் கொண்டு
தெருவெங்கும் நெருப்பாழி சூழவைத்து விட்டு
தெய்வமாய் மாறுகின்ற சக்தியாரிடம் உண்டு
மருவொன்றும் இல்லாத மனதோடு வாழும்
மங்கைஎன்று சொல்கின்ற பெண்ணென்று சொல்வேன்

- கவிஞர் மஹாரதி

**

நூலறுபடும் காற்றாடி ஆனாலும்
வட்டத்திற்குள்தான் பறக்க வேண்டும்
மாறாத மனிதர்களுடன்தான் பயணம்
ஆனாலும் மாறத்தான் வேண்டும்
பூப்பெய்தால் புதிய உலகம் பிறக்கிறது
கம்பிகளில்லா கூண்டுகளில் சிறைவாசம்
மணமானப்பின் கம்பிகளுடன் பரப்பளவு
குறைந்த கூண்டு
குழந்தைகளைப் பெற்றப்பின் தலையில்
சுமக்கப்படுகிறது கூண்டு

சமுதாயத்தைத் தாங்கும் திறம் கொண்ட
தூண்தான் ஆனாலும் சுயம்-மண் பறிக்கப்பட்டு
வேரறுத்து வேறொரு தூணின்மீது
சாய்க்கப்படுகிறது 'சாறுண்ணியாக'

ஆசைகொள்ளக்கூட அடுத்தவர்
சிபாரிசு வேண்டும்
ஒரே இனமானாலும் கூட இரவுப் பொழுதுகள்
இணையான பாதுகாப்பு தருவதில்லை
சுயநலம்கூட இன்னொருவருக்காய்
இருத்தல் வேண்டும்
பொதுநலத்திலும் முழுப்பொறுப்பினை
சுமத்தல் வேண்டும்

ஒரே உருவில் பல மாற்றங்கள்
முகமூடி அணியா புதுப்புது சாயல்கள்
கட்டுப்பாடுகளால் கட்டமைக்கப்பட்ட உருவம்

வஞ்சனையுடன் வழி நடத்தப்படுகிறது
வழிமுறை பேணா சமுதாயத்தால்

இவ்வளவையும் பொறுப்பவர்கள் யாரென
விழியுயர்த்தி என்னிடம்
வினவினீர்களாயின் நான்
பெண்ணென்று சொல்வேன்  

- ஹமி,, தேனி

**

ஆக்கலும் அளித்தலும் அன்பு செலுத்தலும்   
அரிவையர் செயல் என்றால் மிகையில்லை! 
இருபெரும்  இதிகாசம் எழுவதற்கு  காரணம் 
 பெண்ணென்று சொன்னால் பிழையில்லை!

சிலம்புக்கும் மேகலைக்கும பெருமைஎதுவெனில்   
சிறப்பென்று   பெண்ணை  செப்பியதுதான்!   
பெண்ணின் பெருந்தக்க யாதுமில்லையென 
ஐயனின் குறளுக்குமேல்  அரியசொல்  இல்லை !

சட்டமும் இல்லாமல் சாட்டையும் இல்லாமல் 
சாதிக்க பிறந்த(து ) பெண்ணென்று சொல்வேன்!
கூட்டு குடும்பத்தை போற்றி வளர்த்தவர்கள்-பின் 
கூட்டை கலைத்து தனிவீட்டை  வார்த்தவர்கள்! 

மாமியார் வன்முறை மருமகள்  தற்கொலை  
கொடுமை தீருமா?   குவலயம்  அழுதது  -இன்று   
மருமகள் வந்ததும்  மகனின் தந்தைதாய்க்கு    
முதியோர் இல்லமே முகவரி தந்துநின்றது  ! 

பிள்ளையை பெற்றவர் பிரிந்தும்  வாழ்வதும் 
பெண்ணை கொடுத்தவர் பூரித்து மகிழ்வதும் 
இன்றைய நிலையென யாருக்கும் தெரியும் 
இதையும் மாற்ற பெண்ணாலே முடியும் !

- முத்து இராசேந்திரன், சென்னை 

**

தாயாய் இப்பிறவியில் வந்து
....தரணியில் என்னைப் படைத்தவள்
சேயாய் என்னைச் சுமந்து
....சேவை செய்து மகிழ்ந்தவள்
மகளாய் மகிழ்ச்சியைத் தந்து
....மனைவியாய் வாழ்வைப் பகிர்ந்தவள்
மேகமாய் அன்புமழை பொழிந்து
....மென்மை மலரின்இதயம் கொண்டவள்
தன்னலம் கருதாத தொண்டால்
....திங்கள்போல் ஒளிவீசும் இல்லம்
தன்னம்பிக்கை யால்தினம் போராடி
....திண்ணமானது பெண்ணின் உள்ளம்
நல்லசெயலால் நாட்டை உயர்த்துபவரை
....நான் பெண்ணெண்று சொல்வேன்
வல்லமையால் சிகரம்தொடும் பெண்ணை
....வாழ்த்தி நானும்தலை வணங்குவேன்

- கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

**

பெண்ணென்று சொல்வேன் - அதனை
பெருமையாகவே சொல்வேன்

எங்களுக்கு இந்திரகாந்தியை போல ஆளவும் தெரியும்
எங்களுக்கு மிதாலிராஜை போல ஆடவும் தெரியும்

அன்பை பொழிவதில் மாரி(மழை)யாக இருந்திடுவோம்
அயராது உழைப்பதில் மேரி க்யூரியாய் வாழ்ந்திடுவோம்

நாங்கள் தன்னார்வ தொண்டில் சிறந்திருப்போம் 'குவாரிஷாக'
நாங்கள் தடகளத்தில் சிறந்து விளங்குவோம் பி.டி.உஷாவாக

தெரசாவாக  மணமாகாமல் தொண்டாற்றி நோபலை பெற்றிடுவோம்
மேரிகோமாக மணமானாலும் விளையாடி தங்கத்தை பெற்றிடுவோம்

தேகம் ஊனப்பட்டாலும் வென்றுகாட்டுவோம் 'ஹெலன் கெல்லராக'
தேகத்தை சுட்டாலும் கல்விக்கு வழிகாட்டுவோம் மலாலாவாக

இறகுப் பந்தில் சவலாக இருப்போம் பி.வி.சிந்துவாக
இறக்கை விரித்தே பறந்திடுவோம் கல்பனா சாவ்லாவாக

எங்களுக்கு கழனியில் களையெடுக்கும் நுட்பமும் தெரியும்
எங்களுக்கு கணிணியில் பணிபுரியும்  நுட்பமும் தெரியும்

சமைத்து துவைத்துவாழும் சாதாரண வாழ்க்கையும் தெரியும்
சோதனையை கடந்துவாழும் சரித்திர வாழ்க்கையும் தெரியும்

நாங்கள்  வீட்டில் வளர்ந்திடுவோம் செல்லப் பிள்ளையாக
நாங்கள் என்றுமே வணக்கத்துக்குரிய 'சின்ன பிள்ளை'யாக

ஏனெனில்  பெண்ணென்று சொல்வேன்
அதற்கு மேலாக தெய்வமென்றும் சொல்வேன்

குறிப்பு : -"குவாரிஷா - தென் ஆப்பிரிக்காவின் தொற்றுநோய் மற்றும் நோய்தடுப்பு நிபுணர் - தன்னார்வலர் -தெ.ஆ.  உயரிய விருது பெற்றவர்.
ஹெலன் கெல்லர் - கண் பாா்வை, கேட்கும் திறன் இழந்தவர் - தன்னம்பிக்கையை ஊட்டிய எழுத்தாளர். சின்னபிள்ளை - இந்திய முன்னால் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், இவர்களின் மகளிர் குழு சேவையை பாராட்டி 'ஸ்திரீ சக்தி' விருதினை தந்து, சின்னபிள்ளையின் காலில்விழுந்து ஆசிர்வாதம் பெற்றாா்"

-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**
இடி மன்னல் மழையை
பெண்ணென்று  சொல்வேன்..,
கோவத்தைக் காட்டவும் தெரியும்,
அன்பாய் இதமளிக்கவும்  தெரியும்,
தென்றலுடன்  விளையாடும் 
ஊஞ்சலை,
பெண்ணென்று  சொல்வேன்..,
இயற்கையை மகிழ்விக்க
தெரிந்தவள் -அவள் 
மட்டும் தானே..,
நிலவு இல்லா.,
வானத்தை
பெண்ணென்று  சொல்வேன்..,
நீ்  சோகத்தை 
உடைப்போல  உடுத்தினால்
பார்ப்பவர் மனம்.... புண்படாதா?..
காகித கவிதைகளுக்கு  உயிர்,
பெண்ணென்று  சொல்வேன்..,
நீ் இல்லையெனில்
இங்கு கவிதைக்கு 
என்ன வேலை
கவிஞனுக்கு என்ன
தான் வேலை?..
உருளும் மண்பானையை
பெண்ணென்று  சொல்வேன்..,
 அதை செதுக்கும்  கலை 
சிலருக்கே தெரியும்.. 
தமிழ் மொழியை
பெண்ணென்று  சொல்வேன்..,
நீ இல்லையேல்
நாங்கள் உயர்வது..,
எவ்வாறு பெண்ணே...?

--கவிஞர். மைக்கேல் மனோஜ், மதுரை

**

உயிர் தந்த உயிரானவள்.
உயிர்களில் உயர்வானவளும்
அவளே !
தாயாகத் தாலாட்டு இசைப்பவள்.
நோய்  தீர்க்கும் மருந்தானவளும் அவளே!

அறுசுவை உணவு படைப்பவள்.
ஆசானாய் இருப்பவளும்
அவளே!
அஞ்சுபவள் கெஞ்சுபவள்.
அனைத்திலும் மிஞ்சுபவளும்
அவளே!

கண்ணென குலம் காப்பவள்.
விண்ணுக்கு பாதை அமைப்பவளும் அவளே !
கவி பாடும் பொருளானவள்.
கவி இயற்றும் கவிதாயினியும்
அவளே !

முகத்திலே புன்னகை பூப்ப வள்!
முதுகிலே பாரம் சுமப்பவளும் அவளே !
முயற்சிக்கு வித்திடுபவள்.
முதுமையிலும் தளராதவள்
அவளே !

பதுமையாகத் தோன்றுபவள்.
புதுமை  பல  படைப்பவளும் அவளே !
அவளின்றி ஓர் அணுவும்
அசையாது !
அவளையேப் 
பெண்ணென்று சொல்வேன்!

- கே.ருக்மணி 

**
காலைமுதல் இரவுவரை களைத்தி டாமல்
   கடனாக உழைப்பவர்யார் ? கவினாய் இல்லம்
சோலையென மணம்வீசி சொக்க வைக்கும்
   சூட்சுமத்தின் வித்தகர்யார் ? சுற்றம் சூழ
வேலையென இருந்தாலும் விழிப்பாய் தாமே
   வேண்டியதை தருவார்யார் ? எந்த நாளும்
ஆலையென தானியங்கி, அன்பு பாசம்
   அளிப்பவர்தாம் பெண்ணென்று சொல்வேன் கண்ணே !

அம்மாவாய், அத்தையாய், ஆயா வாகி,
   அக்காவாய், தமக்கையாய், அண்ணி யாகி,
நம்மினிய மாமியாகி, பாட்டி யாகி,
   நல்லினிய ஆசிரியர், தோழி யாகி,
செம்மையாய் எந்நாளும் சிறப்பை நல்கி
   தேனாக தேக்காக வாழை யாக
நம்மைமிக வல்லவராய் மாற்றும் நல்ல
   நல்லறிவர் பெண்ணென்று நவில்வேன் கண்ணே !

அறிவினிலும் ஆற்றலிலும் அணிய மாகி
   அறிவியலில் கணிதத்தில் ஆக்க மாகி
பொறியியலில் புவியியலில் பொருத்த மாகி
   போற்றுமுயர் வரலாற்றில் புதுமை யாகி
அறிவார்ந்த பலவற்றில் அணுக்க மாகி
   அணிதமிழில் அமுதமெனும் பெருக்க மாகி
நெறியாகி நிலைத்தென்றும் நிழலாய் நிற்கும்
   நேரியரார் பெண்ணென்று சொல்வேன் கண்ணே !

-ஆர்க்காடு. ஆதவன்

**

உருவத்தில் மட்டுமல்ல
தருவதிலும்  மாறுபட்டு
நிற்பவளே........,   பெண்!
அச்சம், மடம்,  நாணம், பயிர்ப்பு என
சொச்சம் இருக்கும் அன்பையும்
மிச்சம் மீதியின்றி கொடுக்கும்
பச்சாதாப உள்ளம்  கொண்டு
உலகின் உயிர்களை தன்  அன்பு வலையில்
பலவிதமாக  அணைக்கும்  உன்னத
குணம்  உடையவள்தான்  பெண்!
தாயாக, மனைவியாக, மகளாக
பேதமின்றி   இல்லத்தை  நடத்தும்
சாதனை   திறமை  உடையவள்தான்  பெண்!
எத்தனை சோதனைகள் வந்தாலும்
அத்துனையும்  சாதனை படிகளாக
மாற்றும்   தைரியலட்சுமி பெண்!
அழும் பெண் வீட்டில்  நிம்மதி
பழுதாகி   தரித்திரம்  குடிகொள்ளும்!
சிரிக்கும் பெண் வீட்டில்
பூரிக்கும் மகிழ்ச்சி தண்டவாடும்.
பெண்ணென்று சொல்லி  போற்றினால்
சமூகமே  நல்வழி  நடக்கும்!
போற்றுவோம் பெண்ணை!

- பிரகதா நவநீதன்.  மதுரை  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com