வாசகர் கவிதை தூரத்து உறவுகள் பகுதி 2

மறவாமல் ஒளிந்திருக்கும்  மனத்துள் உண்மை மறந்துவிட நினைத்தாலும் மாறாத் தன்மை.!
வாசகர் கவிதை தூரத்து உறவுகள் பகுதி 2

தூரத்து உறவுகள்

எண்சீர் ஆசிரிய விருத்தம்

மறவாமல் ஒளிந்திருக்கும்  மனத்துள் உண்மை
……….மறந்துவிட நினைத்தாலும் மாறாத் தன்மை.!
உறவாடும் உள்ளமதை உணர்ந்தே ஓடும்
……….உத்தமரின் நிலையான உறவை நாடும்.!
உறவுகளும் பாலமாக உள்ளம் தன்னில்
……….உள்வாங்கிப் புரிதலானால் உறவு வெல்லும்.!
இறவாத நல்லுறவாய் இன்றும் என்றும்
……….இருப்பதுவே பெற்றோரின் இயல்பு ஒன்றே.!
.
முந்தைநாளில்  அயல்நாட்டு மோகந் தன்னில்
……….மேற்படிப்பு படிப்பதற்கே முனைந்த போது
எந்தையவர் விமானத்தில் ஏற்றி விட்டார்
……….எனக்காகச் சொத்தையெல்லாம் விற்று விட்டார்.!
பந்தமதை  மறந்துவிட்டுப் பிழைக்கப் போனேன்
……….பாசத்தைத் தொலைத்திட்டுப் பித்த னானேன்.!
தந்தைதாயை இன்றுவரைத் தாங்க வில்லை
……….தற்போது நினைத்தாலும் தூக்க மில்லை.!
.
தூரத்தே உறவுகளாய்த் தந்தை தாயும்
……….தோலாத நெஞ்சத்தைத் துளைத்துப் பாய..
பாரமாகிப் போனதெல்லாம் பாழும் நெஞ்சே
……….பக்கத்தில் இருப்போரும் பழகும் நஞ்சே.!
வீரமாகிப் போனதெலாம் வினையாய்ப் போக
……….வியனுலகில் உறவெல்லாம் விந்தை ஆக.!
ஈரமில்லா உறவுகளே எங்கும் காண
……….ஈந்ததாயை நினைவூட்டும் என்றும் பேண.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**
நிலவிற்கு ஒளியில்லையே  என்று
தினமும் ஏங்கும் சூரியன் !!
பூமியில் ஈரமில்லையே என்று 
கடலை உறிஞ்சும் மேகம் !!
வேடந்தாங்கலில் பலர் தவிப்பரோ  என்று
துடிக்கும்  சில ஆஸ்திரேலிய பெலிகன்ஸ் !!
பூக்களின் அழைப்பில்லையே – இருந்தும்
நுகரப்பறந்து வரும் வண்டுகள் !!
இவையெல்லாம் என்ன ??
உறவுகளை தூரமாக்கும்
மனித மனங்களுக்கு
இயற்கையின் பாடமாய்
சில தூரத்து உறவுகள் !!

- கவிஞர்.  டாக்டர் எஸ். பார்த்தசாரதி

**
நாடு,  மொழி, இனம் எல்லகைகளைக் கடந்து
நட்பாய் இங்கு வந்து கலந்தவர் வீரமாமுனிவர்
தேடாமல் நமக்குக்கிடைத்த தானாக கனிந்த உறவு
தமிழுக்கு மெய் எழுத்தை தந்த தூரத்து உறவு
தேடிவந்து தொண்டு செய்தார் ஜி.யு.போப்  தன்னை
தமிழ் மாணவன் என கல்லரையில் எழுதச் சொன்னார்
தேடாமல்நமக்குக் கிடைத்ததிரவியம் தான்  கால்டுவெல்
தந்திட்டார் ஒப்பிலக்கணம் தமிழுக்குதூரத்து உறவுதான்   

மதம்பரப்ப வந்தமகான்கள் தமிழ் ஆய்ந்து மகிழ்ந்தார்கள்
இன்றைய தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணை யானார்கள்
உரை நடைதமிழுக்கு உண்டாக்கியவர் வீரமுனிவர்
சுவடிதேடிய சாமியாரான வீரமானமுனிவர் புகழ்வாழ்க.

உலகத்தவர்தமிழ்கற்க உதவியாக லதின்-ஆங்கில அகராதி     
உண்டாக்கியுள்ளார் உத்தமர் புகழ் பரப்புவோம், தமிழ்
உலகத்தின் முதல்மொழிதான் என்று கண்டறிந்தவர்
 கால்டுவெல் என்னும் மொழி வல்லுநர் அவரேதான்

கன்னடம்,தெலுங்கு,மலையாளம் தமிழிலிருந்து வந்ததே
ஆய்ந்து அறிந்து நிறுபித்துள்ளார் தூரத்து உறவானார்
இன்னொரு அறிஞர் ஜி,யு.போப் குறளை ஆங்ககிலத்தில்
முதலில் மொழிபெயர்தவர் உலகப்புகழ் தூரத்துஉறவு
உன்னத உறவுகளை நினைவுகொள்வோம் போற்றுவோம்
தமிழ் காக்க நாம் உறுதிஏற்போம் தமிழ் வாழ்க!

- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், இராஜபாளையம்

**
துரத்தும் பல எண்ணம் இங்கு
உறவாகி நிற்கும்,
மறமோடு அறம் தெரிய
வரம் தந்து வாழ்த்தும்,
கரம் நீட்டி சிரம் தொட்டு
புறம் ஓங்க எங்கும்,
தரம் தேடும் நிறம்
மாறா பூக்களெங்கும் சொரிய,
உரம் பாய்ந்த உள்ளத்தே
திறம் கூட்டி நிற்கும்,
சுற்றம் அது பார்க்க ஓர்
குற்றமில்லை என்றே,
மாற்றத்தில் சொன்ன பல
உறவுகளின் கூட்டம்,
பாரமா - பாசமா என
பற்றி மன்றம் நடத்தும்,
அற்ற குளத்து அருநீர் 
பறவையாய் எப்போதும் 
நிற்கும் -தோளோடு சேரும்
கற்கண்டாய் இனிக்கும்,
சொற்கண்டு சோராத
நற்றமிழர்  சுற்றம் .

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**
தூரத்து உறவுகளே என்றும் நம்மை 
சுகமான நினைவுகளில் ஆழ்த்தும் என்று 
அனுபவித்த அனைவருமே கூறிச் சென்றார்
அதனையே எல்லோரும் ஏற்றுக் கொண்டார்!

கல்யாணம் காதுகுத்தல்  பிறந்த  நாளென்று
களிப்பான   தினங்களிலே    கூடிப்   பேசி 
துயரான  நேரங்களில்   உடன்   இருந்து 
துயர் குறைக்கும் பணிசெய்யும் தூரத்துறவு!

எப்பொழுதோ கூடுவதால் இன்பம் கொண்டு
இடையினிலே நடந்தவற்றை எடுத்துக் கூறி
பண்புடனே  பழகச்  செய்யும்   தூரத்துறவு
பழிகூறும் பழக்கமெல்லாம் அதனில் இல்லை!

தற்கால நடைமுறையில் பெற்றோர் பிள்ளை
தனித்தனியாய்  பணிநிமித்தம் வேற்று நாட்டில்
வாழுகின்ற  நிலை   வந்து   வாய்த்ததாலே
வதிகின்றார் அவருந்தான் தூரத்து உறவாய்!

பழகி   விட்டாலே    பாலும்  புளிப்பதுபோல்
அருகிருக்கும் உறவுகளில் அன்புக்குப் பஞ்சமாகி
குறைகூறி குற்றங்கண்டு குறுகிய மனத்துடனே
வாழும் நிலையில்லை வழுவாத தூரத்துறவில்!
-ரெ.ஆத்மநாதன்,அமெரிக்கா

- ரெ.ஆத்மநாதன்,பால்ஸ் சர்ச்,வெர்ஜீனியா,அமெரிக்கா

**

கோடைகால விடுமுறைக்கு
அங்கங்கு செல்லலாம்
வேறு வேறு மொழிகளையும்
கற்றுக் கொள்ளலாம்
கடிதங்கள் அனுப்பி கடிதங்கள்
பெற்றுக் கொள்ளலாம்
ஆனால் எங்கே இருந்தாலும்
உறவினர்கள் உறவினர்களாக
இருப்பார்கள்!

- கனிசா கணேசன்

**

வந்த பேரூந்தில் நினைத்த நேரத்திலேறி
எங்கள் ஊருக்கு வருவார ம்மம்மா
வரும் வழியை எதிர்பார்த்திராத
எங்கள் மனம் குதூகலிக்கும்
தூரத்தில் கண்ட அவரை ஓடிச் சென்று
வாசல் வரை கூட்டி வந்து வரவேற்க
இடுப்பில் சொருகிய முந்தானையை அவிழ்த்து
சிறு மிட்டாய் சரையை கொத்தாக கொடுப்பாள்
சிறு தூரத்திலிருந்து திடீர் திடீர் வாசம் செய்யுமென் பாட்டி
அம்மாவின் முகம் பூரிப்பில் பூத்துக் குலுங்குமன்று
தூரமென்பது சிறு தூரமல்ல பெரு நாடாகியது
பேரனும் பேத்தியும் பேசாமலே இருந்துவிட்டு
பேருக்கு நாலு நாள் பேரனிடம் வருவது
பேச்சாகிப் போனது பெரு நாட்டு வாசம்
ஐரோப்பா, அமெரிக்கா வென்று தூரதேச உறவுகள்
காசனுப்பி வைக்கும் இயந்திர மனிதர்தானென்றானது
இயல் தொடர்புகள் துண்டாடப்பட்டு
தொலைபேசியிலே தொலைந்து போனது இன்று!

- யோகராணி கணேசன்/நோர்வே

**
இல்லம் தேடி ஒருவர் எந்தை பெயரை கேட்டார்
நல்ல முதிர்ந்த அவரை நாடி வீட்டுள் அழைத்தேன் !
சொல்லும் அவரின் முகமோ சுடராய் ஒளிரக் கண்டேன் !
வல்ல எந்தை பற்றி வான மழையாய்ப் பொழிந்தார் !

அல்லும் பகலும் பலர்க்கும் ஆன உதவி செய்தார் !
வெல்லும் வழிகள் காட்டி வெற்றி  காண வைத்தார் !
கல்லும் கரைய வைக்கும் கடமை உணர்வை தந்தார் !
நல்லார் அவர்போல் நாட்டில் நவில எவரே என்றார் !

எல்லார் மனத்தும் வாழும் எந்தை ஏற்றம் யாவும்
சொல்லக் கேட்ட யானே சுண்டி இழுக்க லானேன் !
கல்வி கேள்வி அறிவில் காலம் போற்றும் வகையில்
சொல்லும் வண்ணம் வாழ்ந்த தோன்றல் அவர்தம் மகன்யான் !

வந்தார் தூர உறவு வகையைக் கூறி விதந்தார்
இந்நாள் எந்தை போலே இல்லை என்றே மகிழ்ந்தார் !
சொந்தம் இல்லை எனினும் சொந்தம் என்றே நினைந்தார் !
சிந்தை சிறகை விரிக்க செய்த செயலால் மலர்ந்தார் !

எந்தை போலே வாழ என்னை புதுக்கி விட்டார் !
சிந்தை ஏற்றே அவர்போல் சிறக்க உறுதி பூண்டேன் !
வந்தார் வாழ்த்தி, இல்லம் வரவே அன்பாய் அழைத்தார் !
எந்த நாளும் வாழும் இனிய சொந்தம் ஆனார் !

-து ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி).

**
அன்று
அம்மா இங்கே வா வா,
ஆசை முத்தம் தா தா

நிலா நிலா ஓடிவா,
நில்லாமல் ஓடிவா

இப்படி பாட்டுப்பாடி சோறு ஊட்டியது,
வெறும் பசிக்கு மட்டுமல்ல,
அது பாசத்திற்கும் நேசத்திற்கும் தான் 

பலநூறு ஆண்டுகளானாலும்,
பலநூறு மைல் தொலைவில் வாழ்ந்தாலும்;
உறவுக்குக்கைகொடுப்போம்

அடுத்தவன் உழைப்பையும் பொருளையும்,
அவனிடமே சேர்ப்போம்

இன்று
கைப்பேசியில் பாட்டு,
குழந்தைகளுக்கு வேட்டு

தெருவில் விளையாடினால்,
படிப்பு கெட்டுவிடும்
பாம்பு கடித்து வடும்

யார் என்ன உறவு?
சொல்லித்தருவதேயில்லை;
அவரால் என்ன பணவரவு?
இதுதான் இன்றைய உலகநிகழ்வு

ஏமாந்தால்! அடுத்தவன் உழைப்பையும்,பொருளையும்,
எந்த கூச்சநாச்சமும் இல்லாமல்; சுரண்டவும்,களவாடவும் நினைக்கிறது தற்கால உலகம்.

- ம சபரிநாத்,சேலம்

**

உறவுகளின் உன்னதமறியா
உள்ளங்கை பேசி தலைமுறைக்கு
உள்ளபடியே எல்லாம் தூரத்து உறவு தான்

கணிப்பொறி வல்லுநராகி கனவு தேசத்தில்
காலம் கடத்தும் கார்பரேட்காரர்களுக்கு
கருவாக்கி உருவாக்கியவர்களும்
தூரத்து உறவுதான்

முகநூலில் புகழ் தேடி
வாட்ஸ் ஆப்பில் வம்புபேசி
இன்ஸ்டாகிராமில் இணைதேடும்
சிற்றின்பத் தலைமுறைக்கு
உறவுகளின் பேரின்பம் புரிந்திடுமா?
எல்லாம் தூரத்து உறவுதான்

பிள்ளைகளை கைவிடும் பெற்றோர்
செல்பேசிகளை கைப்படறி நடக்கும்
காலமதில் பெற்ற பிள்ளைகளும்
தூரத்து உறவுதான்.

கருப்பு பணத்தை ஒழிக்கும் கதை சொல்லி
வெள்ளை பணத்தையும் பதிப்பிழக்க செய்ததுபோல்
நம்மை உறவாட வைக்க வந்த
கருவிகள் எல்லாம் உறவுகளுக்கு
ஊரு விளைவிக்கும் காலமும் மாறும்
நம்பிக்கையோடு காத்திருபோம்

- ம.முரளிதரன்

**

உறவுகள் என்றும் உறவுகளே 
பக்கத்து உறவுகள் என்ன 
தூரத்து உறவுகள் என்ன ! 
தொலைக்காத உறவு எல்லாம் 
நெருங்கிய உறவுகள்தான் !

நடைமுறையில் இன்று  பேரன் பேத்திகள் 
தாத்தா பாட்டி  பக்கத்திலா உள்ளார்கள் ?
சொந்த தாத்தா பாட்டியே  இன்று தூரத்து 
சொந்தம் என்று மாறும் நிலைமை ! 

இனி வரும் நாளில்  பக்கத்து சொந்தம் 
தூரத்து சொந்தம் இரண்டுக்கும் ஒரு 
புது அர்த்தம் தேட வேண்டிய கட்டாயம் 
ஒன்று நிச்சயம் உருவாகும் !

பக்கத்தில் இருந்தால் மட்டும் சொந்தம் என்று 
இல்லை !  தூரத்தில் இருந்தாலும் தாத்தா 
பாட்டி தூரத்து சொந்தம் இல்லை என்று 
பிள்ளைகளுக்கு சொல்லும் ஓர் காலம் வரும் 
கண்டிப்பாக !

- கந்தசாமி நடராஜன் 

**

மனித குலம் 
மண்ணில் வேரூன்ற
உறுதுணையாக இருக்கும்
உறவுகள் தான் எத்தனை!
அன்பினால் இணைந்த
உறவுகள்!
ஆசையினால் மலர்ந்த
உறவுகள்
பாசத்தினால் பணிந்த
உறவுகள்!
நேசத்தினால் நனைந்த
உறவுகள்!
கருணையில் கரைந்த
உறவுகள்!
காதலில் கனிந்த
உறவுகள்!
உரிமையில் பிறந்த
உறவுகள்!
உயிராய் மதிக்கும்
உறவுகள்!
என
உறவுகளின்
மகிழ்ச்சியில்
வளர்ச்சியில்
தழைக்கும் வாழ்க்கை !
உண்மையான அன்பு
உன்னிடம் இருந்தால்
தொலை தூரத்து உறவுகளும்
தொடும் தூரத்தில் தான் !

**

கூட்டாக ஒருகூட்டுள் வாழ்ந்த வர்கள்
கூறுகூறுயாய்ப் பிரிந்தின்று வாழு கின்றார்
பாட்டியொடு தாத்தாவும் அத்தை மாமா
பாசமுடன் பெரியப்பா சித்தி என்றே
நாட்முடன் ஒருவருக்குள் ஒருவ ராக
நல்லன்பு காட்டியொன்றாய் வாழ்ந்த வர்கள்
வேட்டுவைத்த மலைபிளந்து சிதறி னாற்போல்
வேறுவேறு இடங்களுக்குப் பெயர்ந்து போனார் !
சின்னசின்ன கதைகளினைப் பாட்டி சொல்லிச்
சிதையாமல் பண்பாட்டை மனத்துள் ஊட்டப்
பின்னிபின்னித் தாத்தாவும் கைகள் கோத்துப்
பிறரோடு இணைந்துவாழும் நெறிகள் கூறத்
தன்னலமே இல்லாமல் அண்ணன் தம்பி
தங்கையக்கா அனைவருமே நேசத் தோடே
இன்பதுன்பில் பங்குகொண்டு வாழ்ந்த வர்கள்
இன்றுபல காரணத்தால் பிரிந்து சென்றார் !
கல்வியிலே முன்னேறிப் பணிகள் பெற்றுக்
கனவுகளை நனவாக்க நகரம் சென்றார்
நல்லதொரு குடும்பமாக வாழ்ந்த வர்கள்
நல்வாழ்வு வசதிக்காய் தூரம் சென்றார் !
பொல்லாதப் பணந்தன்னை ஈட்டு தற்குப்
பொழுதெல்லாம் எந்திரமாய் மாறிப் போனார்
அல்லல்கள் வந்தபோது அணைப்ப தற்கோ
அருகினிலே இல்லாமல் தனிமை யானார் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

வெகுதூரத்தில் இருந்தாலும்
ஒவ்வோர் இரவிலும் கதைசொல்லி
என்னை உறங்க வைக்கிறது நிலா
ஆற்றோர நந்தவனத்தில் இருந்தபடி
மலர்கள் எனக்குப் பரிசனுப்புகின்றன
மணத்தை
நிலத்தின் மறுமுனையில் இருந்தாலும்
நித்தமும் வருகிறது
தோழியின் அழைப்பொலி
சிம்லாவில் விளைந்த ஆப்பிள்
என்வீட்டு
ஊண்மேடையில்
உலகின் எல்லா பாகங்களில் இருந்தும்
வந்து குவிகின்றன நட்பஞ்சல்கள்
என்வீட்டுக் கணினியில்
தூரங்கள்
பிரித்துவிடாது
உறவுகளை...

-கோ. மன்றவாணன்

**

உறவுகளால் செதுக்கப்பட்ட கண்ணாடி பேழைக்கு,
அன்பே திறவுகோலாக,
அரும்பும் மழலைகள் முதல்
முதுமை தவழும் முதியோர் வரை
உறவுகளின் பலம்
உள்ளங்கையில் நெல்லிக்கனியாய் !
ஈருடல் ஓருயிருள் உருவாகும் சிசுவுக்கு
தொப்புள் கொடியே உறவின் பாலமாக,
அன்னை உணர்த்துவாளே உறவின் மகிமை !
விடுமுறை நாட்களிலும், திருவிழாக்களிலும்
ஒன்றிணைந்த மூன்று தலைமுறை உறவுகள்
இன்றோ தாம் கடந்த பாதைகளின் நினைவலைகளுடன் திருப்பப்பட்ட
பக்கங்களாய் !
அன்று தூரத்து உறவுகளும் மனதால் நெருங்கி இருக்க,
இன்றோ தொப்புள் கொடி உறவே
தூரத்து உறவாக ,
கையளவு இதயத்தில் முள் தைக்க
விழிகளில் குருதி கசியுதே !
தொழில்நுட்ப வளர்ச்சியின் தொலைநோக்கு பார்வையில்,
பண்பாடுகள் தடுமாற தொலைதூரத்தில் உறவுகள்,
தூரத்து உறவுகளாய் புகைப்படங்களில் !

- தனலட்சுமி பரமசிவம்

**

நாள்தோறும்   வீடுதேடி   வந்து  செய்தி
        நமக்களிக்கும்   நாளிதழும்,   அறிஞர்   சான்றோர்
வாள்கூர்மை   கருத்துநிறை   அறத்தைக்   கூறும்
       நூல்களுந்தான்,  பள்ளிநாடி   வந்து   பாடம்
நீள்வாழ்வை   நிமிர்த்திடவே   கற்பிக்   கும்சீர்
        நல்லாசி    ரியர்களும்,நல்   மனத்து   நட்பால்
தோள்கொடுக்கும்   நண்பர்கள்  யாவ  ருந்தாம்
          தூரத்து   உறவுகளே   என்று   ணர்வோம்!

உணவீயும்   உழவர்கள்,  உழைப்பை   நல்கும்
           உழைப்பாளர்,  நல்லாட்சி   ஆளு   வோர்கள்,
குணமிகுந்து   உதவிடுவோர், நலத்தைக்   காக்கும்
         குன்றுநிகர்   மருத்துவர்கள்,  பணியில்   கூட
சுணக்கமற்றச்   செவிலியர்கள்,  நயன்மை   வெல்ல
          சட்டத்தை   நிலைநிறுத்தும்   காவ   லர்கள்,
பணத்திற்காய்  விலைப்போகா   வழக்கு   ரைஞர்கள்,
        பலரிவர்போல்   தூரத்து   உறவு   கள்தாம்! 

- கவிக்கடல்,  கவிதைக்கோமான், பெங்களூரு.

**
தூரத்து   உறவுகளாய்   மண்ணைத்   தேடித்
         துளித்துளியாய்ப்   பொழிகின்ற  மழையு  ணர்வோம்;
தூரத்து   உறவுகளாய்   வையந்   தன்னில்
         தூயஒளி   வீசியேதான்   பாடம்   சொல்லும்
ஆரமுதாம்   நிலவுகதிர்   பாங்கு   ணர்வோம்!
          அன்பாலே   தூரத்தை   விரட்ட  டிப்போம்;
தூரத்து    உறவுகளாய்   வேடந்   தாங்கல்
         தேடிவரும்   பறவையிடம்   பாடம்  கற்போம்!

தூரத்து   உறவுகளாய்க்    கான்நி    றைந்த
       செடிகொடிகள்   மரங்களைப்போல்   உதவ வேண்டும்!
தூரத்து   உறவுகளாய்க்   கனிகள்   காய்கள்
       தீராத   பசிக்குதவும்    உயிர்க    ளுக்கு;
தூரத்து   உறவுகளாய்   விளையும்    யாவும்
        தரைவாழும்   மாந்தருக்கு   உணவாய்   மாறும்;
தூரத்து   உறவுகளாய்    வாழ்ந்த   போதும்
       துயர்துடைக்கும்   பாங்குடனே  வாழ வேண்டும்!

- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com