வாசகர் கவிதை தூரத்து உறவுகள் பகுதி 1

உறவுகள் நினைவது உயிரென இணைவது தொலைவினில் இருப்பினும் விழியிமை போன்றது
வாசகர் கவிதை தூரத்து உறவுகள் பகுதி 1

தூரத்து உறவுகள்

திரைகடல் ஓடினோம் திரவியம் தேடவே
உறைவிடம் மாறிய பறவைகள் போலவே
பொருளது வேண்டுமே புவியிதில் வாழவே
பணமது இல்லையேல் இல்லையோர் வாழ்க்கையே

உறவுகள் நினைவது உயிரென இணைவது
தொலைவினில் இருப்பினும் விழியிமை போன்றது
பொழுதது தான்வரும் பிரிந்தவர் சேர்ந்திட
நிலையிதை நினைத்திட உறவுகள் வசப்படும்!!

- கு. இரா, வடக்கு அயர்லாந்து.

**

உலகந்தான் உள்ளங்கை உறவாய்ப் போச்சே
     உட்கார்ந்த இடத்திருந்து தொடர்பா யாச்சே
அலகில்லாத் தரவுகளால் செல்பே சிக்குள்
     அவ்வப்போ துரையாடும் அளவி லாச்சே
புலனங்கள் வழியாலே பொழுதுக் கும்கண்
     புலப்படாத தொலைவுகளி னுறவும் கூடப்
பலமணிநே ரத்திற்குப் பேசு கின்ற
     பயனுள்ள பேச்சுகளால் சுருங்கிப் போச்சே.

முகநூலில் முகமறியா உறவும் மோதும்
      முகமற்ற எதிரிகளும் உறவு கொள்ள
அகமறியா நிலையினிலும் தொடரும் பேசும்
      ஆர்ப்பாட்ட உறவுகளும் கூடும் சொந்த
நகலுறவோ அசலுறவோ தெரியா வண்ணம்
      நாளுந்தான் வளருதிங்கு வுறவாய் என்றும்
பகலுமென இரவுமென வுரையா டல்கள்
      பல்கிவளர் நிலையாச்சு பெருகிப் போச்சு.

தூரந்தான் சுருங்கிற்று, மனதின் தூரம்
      தொலைவாச்சு உறவுகளும் சுருங்கிப் போச்சு
ஈரந்தான் மனதிற்குள் வற்றிப் போச்சு
      இதயத்தால் விலகித்தான் போக லாச்சு
நேரந்தான் பரபரப்பாய் ஓட லாச்சு
      நெருங்கியதோ தூரத்தோ உறவி னர்கள்
பாரந்தான் சுயநலத்தால் பதுங்க லாச்சு
      பாருக்குள் மனிதமனம் சிறுத்துப் போச்சே

- கவிமாமணி " இளவல் " ஹரிஹரன், மதுரை.
  
**

குடும்பம் என்னும் கூட்டினில்
....கூடிவாழும் அழகான பறவைகள்
நெடுந்தொலைவு விலகி இருந்தாலும்
....நெஞ்சினில் இனிக்கும் உறவுகள்
தூரநிலவாய் இருக்கும் நினைவுகள்
....துள்ளும் அலையாய் நீந்துமே
தீராஅன்பை வாழ்வும் சுமந்தால்
....தீமைகளும் நம்மைவிலகி நிற்குமே
செல்வங்கள் பார்த்து தேடிவரும்
....சொந்தங்கள் எல்லாம் நம்பாவங்கள்
சொல்லாமல் வந்துநமக்கு உதவும்
....சொந்தங்களை அன்பால் வெல்லுங்கள்
தூரத்துஉறவுகள் எல்லாம் எப்போதும்
....தூண்போல் பாசத்திற்கு வலுசேர்க்கும்
பிரிவுகளை நம்மிடம் புரியவைத்து
....பூக்களாய் எந்நாளும் மணம்சேர்க்கும்

- கவிஞர் நா.நடராஜ், கோயமுத்தூர்

**

உறவுகள் என்பது  இயற்கை வரம் - அதில்
தூரத்து உறவு நிலவு போல வரும்.  
தொடும் தூரத்தில் இருப்பதாய் தெரியும்,  
வெகு தொலைவில் உள்ளதுபின்  புரியும். 

வாரம்  ஒருமுறை ‘ஸ்கைபில்’  வருவார்கள்;
அங்கு வந்ததை போனதை சொல்வார்கள்;
‘வாட்ஸப்’  மூலம் வாழ்த்தை  பொழிவார்கள்;
‘பேஸ்புக்’கிலும் புகைப்படசெய்தி தருவார்கள்!

இதெல்லாம் சில காலம் நடந்துவரும்,
பிறகெல்லா  பழக்கமும்  மறந்துவிடும்,
பெற்ற பிள்ளைகள் என்றாலும் பேரன்பு
பிரியங்கள்  தேய்ந்து முடங்கி விடும்! 

பாசத்தால்  என்னதான்  வளர்த்தாலும் 
நேசத்தால் உண்மையாய் இணைந்தாலும் 
இன்னல் உறுகின்ற நேரத்திலே துணைக்கு
தூரத்து சொந்தங்கள் வரப்போவதில்லை! 

அருகில் இருக்கும் உறவுகளை நெருங்காமல்  
அளவாய் பேணி தள்ளி வைப்போம்; ஆனால்
அல்லல் உறுகின்ற  நேரத்தில் பாசத்தை
அள்ளி  கொடுப்பது ஓரத்து சொந்தங்களே !  

- முத்து  இராசேந்திரன் , சென்னை 

**

தமிழ்மொழியின் தனிச்சிறப்பென
தனிப் பெருமிதத்துடன் கூறவே
பரன் பரை எனும் பரம்பரையாம்
ஏழாம் தலைமுறையில் தொடங்கி
சேயோன் சேயோள் என்றும்
ஓட்டன் ஓட்டி என்றும்
பூட்டன் பூட்டி என்றும்
பாட்டன் பாட்டி என்றும்
தந்தை தாய் என்றும்.....
தலைமுறைக்கு ஒரு பெயரை
அர்த்தமாக அமைத்து வைத்து
அத்தனை உறவுகளையும்
அழகான கூட்டுக்குடும்பமாக
அற்புதமாக இணைத்தே வைத்து மகிழ்ந்திருந்த காலமதில்.........
போரின் வடிவில் வந்த பேரிடியால்
திசைக்கொருவராய் நம்மை சிதறித்தெறிக்க வைத்து
உறவுகளும் சொந்தங்களும் பிரிந்து....
பாசமும் பந்தமும் தொலைந்து....
தொடர்புகள் தொடர்பற்று அறுந்து....
பார்க்கும் வேளைகளில் மட்டும்
பாசாங்குடன் ஒப்புக்கு நலம் விசாரித்து....
இரத்த சொந்தங்களைக் கூட
தூரத்து உறவுகளாக மாற்றி
வேடிக்கை பார்த்துச் சிரிக்கிறது
இன்றைய இயந்திர உலகம்!!!

- உமா, நோர்வே

**

தூரத்து  உறவென்று  இல்லாதப்  போதும்
       துயர்தனைத்  துடைத்திட  ஓடோடி  வருவோர்
யாராக இருந்தாலும் உறவென்றே ஆவார்
        இவர்களே உறவினும் மேலோரென் றாவார்!
மாறாக நாம்துயரைக் குண்கின்றப் போதில்
        மறந்தும்நம் அருகினில் வாராதார் தம்மை
யாராக இருந்தாலும் விலக்கவேத் தகுமாம்
       இரத்தவுற வென்றாலும் விலக்கவே தகுமாம்!

பாரதத்தாய் பெற்றெடுத்த மக்கள் என்றே
     பலர்போற்ற ஒன்றிணைந்து வாழ்ந்தோம் அன்று!
தாரகநல் மந்திரமாம் ஒற்றுமையை மறந்தே
     தனியாகப் போகின்ற எண்ணமதைக் கொண்டார்!
கோரமுகம் தனைகொண்டு எல்லையிலே
தினமும்
      குண்டுமழை பொழிகின்ற கொடியமனங் கொண்டார்!
தூரத்து உறவுகளே என்றாகிப் போனார்
      துலக்கமதைக் காணாமல் துயர்தனையே கண்டார்!

அண்டைநாடு என்றான பாக்கிஸ்தான் தன்னில்
       அடிமைகளாய் வாழ்ந்திட்டார் வங்கதேச மக்கள்!
கண்டகொடுமை இந்திராவின் மனமதனைத் தாக்க
       காளியென்றே ஆகிட்டு போர்தன்னைத் தொடுத்தார்!
எண்ணிபத்து நாட்களுக்குள் போர்தனை முடித்தார்
       இனியவங்க தேசமதைத் தோற்று வித்தார்!
உண்மையான இந்திராவின் தீர்க்கத்தின் பலனால்
        உறவென்றே வங்கநாட்டு மக்களும் ஆனார்!

- அழகூர். அருண். ஞானசேகரன்

**

உறவுகள் எல்லாம் உறவுக ளாக உண்மையில் இருக்கிறதா ?- அந்த
உறவுக ளாலே உலவுவ தென்ன உரைத்திட உயர்வுளதா ?

உறவென வந்தார் தூரமே என்றார் உரையினில் உளமகிந்தேன் !- அவர்
சிறப்புரை எல்லாம் தேனுரை யாக சிந்தையை யானிழந்தேன் !

அம்மா வழியில் உறவினர் என்றே அடுக்கினார் பற்பலவும் !- அம்மா
சும்மா செய்த உதவியால் இன்று துலங்குதல் கணக்கிலவாம் !

நன்றியை மறந்து நடப்பவ ரெல்லாம் நாட்டினில் நடைபிணமே !- என
இன்முகத் துடனே எடுத்தொரு பெட்டி என்னிடம் அவரீந்தார் !

பெட்டியில் சிலவாய் இலட்சம் பணமாம் பெருமை யுடன்பகன்றார் !- இது
மட்டில் லாத மகிழ்ச்சியின் கொடையாம் மலர்ந்தே மிகமகிழ்ந்தார் !

அம்மா' அவரின் றில்லை என்றே அன்பாய் மிகமறுத்தேன் !- அவர்
அம்மா இல்லை' அறிந்தே தந்தேன் அவர்மறு உருவென்றார் !

தொல்லை தனிலே துவண்டேன், அம்மா' தூதர் அவர்வழியாய் - என்
பொல்லா தொல்லை போக்கக் கண்டே போற்றி மிகமகிழ்ந்தேன் !

-ஆர்க்காடு. ஆதவன்

**

கண்மணியே!!
என் கண்ணின் மணியே!!
என் உடலின் உயிரே!!
உயிரில் கலந்த உணர்வே!!
உணர்வில் மலர்ந்த மலரே!!
பிரிந்தோம் நாம்  உடலாலே
இணைந்தோம் நம் மனத்தாலே! - நீயும் இன்று தூரத்து உறவே!
பெரருளாதாரப் பின்னணியில் ்அயல் நாட்டில் உறவுகள் 
சொல்ல யாரும் இல்லை எனச் சொல்லி வந்த தூரத்து உறவுகள்
நட்பின் மூலம் மலர்ந்தன. - உறவுகள் சொல்லி அழைத்தன - நல்நட்பினால்
நற்பயன் கிடைக்குமெனில்!
எல்லா நட்பும் என் தூரத்து உறவே!!

- மு. செந்தில்குமார் -  ஓமன்

**
தூரத்து சொந்தம் தொலைவிலுள்ள சொந்தமா?
நெருங்கிய உறவுக்கு ஒன்றுவிட்டு இருப்பதே!
சின்னத்தாத்தா பெயரனின் சித்தி போன்றதே!
தூரத்து சொந்தம் தொலைந்தே போய்விட்டது!
எல்லாரும் ஒன்றே பெற்றுக் கொள்வதாலே!
தூரத்து சொந்தத்தில் பெண் எடுத்துப்
பெண் கொடுத்துப் பழக்கம் அந்நாளிலே!
விவாகரத்து - அகராதியில் இல்லாத ஒன்று!
விட்டுக்கொடுத்துப் போகும் பழக்கம் இருந்ததாலே!
நட்பும் சொந்தமும் நலம்பயக்கும் நனிவிருந்து!
மனஅழுத்தம் குறைத்து மகிழ்ச்சி கூட்டி
அன்பைப் பெருக்குவது தூரத்து சொந்தங்களே!
விடுமுறையில் பிள்ளைகளை அனுப்பாதீர் தனிவகுப்புக்கு!
சொந்தங்கள் நண்பர்கள் வீட்டுக்குச் செல்வோம்!
மகிழ்ச்சி தனையே மனமாரப் பரிமாறுவோம்!
மனநோயை மண்ணுலகில் விரட்டி அடிப்போம்!!!

- மரு. கொ.ரா தர்மேந்திரா.

**

உறவுகளுக்குள்
உறவுகளின் ஒவ்வாமை
ஓங்கி தொடர்வதால்
ஒட்டியிருப்பதில்லை உறவுகள்...

குடல்வழி உறவுகள்
உடல்வழி உறவுகளென
ஒப்பந்தம் உடன்பட்டாலும்
ஒளிவீச முயல்வதில்லை...

பொருளாதார உறவுகளால்
பொருளற்ற உறவுகளால்
பூகோள விரிப்பில்
பொருளற்றுப் போகிறது
உறவுகளின் உன்னதம்...

அன்பை
எடைப்போட்டுப் பார்ப்பதும்
ஆசைகளை
சிதறடித்து ரசிப்பதும்
இரண்டு கண்களால் இரண்டு காட்சி நிகழ்த்திக் காட்டிக்
கொண்டாடுகிறது உறவுகள்...

உறவுகள் உறவுகளாய் உயிர்க்க
உண்மையிலிருந்து விடுபடாமல்
உறவுகளில்
வாய்மையும் மெய்மையும் ஊடாடி
மகிழ்ந்து கொள்வதில்
பெருமிதம் கொள்ளும் பூமி...

- அமிர்தம்நிலா./நத்தமேடு

**

உறவுகளின் தூய்மை
உறவுகளில் இல்லாத போது தான்
வருத்தமாயிருக்கிறது உறவுகளுக்கு...

அறிகிலிருந்தாலும் தூரத்திலிருந்தாலும்
அன்பு சுரக்க
அகலாதிருக்க அரவணைக்கும்
நினைவுகள்...

கருணைச் சுரப்பதிலிருந்து
கொரூரம் சுரக்க
கவுடாகச் சிரிப்பதுவும் உறவு
உயர்வுக்குப் போகாதற்கு காரணம்...

மிருக உறவுகளின் இன ஒற்றுமை
மனித உறவுகளில் இருந்து விட்டால்
மரணிக்காமல்
மகத்துவம் பெறும் மகாமண்டலப்
பண்புகள்...

உள்ளம் உவப்ப
உயர்வுத் தலைக்கூடி
ஊர்வலம் வர
பிரிவற்ற பிணைந்த உறவில்
துளைத்தாலும் கிழியாது
காற்றுபோலவே
நீரடித்தாலும்
விலகாது உறவின் நீர்...

- கா.அமீர்ஜான்

**
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com