வாசகர் கவிதை சாம்பலாய் முடியும் உடல் பகுதி 1

அவனியில் அவதரிக்க ஆண்டவன் அனுப்பிய
வாசகர் கவிதை சாம்பலாய் முடியும் உடல் பகுதி 1

அவனியில் அவதரிக்க
ஆண்டவன் அனுப்பிய
இந்த உடல்,
ஈரைந்து மாதங்கள்
உள்ளே கருவறையிலிருக்க,
ஊனாகி உயிராகி 
என்பு தோல் குருதியுடன்,
ஏகாந்த வெளி மீதில்
ஐம்புலனும் ஐம்பூதமாய்
ஒரு மித்த உயிரோங்க,
ஓடி ஓடி புவி மீதில்
ஒளடதமும் மூப்பும் மீற,
சாம்பலாய் முடியும் உடல்
கருவறை முதல்- கல்லறைவரை
ஈடேறும் இந் நாடகம்
ஈசனின் திருவிளையாட்டா?
இல்லை காலத்தின் சதிராட்டா?

- கவிதாவாணி, மைசூர்

**

 
அழுதுக் கொண்டே பிறக்கும்
பழுதில்லா உடல் மெல்ல மெல்ல
தொழுது வணங்கும் ஆவலுடன்
அகிலத்தில் வலம் வருகுதே!
சிரிப்பு-அழுகை,  இன்பம்-துன்பம்
பூரிப்புடன் நாளொரு மேனியும்
பொழுதொரு  வண்ணமுமாக
வளரும் உடலில் இருப்பது
மலரும் அழகான  இதயம்!
இதயத்தை அன்பினால் நிரப்பு
உதயம்  ஒவ்வொன்றும் இனிமையாகுமே!
சாம்பலாய் முடியும் உடலை
ஆவலுடன் வளர்ப்பதால் என்ன பயன்?
காவல் இல்லா பயிர் போல
உடலை வளர்ப்பதை விட்டு
கடல் போன்று பரந்த அன்பை
உள்ளத்தில்  வளர்த்தால்
வாழ்க்கையில் காணலாம் சொர்க்கம்!
மறுத்தால் தத்தளிப்பது
திரிசங்கு சொர்க்கத்தில்!

- பிரகதா நவநீதன், மதுரை 

**

என்பு கொண்ட உடலுக்குள்
....எத்தனை விதமான எண்ணங்கள்
அன்பு ஒன்றே நிலையானது
....அறிந்தால் வாழ்வே வண்ணங்கள்
பணம் மட்டும்நிம்மதி தந்துவிடாது
....புரிந்தால் வாழ்வுஇனிக்கும் உனக்கு
பிணமாய் மாறினால் இங்குநாமும்
....பின்பு இரைதான் இந்தமண்ணுக்கு
தேடிச்சேர்த்த செல்வங்கள் யாவும்
....தேவைக்கு என்பதைஉணர்ந்தால் போதும்
வாடிய காலங்கள் ஓடிப்போகும்
....வருங்காலம் வசந்தமாய் மாறும்
கோடிகள் குவிக்கும் மனிதனுக்கும்
....கோவண ஆண்டிக்கும் முடிவாகும்
நாடிகள் அடங்கிவிட்டால் போதும்
....நம்உடலும் நெருப்பில் சாம்பலாகும்

- கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

**

இறைவனின் பிரசாதம்  - அது
பிறை நெற்றியில் சூடும்
திருநீறு என்ற  சாம்பல்!
இந்த சாம்பலுக்கு இருக்கும் புனிதம்
சொந்த உடலான நமக்கில்லை!
பந்தங்களுடன் ஒன்று கூடி
வாழும்  உடல் ஒரு கூடு!
அதில் மூச்சு என்ற   காற்று உள்ளவரை
செதில் செதிலாக வரும் சுவாசம்!
இந்த  காற்று நின்றுவிட்டால்
எந்த உடலும்  ஒரு சடலமே!
சடலத்தை எரியூட்டினால்
குடல் பிடுங்கும்  நாற்றம்
பரவுமே!...............
இப்படி அழியும்  உடல் மீது
எப்படி மோகமும் ஆசையும்
வருகிறதே........என்ற  வியப்புடன்
சொருகிறது  மயக்கமான  நிலை!
சாம்பலாக முடியும் உடலை நேசிக்காதே...
உள்ளத்தை ஆராதித்து  இருக்கும்வரை
கள்ளமில்லா  அன்புடன் உயிரை நேசி!

- உஷாமுத்துராமன், திருநகர்

**

எரிப்பதா
புதைப்பதா
என விவாதிக்கப் படுகிறது
மின்தகனம் வந்தப்பின்னும்...

எரிப்பதும் புதைப்பதும்
அவரவர் குடும்ப வழக்கமென்று
நிகழ்த்திக் கொண்டாலும்
ஒரு குடும்ப சாதி சனம் போல்
மறுசாதி சனம்ஒப்புக் கொள்வதில்லை...

ஏன்
இப்படியும் நடக்கிறது
அந்த சாதி பிணம்
இந்தத் தெருவழியாகப் போகக்கூடாதென்று முடக்குவது போல்
அந்த சாதியும் போராடுகிறது
வெவ்வேறு மயானம் இருந்தாலும்...

புதைத்து
கல்லறைக் கட்டுவதும்
எரித்த சாம்பலை நீர்நிலைகளில்
தெளிப்பதும் முரணென்கிறது
புதைத்த இடத்தின் மேலேயே புதைக்க
தடுப்பதும்
ஏற்றுக் கொள்வதும் நடைபெறாமல்
இல்லை...

ஒவ்வொரு நீதி
ஒவ்வொரு சாதி மதங்களுக்கும்
முரண்பாடு
மயான நிலைகளில்...

உடல் எரித்தாலும் புதைத்தாலும்
மண்ணாவது நிச்சயமிருந்தும்
பேதமற்ற தீர்வொன்றிருக்கிறது
மதங்கள் சாதிகள் அற்ற நிலையில்
யாவருக்கும்
ஒரே மயானமென இருந்தால்
சாம்பலென்ன
மண்னென்ன மாய உலகில்...

- கா.அமீர்ஜான். திருநின்றவூர்

**

ஆம்பரென்றும் அரவிந்த முகத்தாளென்றும்
அல்லி நிகர்  மெல்லிதவள் பாதமென்றும்
காம்பரிந்த மலரனைய கையளென்றும்
கற்கண்டை நிகர்த்ததவள் பற்களென்றும்
தேம்பாவாய் இனிக்கின்ற  கிள்ளைச் சொல்லாள்
தெய்வீக மொழிக்கு நிகர் உண்டோவென்றும்
ஆம்படையான் புகழ்ந்திட்டான் அவள் நெகிழ்ந்து
அணைத்திடவே இடம் கொடுத்தாள் அடுத்த மாதம்
நான் முழுகாதிருக்கின்றேன் அத்தானென்றாள்
நடுநடுங்கி இன்னுமொன்றா! என்றான், அன்னாள்,
தேம்பியழுதிட்டபடி கணவன் சொன்ன
தீஞ்சொல்லால் துயரடைந்தாள், அவனைப் பார்த்து
சோம்பரினால் பக்கத்துக் கடைக்குச் சென்று
சொல்லி ஒரு நிரோத் வாங்கி வந்திடாமல்
சாம்பராய் முடியுமுடல் தனைப் புகழ்ந்து
தந்து விட்டீர் டாக்டரிடம் போவோமென்றாள்.

- சித்தி கருணானந்தராஜா

**

சாம்பலாக   முடியும் உடல்
சாதிக்கத் துடிக்கும் உயிர்
கும்பிட்ட கைக்குள் படை ஒடுங்கும்
குறள் சொல்கிறது
அன்று மறுநாளே அண்ணலின் உடல்
சாம்பலாகும் யார றிவார் ?
என்று என்ன நடக்கும் ? அதேநாளில்
ராஜாஜி கவர்னர் ஜெர்னலானார்
ராணுவத்தில் படையில் இருப்போர்
தானே உணர்வார் அவர்களின் முடிவை
வீணாய்ப்போகும் உடல் நாட்டுக்காக
போரில் போனால் என்ன?
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
உரைத்தார் அதுபோல் வாழ்ந்தார்    
சாகும்போதும் தமிழ்படித்து சாகவேண்டும்
சாம்பலெல்லாம்  தமிழ்மணந்து வேண்டும்
சாற்றினார் பாவேந்தர் ! சகலரும்
ஆதரித்தார் தமிழாய் வாழ்ந்தார் 
சாம்பலாய் மணக்கும் போதும் தமிழ்மணக்க
சான்றாக  வாழ்ந்தவர்  சிலரே!

- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன் 

**

இனியதோர் இயற்கை நியதி! --உலகில் ,
இன்னுயிர் பிரிவது உறுதி! --மனிதன்,
சரித்திரம் படைத்திடும் போதிலும்-சிலபிடிச்
சாம்பலாய் முடியும் உடலும்! -உலகில்,
நிலையாமை அறிந்திட்ட மனிதன்! 
நிகரில்லா வரலாற்று அறிஞன்!
பசிக்கும் ருசிக்கும் உணவு! தேவை,
பாரினில் வாழ்ந்திட அறிவு!
உழைப்பினில் ஒளிர்ந்திடும் வருமானம் !
உவந்திடல், உயிர் தரும் வெகுமானம் !
தீர்ந்திடும் சுவைத்திட மாங்கனி! உயிர்பிரிய
தூக்கெறிக் கொட்டை உடலணி! 
எறிந்திடும் விதையுமே மரமாம் ! 
எரித்திட உடலது சாம்பலாம்!

- இலக்கிய அறிவுமதி

**


சோற்றுத் துருத்தியெனச் சொல்வரிதை, சொந்தமெனச்
    சொல்லிக் கொண்டாட முடியாது சொன்னாலும்
காற்றை அடைத்தவெறும் பையதனுள் காற்றிருக்கும்
     கால மட்டுந்தான் மதிப்பிருக்கும் காற்றுப்போய்
நாற்ற மெடுக்குநிலை நமனவனும் கொண்டாட
      நல்ல உறவுகளும் சொந்தமெனக் கொள்ளாதே
ஆற்றுப் படுத்தியதை நெருப்புக்கு யிரையூட்டி
      ஆற்றில் கரைத்திடுவர் பிடிசாம்பர் அஸ்தியிதை

கற்றுத் துறைபோகும் ஞானிகளும் மேதைகளும்
       காவல காத்துவரும் அரசர்களும் செல்வர்களும்
வெற்றுக் கைகளுடன் ஆண்டிகளும் ஏழைகளும்
        வீணிற் கூச்சலிடும் அகந்தையரும் மேலோரும்
தொற்று நோயர்களும் தொல்லுலகு நமதென்றுச்
        சொல்லி நிரந்தரமாய்ச் சொந்தமென நினைப்பாரும்
ஒற்றை நொடியினிலே உயிர்பறக்க வெறும்பிணமாய்
        ஒருகைப் பிடியதனிற் சாம்பலென முடிவதன்றோ!

- கவிமாமணி " இளவல் " ஹரிஹரன், மதுரை.

**

கண்ணிரண்டும் குவளைமலர் கன்னங்கள் செவ்வரளி !
வெண்ணிலவாய் ஒளிருமுகம் விதந்தாடும் செவிநகைகள் !
வெண்முத்துப் பரல்கள்போல் வெளிர்தந்தம் போல்பற்கள் !
கண்கவரும் பவளம்போல் கனிந்ததவர் செவ்விதழ்கள் !

கார்முகில்தான் கவிழ்ந்ததுபோல் கன்னியவள் கருங்கூந்தல் !
தேர்போல அசைந்துவரும் சிற்றிடையின் சீர்சிறப்பு !
சீர்அடியோ பஞ்சதுபோல் தென்றலென நிலமீதில் !
நேர்இணையே இலாக்குமுத நிறைமலராய் உடலழகு !

காதணியும் கழுத்தணியும் காலணியும் கவினழகு !
மாதவளின் கணையாழி மயக்குமெழில் பேரழகு !
தீதறியா அவளகத்தில் திகழ்வதெலாம் தேனினிது !
ஓதறியா நூலாக உயிரின்ப ஒயிலழகு !

உலகத்தில் உயிராக உயிர்த்தவரே உயர்பெண்கள் !
நலவுயிரின் உடலாக, நவிலரிய நல்ஆண்கள் !
வலம்வந்து வையத்தில் வாழும்பெண் ஆண்களெலாம்
கலங்கியவர் கண்மூடின் காடதனில் வெறுஞ்சாம்பல் !

- ஆர்க்காடு. ஆதவன்

**

வழிகள்நல் வளமாக நிறைந்தி ருக்க
……….வாழவழி தெரியாது பாதை மாறி..
விழிகளையும் மூடிக்கொண்டே வழிந டப்பார்
……….வகையறியா மனிதரோடு உறவும் வைத்தே..!
அழிவற்றே வாழ்வோமெனும் எண்ணம் ஓங்க
……….அளவற்ற தீமைகளைச் செய்தி டுவார்..!
இழிச்செயலைச் செய்தற்கும் தயங்க மாட்டார்
……….இச்சகத்தில் இவர்போன்றோர் தேவை இல்லை..!
.
சாம்பலாக முடிகின்ற உடலை நம்பி
……….சகத்தினிலே ஆட்டமெலாம் போடு கின்றார்..
ஓம்புகின்ற ஒழுக்கத்தை விலக்கி விட்டு
……….உலகத்தைக் குறைசொல்லி வாழு கின்றார்..
வீம்புக்காய் சண்டையொடு வீணாய் வாதம்
……….வாழ்வினிலே கடைபிடித்தால் வீணாய்ப் போகும்..!
சோம்பேறி வாழ்க்கையில் சுகமே காணும்
……….சொற்களிலே உண்மையிலா சுத்தப் பொய்யர்..!
.
ஏட்டினிலே எழுதிவைத்தார் நம்மின் முன்னோர்
……….இப்படித்தான் வாழவேண்டு மெனவும் சொன்னார்..
பாட்டுவழிப் பண்புகளை ஒழுகு மாறு
……….பலவாறாய்ப் படித்ததெலாம் மறந்து விட்டோம்..
நாட்டினிலே நிலவுகின்ற நச்சுக் கொள்கை
……….நாமுமதை ஏற்றோமே வழியே இன்றி..
வாட்டுகின்ற உடல்நோயைக் கணக்கில் கொண்டு
……….வாழு(ம்)வரைப் புரிவோமே என்றும் தொண்டு..

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

அறம் வளர்க்கும் பெரியோர் ; 
அறிவியலில் கூர்மை பாய்ச்சும் 
அறிஞர் பெருமக்கள்; ஆட்சியாளும்
பேரரசர் ;பேதமின்றி ஒரு நிலையாய் 
வேதம் உரைக்கும் விற்பன்னர் ;
நியாயம் வழங்கும்  நடுவர்கள் 
கற்போர்; கற்றபின் அதன்படி 
நிற்போர் ;யாரும் பசியின்றி 
வாழ்ந்திட பயிர் வளர்ப்போர் ;
இவர்தாம் அனைவரும் உயிரால் 
இயங்கிட உடலால் அறிமுகம் 
ஆயினர் ;அறிந்தோம் ;தெரிந்தோம் 
உயிரிங்கு ஒருநாள் விடைபெற்றால்
பெயரும் தகுதியும் போகும் ;வெறும் 
சாம்பலாய்  முடியும் உடல் 

- முத்து இராசேந்திரன் 

**

சாம்பலாய் முடியும் உடல்
சந்தோஷம் எனும் தேடலில் விழுகின்றது -
அடுக்குமாடி குடியிருப்பு போல
அடுக்கடுக்காய் ஆசைகள் தொடர்கின்றது -
வாழ்க்கை - உறுதியான கல்லணை போல்
அமைய வேண்டுமென்று எண்ணுவதற்குள்
அதுபுதியதாய் கட்டும் சில மேம்பாலமாய் -
அக்கணமே சரிந்து விழுந்து விடுகின்றது....

கீழடியில் குழி தோண்டினால்
அது முதன்மை வரலாறு - அடுத்தவன்
காலடியில் குழி தோண்டினால்
அது அவனை முடிக்கும் வரலாறு -
வெறும் மனித சங்கிலி வாழ்க்கையை
வாழ்பவரின் உடல்கள்மட்டுமே சாம்பலாகின்றன
தேச நலனுக்காகவும் பொது நலனுக்காகவும்
போராடுபவர்களின் உடல்கள் சாம்பலாவதில்லை
வெற்றி திலகமெனும் சரித்திரமாகின்றன....!!!

-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**

கருவாய் உருவாய் உதித்த உடம்பு!
அழகும் அறிவும் கொடுத்த உடம்பு!
நிழலாய் நினைவாய் காத்த உடம்பு!
நற்குணமும் மனமும் தந்த உடம்பு!
உறவும் நட்பும் சொன்ன உடம்பு!
நன்மை தீமை களைத்த உடம்பு!
எல்லா நிலையிலும் இருந்தஉடம்பு! 
ஒருநாள் இல்லாமல் போவது,
காலத்தின் கட்டாயம் !
இயற்கையின் ஆணை ! 
இறைநிலையின் உச்சநிலை !
எவன் விதி எதில் இருப்பது, 
எவனுக்கும் தெரியாது -அந்த
எமனுக்கும் தெரியாது!
வரும் விதிதனை மதி
கொண்டு மாற்றிவிடலாம்.
அந்த மதி கூட விதியின்கீழ்தான்,
அன்பை நிலைபெறச் செய்து
வாழும் நாளில் உதவிகள் 
பல புரிந்து, இன்புற்று வாழ்ந்து
நோயின்றி நீங்கா விடை பெறுவோம் 
சிவத்தை அடைவோம் -  இறுதியில்
சாம்பலாய் முடியும் உடல்.....

- மு.செந்தில்குமார்

**

ஒருவேளை உணவிற்கு ஓரளவுணவு போதும்
இருவேளை உணவை ஒன்றாயுண்ண இயலுமா?
ஒரு வேளை உண்ணும் உணவையும் பசிவந்தால்
ஒருவேளையும் உண்ணாமல் இருக்கயியலுமா?

பேழை நிறை சேர்த்த உடை ஏராளமெனினும்
வேளையொன்றுக்கு எத்தனை உடை கட்டுவீர்!
மானம் காக்க மானிடரே ஓருடையே ஏராளம்
எனவே தானம் தருமம் தாராளமாய்ச் செய்யலாமே!

உயிருக்கையில் எத்தனை சேர்த்தாலும் சேர்த்தவை
உயிர் பிரிந்தக்கால் அழியுமென்பதை யாரறிவீர்
வாரிக் குவிக்காதீர்! வாழும்வரை நியமாய்
சேர்த்து வாழ்ந்திடல் நன்றெனெபதை அறிவீர்!

அக்காலம் ஆறடி நிலம் நமக்கு உரிமை என்போம்
இக்காலம் எள்ளளவு சாம்பலும் நமக்கு உரிமையில்லை
எந்திரத்தால் சாம்பலாய் முடிந்து கரையும் உடலுக்கு
எந்திரமாய் ஏனிந்த தவிப்பு சிந்திப்பீர் சிறிதே!

- மீனா தேவராஜன்

**

அன்பும் அறிவும் அணுவும் இன்றி அரக்கர் போலே பலரிங்கே !
துன்பம் செய்தும் தொல்லை தந்தும் துணிவாய்ப் பலரும் தொடர்ந்திங்கே !

ஒருவர் கெடுத்தே ஒருவர் உயர ஓயா ஆட்டம் பலயிங்கே !
ஒருவர் பணத்தை ஒருவர் பறிக்க ஒட்டி உறவாய் நிதமிங்கே !

பெண்ணை ஆணும் ஆணை பெண்ணும் பேணி ஏய்க்கும் பிழையிங்கே !
மண்ணுக் காக பொன்னுக் காக மண்டும் துயர்கள் மலிந்திங்கே !

பணத்தைக் கொடுத்து பன்மடங் காகப் பறித்தல் பலரின் பணியிங்கே !
பணத்தை இழந்து அவரிடம் கொஞ்சும் பாவ நிலையும் படர்ந்திங்கே !

மணியும் அணியும் மலைக்க அணிந்தே மயங்கும் மாந்தர் மனமிங்கே !
பணிவே இன்றி பணியை வாங்கும் பாவப் பட்ட பலதிங்கே !

இருக்கும் வரையில் ஆடும் ஆட்டம் எண்ண முடியா நிலையிங்கே !
பொருத்தம் இன்றி புவியில் வாழ பொருந்தி நாளும் அலைந்திங்கே !

அழகு உடலில் உயிர்தான் போனால் ஆகும் பிணமாய்ப் பெயரிங்கே !
தழலில் உடலும் எரிந்து முடிந்தால் சாற்ற ஏது நிலைத்திங்கே !

- 'படைக்களப் பாவலர்' துரை. மூர்த்தி, ஆர்க்காடு

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com