Enable Javscript for better performance
poem about madurai | 'மதுரை’ வாசகர் கவிதை பகுதி 2- Dinamani

சுடச்சுட

  
  madurai

  மதுரை

  முதுமூப்பு மூதூராய் மதுரை என்னும்
  ……….மாமதுரை நம்நாட்டின் மரபுச் சின்னம்..!
  மதுரையிலே பிறந்தாலே மகிழ்ச்சி உண்டு
  ……….மறவர்கள் போற்றுகின்ற களிப்பும் உண்டு..!
  பொதுமறையின் அரங்கேற்றப் புகழும் சேர
  ……….புனிதமான மதுரைக்கே பழமை உண்டாம்..!
  எதுகைமோனை சிறப்புபெற எங்கும் சங்கம்
  ……….ஏதுவாக அமைந்ததெலாம் மதுரை அங்கம்..!

  .

  மானத்தைக் காத்தவோர்மா மதுரை என்றே
  ……….மங்காத காப்பியம்வாய் மடுத்துக் கூறும்..!
  ஆனைமேலே வருமன்னர் அமைத்த சங்கம்
  ……….அமிழ்தமொழி தமிழதனை அரணாய்த் தாங்கும்..!
  தானைமாலை தொடுத்தவர்கள் தாங்கு மூராய்த்
  ……….தாரணிக்குப் பெருமையான தொன்மை ஆகும்..!
  சேனைகொண்ட பாண்டியரும் சோழர் மற்றும்
  ……….செம்மைபல்ல வரனைவர்க்கும் சேயாய் ஆகும்..!

  .

  தென்மதுரைத் தமிழோடு தேனும் சேர
  ……….தென்னவனாம் பாண்டியனும் தொழுத ஊரே..!
  அன்புகாந்தி அரையாடை அணிந்த காட்சி
  ……….அவ்வூரே வரலாறாய் அமைந்த சாட்சி..!
  அன்னியரை ஈர்க்கின்ற அல்லங் காடி
  ……….அரும்புமலர் மல்லிகையும் அழகு கூடி..
  பன்னாட்டு மக்களுமே புகழ்ந்த ஊராய்
  ……….பல்லாயி ரத்தூண்கள் பாடும் ஊரே..!

  - கவிஞர் பெருவை பார்த்தசாரதி

  **

  நான்மாடக்கூடலில் வசிப்பவரும்
  நான் என்ற அகந்தை இல்லா
  தன்னலம் கருதா மக்கள் வாழும்
  கண்போன்ற  நகரம்  மதுரை மாநகரம்!
  தூங்கா நகரம் என பெயரெடுத்ததால்
  தாங்க  எதையும் தங்கி  உறுதியாக
  ஏங்காமல் வாழ வைக்கும் மதுரை மாநகரம்!
  நாயகர் மஹால் என்றொரு
  அற்புத படைப்பு காண கண்
  கோடி வேண்டுமென  பாராட்டு
  தேடி வரும்  மதுரை மாநகரம்!
  மீன் கொடியினை நிலைநாட்டி
  மீன் போன்ற கண்ணுடைய மீனாட்சி
  வான் புகழ  கோலோச்சும் மதுரை மாநகரம்!
  என்ன வேண்டும் மாநகரில்
  தின்ன பலவித பலகாரங்களை
  வண்ணக் கலப்பின்றி சுத்தமான
  எண்ணத்துடன் பரிமாறும்
  கருணை உள்ளம் கொண்ட
  பெருமை மிகு நகரம்  அது
  மதுரை மாநகரம்!

  - உஷாமுத்துராமன், திருநகர்

  **

  வாஞ்சையோடு வாவென் றழைக்கும்
  வைகை நதிக்கரையோரம்
  தமிழ் நாட்டின் தன்னிகரில்லா
  தொன்மைக்குத் தானடிமை!
  பாண்டிய மன்னனாம்
  குலசேகர பாண்டியனின்
  புகழ்பாடும் இன் நகரில்
  கற்பிற்கு காரணத்தோடு கண்ணகியும்
  ஒன்பது வாசலோடு
  மீனாட்சியம்மனும் குடிகொண்டு!
  இந்தியாவின் பெரு நகரில்
  இடம் நாற்பத்து நான்கென
  தடம் பதித்து தரணியெங்கும்
  தமிழை சங்கமமைத்து- ஆம்
  உலகச் சங்கமமைத்து- உணரவைத்த
  உன்னத நகரமாம் மா மதுரையே!

  - யோகராணி கணேசன்

  **

  ஆண்டவன்  மனித உருவில்
  ஆடல் பாடல் திரு
  விளையாடல் புரிந்த
  கூடல் மாநகரமாம்
  மதுரையம்பதி ....
  பொற்றாமரைப் பூத்திருக்க 
  கற்றவர் நிறைந்திருக்க
  மண் மணக்கும் மல்லிகை
  விண் முட்டும் கோபுரங்கள்
  பொன்னொளிர் மீனாட்சியும்
  புன்னகையுடன் அருள் புரிய
  ஆத்திகமும் நாத்திகமும் ஒருசேர 
  ஆதிக்கம் செலுத்தும் இடம்....
  சங்கத் தமிழ் வளர்த்து
  மங்காத புகழ் பெற்று
  தேங்காத வர்த்தகம் புரியும்
  தூங்காத நகரம்..என
  பார் போற்றும் நகரம் .....
  கார் மேகம் பொழிய
  வற்றாத நதி வைகை யோட
  வளம் கொழித்த ஊரானது.!
  முத்திரை பதிக்கும் 
  புத்துணர்ச்சி தரும
  தினம் தினம்
  திருவிழாக்களுடன்...
  தீரத்திலும் வீரத்திலும்
  நெஞ்சில் ஈரத்திலும்
  நேசக்கரம் நீட்டும்
  பாசக்கார    மக்கள்   வாழும் மதுரை  மாநகரம்..
  தமிழன் என்று சொல்லி நம்
  தலை நிமிர வைக்குமன்றோ ?

  - ஜெயா வெங்கட்., கோவை

  **
  கண்ணகியின் காற்சிலம்பில்
  எண்ணற்ற  கற்கள் இருப்பதை
  கணக்கிடாமல் நீதி சொன்ன
  மன்னவன் பாண்டியன்
  செங்கோல் உயர்த்திய
  பெருமை சொல்லும் மதுரை!
  சொன்ன தீர்ப்பின் தவறினை உணர்ந்து
  அறியணையிலேயே  உயிர் நீத்த
  பெரிய உள்ளம் படைத்த பாண்டியன்
  மதுரைக்கு பெருமை சேர்த்த
  மன்னவன்..................
  மதுரை மாநகரில் சுற்றி சுற்றி
  வந்தால் காணலாம் பலப் பல
  தத்துவத்துடன் சூழ்ந்த ஆன்மீக
  கோவில்களும்  புராண கதை நிறைந்த
  வாயில்  சூழ்ந்த  நீதிக்கதைகள்!
  கரைபுரண்டோம் வைகை நதியில்
  நிறையுமே உள்ளம்................!
  மறைத்து பேச அறியா மக்கள்
  நிறைந்து வாழும்  அற்புத
  மாநகரம் ..... மனம் தேடும்
  மதுரை மாநகரம்!

  - பிரகதா நவநீதன்.  மதுரை

  **

  ஆலயத்தை  நடுவில் வைத்தார் ;
  அடுக்கடுக்காய்  வீதி வைத்தார் ;
  நான்குபுறம் வாசல் வைத்தார் ;
  நற்றமிழுக்கு   சங்கம் வைத்தார் !

  சுற்றிலும் அமைந்திட்ட   மலைகளும
  சூழ்ந்திட்ட   இயற்கை  சோலைகளும் 
  வடக்கில் ஓடிடும்  வைகைஆறுமொறு  
  வடிவுதர    வாய்த்திட்ட  நன்மதுரை !

  இலக்கியமும் சமயமும் இழையோடும் ;
  இறைவழி    வாழ்க்கை கலந்தோடும் ;
  மாதமெல்லாம் திருவிழா நடைபோடும் ;
  வாரந்தோறும் சாமியுலா  வந்துபோகும் !

  வழுவுள்ள  நீதியை வழங்கியதால் 
  பழுதான(து) செங்கோல் வளைந்தது ; 
  கற்புக்கரசி   சாபமதில் ஒருமுறை 
  கனலாய்  தீய்ந்தது தென்மதுரை !

  மங்கையர் தம்மை உயர்வு செய்யும் 
  மாமதுரை போற்றிட வேண்டுமம்மா !
  இறைவியே  அரசியாய் ஆட்சிசெய்த 
  இம்மூதூர்    புகழ்ந்திட  வேண்டுமம்மா !


  - முத்து இராசேந்திரன் 

  **

  மீன்ஆட்சி செய்யும் வைகைநதிக் கரையில்
  மீனாட்சி தானாட்சி செய்கின்ற மதுரை
  கான்ஆட்சி செய்யும் கடம்பமரச் சோலையில்
  கவிமாட்சித் தமிழாட்சி செய்கின்ற மதுரை
  தேன்ஆட்சிக் கொன்றைப்பூங் கடவுளின் பாட்டைத்
  திருத்துக எனச்சொன்ன காட்சிகொண்ட மதுரை
  வான்ஆட்சி செய்யும் ஒளிசாட்சி வண்ணநிலா
  மணிமுலை திருகிச்சோழ மங்கைஎரித்த மதுரை (1)

  ஆடிவீதி மாசிவீதி ஆவணிவீதி இன்னும்
  அழகுநிலாச் சித்திரை வீதிகள் என்று
  கோடிவீதி கோயில்வீதி ஆனஇந்த மதுரை
  கோதையரின் மல்லிகைத் தலைநகரம் மதுரை
  ஆடிப்பாடித் தேடிஓடி ஆனந்தச் சித்திரை
  அழகுவிழாக் கொண்டாடும் அன்புநகர் மதுரை
  கூடிப்பாடும் வேல்முருகன் ஊருக்கு வெளியே
  குன்றத்தில் தங்கியிருக்கும் குறைவிலா மதுரை (2)

  கள்ளழகர் எதிர்சேவை திக்விஜயம் தேரோட்டம்
  கன்னிமகள் திருமணம் இம்மையில் நன்மைகள்
  அள்ளித்தரும் ஆண்டவனின் விழாக்கள் என்றுபல
  ஆனந்தமாய் ஆண்டுதோறும் ஆட்சிசெய்யும் மதுரை
  துள்ளிக்கிட்டு வருகின்ற ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர்
  விளையாட்டு வீரத்தைப் பறைசாற்றும் மதுரை
  கிள்ளிக்கிட்டு வருகின்ற தூக்கத்தை விரட்டிவிட்டு
  இரவுதோறும் பருத்திப்பால் குடிக்கின்ற மதுரை (3)

  மதுரையின் மகளாக மீனாட்சித் தேன்கிள்ளை
  மாமன்னன் சொக்கநாதன் மதுரையின் மாப்பிள்ளை
  யுகங்களாக வாழ்ந்திடும் மாநகர நாகரிகம்
  உலகினிலே இல்லைஇது போன்றதொரு தேவரகம்
  முகங்களிலே மிச்சமுண்டு சங்கத்தமிழ் வாசம்
  முனைப்போடு மக்கள்தரும் முத்தமிழின் நேசம்
  மதுரையிலே வாழ்வதற்குத் தவம்செய்ய வேண்டும்
  மரணமில்லாப் பெருவாழ்வு வாழஅது தூண்டும் (4)

  - கவிஞர் மஹாரதி

  **

  தேசியச் சின்னம் மதுரை, தென்னிந்திய அதிசயம்தான்
  தென்நாட்டின் பொன்னேட்டில் என்னாலும் அழியாது மிளிரும்
  வாசிக்கவாசிக்க மதுரையின் பெருமைக்கு குறைவில்லை
  வரலாற்றில் பழம்பெருமை பேசி சிரிக்கிறது வாழ்கிறது
  யோசித்துப் பார்த்தால் மதுரை புராதன நகரம்தான்
  மீனாட்சி கோவிலும் அதைச்சுற்றி அழகழகாய் காட்சிதரும்
  மாசிவீதி, நான்கும் வெளிவீதி நான்கும் கோபுரவீதி நான்கும்
  சதுர வடிவான அழகிய வீதிகளாய் காட்சிதருவது அழகுதான்
  தென்மதுரை , இரண்டாம் மதுரை, இன்றிருக்கும் எழில் மதுரை
  சங்கம் வளர்த்த தங்கம்நிகர்த்த எங்கும் புகழ் மணக்கும் மும்மதுரை
  இன்றிருக்கும் எழில்மதுரை கண்ட நாளாம்!  இனிக்கிறது! குதூகலம்தான்!
  சங்க கால பெருமை சொல்லும் திருமாலிருஞ்சோலை அழகர் உள்ளார்
  வானவர்க்கு விருந்தளிக்கும் வைகையாறு வான்நிகர்த்த சிறப்பாகும்
  ஆற்றில் இறங்கும் அழகர் அழகை வர்ணிக்க வார்த்தை கிடையாது
  ஏனைய சிறப்புகள் எது இருந்தாலும் கோபுர மாட்சிதான் மதுரைக்கு
  கோடி பெருமை சேர்க்கிறது!கோபுரம்தான் கோலோச்சுகிறது மதுரையில்
  நாயக்கர் மஹால் ! சிறப்பு  நாநிலம் அறிந்த ஒன்று  ஈடுஎதுவும் இல்லை
  காணொளிகாட்சியாக காணலாம் உலகில் இதைஎங்கிருந்தாலும் காண்போம்!
  தேர் ஆழகுக்கு திருவாரூர், தெருவின்  ஆழகுக்கு எழில் மதுரை
  தமிழ் அழகுக்கு மதுரத்தமிழ்   ஆம்! மதுரையில் பேசும் அழகு தமிழ்!

  - கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்

  **

  மல்லிைகையா ? மீனாக்ஷியா
  இல்லை கோனார் மெஸ்
  கறி தோசையா ? முருகன் கடை இட்லியா, 
  அல்லங்காடி நாளங்காடி என
  அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை 
  தூங்கா நகரம்,
  ஞாலத்தில் சங்கம் வைத்து
  தமிழ் வளர்த்த சிங்கத் தமிழன்,
  வைகை நாகரீகம் சிந்து வெளியை
  எங்கே முந்தி விடுமோ என 
  அச்சத்தின் மிச்சத்தில் அரசியலார், 
  நாலடியும் ஈரடியும் தமிழன் தொன்மைக்கு
  கட்டியம் கூற இப்போது அதன் 
  உச்சத்தின் அச்சாரம் கீழடி, 
  ஒரு தொல் நாகரீகத்தின் வேர்களோடு 
  வீற்றிருக்கிறது தமிழ் கலாச்சாரம், 
  நாற்காலி போட்டு மதுரையில் 

  - செந்தில்குமார் சுப்பிரமணியன்

  **
  கோவிலில் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி
  தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், 
  அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், 
  அதைத் தாண்டி வெளியே மாசி வீதிகள்.
  அதையும் தாண்டி வெளி வீதிகள் 
  இது தான் மதுரை...

  மீனாட்சிக்கே முதல் அலங்காரம்
  முதல் தரிசனம்
  பெண்களை உயர்த்தி 
  வைத்த விதி...
  மீனாட்சியின் மாட்சி
  கடம்பவனத்தின் கன்னிகை
  மீன் போன்ற சுறுசுறுப்புடன்
  ஆட்சி புரியும் மீனாட்சிக்கே
  முதல் பூசை
  எமது இல்லங்களிலும்...
  மீனாட்சி ஆட்சி தான்..
  திருபாற்கடலை கடைகையில்
  நாகம் உமிழ்ந்த விஷத்தை 
  மதுரமாக்கியதை
  கதைக்கிறேன்
  கவிதையாக.

  - கீதா சங்கர்

  **

  சங்கம் வளர்த்த தமிழ் மதுரையில்தான் 
  மதுரை தமிழ் இன்றும் மதுரத் தமிழே !
  மாட வீதியும் சிகரம் தொடும் கோபுரங்களும் 
  கூடல்  நகருக்கு ஒரு தனி முகவரி !
  பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட 
  பரமேஸ்வரன்  பொற்பாதம் பட்ட இடம் 
  மதுரை !
  அண்ணல் காந்தி அவர் முழு ஆடை துறந்து 
  கதர் ஆடைக்கு மாறிய நகரும் மதுரையே !
  தேமதுரத் தமிழ் ஓசை அன்றும் இன்றும் 
  ஒலிக்கும்  நகரும் மதுரையே !
  மதுரையின் மதுரம் எல்லாம் மறந்து 
  மதுரை என்றாலே அடிதடி, வெட்டு குத்து ,
  அடாவடி அரசியல் , போக்கிரித்தனம் 
  என்று வரிந்து கட்டி  மதுரையைப் 
  படம் பிடித்துக் காட்டும் தமிழ் திரை 
  உலகத்துக்கு அப்படி என்ன வெறுப்பு 
  நம்ம  மதுரை மீது ? 

  - கந்தசாமி  நடராஜன் 

  **

  மதுரை மதுரத் தமிழுக்கு வாய்ப்பிளந்து 
  நிற்பார் புதியோர்கள் நமக்கு பதிலுரை 
  பேசிட முடியவில்லையே என்று வருந்தி 

  வாய் கோபம் ஏற பேசினால் போதும் 
  கைகள் கோபம் தீர பேசி தீர்ந்துவிடும் 
  மதுரை வீரன் பரம்பரையின் சிறப்பு

  வாள் கொண்டு பேசினால் போதும் 
  மைதானத்தில் தூள் பறந்திடும் 
  மதுரை வீரன் பரம்பரையின் சிறப்பு

  தேள் போல் கொட்டினாலே போதும் 
  வால் இருக்காது தேளுக்கு பாருங்கள் 
  மதுரை வீரன் பரம்பரையின் சிறப்பு

  தோள் கொடுக்கும் தோழமை சிக்கிட 
  பால் வார்க்கும் பழக்கம் உண்டாகும் 
  மதுரை வீரன் பரம்பரையின் சிறப்பு
  உதிரத்தில் மதுரத்தில் உதித்த மதுரை 

  - வே. சகாய மேரி, அரியலூர் திருக்கை

  **

  சங்கம் வைத்துத் தமிழை வளர்த்துத்
       தனித்த புகழைப் பெற்றதுவாம் !- காண
  எங்கும் கோயில் கலையழ காலே
       எவரும் ஈர்க்கும் பேரழகாம் !

  பொதுவாய் உலகே போற்றும் படியாய்ப்
       பொலியும் திங்கள் பெருவிழா !- நம்
  மதுரை நகரே குலுங்க வைக்கும்
       மலைக்கும் சித்திரைத் திருவிழா !

  ஆட்டம் பலவும் காணக் காண
       அகத்தில் மகிழ்ச்சி பெருக்காகும் !- திருவிழா
  கூட்டம் எங்கும் கூடக் காண
       கொள்ளை இன்பம் கூத்தாடும் !

  ஏறு தழுவும் வீரம் விளையும்
       இன்றும் காணும் வெளிப்பாடாம் !- பல
  சீறும் காளை அலங்கா நல்லூர்
       சிறப்பை உலகே அறிந்ததுவாம் !

  தூங்கும் உலகம் உலகில் என்றும்
       தூங்கா நகரம் மதுரையதாம் !- தொன்மை
  ஓங்கும் படியாய் உயர்ந்தே திகழும்
       ஒப்பில் நகரம் மதுரையதாம் !

  -து. ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி).

  **

  துருதுருவென இருக்கும் தூங்காநகரம்!
  தொன்மை வாய்ந்த பண்டைய நகரம்!
  பாண்டிய மன்னனின் எழுச்சி நகரம்!
  மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின்
  மைய நகரம்!
  மீனாட்சி அம்மன் எழுந்தருளும் புண்ணியஸ்தலம்!
  இயல் இசை நாடகத்தின்
  ஈடில்லா நகரம்!
  சிறப்பான கொண்டாட்டம்
  சித்திரை திருவிழாவாம்!
  வைகையிலே கால் நினைத்தால் வாழ்வாங்கு வாழ்வாராம்!
  பண்டைய காலத்தில் இது மதுராபுரி!
  இன்று நமது மதுரை மாநகரம்!
  மதுரை என்றாலே மல்லிகை
  மணக்கும் இது மக்களின்
  இயல்பு நிலை!!
  வீரத்தை விளக்கும் அலங்காநல்லூர்!
  தமிழ் மணக்கும் நம் மதுரை!
  தமிழ் வரலாற்றில் தடம் பதித்த
  மிகத்தொன்மையான மாநகரம்!!

  மு. செந்தில்குமார், ஓமன்

  **
  மதுரமென்ற  சொல்லின்பொருள் இனிதென்பார் -- இந்த
        மாநகர்க்கும்  இந்தபெயர்  பொருந்தியதே!
  இதுகண்ட  முதுமைதனை  எவரறிவார் --சுமார்
        ஈரிரண்டு  ஆயிரத்தைக்  கடந்ததென்பார்!
  முதுமொழியாம்  தமிழதனை வளர்த்தநகர் -- இது
        மூன்றாம்தமிழ்ச்  சங்கமதைக்  கண்டநகர்!
  பொதுவாக  இன்னதுவே  தமிழகத்தில் -- நல்ல
        பொலிவடைய  திட்டமிட்டு  அமைத்தநகர்!

  பதியென்றால்  கண்முன்னே  நிற்பதெலாம் -- இன்று
        பாண்டிநாட்டு  மதுரையதும்  காஞ்சியுமே!
  விதிவசத்தால் அழிந்ததுகாண்  தென்மதுரை -- பின்னர்
        வினயமுடன்  தோற்றுவித்தார்  இன்னகரை!
  புதியநகர்  அமைந்ததுபார்  சிறப்பாக  -- மலர்ந்த
        பொலிவுடையத்  தாமரையின் வடிவினிலே!
  மதிமிக்கத்  தமிழறிஞர்  ஒன்றுகூடி -- தமிழ்
        மன்றம்கண்டு  வளர்த்ததனை யாரறியார்?

  நான்மாடக்  கூடமெனும்  நலம்மிக்க  மதுரையிலே 
  தான்இறைவன்  விளையாடல்  தனைபுரிந்தான்! -- வான்புகழைக்  
  கண்டநகர்  இப்பரதக்  கண்டமதில்  இதுவொன்றே;
  அண்டமதில்  இதையரியார்  ஆர்?

  தென்மதுரைக்  கிணைதானோ  திருக்கண்ணன்  வடமதுரை,
  பொன்னளந்த  மதுரையெனும்  புகழுண்டே! -- என்னாளும்
  தூங்காநகர்  எனப்போற்ற  துடிப்புடனே  இயங்கிவரும்,
  பாங்குடைய  நகரென்றே பார்!

  - அழகூர். அருண். ஞானசேகரன்.

  **

  உணவிடும் விவசாயம் மரணப்பிடியினில்
  வாழ்வுயர்த்தும் தொழிற்சாலை புதைகுழிக்குள்,
  அடுப்பெரிக்க வழியில்லா அடுத்தவேளை,
  வேலை தேடிகிடைக்கா விரக்தியில்
  கிடைக்கா சமிக்கை ஒருகேடா,
  போங்கடா டேய்.... மன்னித்துவிடுங்கள்,
  பாமரத்தனமாக சிந்திக்கின்றது இதயம்,

  கணக்கிலடங்கா பணம்தோய்ந்த திட்டங்கள்,
  கணக்கிலடங்கும் மக்கள் அத்தியாவசியங்கள்,
  சமப்படுத்தினாளே சாத்தியம் ஆகிவிடாதா...
  வளங்கள் மிஞ்ச,தன்னிறைவு தானாகாதா..
  குறுகுறுக்கும் சிந்தனை கூரிட்டாலும்,
  சாதிமத பாசவலையில் சிக்குண்ட ,
  சிந்தனை சிறகுகள் உலாவருமோ...

  வேகமாய் கடந்திடுங்கள் இங்கிருந்து - நமக்கென
  வேலைகள் பலஉண்டு பூவுலகில்...
  வெறுமையாய் போன கனவுகளோடு,
  வெட்கம் கொள்கின்றது... மனிதமும்,மனிதனும்...
  பெருமைகொள்ள சாதித்ததென்ன? .. நாம்.

  - கிறிஸ்டாஅறிவு....

  **

  கடம்ப மரக்காடு நடுவே சுயம்புலிங்கம்
  பிரசன்னமாக வானத்து ||
  தேவரெல்லாம் தரிசிக்க சிவனார் தனது சடாமுடியில் இருந்து ||
  மதுரம் அள்ளித் தெளிக்க அம்மதுரமே காலப்போக்கில் ||
  மதுரையானது; முன்னோர்கள் சொன்ன சொல்லில் புலப்பட்டது ||
  கலைகள் அறுபத்து நான்கு போல் அறுபத்து நான்கு ||
  வகை சிவநடனம் நடத்திக் காட்டிய மண்ணே மதுரை ||
  வணிகர்கள் நடமாட்டம் ஆச்சரித்து மெய் சிலிர்க்க மன்னர் ||
  பார்வைக்கு வைத்திட்டார் ஆச்சரித்த மன்னர் பார்வையிட ||
  தேவாலயங்கள் அனைத்தையும் மாய
  மந்திரத்தால் கட்டியதோ ||
  வயிற்றை கழுவ கற்ற தொழில் திறமை
  வானை முட்டியதோ ||
  மதுரை என்றாலே மீனாட்சி அம்மன்
  நினைவுக்கு வருவாள் ||
  மதுரை என்றாலே மல்லிகை மலர்தான்
  மணக்கச் செய்கிறது ||
  மதுரை என்றாலே தமிழ்சங்கம் தான்
  நினைவில் நிற்கிறது ||
  மதுரை என்றாலே கண்ணகி கோபம்
  நினைவு வராமலில்லை ||
  மதுரை நாமம் சூட்டினார் அவர் தேவரோ
  மன்னரோ மக்களோ ||
  சாஷ்டாங்கமாக காலில் விழுந்து முத்தம்
  இட்டாலு மது போதாது ||

  - ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

  **

  சதுரம் சதுரமாக வடிவமைக்கப்பட்ட மதுரை
  சங்கம் காலம் முதல் இன்றுவரை அதே மதுரை !

  தூங்காத நகரம் பெயர் கொண்ட மதுரை
  தள்ளாத குளம் கொண்ட வற்றாத மதுரை !

  உலக அதிசயமான மீனாட்சி கோயில் உள்ள மதுரை
  உலகமே வியக்கும் கீழடிக்கு அருகே உள்ள மதுரை !

  சங்கம் வைத்து தமிழ் என்றும் வளர்க்கும் மதுரை
  சகோதரர்களாக அனைவரும் இணைந்து வாழும் மதுரை !

  சகல மதத்தவர்களும் வாழ்ந்து வரும் மதுரை
  சிற்பக்கலையை உலகிற்குப் பறைசாற்றும் மதுரை !

  பருத்திப்பால் செகர்தண்டா கிடைக்கும் மதுரை
  பஞ்சம் பிழைக்க வந்தோரை வாழ்விக்கும் மதுரை !

  கறிதோசை முட்டை புரோட்டா கிடைக்கும் மதுரை
  கனிவாகப் பேசிடும் மக்கள் வாழும் மதுரை !

  சைவம் அசைவம் அனைத்தும் கிடைக்கும் மதுரை
  சமண சமய குகைகள் உள்ள மதுரை !

  கழுதை கூட வெளியில் செல்ல விரும்பாத மதுரை
  கண்டவர்களைச் சுண்டி இழுக்கும் மதுரை !

  சுற்றுலாத் தலங்கள் பல உள்ள மதுரை
  சுந்தரத் தமிழ் எங்கும் கேட்கும் மதுரை !

  உலகின் முதல் மனிதன் தோன்றிய மதுரை
  உலகின் முதல் மொழி தமிழ் ஒலிக்கும் மதுரை !  

  - கவிஞர் இரா .இரவி

  **


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai