Enable Javscript for better performance
a poem about Man | யார் மனிதன் - வாசகர் கவிதை பகுதி 1- Dinamani

சுடச்சுட

  
  mannar

  யார் மனிதன் ?
   
  கல்வி கற்பவன் மட்டும்
  மனிதன் இல்லை!.
  கற்றபின் அதற்கு தக்க
  வாழ்பவன் மனிதன் !

  தாயிற்சிறந்த கோயிலில்லை என்பவன் மட்டும் மனிதன் இல்லை!
  தாயை வைத்துப் பேணுபவன்
  மனிதன்!

  ரசிதது ருசித்து உண்பவன்
  மட்டும் மனிதன் இல்லை !
  பசியென வருபவனை
  உண்ண வைப்பவன் மனிதன்!

  குறை இல்லாதவன் மட்டும்
  மனிதன் இல்லை!
  குறை காணாமல் சுற்றத்தை
  சேர்ப்பவன் மனிதன் !

  மனசாட்சிப்படி நடப்பவன் மட்டும் மனிதன் இல்லை!
  மனிதநேயத்தை  வளர்ப்பவன் மனிதன் !

  - ஜெயா வெங்கட், கோவை 45.

  **

  யார் மனிதன் - இந்த கேள்விக்கு
  இயற்கை பேரிடர் வரும்போதெல்லாம்
  விடை கிடைத்துவிடுகின்றது -
  இயற்கைதான் அடிக்கடி நினைவூட்டுகின்றது...
  நாம் மனிதர்கள் என்று -

  ஊரையே வெள்ளங்கள் சூழம்போதுதான்
  உதவும்  உள்ளங்களின் வழியே
  மனிதன் அவதரிக்கின்றான்....

  நான் கடவுள்கள் அவதரிக்க
  வேண்டுமென்று வேண்டியதைவிட -
  மனிதன் - மனிதனாகவே அவதரிக்க
  வேண்டுமென்று  வேண்டியதுதான் அதிகம்...

  மனிதன் - நகலெடுக்கும் இயந்திரத்தை
  கண்டுபிடித்தபோது -கடவுள் வியந்தாா்...
  மனிதன் - கடவுள் சிலைகளையே
  நகலெடுக்கும்போது மயக்கமிட்டே விழுந்துவிட்டாா்...

  எது போலி..? எது உண்மை...?
  என்ற குழப்பத்தில் இருப்பது
  கடவுள் சிலைகள் மட்டுமல்ல -
  கடவுள் படைத்த மனிதனும்தான்...!!!

  நீயெல்லாம் மனிசனா  என்று
  எவரும் கேள்வி கேட்காதவரை -
  எல்லோரும் மனிதர்களே - அதுவரை
  முகமூடி பத்திரம்....!!!!

  -கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

  **

  பேசுவதும் சிரிப்பதும் மனிதனென்றால்
  சாவிக் கொடுத்ததும்
  சிரிப்பதும் பேசுவதுமாக இருக்கிறது
  எந்திர பொம்மை...

  அடாவடித் தன்மையும்
  ஆளுமைத்திமிரும் கொண்டவர்கள்
  மனிதரென்றால்
  ஒடுங்கி கிடந்துழல்பவர்கள் யார்...

  சாதிமத பேதங்களை
  உபன்யாசம் செய்பவர்கள் மனிதரென்றால்
  நம்பியும்
  துயருறும் பாமரர்கள் யார்...

  ஒற்றை ஆளுமைக்காய்
  ஒற்றைக் குரலை ஓங்கி முழக்கி
  சிமாசனம் தயாரிப்பவர்கள்
  சுதேசி என்றால்
  யாதுமூரே யாவரும் கேளீர்
  என்றவர்கள் யார்...

  தாழ்ந்தவல்களும் இல்லை
  நிகர்த்தவர்களுமில்லை
  எனவாகில்
  சரிசமம் தானே சாத்தியம்...

  என்பதில்
  சமத்துவம் நிகழ்த்த
  கொடுமைகளை
  சம்ஹாரம் செய்பவன் தானே
  மனிதன்...

  - அமிர்தம்நிலா, நத்தமேடு.

  **

  அன்பெனும் ஒளி யேற்றி
  அகஇருள் களைபவன்.
  ஆனந்தமெனும் நகையணிந்து
  ஆரோக்கியமாய் வலம் வருபவன்.
  இல்லையென சொல்லாமல்
  இருப்பதை பகிர்பவன்.
  ஈன்ற தாயை தந்தையைப்
  பேணுபவன்.
  உண்மையால் நேர்மையால்
  உயர்ந்தவன்.
  ஊக்கத்தையே என்றும்
  ஊன்றுகோலாய் ஏந்துபவன்.
  எண்ணமதில் நல்வண்ணம்
  சேர்ப்பவன்.
  ஏமாற்றாமல்  ஏமாறாமல்
  இருப்பவன்
  ஐம்பூதங்களையும் வணங்கிக் காப்பவன்.
  ஒருவரையும் பொல்லாங்கு
  சொல்லாதவன்.
  ஓயாதுழைத்து நேர்வழியில் பொருள்சேர்ப்பவன்.
  ஒளடதமாக உணவை உட்கொள்பவன்.
  மேற்கூறிய 
  மேன்மையான குணங்களில்
  ஒன்றோ இரண்டோ
  இருந்தாலும் போதும்
  அவனை மனிதன் என்று சொல்ல !.

  - கே.ருக்மணி, கோவை.

  **

  முல்லைக்கொடி படர  தன்தேரை,
  நில்லென்று ஈந்தவனும் ஓர்  மனிதன !
  தோகை  மயிலின் குளிருக்கு இதமாய், 
  போர்வை தந்தவனும் ஓர்  மனிதன் !
  அடைக்கலம் வந்த புறாவை காக்கதன்  
  சதையும்உதிரமும்  கொடுத்தவனும் மனிதன்!
  வன்முறைவெறிக்கு தன்னுயிரை தந்தே,
  அகிம்சை வழிநின்ற  அண்ணலும்   மனிதன்!

  ஊருக்கு  உழைப்பதாய்  உறுதிதனை அளித்து
  ஊழலில் திளைப்போரும்  தலைவராகலாம்;
  கைநிறைய ஊதியம் களிப்புடன் வாங்கிட்டு
  கையூட்டு கேட்போரும்  அலுவலராகலாம் ;
  கல்வியை பணத்திற்கு வணிகம் செய்வோரும்   
  கலியுகக்  கடவுள் ,கல்வித்  தந்தை ஆகலாம்;
  எத்தனை பெயர்களை இவர்கள் பெற்றாலும்  ,
  அத்தனையும் " நல்ல மனிதர்" என்றாகுமா ?

  - முத்து இராசேந்திரன்

  **

  அரசியல் ஊழலில் திளைப்பவன் மனிதனா
  உரசி பாலியல் தீங்கிழைப்பவன் மனிதனா
  சிரசுமுதல் கால்வரை நேயமற்றவன் மனிதனா
  முரசுகொட்டும் தற்பெருமையாளன் மனிதனா

  பகுத்தறியும் அறிவு பெற்றவனே மனிதன்
  வகுத்துக் கொண்ட நல்வழி நடப்பவனவன்
  தகுதியை வளர்த்துக் கொள்ளும் தகையாளன்
  மிகுதியான அன்பை மனங்களில் விதைப்பவன்

  காழ்ப்புணர்ச்சி பொறாமை இல்லாத இனியன்
  சூழ் உலகில் சுதந்திர எண்ணங்களில் நீந்துபவன்
  தாழ்விலும் தளராத முயற்சியின் விதையவன்
  வாழ்வில் வளங்களைப் பகிர்ந்து வாழ்பவனவன்

  சூதுவாது கண்டால் சினந்து எழுந்திடுவானவன்
  ஊதுகுழலாய் இருப்போரை ஊதித் தள்ளிடுவான்
  சாதுவான சரித்திர மனிதர்களைப் புகழ்ந்திடுவான்
  தீதுமிகு மனிதர்களை இனங்காண வைப்பானவன்

  இல்லாதவர்க்கு இயன்றளவு  உதவிடும் நல்லவன்
  கல்லாதவரையும் கற்கச் செய்திடும் கண்ணவன்
  பொல்லாதவரையும் அன்பால் ஈர்க்கும் இனியவன்
  நில்லாது மனித சேவையாற்றும் பண்பாளனவன்.

  - கவிஞர்  ராம்க்ருஷ்

  **

  அறவழி வாழ்வதே அணியென ஆள்பவன் !
  பிறர்க்கென வாழ்வதே பேறெனப் பிணைந்தவன் !
  பிறர்பகை இலாதவன் பெருமையைப் பெயர்த்தவன் !
  திறனெலாம் திருவெலாம் சீரென அளிப்பவன் !
  உள்ளமே வெள்ளையாய் உவப்புடன் உழல்பவன் !
  கள்ளமில் வாழ்வெனக் காலமும் வாழ்பவன் !
  துள்ளியே பிறர்க்கெனத் தோன்றிடும் துணையவன் !
  வெள்ளமாய் நிலமெலாம் வியக்கவே படர்பவன் !
  எவ்வுயிர் ஆயினும் தம்முயிர் என்பவன் !
  செவ்விய சீர்வழி சிறப்புடன் செல்பவன் !
  அவ்வியம் அற்றவன் அன்புடை அகத்தினன் !
  இவ்வையம் வாழவே ஏற்றமாய் இருப்பவன் !
  தனக்கென எதையுமே சாற்றிடா தனித்தவன் !
  மனந்தனில் மமதையை மாசென மழிப்பவன் !
  இனமென உறவென இம்மியும் இலாதவன் !
  புனலென ஆனவன் பூவென மணப்பவன் !
  அழிவினை அழிப்பவன் அனைவரின் அன்பினன் !
  பழிகளை பகைப்பவன் பாசமாம் பற்றினன் !
  வழிவழி வாய்மையே வகையென வழிபவன் !
  விழிவிழி செயலென விதையென விதைப்பவன் !
  மண்ணினில் சிறப்புடன் மலர்ந்தவன் தான்மனிதன் !
  விண்ணதில் சிறப்புடன் விளைமழை தான்மனிதன் !
  கண்ணென சிறப்புடன் காண்பவன் தான்மனிதன் !
  எண்ணமே சிறப்புடன் இலங்குவன் தான்மனிதன் !

  -ஆர்க்காடு. ஆதவன்

  **

  அரியதாம்  இந்த மானிட பிறப்பில்
  ஒற்றை கயிற்று கருவறை தொட்டிலில்
  ஈரைந்து திங்கள் அமைதியாய் கழித்து
  பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் பிரிந்தோம்;
  என்றிருப்பவனோ மனிதன் ? அல்ல அல்லவே !
  ஆசைகள் உயிர்க்கொல்லி பேராசையாக
  பணமும் பகட்டும் போட்ட தூண்டிலில்
  நாமும் மாட்டி கொள்ள
  நிலைதடுமாறி நாம் வீழ்வோமே !
  ‘தான் ‘ , ’ தனது’  தன்னிலைகள் தகர்த்தெறிய
  நம்மில் மனிதம் இடம் கொள்ள ;
  தன்னலம் பேணாது இயலாதவர்க்கு உதவ
  மனிதநேயம்  நம்முள் கருக் கொள்ள;
  கற்ற கல்வியை பிறருக்கு பயிற்றுவித்து
  அறியாமை விலகிட வழி வகுத்து
  புதியன படைக்க விதி செய்ய
  மனிதன் அங்கு பிறக்கிறான் ! அவனே மனிதன் !

  - தனலட்சுமி பரமசிவம்

  **
  மனிதன் கையில் இருக்கும் கை பேசி 
  தனி ஒரு பலமாக ஆட்டி வைக்கிறது 
  மனிதனை அவன் என்ன செய்ய வேண்டும் 
  ஒரு நாளில் என்று ! 
  மனிதனுக்கு அடங்க வேண்டிய கை 
  பேசியும்  வலை நுட்பமும் இப்போது 
  விரித்து விட்டது மாய வலை மனிதனுக்கு !
  வலைக்குள் சிக்கிய மனிதன் முழிக்கிறான் 
  வெளியே வரும் வழி தெரியாமல் !
  ஆறறிவு படைத்த மனிதன்  நான் 
  மனிதன் நான் மனிதன் என்கிறான் !
  ஆறறிவைப் பின்னுக்குத் தள்ளிய 
  வலை நுட்பம் கேட்கிறது இன்று 
  யார் மனிதன்  யார் மனிதன் என்று !

  - கந்தசாமி  நடராஜன் 

  **
  எனக்குள் இருக்கும்
  "நானு"க்கும்
  "நான்"
  குடியிருக்கும் எனக்கும்
  எந்தப் பகையும் இல்லை...

  "நான்"
  திமிர்த்து நிமிரும் போது
  சங்கடம் கொள்ளும் எனக்கு
  பல்லுடைந்தாலும்
  ஆறுதல் தருவதில்லை
  "நான்"...

  அறிவும் அறியாமையும்
  கைக்கோர்த்து
  உடலுலுயிரெனத் தொடர்கிறது
  எது நிகழ்ந்தாலும்
  "நான்"இருக்கும் "எனக்கும்"
  எனக்குள் இருக்கும்
  நானுக்கும்...

  இங்கே
  நானென்பது தலை கனத்திமிர்,
  நானென்பது நம்பிக்கைச் சிகரம்
  இதில்
  எனக்கும் நானுக்கும் பெருமைச் சேர்ப்பது
  எதுவென அறியத்தெரியவில்லை
  மனிதத்தைப் புறக்கணிக்கும்
  எனக்கும் நானுக்கும்...!?

  ~கா.அமீர்ஜான் /திருநின்றவூர்

  **

  புண்பட்ட மனதைப் பொன்னாக ஆக்கும்
  பொன்மனச் செம்மலவன்;
  பண்பட்ட மனதோடு உதவிகள் செய்யும்
  பண்ணாக ஆனவன்;
  பஞ்மா பாதங்கள் இல்லாமல்
  பஞ்சைப் போனறவன்;
  பாரதி காட்டிய அஞ்சாமை கொண்டு
  பாரதப் பண்பாட்டு பகலவன்;
  பாங்கனாய் இருந்து பங்கயமாய் தாங்கும்
  பரிபூரண ஆனவன்;
  பாசியைப் போல் அனைவரும் அணியும்
  பண்பின் கலைக்கூடமவன்;
  நல்லதைக் காட்டும் அன்னம் போல்
  நம்பிக்கை ஒளியவன்;
  நயவஞ்சகமிலா நாணயம் கொண்டு
  நரியினைத் துரத்தும் நாயகனவன்;
  நிலவினைப் போல் குளுமையும் பரிதியைப் போல்
  வெட்பமும் கொண்டவன்;
  கெட்டோரின் கேட்டை ஒட்ட விரட்டும்
  கெட்டிக்கார வீரனவன்.....;

  - சுழிகை ப.வீரக்குமார்.

  **

  மனிதக் கற்பைப் போற்றி
  மகேசனின் தொண்டனாய்;
  மலர் போல் நெஞ்சங் கொண்டு;
  மரகதப் பரப்பாய் முகங்கொண்டு;
  மன்றம் போற்றும் குணம் கொண்டு;
  மதியாதோரையும் மதித்துக்கொண்டு;
  மங்கலச் சொற்களே பேச்சாக்கி
  மணிமுடி இல்லா கோவாகி;
  புனிதம் மனிதம் என்று நாளும்
  புதுமை படைக்கும் மெய்ஞானி
  புலம்பலைத் துடைத்து புத்தகம் கொடுக்கும்;
  அற நூல்களின் தாயகம்
  அவனே மனிதன் என்பவனாம்......

  - முகில் வீர உமேஷ், திருச்சுழி.

  **

  இந்தியன் இலங்கையன் இங்கிலாந்துக் காரனென்று
  பந்தான  உலகத்தின்   பகுதிகளில்    வாழ்வோரை 
  பெயரிட்டு அழைத்திடுவர்!  பெருமைகளைப் பேசிடுவர்!
  ஆனாலும் மனிதர்களை அரிதாகவே கண்டிடலாம்!
  புத்தன் ஏசு காந்தி பிறந்து பொறுமை தன்னைப்
  புகன்றே வாழ்ந்தார்! இதுதான் மனிதம் என்றே
  அவரும் உலகைச் சிறப்பாய் உணரச் செய்தார்!
  தன்னலமின்றி அடுத்தவர் நலத்தில் அக்கறை கொண்டு
  உலகை   அவர்தாம்    உய்யச்    செய்தார்!
  சிரிக்கத் தெரிந்த அனைவரும் மனிதரென்று
  ஒப்புக்  கொண்டால்  உண்மை  நகைக்கும்!
  அடுத்தவன் உயர்வில் ஆனந்தம் கொண்டு
  அதற்கென தன்னால் இயன்றதைச் செய்திடும்
  நபரைப் பார்த்தால் நாமும் வணங்கலாம்!
  உண்மையில் மனிதனென்று உயர்வாய்ப் போற்றலாம்!
  வாழும் நாளெல்லாம் மற்றவர் நலனைச்
  சிறப்பாய்ப் பேண சிறு உதவிகளையும்
  செய்திடுவோரே இங்கு சிறந்த மனிதர்!
  பூமிப் பந்தில் புரியாத இடந்தனில்
  தவறு நடந்தால் தன்னிதயம் சுருங்க
  எவன்தான் இங்கு ஏகமாய் வருந்தி
  நியாயம் தேடுகிறானோ அவனே மனிதன்!

  -ரெ.ஆத்மநாதன், காட்டிகன்,சுவிட்சர்லாந்து

  **

  நேரத்திற்கு நேரம்  மாற்றி
  பேசுபவன் மனிதனா?...
  விலங்குகள்  போன்று
  குணம் கொணடவன் மனிதனா?..
  கைக் குலுக்கிபோதே,
  மறு கையால் தாக்க
  நினைப்பவன் மனிதனா?..
  வீழ்த்தபட்ட  பின்னும் எழாமல்,
  படுத்து கிடப்பவன் மனிதனா?..
  தவறை காந்தி நோட்டால்
  சரிசெய்பவன் மனிதனா?..
  பொய்யை உரக்கச் சொல்லி
  உண்மை என
  உரைப்பவன் மனிதனா?.
  தனக்கு மிஞ்சிய
  அனைத்தும் பிறருக்காக
  உலகில் படைக்கப்  பட்டவை
  என்று, எண்ணுபவன்
  எவனோ அவனே மனிதன்..
   
  - கவிஞர். மைக்கேல் மனோஜ், மதுரை

  **
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai