யார் மனிதன் - வாசகர் கவிதை பகுதி 2

மின்னலைச்  சுமக்கும்   மின்னலே   வானமா? மின்னிடும்  விண்மீன்  ஒளிர்ந்திடும் ஞாயிறா?
man
man


யார் மனிதன்?

பாடுபட்டுப் பணத்தைத் தேடி
அடுத்தவருக்குக் கேடு நினையாது
மாற்றான் மனை மனம் நினையாது
மறந்தும் பொய்யிலா மெய்யராய்
தனக்கு மிஞ்சியதைத் தானம் செய்து
தன்னுற்றார் உறவினருடன் கூடிவாழ்ந்து
நன்றி மறவாச் செம்மை நெறியாளனாய்
அன்பின் வழியது வாழ்வது வாழ்ந்து
தன்குடி கெடுகுடி என்றும் கைதொடாது
மண்பெண்(ஆண்) ஆசைதனை அறவே காணாது
மண்ணில் தேய்பிறை கண்டதால் மாநிலத்தீர்
ஐயம் கொண்டீர்! மனிதன் யாரென? வேண்டாம்
ஐயம்! பரந்து விரிந்த உலகில் பல்லுயிர் வாழ
நீதிநெறிபடி நிலைகொளச் சுயநலமிலாது வாழ்ந்து
மனுநீதிப்படி மண்ணுயிருக்கெல்லாம் நலம்பேணி
மண்ணில் நல்லுள்ளம் பல பூமியில் வாழ்வதால்
மண்ணடர்ந்த பூமி நிதம் சுழல்கிறது அன்றோ?
கலியுகம் எனிலும் மனிதநேயம் கொள் மனிதர்
கலங்காமலிருப்பர்! கலக்கம் வேண்டா! மானிடரே!!

- மீனா தேவராஜன், சிங்கை

**
 
நன்றியெனும் ஒருசொல்லை மறந்த வர்க்கு
  நானிலத்தில் வாழ்வில்லை அவர் மனிதரில்லை
இன்றிந்தப் பூவுலகில் அன்பின் ஊற்றாய்
  ஈன்றெடுத்த தாய் தந்தை இருவருக்கும்
என்றென்றும் நன்றியுடன் இருத்தல் வேண்tடும்
  ஏற்றமுடன் அவர் வாழச் செய்தல் வேண்டும்
மாற்றமிதில் காண்போமானல் மகனாய் பிறந்தவன்
  மனிதனில்லை! பெற்றோரை மதிப்பவரே மனிதர்!
பிறர் உழைப்பை தனதாக்கி வாழும் வாழ்க்கை
  தீவட்டி வாழ்க்கை வாழ்வோர் அவர் மனிதரில்லை
பிறர் வாழத் தானுழைத்துத் தேயும் வாழ்க்கை
  பெருந்தன்மை பெற்றிலங்கும்மெழுகின் வாழ்க்கை
பிறர்போற்ற புகழோடு வாழும் வாழ்க்கை 
  பெருமைமிகு கற்பூர வாழ்க்கை வாழ்வோன் மனிதனாவான்!

- கவிஞர்  .சூடாமணி .ஜி  

**

எதுயெதுவோ போலயிங்கே இருப்பவனா மனிதன் ?
  இருப்பதுவே குறியாக இரப்பவனா மனிதன் ?
மதுமாது தனிலாழ்ந்தே மாய்பவனா மனிதன் ?
  மண்ணுக்கும் பொன்னுக்கும் மலிந்தவனா மனிதன் ?
பொதுவாக வாழாமல் புதைபவனா மனிதன் ?
  பூத்தாலும் மணக்காதப் போக்கினனா மனிதன் ?
இதுதானென் வாழ்வெனவே இலங்குபவன் மனிதன் !
  எல்லார்க்கும் இனியவனாய் இருப்பவனே மனிதன் !

அடுத்தவரைக் கெடுத்திடவே அலைபவனா மனிதன் ?
  அடுக்கடுக்காய்ப் பணம்சேர்க்கும் அறிவிலியா மனிதன் ?
கொடுக்கான கொடுங்கொடுக்குக் கொடியவனா மனிதன் ?
  குரங்காக மரந்தாவிக் குதிப்பவனா மனிதன் ?
கெடுப்பதுவே வாழ்வெனவாழ் கீழ்மகனா மனிதன் ?
  கேடுகளில் கிளைக்கின்ற கெட்டவனா மனிதன் ?
அடுத்தவரை வாழ்வித்தே அகங்களிப்போன் மனிதன் !
  ஆனவரை பிறர்க்குதவும் அரியவனே மனிதன் !

பொருத்தமிலாப் போக்கினிலே போபவனா மனிதன் ?
  பொல்லாதான் என்றிகழப் பொலிபவனா மனிதன் ?
இருக்குவரை இனியவனாய் இருப்பவனே மனிதன் !
  இல்பொருளை ஈந்துவக்கும் ஏற்றவனே மனிதன் !
அருங்கனியாய் ஆனநல்ல அன்பகத்தான் மனிதன் !
  அறிவுடனும் பரிவுடனும் ஆள்பவனே மனிதன் !
இருந்தாலும் இறந்தாலும் இருப்பவனே மனிதன் !
  இனிதினிய செயலாலே என்றுமுளான் மனிதன் !

-து.ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி)

**

கழுத்தை நீட்டினவள் கூலிக்கு
மாரடிக்கும் மனைவி யில்லை
சொடுக்கு போட அவன் யார்
மனிதனா அவன் யார் மனிதன்

சீர்வரிசை கொடுத்தால் தான்
மனைவி இல்லை யென்றால்
இம்சை படுத்த அவன் யார்
மனிதனா அவன் யார் மனிதன்

முந்தானை விரித்தால் தான்
மனைவி இல்லை யென்றால்
இல்லை பொருளோ யவன்
மனிதனோ கூறு யார் மனிதன்

பிள்ளைகள் பெற்றால் தான்
மனைவி இல்லை யென்றால்
இல்லை பொருளோ யவன்
மனிதனோ கூறு யார் மனிதன்

- வே. சகாய மேரி, அரியலூர் திருக்கை

**

சிந்திக்கும் திறன் படைத்து
குற்றுயிராய் கிடந்தாலும்
குன்றிமணி போல் மின்னிய இயற்பியலாளன்
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் போல்
மிளிர்பவன் மா மனிதன்

இறைவன் கொடுத்த குறையென் றொன்றை
நிறையென் றெண்ணி நிவர்த்திப்பவன்
வெற்றியையும் தோல்வியையும்
தலையில் வைத்து தத்தளிக்காது
திறனில் தன் கவனம் செலுத்துபவன் 

வானுயர்ந்த வாழ்வொன்று வரமாய் வந்தபோதும் தனக்கென்று வாழாது பிறெர்க்கென்று வாழ்ந்த
விஞ்ஞானி ஜெனாதிபதி அப்துல்கலாம்போல்
குன்றா தெண்ணமும் கூரிய சிந்தையும் கொண்டு
தூர நோக்கு பார்வையின் விம்பமானவன் மனிதன்!

- யோகராணி கணேசன்

**

மனிதன் யாரெனக்
கண்டறியும் கருவியொன்று இல்லையெனக்
கவலையுறுகிறான் கடவுளும்.
சிறப்பு தரிசனத்தில்
சிலை அருகில் வருபர்களை
உற்றுப் பார்த்த அவன்
உதட்டைப் பிதுக்கவும் அஞ்சுகிறான்.
கடவுளே தானெனச் சொல்லி
உண்டியலை நிரப்பிக்கொள்கிறவர்களை
ஓரமாக நின்று பார்த்து
ஒருமுறை தன்னைச் சோதித்துக்கொள்கிறான்.
அனைத்துக்கும் ஆசைப்படு என்ற
அருளுரைக்குப்
பொருளுரை எழுதுவோரின்
பூசை அறைக்குள்ளிருந்து தப்பியோடத் துடிக்கிறான்.
கீழிறங்கி வந்து தேடி அலைந்தபின்
ஒப்புக்கொள்கிறான்
“மனிதனை
இன்னும் நான் படைக்கவில்லை” என்று!

-கோ. மன்றவாணன்

**

பத்து தலை கொண்டாலும் பத்து வாய் உண்டாலும் வயிறு
ஒன்று தான்; இதை உணர்ந்து வாழத் தெரிந்தவன் மனிதனா
பத்தாது ஊரை சுருட்டுவோன் மனிதனா
சொல் யார் மனிதன்
ஐந்து தலை கொண்டாலும் ஐந்து வாய் உண்டாலும் ஐந்து
படம் விரித்து பயமுறத்தி காட்டினாலும் பாம்புக்கும் ஒரேவயிறு
பார்த்து பயந்தவன் ஓடுவான் அஞ்சாது
எதிர்கொள்ள பயந்து
பாம்போடிவிடும்; இந்த சூட்சமத்தைத் அறிந்தவன் மனிதனா
பயந்தாங்கொள்ளியா யார் மனிதன்
யோசிக்க தெரியவரும்
ஒரே தலை கொண்டாலும் ஒரே வாய் உண்டாலும் வயிறு
ஒன்றே என்றே நினைப்பவன் மிஞ்சி யதை கெஞ்சும் பேருக்கு
உண்ணவைத்து கண்ணால் பார்த்து மகிழ்ச்சி கொள்வதிலும்
தனி ஆனந்தம் அலைபாயும் நெஞ்சிலே அவன் மனிதனா
யார் மனிதன் படம் பிடித்து காட்டும்
பார்த்தாலே தெரியும்
திக்கற்றவ னென்றொருவ னில்லை
வக்கற்றவ னென்று
யாரும் பிறப்பெடுப் பதில்லை உன்னை
பணிவோரை ப்பணி
துணிவோரிடத்து த்துணி உனைமிஞ்ச
இங்கே யார் மனிதன்

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

**
பொன்நகைகள் உடலினிலே பூட்டிக் கொண்டு
பொலிவோடு திகழ்பவனா ; கண்கள் கூச
மின்னுகின்ற உடைகளினை அணிந்து கொண்டு
மிடுக்காகத் திரிபவனா ; மேனி தன்னில்
நன்முறையில் பயிற்சிசெய்து வலிமை சேர்த்து
நல்லுறுதி கொண்டவனா ; ஒப்ப னையில்
முன்முகத்தை பின்தலையை சீர்மை செய்து
முத்தாக ஒளிர்பவனா மனிதன் என்போன் !
புன்னகையை முகம்காட்டி நெஞ்சுக் குள்ளே
புதைகுழியின் வஞ்சகத்தை மறைத்துக் கொண்டும்
அன்புதனில் அரவணைத்து நெஞ்சிற் குள்ளே
ஆர்க்கின்ற பகைமையினை வளர்த்துக் கொண்டும்
இன்பத்தேன் மொழிசிந்தி நெஞ்சிற் குள்ளே
இருளாக்கும் சிந்தனையை நிறைத்துக் கொண்டும்
நன்றாக மனிதனென்னும் உருவம் தன்னில்
நடமாடி வருபவனா மனிதன் என்போன் !
உழைக்காமல் உழைப்பவனின் பொருள்க வர்ந்தும்
ஊர்தன்னை ஏமாற்றி உடல்வ ளர்த்தும்
பிழைகளையே செய்துபிறர் முதுகி லேறிப்
பிறர்தூற்ற பிழைப்பவனோ மனித னன்று !
அழைக்காமல் உதவிசெய்தும் அன்பு காட்டி
அடுத்தவர்தம் துயர்களைந்தும் நேர்மை யோடே
உழைத்துபிறர் தவறுகளைத் தட்டிக் கேட்டும்
உண்மையுடன் நடப்பவனே மனிதன் என்போன் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

யார்மனிதன்   என்று கேட்டால்
       எவருமிங்கே  இல்லைதானே!
ஊர்ஊராய்த்  தேடினாலும்
       யார்மனிதன்  என்றறிந்து
பேர்கூற  லாகுமோதான்;
       பாரிலெங்கும்   தேடிடினும்?
கூர்மையுள்ள   கத்திப்போல்
       குத்தியேதான்   கிழிப்பருண்டு!

தன்னலத்தைத்    துறந்துவிட்டு
      தரணிக்காய்   தன்னையீந்து
நன்மைகளே    வையமெங்கும்
      நடவுசெய்வோர்   மனிதராவார்;
புன்மைமனம்  இல்லாமல்
      புவிதன்னைப்   புதுக்குகிற
பொன்மனத்து   நல்லோரே
       புவித்தாயின்    மனிதராவார்!

மழையாக   அறம்பொழிவோர்,
       மலையருவி   குணமுடையோர்,
விழைந்துநாளும்    கனிகொடுக்கும்
       மரம்போன்ற    வள்ளல்கள்,
உழைப்பதுவே   தொழிலாக
       உழைப்பாள   பெருமக்கள்,
தழைக்குமன்பில்    திளைப்போர்கள்
      தரணியிலே   மனிராவர்!

- கவிக்கடல், கவிதைக்கோமான், பெங்களூர்.

**

தேர்தலில் வெல்ல,
வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்ல
'த்'தெரிந்திருந்த போதிலும்

"நம்மால் என்ன நடைமுறைப்படுத்தமுடியுமோ, 
அதைத்தான் மக்களிடம் சொல்ல வேண்டும்"
என்றானே ஒருவன்,
அவன் 'பெருந்தலைவன்',
இல்லை இல்லை,
அவன் தான் மனிதன்.

- ம.சபரிநாத்,சேலம்

**
பண்பாடும் கலாச்சரமும் ஓன்று போல்தோன்றும்
     நாணயத்தின் இருபக்கங்கள்
பண்பாடு இருக்கு கலாசாரத்தைக் காணோம்!
     அது இருந்தால் இது இல்லை

பண்பாடு ,கலாச்சாரம் மனிதம் சார்ந்ததவை!
     இவை வெளிப்படுபவன் மனிதன்
பண்பாடு என்ற வார்த்தையை கண்டு பிடித்தவர் யார்?
      தமிழறிஞர் ரசிகமணி டிகேசி யாவார்!

பண்பாட்டிற்கு இணையாக வருவது நாகரீகம்!
     இரண்டும் ஒத்துபோகவேண்டியதில்லை
நன்றாக உடை அணிகிறார்கள் நா வைத் திறந்தால்
     அசிங்க அசிங்கமாக பேசுவார்

ஆனால் சாதாரணமாக இருப்பார்கள்,வார்த்தை
     தேனாயிருக்கும், பாடம்கற்கலாம் நாம்
நாகரீகத்தையும் பன்பாட்டையும் சுமந்து நடப்பவர்கள்தான்
      சமுதாய முன்னோடிகள்

இவர்கள்தான் தலைவர் கவிஞர், அறிஞர் ,கலைஞர், செம்மல்
       எழுத்தாளர் என்றழைக்கப்படுவார்
இவர்களைப்போல்,நாகரீகம்,பண்பாடு மிகுந்து
       வாழ்பவர்கள் கலாச்சாரம் காக்கிறார்கள்  

அவர்கள்தான்!உண்மையான மனிதர்கள்,அவர்களிலும்,
         சிலர் தெருச்சண்டைபோடுவோர் உளர்  
மனிதம் காத்துநாகரீக உடையில்லாடினும்
         பண்பாட்டோடு நடந்தால்அவர்களே,மனிதர்! 

- கவிஞர்  அரங்க.கோவிந்தராஜன்

**

அங்கேயும் தேடினேன் இங்கேயும் தேடினேன்
எங்கேதான் நான்காணும் மனிதன் அவனொன்றை
இழந்தவன் கொன்றவன் மறந்தவன் விட்டவன் 
ஒழித்தவன் நொந்தவன் கொள்பவன் தவிர்ப்பவன்
கண்டேன் பண்பான மனிதன் - அவன்
தானென்னும் அகந்தையை மனத்திலே இழந்தவன்
கொல்லும் சினந்தன்னை நெஞ்சிலே கொன்றவன்
எப்போதும் பொய்யினைக் கனவிலும் மறந்தவன்
தீயினும் வேதனைத் தீமையை விட்டவன்
சிறுமையின் செயல்நாணி ஒருபழி ஒழித்தவன்
பிறர்நோவில் கண்ணீரால் தன்னையே நொந்தவன்
பிறர்க்கீந்து பெரும்பேறு எப்போதும் கொள்பவன்
தன்குற்றம் தானெண்ணி பிறர்குற்றம் மறைத்தவன்

- கு. இரா, வடக்கு அயர்லாந்து.

**

சிந்திக்கும் திறன் படைத்து
குற்றுயிராய் கிடந்தாலும்
குன்றிமணி போல் மின்னிய இயற்பியலாளன்
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் போல்
மிளிர்பவன் மா மனிதன்
இறைவன் கொடுத்த குறையென் றொன்றை
நிறையென் றெண்ணி நிவர்த்திப்பவன்
வெற்றியையும் தோல்வியையும்
தலையில் வைத்து தத்தளிக்காது
திறனில் தன் கவனம் செலுத்துபவன்
வானுயர்ந்த வாழ்வொன்று வரமாய் வந்தபோதும்
தனக்கென்று வாழாது பிறெர்க்கென்று வாழ்ந்த
விஞ்ஞானி ஜெனாதிபதி அப்துல்கலாம்போல்
குன்றா தெண்ணமும் கூரிய சிந்தையும் கொண்டு
தூர நோக்கு பார்வையின் விம்பமானவன் மனிதன்!

- யோகராணி கணேசன்

**

தன்மானம்  காப்பவனே தான்மனிதன் என்றாவான்
அன்னவனைப் போற்றிடுவார் அனைவருமே! -- என்னவொரு 
 நிலைதனிலும்  தாழாமை,  நேர்மைதனில்  வழுவாமை,
குலையாத  மாண்பவனின் குணம்!

கல்விதனில்  தேர்ந்தவனாய்,  கருணைமனம்  கொண்டவனாய்,
பல்விதத்தில்  உதவிடுவான்  பாமரர்க்கு! -- எல்லோர்க்கும்
நல்லவனாய்  வாழ்பவனே  நாடுபோற்றும்  நன்மனிதன்;
இல்லையிணை  எனத்தக்கான்  இவன் !

மனிதனே  என்றாக்கும்  மகத்தான  நெறிமுறைகள்
புனிதமிகு  செயல்தன்னைப்  புரிவதுவே!-- கனிவுமிகு
உளந்தன்னைக்  கொண்டென்றும்  ஊருக்கு  உழைக்கின்றக்
களங்கமிலான்  மனிதனெனக்  காண்!

சொல்லும் செயலதும் ஒன்றென வாழ்வான்
     சுகங்களை மறந்திட்டு எளிமையைக் காப்பான்!
வெல்லும் வரைதனில் தூக்கத்தை கொள்ளான்
      விவேகந்  தனையே  துணையென  ஏற்பான்!
செல்வம் தனைகொண்டும் மமதையைக் கொள்ளான்
      சேர்த்ததைக் கொண்டேழை துயர்தனைக் களைவான்!
எல்லாம் தெரிந்திட்டும் செறுக்கினைக் கொள்ளான்,
      இவைகளைக் கொண்டவன் மனிதனென் றாவான்!

- அழகூர்.  அருண்.  ஞானசேகரன்.
      
**
தன்னை அறிந்தவன் மனிதன்!
தன்னிலை தெரிந்தவன்
மனிதன்!
  
சொன்ன சொல் மாறாதவன்!
சொன்னபடி நடப்பவன்!
வளர்ந்து வந்த வழிகளை!
திரும்பிப்பார்ப்பவன்! பிறர் வளர்ச்சியை பெற
வேண்டும் என்று:
விரும்பிப்பார்ப்பவன்!

சமத்துவம் சகோதரத்துவம்
மிக்கவன்!
 தவறியும் தவறுகள் செய்யாதவன்!

பிறர் வாழ! தன்னைக் கெடுத்துக் கொள்பவன்!
 பிறர் நலன் கருதி
தன்னையே கொடுத்து வாழ்பவன்!

சேவையை சேவையாக
செய்கின்ற போது:
வியர்வை துளிகளுக்கு
கட்டணம் வாங்காதவன்!

பொதுநலமே! தன் சுயநலமாக வாழ்பவன்!
போதும்! போதும்!
என்று சொல்லும் அளவுக்கு உதவுபவன்!

சேர்ந்து வாழ நினைப்பவன்!
பிறர் உழைப்பில்
வாழ விரும்பாதவன்!

பணத்தை விட
நல்ல மனத்தை விரும்புபவன்!

யார் மனிதன்?
என்று யார் கேட்டாலும்;
எதற்காகவும் எதுவந்தாலும் எதிர்கொண்டு
யாரையும் கெடுக்காதவனே!
மனிதன்!
அவன் தான் புனிதனே!

- கவிச்சித்தர் களக்காடுவ.மாரிசுப்பிரமணியன்

**

மின்னலைச்  சுமக்கும்   மின்னலே   வானமா?
மின்னிடும்  விண்மீன்  ஒளிர்ந்திடும்  ஞாயிறா?
வானில்   உலவிடும்   நிலவே   வானமா?
வானில்  இருப்பதால்   முகிலே  வானமா? 
மலையில்  ஊறும்  சுனைநீர்  அருவியா?
வலையில்  இருப்பதால்  சிலந்தியும்  மீனா?
வயலில்  விளைவதால்   களையும்   பயிரா?
மயக்கிடும்   என்பதால்   மங்கையும்   மதுவா?
செல்வ   ரெல்லாம்  செல்வ  ராவர்?
செல்வ   மில்லார்   ஏழை   யாவர்?
ஊன   முற்றோர்  ஊனமுற்   றோரா?
ஈன    ரெல்லாம்   நற்பண்   பாளரா?
இவைகள்   போன்று   எதுவாய்   இருப்பினும்
அவைகள்   அதுவாய்  ஆவ   தில்லை;
இதுபோல்  மனிதராய்ப்  பிறந்ததால்   மனிதராய்
பொதுவாய்   எவரும்   உரைத்திட  ஆமோ?
மனிதராய்த்  தோன்றி  விலங்காய் உயிர்ப்பவர்
மனித   ராகார்;  மனிதராய்ப்   பிறந்து
மகானாய்   வாழும்   நற்பண்   பாளரே
உகந்த  மனிதர்  என்றுணர்    வோமே!

- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு

**

கற்ற வழி அரசியல் வள்ளுவத்தை
கடைபிடித்து வாழ்வார் யார்
என்றே குயிலொன்று
பாரதி பாடலொன்றை
இசைத்தபடி பயன்கருதா
மரங்களுடன் காத்திருக்க
பணம் பதவி வேட்டையில்
மக்கள் யாவரும்
மாக்களாகி நிற்க
விதிர்விதித்த குயில்
(கருப்பு) காந்தி சிலையின்
தலையில் பன்னீர்ரோஜா
கிரீடத்தை சூட்டி
இவரோ மனிதன்
என்று பாடியது!

-நிலா

**

வாழ்க்கையின் தேர்ச்சக்கரங்களை
பொறாமைத்துரு அரித்துக்கொண்டிருந்தது !!
சற்றே தூக்கலாய் உப்பு – பேராசையாய்,
வாழ்க்கை உணவு கரித்துக்கொண்டிருந்தது !!
கையளவு நிலக்கடலை –
ருசித்துகொண்டிருந்த இந்த உயிரை
பாழ்படுத்த ஒரு சொத்தை போதும்- கோபமாய், 
அது சுற்றத்தை மரித்துக்கொண்டிருந்தது!!
சகாக்களின் சந்தோஷப்பயணம்..
அந்தப்பெட்ரோலில் தீச்செயலாய் 
சிலர் கலந்த மண்ணெண்ணெய்,
பலர் மகிழ்ச்சியை பறித்துக்கொண்டிருந்தது !!
மனங்களில் இருந்து வெண்மையை
இந்த கரிக்கலவைகள் பிரித்துக்கொண்டிருந்தன !!
பூமிக்கு உள்ளே,  இந்தக்கரித்துண்டங்களை
எரிய விட்டுப்பார் – வைரம் !!
அதே - பூமிக்கு வெளியே – மனிதன் !

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி 

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com