சுடச்சுட

  
  rains1

  மழை மேகம்


  அகிலம் தழைத்து
  சகல  வளம் பெற தேவை  மழை!
  அதை கொடுப்பது  மேகம்!
  மேகம் உருவாகி நம்
  தாகம் தீர்க்க  பூமி நோக்கி
  வேகமாக வரும் உன்னுடைய
  சேவை எப்பொழுதும் எங்களுக்கு தேவை!
   வான வீதியில் வெண்பஞ்சு போல
  உலாவரும் நீ அருந்திய நீர்
  உன்னை கருமேகமாக மாற்றி
  பார்ப்பவரையெல்லாம்  மழைமேகம்  என
  மனித இனம் கூவ   அந்த
  புனிதமான குரல் உன் காதுகளில்
  ஒலித்தால்................
   சலிப்பின்றி  நீ  கீழ் நோக்கி
  வருவாயே............ உன்
  வருகையால் பூமித்தாய் குளிர்ந்து
  பெரும் மகிழ்ச்சியோடு  ஏற்று
  வருகைக்கு நன்றி சொல்வாளே!
  வா.........வா..........மழை மேகமே!
  தா...........தா...........மழை நீரை!

  - உஷாமுத்துராமன்,  திருநகர்

  **
  ஒற்றுமையின் உருவமாய் மழை மேகம்!
  ஓவியத்தின் சாயலாய் இந்த  கருமேகம்!
  வாழும் ஜீவன்களுக்கு நீர் கொடுக்கும்  வான்மேகம்!
  பருவத்திலே பாராது கொடுப்பாய் நீர் மட்டும்!
  உழவருக்கு உறுதுணையாய்
  மாறி மாறி - மாரி தந்தாய்
  அக்காலத்தில்.
  கண்டும் காணாமல் போகிறாய் மாரி இக்கலிகாலத்தில்.
  ஐம்பூத சுழற்சியை
  மனித ஆறாம் அறிவில் உணர முடியும்!
  உணர்ந்து மட்டும் பலனில்லை.
  இயற்கை அன்னையே அரவணைப்போம்!!
  மரம் வளர்ப்போம்!! மண்ணை
  வளப்படுத்துவோம்!!.
  மேகம் கூடி மழை பெறுவோம்!!
  இயற்கையை எதிர்த்தால் சூறாவளி, சுனாமி உருவாகும்
  இயற்கையை காப்போம்!! மழை மேகத்தை உருவாக்குவோம்!!

  மு. செந்தில்குமார், ஓமன்

  **

  திசையொன்று சொந்தமில்லை –
  காற்றிற்கு அடிமையாக
  வானக்கடலில் நீந்திக்கொண்டிருந்தன—
  கனிவின்றி விமானங்கள்
  கிழித்துக்கொண்டிருந்தன—
  கண்ணிற்குள் புகுந்து
  உள்திரையை க்கூட குளிர வைக்கும்
  நீல நிறம் – எனக்கெதற்கு வெள்ளை ஆபரணம் ?
  விரட்டியது ஆகாயம் –
  நிந்தனைக்குட்டுகள் வலிக்கட்டும்,
  குனிந்து,  குனிந்து கடலை உறிஞ்சி
  தனக்கென்று கருப்பாடை நெய்தது அந்த மேகம் ---
  எதற்கு ? அதன் கண்ணீரில்
  தாகம் தணிந்து பூமி சிரிக்கட்டும் என்று !!

  - கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி

  **

  வானெனும் ஆணின்
  விதைப்பையாம் 
  மழைமேகத்திலிருந்து
  விடுபட்ட மழைத்துளி எனும்
  வித்தானது
  பூமிப்பெண்ணின்
  அண்டத்தில் கலவியுற
  சூல் கொண்டு
  ஈன்றெடுத்தவைதாம்
  செடிகளும்,
  கொடிகளும்,
  மரங்களும்!

  - எஸ்.கீர்த்திவர்மன் 

  **

  கருத்த முகிலின் வரவைக் கண்டு
       கான மயில்கள் ஆடிடும் !
  பருவப் பெண்ணை போன்ற முகில்கள்
       பரவி வானில் மிதந்திடும் !

  அங்கும் இங்கும் ஓடும் முகில்கள்
       ஆட்டந் தானே காட்டிடும் !
  பொங்கும் இன்பம் பூத்தார் போல
       புவியை மழையால் வலம்வரும் !

  வெள்ளிக் கம்பி மழையை நீட்டி
       விண்மண் அளவை அளந்திடும் !
  கொள்ளை அழகு வைர மழையாய்க்
       கொட்டி தரையில் குவித்திடும் !

  பூவைப் போல பொழிந்து மண்ணைப்
       போர்த்தி இன்பம் கண்டிடும் !
  தேவை யான இடத்தை விட்டுத்
       தேடி எங்கோ ஓடிடும் !

  வேண்டும் இடத்தில் பெய்தி டாமல்
       வெம்ப வைத்தே பார்த்திடும் !
  வேண்டா இடத்தில் விரும்பிப் பெய்து
       வீணாய்த் துன்பம் கொடுத்திடும் !

  முகிலே கருத்த முகிலே நின்று
       முறுவல் பூக்கப் பொழிந்திடு !
  அகில்போல் நல்ல மழையின் வாசம்
       அடிக்கும் படியாய்ப் பொழிந்திடு !

  ஓடி ஒளிய வேண்டாம் முகிலே
       உடனே அன்பாய் பொழிந்திடு !
  வாடி வதங்கும் வாட்டம் போக்க
       வரிந்து மழையே வழிந்திடு !

  - து.ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி)

  **
  கருங் கூந்தல் கொண்டு சிணுங்கி 
  ஊரெல்லாம் வனப்பில் ஆழ்த்துபவளே!

  பரும் தூரல் கொண்டு முழங்கி 
  காடெல்லாம் செழிப்பில் ஏற்றுபவளே!

  அவனி எங்கும் உலவும் மங்கை,
  எவரிடத்திலும் தங்கிடாத மடந்தை,
  எட்டுத்திக்கும் ஒலிக்கும் சலங்கை,
  வஞ்சகம் பாரமல் முத்தும் குழந்தை! 

  தினம் தினம் விருந்தளிக்க இந்நிலம் காத்திருக்கு,
  உனது வரவு வேண்டி பல உயிர்கள் தவித்திருக்கு,

  இம்முறை பொய்த்தது போல எஞ்ஞான்றும் பொய்க்காதே,
  வருவது போல வந்து சென்று பாசாங்கு செய்யாதே,

  பஞ்சனை தருகிறோம், 
  ரத்தின கம்பளம் விரிக்கிறோம், 
  விருந்தினராய் வந்து செல்லாமல்,
  வீற்றிருக்க வந்திடு விடைபெறாமல் தங்கிடு! 

  -இனிய தமிழ் செல்வா, நெல்லை

  **
  மேகமே மேகமே~மழை
  மேகமே மேகமே...

  தாகம் தணிக்க வருவாயோ~மன
  தணலை குளிரத் தருவாயோ
  தேகத் துடிப்பை அறியாயோ~கோடை
  தணிய வெள்ளம் தருவாயோ...மழை மேகமே                                                                
                                                               
  புறத்தை எரிக்கும் மனிதர்போல்~தீய
  புன்மை நெஞ்ச வஞ்சகம்போல்
  அறத்தை நீயும் வெறுப்பாயோ~தாய்
  அன்பைத் தரவும் மறுப்பாயோ...மழைமேகமே
                                                                
  மழைதான் இன்றி அமையாது~மேகம்
  பொழியா திருந்தால் உலகேது
  தழைக்கும் யாவும் உன்னாலே~எண்
  திசைகள் உனது பின்னாலே...மழைமேகமே
                                                                 
  காதலும் கடமையும் உன்னாலே~மனக்
  கருணையும் வாழும் உன்னாலே
  நாதலும் கீதமும் உன்னாலே~நீ
  நடந்தால் நலமும் உன்னாலே...

  மழைமேகமே மேகமே
  மன்பதை விரும்புமே...
  தழைத்திட வேண்டுமே~ பொழிய
  துயரெலாம் விலகுமே...
  மேகமே மேகமே~மழை
  மேகமே மேகமே...

  - அமிர்தம்நிலா, நத்தமேடு

  **

  மழைமேகம் சூலுற்றால் மணாணுக் கின்பம்
       மாமழையாய்ப் பொழிந்திட்டால் தாகந் தீர்க்கும்
  அழையாத விருந்தாளி யாக வேனும்
       அடைமழையாய்ப் பெய்திட்டால் துள்ளும் உள்ளம்
  பிழையாத மழையென்றால் திங்கள் மூன்று
       பெருமழையோ புயல்மழையோ அளவாய்ப் பெய்தால்
  உழைக்கின்ற உழவர்தாம் மகிழ்வர் ஆனால்
       உழுவதற்கு நிலமின்றி மழையென் செய்யும்.

  மலைவீழும் மழைநீர்தான் பெருகு மாறு
       மண்ணோடி காடோடி கடலைச் சேரும்
  நலஞ்செய்யும் ஆதவனோ ஆவி யாக்கி
      நல்லவிதம் வானமதை அடையச் செய்யும்
  வலஞ்செய்யும் மேகமென மழையைத் தாங்கி
     வான்முட்டும் மலையதனைத் தழுவிச் செல்ல
  நிலம்வீழும் மழையாகும் இயற்கை சுற்றும்
      நீள்விளையாட் டதனையறி வார்தாம் யாரோ.

  - கவிமாமணி "இளவல்" ஹரிஹரன், மதுரை

  **

  காற்றை வருடிக்கொடுக்கிறது
  விசிறியாய் விரிந்த
  மயில்தோகை

  வாடும் பயிர்களின் வேண்டுதல்கள்
  கேட்டிருக்குமோ
  கூடி முடிவெடுக்கிறது முகில்கூட்டம்

  தெருக்கள் தாண்டிய பின்னே
  திடீரென ஞாபகப்பூவுக்குள் விரிகிறது
  வீட்டுக்குள் இருக்கும் குடை

  முகில் உருகிவந்து அணைத்துக்கொள்ளும்
  தகவலை
  நெல்வயலுக்கு
  முன்கூட்டியே சொல்லிச் செல்கிறது குளிர்காற்று

  கூடு நோக்கிப் பறக்கிறது
  குருவிக் கூட்டம்

  எவ்வளவு மழை பெய்தாலும்
  நனைவதில்லை
  மேகம்.

  -கோ. மன்றவாணன்

  **

  பருவம் கடந்து
  பூப்படைவது போலவே பொழிகிறது
  மழை...

  மேகம் திரண்ட போது
  சூல்கொள்ள விடாமல் கலைத்து விடுகிறது
  வாழ்வாரைக் கெடுக்கும் சிலரைப் போல்
  சூறாவளி...

  சில நேரம்
  காற்று மவுனம் சாதித்தாலும்
  கஞ்சனின்
  கொடையெனக் கருதிக் கொள்ள
  வெப்பச்சலனமென்பதாக
  வீசியெறிந்து  புழுக்கமாக்குகிறது
  தூறல்...

  சேமிக்கும் பழக்கம் புறத்தில் தள்ளி
  ஆடம்பரத்தில் தொலைத்துவிட்ட மனங்கள்
  நீரை சேமிக்காமல்
  தவித்துத் துடிக்கின்றன தாகத்தால்
  தொண்டைகளும்...

  சேரவிடாமல்
  மனங்களை வெட்டிக் தொலைக்கிற
  பழக்கத்தால்
  மரங்களை வெட்டியதுமல்லாமல்
  எரித்து மூட்டும் புகையால்
  காய்ந்து கிடக்கிறது நிலமும் வானும்...

  மாசுபடாமல்
  புறத்தைப் போற்றினால்தான்
  சரியாகவே இருந்து கொள்வதிலிருந்து
  என்நோற்றதுவோ என
  மனிதத்தைப் போற்றிப் புகழும்
  உலகத்தின் அகம்...

  - கா.அமீர்ஜான்/திருநின்றவூர்

  **

  நீராவிகள் துளிதுளியாய் ஒன்று சேர
  விண்ணில் உருவான வெண்மேகமே !
  நீலவானில் ஒய்யாரமாய் வலம்வர
  விண்ணை அலங்கரித்த முகில்கூட்டமே !
  மழைநீரை கருவுள் ஏற்ற முகில்களே !
  மேனி சிலிர்க்க குளிர் காற்று  வீச
  மழைமேகமே ! உன் வரவு பதிவாகுமே !
  சூல் கொண்ட கார் முகிலே 
  உன் வரவை விண்ணில் காண
  அழகிய வண்ணத்தோகை விரித்தாடும் கானமயிலாய்
  மண்ணரசன் விவசாயி பூரித்த போவானே !
  மழைமகளை நீ பிரசவிக்கும் நாளை
  இமைக்க மறுக்கும் விழிகளுடன்
  விண்ணோக்கி மக்கள்  ஏங்கி தவிக்கின்றனரே !
  பொய்க்காத மழையுடன் விரைவில்
  உன் வரவை பதிவிடு மழைமேகமே ! 

  - தனலட்சுமி பரமசிவம்

  **

  மழைமேகம் போல்மனங்கள் இருத்தல் வேண்டும்
  மண்குளிர கேட்காமல் பொழிதல் போன்று
  அழைக்காமல் அல்லல்தாம் படுவோர் தம்மை
  அரவணைத்தே உதவிகளைப் புரிதல் வேண்டும் !
  பிழையாகிப் போகாமல் பருவம் தோறும்
  பிறந்தவுயிர் வாழ்வதற்குப் பெய்தல் போன்று
  விழைகின்ற விருப்பமுடன் பிறர்தாம் வாழ
  வினையாற்றி வந்தபொருள் ஈதல் வேண்டும் !
  அரும்பயிர்கள் விளைவதற்கும் குளங்கள் ஏரி
  அலைதவழ நிறைவதற்கும் குடிப்ப தற்கும்
  கருமேகம் குளிர்ந்துமழை பெய்தல் போன்று
  கருணையினைப் பிறரிடத்துப் பொழிதல் வேண்டும் !
  திருவாக மழைமேகம் திரண்டு பூமி
  திளைக்கிள்ற மகிழ்ச்சிக்கு வித்தா தல்போல்
  பெருமைமிகு மனிதநேயம் அன்பை ஊன்றிப்
  பேர்கொழிக்க ஒற்றுமையாய் வாழ்வோம் நாமே !

  - பாவலர் கருமலைத்தமிழாழன்

   

  பாலை வனமும் பயிராக ; பச்சை ஆடை மண்ணணிய ;
  வேலை யில்லா உழவர்க்கும் வேண்டும் நீரைத் தானளிக்க ;
  சோலை சுருண்ட செடிகொடிகள் சுற்றிப் படர்ந்து காட்சிதர ;
  காலைக் கதிர்தன் ஒளிமறைத்துக் கருத்த முகிலோ வான்வெளியில் !

  ஆலை கக்கும் புகையேபோல் அடடா எங்கும் முகில்மூட்டம் !
  மாலை வேளை மயக்கம்போல் மண்ணில் படர்ந்த இருளாட்சி !
  நூலைப் போல இழையாக நொடியில் மழையே வரவாக
  ஆலை வெடித்த நெருப்பேபோல் அந்தோ மின்னல் இடிமழையாய் !

  மழையின் ஆட்சி எங்கெங்கும் மட்டில் லாத பெருவெள்ளம்
  விழையும் படியாய்ப் பாய்ந்தெங்கும் விரைந்தே ஓடும் பேராறாய் !
  நுழையும் பக்கம் தடைகண்டால் நொடியில் தகர்க்கும் எல்லாமும் !
  மழையே உன்னால் மண்ணெங்கும் மாட்சி தானே மலர்ந்தெங்கும் !

  காய்ந்த நிலத்தில் கவினாகக் காணும் பசுமை கவிழ்ந்தெங்கும் !
  ஓய்ந்து காய்ந்த புல்பூண்டும் உயிர்த்துத் தானே விழித்தெங்கும் !
  காய்ந்து போன மரமெல்லாம் காண ஆடை அணிந்தெங்கும் !
  வாய்மை மிக்க மழையாலே வளமே சூழும் மண்ணெங்கும் !

  **

  - ஆர்க்காடு. ஆதவன்

            உற்றுப்பார்  கொஞ்சம் கருமேகக் கூட்டம்
               ஒரும ணிநேரம்   அங்கேமழை  பெய்யும்
            கற்றறிந் தோர்இதனை கண்டறிய மாட்டார்
               கல்லாத விவசாயி கண்டதுமே சொல்லுவார்

            சுற்றிப்பார் சிற்றெறும் சுறுசுறுப்பாய்  செல்லும்
               சதையற்ற முதுகில் உணவு கொண்டு சேர்க்கும்
            பற்றில்லா வெட்டுக்குளி அதனை பரிகசிக்கும்
               பரிக்கப் பார்க்கும் அதனுணவை உழைபின்றி   

            மயில்அகவும் சத்தம்  மணிக்கணக்காய் கேட்கும்
              மயிலுக்குத் தெரியும் மழைவருமென்று
            குயிலுக்கு ஆசை மயிலாட்டம் பார்க்க
              குயில்கூவும் வரை மயில்காத்து நிற்கும்
    
            எட்டிப்பார் விவசாயி மழைவேண்டி ஏங்குகின்றார்
              எழுச்சியுடன் பயிர்களெல்லாம் எழுந்துநிற்கும்
            பட்டிதொடி களுக்ளெல்லாம் படக்காட்சி பார்ப்போம்
              காலைகஞ்சி வீட்டில் மதியம் களி தோட்டதில்

            கட்டிப்போட்ட மாடு கத்துகிறது மழைமேகம் கண்டு
              கட்டிக்கெடக்கும் ஆடு அடைஞ்சிருக்கும் கோழி
            வீட்டுக்குள் போகத்துடிக்கும் விடுபட்டு தானேஓடும்
             களைஎடுக்க எத்தனிப்பான் பயிர்கண்டு மகிழ்வான் 
      
  - கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், ராஜபாளையம்

  **

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai