சுடச்சுட

  
  cloud

  மழைமேகம்

  மண்ணின் முகம் பார்த்து
  .....மழை பொழியும் மேகமே
  மண்ணில் வாழும் உயிர்களுக்கு
  .....உன்னால் தாகமும் தீருமே
  கனிவு கொண்ட பார்வையால்
  .....கருணை மழை பொழிந்தாய்
  இனிதாய் வாழ்வு அமைய
  .....இவ்வுலகில் வருகை புரிந்தாய்
  உழைக்கும் உழவர்கள் எல்லோரும்
  .....உன்னையே தினம் தொழுவார்
  மழையாகிய உன்னை நம்பியே
  .....மண்ணில் விதையை உழுவார்
  மழைமேகமே நீயும் தாய்போல்
  .....மடியினில் மழைத்துளியைச் சுமந்தாய்
  பிழையில்லாது மும்மாரியாய் வந்து
  .....பிணியில்லாமல் வாழச் செய்தாய்

  - கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

  **

  நீருண்ட மேகம் தான் சூல்  கொண்டதே 
  சூல்  கொண்ட மேகம் தான் மசக்கைக்  கண்டதே

  மசக்கை கண்ட மேகம் தான் ஆசைப் பட்டதே
  ஆசைப்பட்டு விரும்பிய ஆடையைத் தேடியதே 

  தேடியதில் கருப்பு நிறம் ஒன்று கிடைத்ததே 
  கருமை நிற ஆடையைக் கட்டிக் கொண்டதே
   
  கட்டிய ஆடையுடன் வான வீதியில் வலம் வந்ததே  
  வான வீதியில் நடைப் பயிற்சியையும் செய்ததே

  பயிற்சி செய்ததும் வீண் போக வில்லையே 
  எதிர்மறை மேகங்கள் மோதிக் கொண்டதே 

  மோதிக் கொண்டதால் ஒளியும் வழி காட்டியதே  
  ஒளி வந்தபின்பு ஒலியும் முழங்கியதே  

  இவற்றைக் கண்ட நுணலும் இசை பாடுதே 
  மயிலும் தன் பசுந்தோகை  விரித்தாடுதே

  இசைக்கச்சேரியோடு  மழை மேகமும் 
  மண்ணில் பிரசவித்ததே மழையாக..

  - பான்ஸ்லே .

  **

  கடலை உரிஞ்சி
  கதிரால் பறந்து
  திரவம் நீராவியாகி, 
  திடத்தின் வடிவில்
  கரும் போர்வை போர்த்தி
  வான வெளியில்
  சுற்றும் அப்சரஸாய்
  வலம் வரும்,
  கருவாச்சி, மின்னலாய் 
  கண் சிமிட்டி, புன்னகையாய்
  இடிகொடுத்து
  பூமியெங்கும் புள்ளியிட்டு
  கோலமிடுகிறாள்,
  இதைப் பார்த்து பார்த்து
  உயிர்களெல்லாம் ஈசனாக்குது
  ஊழியாய் வந்து 
  ஊழியம் செய்யுது....

  - சுழிகை ப.வீரக்குமார்

  **

  கருத்த உருவில்
  திவலைகள் சுமந்து
  பசுமை விரிக்கும்
  ஓவியன்,
  ஆழியில் முகந்து
  வீதியில் கொட்டி
  ஆனந்தக் கூத்தாடுபவன்
  உயிருக்கெல்லாம் 
  அவன்தான் உயிரே!
  அவன் வயிறு 
  வெடித்தால் தானே
  பூமி நலமாகும்
  பூக்கள் வளமாகும்,
  நில்லாமல் ஓடுபவன்
  நின்றால் தான்
  நிலத்தின் சிரிப்பை ரசிக்கலாம்
  மனதும் மயிலாய் ஆடலாம்....

  - முகில் வீர உமேஷ், திருச்சுழி.

  **

  அடர்ந்த காட்டினூடே
  அடுக்கடுக்காய் இடிக்கையிலே...
  சகதியில் கால் பரப்ப கூசுகையில்
  மின்னலாய் வந்தவள் நீ.

  ஒற்றை இலையின் ஊடே
  சொட்டு சொட்டாய்
  வெள்ளம் வடிவதைக் கண்டிருக்கிறாயா?
  சொல் கள்ளி...

  ஆந்தை அலறும்
  அந்த இரவில்..
  தோற்றுப் போயமர்ந்தவனை
  தொட்டு எழுப்பினாயடி.

  எனக்குள் நானே
  தொலைய முற்படுகையிலே..
  தட்டித்தந்து
  தஞ்சமானாயடி...
  தரையில் விழுந்த நட்சத்திரமானாயடி..

  என் வானத்தில் உதித்த
  நம்பிக்கை மேகமடி
  நடபால் கனிந்தேனடி..

  ஒரு தேநீர் குடிக்கும்
  இடைவேளையில்
  இடைவெளி குறைந்ததடி...
  குன்றிமணி போல
  ஏதோ பூத்ததடி.

  காத்திருக்கிறேன்
  வாரியணக்க...
  வா வா மேகமே..
  வான்பொழிவைத் தந்துவிடு...

  - கீதா சங்கர்

  **
  மழை மேகம் பாட்டாளியின்
  கூட்டாளி
  மதித்தால் உயிரையே கொடுக்கும்
  இல்லையேல் உயிரையே எடுக்கும்
  கோவக்காரருக்கு கோபம் காட்டும்
  சாந்தமானவர்க்கு புள்ளிப் பூச்சி

  இதயத்தில் ஈரமுள்ளது ஈரத்தை
  மண் சாரத்தை பிழிந்து பசுமை யதன்  பங்காளிக்கு வயிறார ஊட்டி
  விடும் தென்றல் வந்து தாலாட்டும்
  உரிமை உள்ளவரை உறங்க வைக்கும்

  கடன்காரன் கழுத்தை நெருக்கிடாது
  முப்போக யோக தியாகத்தை செய்து
  சோகத்தை அடையவிடாது காத்திடும்
  கார் மேகத்திற்கு சுமையான மழை
  நீரை
  இறக்கி வைத்தப்பின் இளைப்பாறுமோ
  இல்லையோ விவசாயிகள் ஆனந்தம்

  - வே. சகாய மேரி, திருக்க அரியலூர்

  **

  மழை மேகம் கண்ணில் பட்டாலே
  பிழைக்க யோகம் பிறக்க போகிறது 
  உழைக்கும் நோக்கம் முறுக் கேறும் அழைக்கும் கடவுள்களை வலிமறந்து 
  தழைப்பில் தேக்கம் நுழையாதிருக்க

  கிரகத்தில் ஒன்பது வகைகள் போலவே 
  மேகத்தில் ஒன்பது வகைகள் உண்டாம்
  பூப் பொன் மணி ப்பனி மண் நீர் மழைப் பொழிய 
  மானிடத்து ஒன்பது துளையுள் ஒன்று பழுதாகு மேயானால் முடமாகும்

  மேகத்திலும் ஒன்று செயலிழக்க நேரும்
  வாயுமேகமதை வாகனப்புகை மூடிவிட 
  பனியில்லை நீரில்லை மழையில்லை 
  காலப்போக்கில் வாழ்வே யில்லை ஏன் உயிரே வாழவேறு வழிவகை இல்லை

  என்றாகும் நிலைவந்து நிலைத்துவிடும்

  - ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

  **

  வான் பரப்பில் விளையாடிய வெண் மேகங்கள்
  தேன் உண்டு வயிறு பெருத்து சூல் கொண்டன
  தான் கொண்ட சுமையாலே வெயிலில் கறுத்தன
  மான் என ஓடிய காற்று வேகத்தில் முட்டி மோதியதே

  கரு மேகங்கள் ஒன்றோடொன்று முட்டி மோதின
  இரு கை ஓசையாய் இடியோசை வானைப் பிளந்தது
  வரும் ஓசைக்கு முன்னே வான் வீதியெங்கும் மின்னல்
  பெரும் கோலமிட எங்கும் ஒளிவெள்ளம் ஓசையுடனே

  முட்டி மோதிய வேகத்தில் மழைக் குழந்தை உதயம்
  குட்டி குட்டியாய்த் திவலைகளாய்த் தொடங்கியே
  பட்டி தொட்டியெங்கும் கனமழை கொட்டித் தீர்த்தது
  கொட்டிய மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதே

  பிழையில்லா மழை மேகம் தந்த அமுதம் நிலத்திற்கு
  இழையிழையாய்ப் பெய்து நல்ல மகசூலுக்கு வித்திட
  உழைத்த விவசாயிகளின் உள்ளம் உவகையாயிற்றே
  பிழைக்கும் பிழைப்புக்கு வளமும் நலமும் சேர்த்ததே

  இணையற்ற மழை மேகங்களின் நல்ல பங்களிப்பால்
  அணைகள் எங்கும் நிறைந்து தண்ணீர்ப் பஞ்சமில்லை
  பிணையிலிருந்த அணிகலன்கள் கழுத்தேறிச் சிரித்தன
  துணையாகக் குடும்பங்களும் இணைந்து மகிழ்ந்தனவே

  - கவிஞர்  ராம்க்ருஷ்

  **

  வானமகள் கண்களுக்கு இட்ட
  அஞ்சன மை போலாவாய் .
  கான கருங்குயில் ஓசையாய்
  மத்தள இடி சேர்ந்து இசைப்பாய் .
  காணவே கண்ணுக்கு இனிமையாய் ,
  வாழ்நாளுக்கு அருமருந்தாய் ,
  மழை மேகமே ! கார்மேகமே !
  தழைக்க ச் செய்வாய் , மழையாய்
  பொழிவாய் மனிதர் மகிழ
  வழிவாய் மலை மேலிருந்து
  காடு கழனி குளிர்விப்பாய் ,
  மேடு பள்ளம் வாய்க்கால் குளம்
  நதி நீரால் நிறைப்பாய் .
  சதி செய்யாது கலைந்து போகாது
  வாழ்விப்பாய் மனுக்குலம்
  தாழ்வின்றி நீடூழி வாழ வே !

  - திருமதி ராணி பாலகிருஷ்ணன்

  **

  வானத்துத் தாயீனும் கருநிறத்துக் குழந்தை - நல்
  வாசமெல்லாம் மண்மீது பூசிவிடும் மடந்தை

  இதம்தரு குளிரினையே தூண்டிவிடும் வனப்பு - பெரும்
  இடியுடன் மின்னலுமாய் அழகியநற் தொகுப்பு

  உடலுக்குள் உயிரெனவே புகழ்வாரே ஊரார் - இந்த
  உலகெல்லாம் தினம்வாழ நீயின்றி வேறார்?

  அமுதென்னும் உயிர்நீரின் சுரப்பியும் ஆனாய் - நாங்கள்
  அழைத்தாலும் காற்றோடு மறைந்தே ஏன்போனாய்?

  - கு. இரா, வடக்கு அயர்லாந்து

  **
  வறண்டு போன பூமியும்
  வணங்கி எழ
  வாடிக் கிடந்த  பயிர்களும்
  வாழ்த்து சொல்ல
  வாரிக் கொட்டியது 
  மழை மேகம் 
  வருணன் சேர்த்த
  மழைத் துளிகளை!

  தோகை       விரித்தாடிய மயில்போல
  துப்பட்டாவை      விரித்தாட
  மனம் விழைய
  அடுப்படியில் இருந்து 
  அம்மாவின் கூப்பாடு ....
  மொட்டை மாடியில்   காயப்
  போட்ட   மிளகாயை   எடுக்க
  மழை மேகத்தை காண
  துள்ளிக் குதித்து ஓடினேன் !
  அள்ளி எடுத்தேன் மிளகாயுடன் சேர்த்து  மழைத் துளிகளையும்!

   - ஜெயா வெங்கட், கோவை

  **

  உழைப்பாளர் உழைப்பினையும் செல்வ ரெல்லாம்
  உறிஞ்சியேதான் குடிக்கின்ற கீழ்மை யுண்டு;
  பிழைப்பவர்கள் பெரிதுவக்க வசதி யாக
  பிழைச்செய்து பிழைக்கின்ற இழிவு மிங்கே;
  தழைத்திடவே அவரவர்கள் பிழையும் செய்யும்
  தான்தோன்றி தனத்தாலே இயற்கை யான
  செழிப்பான கனிமவளம் மண்ணின் செம்மை
  தண்ணீரை திருடமழை மேகம் எங்கே?

  காடுமலை அருவியாறு விளைநி லங்கள்
  கணக்கற்ற மணல்நீரும் இயற்கை தம்மை
  பீடுநிறை வளங்களையும் களவு செய்து
  பதுக்கியதால் மாசடைந்து ஓசோன் ஓட்டை
  நாடுமொத்தம் இணைந்தேதான் தைத்த போதும்,
  நலன்விளைய தைக்கஆமோ? காலந் தோறும்
  நாடுநன்கு பசுமைநிறை நிலமாய் மாற
  நன்னீரை மழைமேகம் பொழிய வைப்போம்!

  - "கவிக்கடல்,"  கவிதைக்கோமான், பெங்களூர்.

  **

  மழைக்காக  காத்து  இருக்கும்  வானம்  பார்த்த  பூமி   நான்,
  மழை  மேகமாய்  நீ,
  உன்னை  ரசித்தபடி  நானும் உன்  காதலுக்காக  காத்திருக்க ,
  மழை  துளிகளாய்  மண்வாசனையோடு நீயும்  பதில்  சொல்ல ,
  காதல்  மழையில்  நனைந்தேன்    நானும்   பேரானந்தமாய்!!

  - ப்ரியா ஸ்ரீதர்

  **

  கதிரவனின் கதிரால்;
  கருமேகம் கதிராய் பொழியும்

  அந்த கதிர் விழும் இடமெலாம் செழித்தோங்கும்
  உயிரெலாம் பிழைத்து வாழும்

  மரமென்ற ஈரம்;
  மண்ணில் இருப்பதாலென்ன பாரம்?

  மரம் ஈர்க்கும் மழை;
  அதனால் என்ன தொல்லை?

  இருக்கும் மரத்தை காப்போம்;
  இயற்கை மழையை நம் வாழ்விடம் நோக்கி ஈர்ப்போம்

  - ம.சபரிநாத்,சேலம்

  **

  மும்மாரித் திங்களிலே பொழியுங் காலம்
  முடிமன்னர்  காலமுடன் போயே போச்சு;
  இம்மண்ணில் பருவத்தோடு பொழியு மந்த
  இனிதான மழைமேகப் பருவம் போச்சு;
  வம்பான மாந்தராலே கோடை தன்னில்
  வருகின்ற மழைமேகம் காய்ந்து போச்சு;
  எம்மருமை ஆறெல்லாம் வறண்டு போச்சு;
  ஏரிகுளம் வீடுகளாய் மாறிப் போச்சு!

  காடெல்லாம் கழனியாகி, கழனி யெல்லாம்
  கட்டடமாய் மாறியதால் எங்கும் பஞ்சம்;
  வீடெல்லாம் விளைந்துநிற்க, பொட்டல் காடாய்
  விளையாட்டு அரங்குகளாய் ஆன தாலும்,
  நாடெல்லாம் அறிவியலின் ஆதிக் கத்தால்,
  நாசமாகிப் போனதாலே மழையின் மேகம்
  தேடுகின்ற நிலையானக் காலம் மாற்றி
  தேசமெங்கும் மழைமேகம் பொழிய வைப்போம்!

  - நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai