ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

கள்ள மாயவனே
ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9, 10
Updated on
1 min read

பாடல் - 9

புள்ளின் வாய் பிளந்தாய், மருதுஇடை போயினாய்,
                                                           எருது ஏழ் அடர்த்த என்
கள்ள மாயவனே, கருமாணிக்கச் சுடரே,
தெள்ளியார் திருநான்மறைகள் வல்லார் மலி தண்
                                                           சீரீவரமங்கை
உள்ளிருந்த எந்தாய், அருளாய் உய்யும் ஆறு எனக்கே.

பறவை வடிவத்தில் வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தவனே, மருத மரங்களுக்கிடையே சென்றவனே, ஏழு எருதுகளை வென்ற என் கள்ள மாயவனே, கரிய மாணிக்கச் சுடரே, தெளிவானவர்கள், நான்கு திருமறைகளிலும் வல்லவர்கள் நிறைந்த, குளிர்ச்சியான ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, எங்கள் தந்தையே, நான் உய்யும் வழியை எனக்கு அருளவேண்டும்.

******

பாடல் - 10

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்,
                                                                            உனக்கு ஓர் கைம்
மாறு நான் ஒன்று இலேன், எனது ஆவியும் உனதே,
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண்
                                                                           சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய், தெய்வ நாயகனே.

சேற்றில் விளைந்த கரும்பும், பெரிய செந்நெல்லும் நிறைந்த, குளிர்ச்சியான ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, நறுமணம் நிறைந்த, குளிர்ச்சியான மலர்கள் நிறைந்த துளசியை அணிந்த திருமுடியைக் கொண்டவனே, தெய்வ நாயகனே, எனக்கு உய்வதற்கான வழியைக் கேட்டேன், உன்னுடைய திருவடிகளைச் சரணடையும் வழியைக் காட்டினாய், உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? இனி என் உயிரும் உன்னுடையதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com