பத்மாவதி சரித்திரம்

பத்மாவதி சரித்திரம் (மூன்று பாகங்களும் ஒரே தொகுப்பில்): அ.மாதவையா, பக்.334; ரூ.250; காவ்யா வெளியீடு, சென்னை-24; )044-23726882. "நாவல்' எனப்படும் புதினம் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமாகி நூறாண்டுக்கு

பத்மாவதி சரித்திரம் (மூன்று பாகங்களும் ஒரே தொகுப்பில்): அ.மாதவையா, பக்.334; ரூ.250; காவ்யா வெளியீடு, சென்னை-24; )044-23726882.

"நாவல்' எனப்படும் புதினம் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமாகி நூறாண்டுக்கு மேலாகிறது. ஆங்கில இலக்கியத்தின் தாக்கத்தால் புதிய உரைநடையில் நெடுங்கதைகளை வடிப்பது தமிழிலும் துவங்கியது. அந்த வகையில் தமிழின் முன்னோடி நாவலாக, அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் விளங்குகிறது. தமிழ் நாவல்கள் பட்டியலில் மூன்றாவது நாவலான இந்நூல், தரத்தில் நூறாண்டுகள் கடந்தும் முதன்மை வகிப்பது, மாதவையாவின் சமகால நோக்கிற்கு உதாரணம்.

÷தமிழ் இலக்கிய உலகில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட அ.மாதவையாவின் முதல் நாவலான பத்மாவதி சரித்திரம், மூன்று காலகட்டங்களில் மூன்று பாகங்களாக எழுதப்பட்டது. இதில் முதல் இரு பாகங்களே பெரும்பாலான பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை வெளியாகாமல் இருந்த - முற்றுப்பெறாத மூன்றாவது பாகத்தையும் இணைத்து செம்பதிப்பாக காவ்யா வெளியிட்டுள்ளது. நாவல் குறித்த அ.மாதவையாவின் விளக்கம் நூலின் முகவுரையாக அமைந்துள்ளது. அவரது புதல்வர் மா.கிருஷ்ணனின் கோட்டோவியங்களும், பேத்தி மீனாட்சி தியாகராஜனின் முன்னுரையும் நூலுக்கு நல்ல விளக்கமாக அமைந்துள்ளன. மாதவையாவின் சமுதாய நோக்கு, இலக்கிய பரிச்சயம், சீர்திருத்தச் சிந்தனை, மெல்லிய நகைச்சுவை உணர்வு ஆகியவை நாவல் முழுவதும் விரவிக் கிடப்பதைக் காணமுடிகிறது. பழைமையின் பிடியில் சமுதாயம் தத்தளித்த காலத்தில், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், பெண்ணுரிமைகளை வலியுறுத்தி துணிவுடன் நாவல் எழுதிய மாதவையா, இன்றைய எழுத்தாளர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

÷கதைமாந்தர்களின் ஊடாக அன்றைய சமுதாயச் சூழலை புலப்படுத்தும் இந்நாவல், அக்கால மொழி நடையையும் வெளிப்படுத்துகிறது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல். பிழை திருத்தத்தில் இன்னும் சிறிது கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com