மருதநாயகம் கான் சாகிப் - செ.திவான்; பக்.160; ரூ.80; விகடன் பிரசுரம், சென்னை-2; )044 - 4263 4283.
மருதநாயகம் கான் சாகிப்பின் வீர வாழ்க்கையைக் கூறும் நூல். மருதநாயகம் கான்சாகிப் பிறவியிலேயே முகம்மது யூசுப் என்னும் இஸ்லாமியரா? இல்லை வேளாளர் குலத்தில் பிறந்த மருதநாயகமா? என்பன போன்ற சர்ச்சைகளை விவரிக்கும் நூலாசிரியர், முடிவை வாசகர்களிடமே விட்டுவிடுகிறார்.
பிரெஞ்ச் படையில் போர் வீரனாகச் சேர்ந்த மருதநாயகம் கான்சாகிப் ஆற்காட்டுப் போரில் ஈடுபட்டதையும், துரோகத்தால் அவர் வீழ்த்தப்பட்டதையும் நூல் விவரிக்கிறது. 1764 இல் மதுரைக் கோட்டைக்குள்ளிருந்து கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட கான்சாகிப் இறுதியில் சதித் திட்டத்தால் பிடிபட்டார். அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டு முறை தூக்கிலிடப்பட்டபோதும் அவர் இறக்கவில்லை. ""நான் ஆஸனங்கள் பயின்றவன். நெடுநேரம் மூச்சை அடக்கப் பழகியவன். கழுத்தைக் கயிறு இறுக்காதவண்ணம் கழுத்தை உப்ப வைத்து, மூச்சை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவன். நான் விரும்பினால் ஒழிய என்னைக் கொல்ல முடியாது'' என்று கூறிய கான்சாகிப், தன்னை மூன்றாம் முறையாகத் தூக்கிலிடுமாறு சொல்லி மரணமடைந்தார் என்பதும், அப்படி இறந்தவரின் சடலத்தைத் துண்டு துண்டாக வெட்டி உறுப்புகளைப் பல ஊர்களுக்கு அனுப்பி - மக்களைப் பயமுறுத்துவதற்காக - அவற்றை மக்களின் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்கள் சிலிர்க்க வைக்கின்றன.
வரலாற்று விவரங்களைச் சுவையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் எழுத முடியும் என்பதை நிரூபிக்கும் நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.