கம்பனில் சங்க இலக்கியம் - ம.பெ.சீனிவாசன்; பக். 304; ரூ.200; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-17; )0452-2345971.
கம்பரின் தொல்காப்பியப் புலமை கம்பராமாயணத்தில் பல இடங்களில் பளிச்சிடுகின்றன. அதேபோல் கம்பர், அகத்திணை, புறத்திணை இரண்டையும் போற்றிய விதத்தையும், சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களைத் தம் பாடலில் ஏற்றிப் போற்றியுள்ள பாங்கையும், இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் அகநானூற்றுக்கு அகவற்பாவால் எழுதிய உரைப் பாயிரத்தில் சங்கப் புலவர்களைச் "சான்றோர்' என்று குறிப்பிடுவதை அடியொற்றி, கம்பர் கோதாவரி ஆற்றுக்கு உவமை கூறுமிடத்தில் "சான்றோர் கவி' என்கிறார் என்பதையும் பதிவு செய்து, சங்க இலக்கியத்தின் தாக்கம் கம்பர் பாடல்களில் விரவி இருப்பதையும் முதல் கட்டுரையான "கம்பனில் சங்க இலக்கியம்' விரித்துரைக்கிறது.
கம்பரின் "தண்டலை மயில்கள் ஆட' என்ற பாடல் அகநானூற்றில் கபிலர் பாடிய (ஆடமைக்குயின்ற-62) பாடலை அடியொற்றி பிறந்ததுதான் இப்பாடல் எனும் செய்தி பலருக்கும் புதியது. மேலும், கதை போக்கில் அமைந்த குறுந்தொகைப் பாடல் (குறுந்-124) போல, நகர் நீங்கு படலத்தில் ராமன் - சீதை பேசிக்கொள்வதை (1827) கம்பர் அமைத்துப் போற்றியுள்ளார்.
சங்க இலக்கியத்தில் அமைந்த அகத்திணைக் கூறுகளை "கம்பனில் முல்லைத்திணை' கட்டுரை எடுத்து விளக்குகிறது. கம்பனும் சாத்தனாரும், கம்பனும் வில்லியும், கம்பனில் குறிப்பறிதல், கம்பனில் பழமொழிகள் ஆகிய கட்டுரைகள் கம்பன் பல்துறை வித்தகர் - ஆழங்காற்பட்டவர் என்பதை மெய்ப்பிக்கின்றன. குறிப்பாக "தண்டலை மயில்கள் ஆட' (பக்,45,133), "புவியினுக்கு அணியாய்' (பக்.15,95) ஆகிய பாடல்கள் மீண்டும் மீண்டும் நூலில் இடம் பெறுவதைத் தவிர்த்திருக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.