நல்ல நிலம்

நல்ல நிலம் - பாவை சந்திரன்; பக்.838; ரூ.600; கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை; )9791071218.

நல்ல நிலம் - பாவை சந்திரன்; பக்.838; ரூ.600; கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை; )9791071218.

காமாட்சி எனும் ஒரு பெண்ணைச் சுற்றி நிகழும் துன்பமும் இன்பமும் கசப்பும் களிப்புமான வாழ்க்கைதான் இந்நாவல். இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு, நாகப்பட்டினத்தின் ஊரகப் பகுதிக்குச் செல்வதில் தொடங்கி, மகனின் திருமணம் வரையிலான முடிவற்ற "சிக்கு'களில் சிக்கியும் சிதையாமல் தன்னை நிறுத்திக்கொள்ளும் ஓர் ஆளுமையின் கதை.

உதவுபவளாக, ஆலோசனை சொல்பவளாக, கண்டிப்பவளாக, எதிர் நிற்பவரின் மனவோட்டங்களைப் புரிந்து பதிலடி கொடுப்பவளாக, சொல்லாமல் வீட்டைவிட்டே வெளியேறிய கணவன் காணாமல் போகும்போது திடம் கொள்பவளாக, பதினைந்து ஆண்டுகள் கழித்து அவன் திரும்பும்போது அவனை வெறும் ஓர் ஆள் என்பதாக மட்டுமே நடத்தும் மெளனியாக, ஆனாலும் அவனது வித்துக்கு முளைத்த அனைத்து செடிகளையும் தன் தோட்டத்தில் பதியம் போட்டுக் கொள்பவளாக எனப் பன்முக ஆளுமையின் தொகுப்புதான் இந்த நாவல்.

1930களில் நாகை சுற்றுவட்டாரத்தில் நிலவிய வாழ்க்கையை அப்படியே பிசிறு தட்டாமல் மீட்டெடுத்து ஒரு திரைப்படம் போல விவரித்துச் செல்கிறது நாவல். அன்றைய கிராம வாழ்க்கையும், நகர வாழ்க்கையும் எப்படி இருந்தன என்பதை மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

எல்லாக் காலங்களிலும் நம்மைச் சுற்றி பெண்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு காமு, ஒரு சீத்தம்மா, கோகிலத்தம்மா, லட்சுமி, செல்லம், அம்மாக்கண்ணுவை அடையாளம் காண நம்மைத் தூண்டுகிறது. நாவலில் இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், உலகப்போரில் பர்மா மீது குண்டுவீச்சு என வரலாறுகள் இருந்தாலும்கூட, கதை மாந்தர் பார்வையினூடாக இந்த வரலாறு விவரிக்கப்படுகிறது. விலகிச் செல்வதில்லை.

இது உரையாடல்களின் நாவல். நூலாசிரியர் தரும் விவரிப்புகளைவிட, கதை மனிதர்கள் அனைவரும் தங்கள் உரையாடல்கள் மூலம்தான் தங்கள் ஆளுமையை வெளிப்படுத்துகிறார்கள். ஓவியர் கோபுலுவின் அற்புதமான ஓவியங்கள் நூலை அலங்கரிக்கின்றன. அனைத்து ஓவியங்களையும் வண்ணத்தில் அச்சிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நிலம் எல்லா விதைகளையும் முளைவிடச் செய்வதில்லை. சில விதைகளை, கற்படிவமாக (ஃபாஸில்) மாற்றிவிடுகிறது நல்ல நிலம். தமிழில் வெளிவந்த குறிப்பிடத்தக்க நாவல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com