சிலம்புச் செல்வரின் தலையங்க இலக்கியம்

சிலம்புச் செல்வரின் தலையங்க இலக்கியம் - மா.ரா.இளங்கோவன்; பக்.264; ரூ.175; அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை-78.
Published on
Updated on
1 min read

சிலம்புச் செல்வரின் தலையங்க இலக்கியம் - மா.ரா.இளங்கோவன்; பக்.264; ரூ.175; அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை-78.

தமிழரசுக் கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானம், அவர் நடத்திய கிராமணி குலம் (1936-37), தமிழ் முரசு (1946-51), தமிழன் குரல் (1954-55) ஆகிய இதழ்களில் எழுதிய தலையங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பாகவும், அவை பற்றிய அறிமுகமாகவும் இந்நூல் மலர்ந்திருக்கிறது.

இக்காலகட்டத்தில் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டம், திராவிட இயக்கங்களின் கொள்கைகள், சுதந்திரத்துக்குப் பிறகான சூழ்நிலைகள் ஆகியவற்றைப் பற்றி ம.பொ.சி.யின் வித்தியாசமான கருத்துகள் நம்மை வியக்க வைக்கின்றன.

சான்றாக, தமிழர்களுக்குத் திராவிடம் என்பது பொருந்தாது என்று உரக்கச் சொல்கிறார். "சென்னையை அபகரிக்க ஆசைப்படும்வரை, திருப்பதியைத் திருப்பித் தர மறுக்கும் வரை ஆந்திரர்களிடமும், திருவிதாங்கூர்த் தமிழ்நாட்டை அடிமைப்படுத்த முயலும் வரை மலையாளிகளிடமும், திராவிடர் என்று காரணம் காட்டி ஒற்றுமைக்கு மனுப்போடுவது, உதைக்கும் காலுக்கு முத்தமிடுவதாகவே முடியும்' என்று தமிழ் முரசு 1.5.1947 இதழில் எழுதிய தலையங்கத்தில் ம.பொ.சி. எச்சரிக்கிறார்.

சிலப்பதிகாரம் என்பது ஆரியத்தைப் பரப்பும் ஒரு நூல் என்று பெரியார் கூறியதை மறுத்து, "சிலப்பதிகாரம், நாம் திராவிடர் அல்லர் - தமிழர்; நமது தாயகத்தின் பெயர் திராவிடமன்று - தமிழகம்; அதன் வடக்கெல்லை விந்தியமன்று - வேங்கடம்; தமிழ்நாட்டு அந்தணர் ஆரியரல்லர் - தமிழர்; தமிழருடைய பண்பாடும் பழக்க வழக்கங்களும் பெரும்பாலும் வேங்கடத்திற்கு வெளியே உள்ளவர்களின் பண்பாடுகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் வேறானதாயினும், விரோதமானதல்ல என்பனவற்றைத் தெளிவாக வற்புறுத்துகிறது' என்று 1951 ஏப்ரலில் வெளிவந்த தமிழ் முரசு இதழ் தலையங்கத்தில் எழுதியிருக்கிறார். இவ்வாறு தனது கருத்துகளைத் துணிவாகவும், மாறுபட்ட கண்ணோட்டத்திலும், தெளிவாகவும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com