

கல்கி - பக்.300; ரூ.120.
இந்த ஆண்டு கல்கி தீபாவளிச் சிறப்பு மலரில், அமரர் கல்கி, அசோகமித்திரன், சீதாரவி, ராஜேஷ்குமார் ஆகியோரின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைப் பக்கங்களை ஏர்வாடி ராதாகிருஷ்ணன், மதுரபாரதி, இமையம், நரன் உள்ளிட்டோர் அலங்கரிக்கின்றனர். இவை தவிர, கண்ணைக் கவரும் ஓவியங்களும், புகைப்படங்களும் இடம் பெற்
றுள்ளன.
காஞ்சி மகா சுவாமிகளின் "தீபாவளி ஒரு புண்ணிய காலம்"- தீபாவளியை மூன்று நாள் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
சந்திரமௌலியின் பயணக் கட்டுரை, சுப்ரபாலனின் ஸ்ரீசைலம் ஆன்மிகப் பயணக் கட்டுரை பயனுள்ள தகவல்களைத் தருகின்றன.
பத்மினி பட்டாபிராமன் சொல்லும் சர்வீஸ் அப்பார்ட்மென்ட் எப்படி இருக்கின்றன, என்னென்ன வசதிகள் உள்ளன என்ற விவரங்கள் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை. பழ. நெடுமாறனின் பேட்டிக் கட்டுரையைப் படித்து ரசிக்கலாம். அனைவரையும் திருப்திபடுத்தும் மலர்.
கலைமகள் - பக்.320; ரூ. 150.
÷தீபாவளி மலர் என்றாலே கண்ணைக் கவரும் வண்ணப் படங்கள்தாம் நினைவுக்கு வரும். அந்த வகையில் பராஸ்கரின் ஓவியம் அட்டைப் படத்தை அலங்கரிக்கிறது. ஜெயராஜ், மாயா, ம.செ., ராமு, கோபுலு, உமாபதி, ஜி.கே.மூர்த்தி உள்ளிட்ட பல ஓவியர்களின் ஓவியங்கள், வண்ணப்படங்கள் ஒளிர்கின்றன.
÷கடவுளை ஸ்மரணை செய்ய வேண்டியதன் அவசியத்தையும், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன் எப்படி பக்தர்களை வெண்ணெயாக்கித் தனக்குள் வைத்துக்கொள்கிறான் என்பதையும் மகா பெரியவர் அருளுரையாக வழங்கியிருக்கிறார்.
கிருபானந்தவாரியாரின் "ஓர் அரிசி' கதை, உ.வே.சாமிநாதையரைப் பற்றி மாணவர் கி.வா.ஜ.வின் பதிவு, பாலகுமாரன், ஜெயகாந்தன், சுஜாதா, லக்ஷ்மி முதலியோரின் சிறுகதைகள் அனைத்தும் படித்தறிய வேண்டியவை. நா.மகாலிங்கம், ஸ்ரீவேணுகோபாலன், சா.கணேசன், ம.பொ.சி., ஏ.என். சிவராமன், த.நா.குமாரஸ்வாமி, மு.வ., மு.மு.இஸ்மாயில் போன்றோரின் கட்டுரைகளும் குறிப்பிடும்படி உள்ளன.
விகடன் - பக்.400; ரூ.125.
கலை, இலக்கிய வாசனைகளோடு சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், சினிமா, சுற்றுலா,ஆன்மிகம் என பல்சுவை விருந்து பரிமாறப்பட்டிருக்கிறது இம்மலரில். அஜீத் இதுவரை நடித்த "வேதாளம்' வரை மொத்தம் 56 திரைப்படங்கள் குறித்து வாசகர்கள் அறியாத பல தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. வேலவன் வில்லேந்தி அருள்பாலிக்கும் ஆலயங்களைப் பற்றி வண்ணப் படத்துடன் கூடிய கட்டுரை ஆன்மிகச் சிலிர்ப்பு. இசைக்கருவிகள் உருவாகும் விதம் குறித்து வெளியிடப்பட்டிருக்கும் கச்சிதமான கட்டுரை வியக்க வைக்கிறது. விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவின் பேட்டி மலருக்குப் பெருமை சேர்க்கிறது. பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்துக்கொள்ள வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமி, காஞ்சி காமாட்சி உள்பட ஏழு தெய்வங்களை தத்ரூபமாக தந்துள்ளார் மறைந்த ஓவியர் சில்பி. பாலிவுட்டின் புதிய அலை சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப் பேட்டி, நடிகர் சிவகுமார் பேட்டி என இந்த தீபாவளி மலரில் சினிமா நெடி தூக்கலாக இருக்கிறது.
அமுதசுரபி - பக்.300; ரூ.150.
ஆனந்தத் தாண்டவமிடும் நடராசரின் அற்புத ஓவியம், மணியம் செல்வனின் கைவண்ணத்தில் அட்டைப்படமாக வாசகர்களை வரவேற்கிறது. உள்ளே ஆடலரசனின் ஆடல்களை விளக்கும் அரிமா இளங்கண்ணனின் அருமையான கவிதை. மதிஒளி, வ.வே.சு., ஏர்வாடி ராதாகிருஷ்ணன், சிற்பி, மதிவண்ணன், வீரபாண்டியன், மலர்மகன் உள்ளிட்டோரின் சிறந்த கவிதைகளும் ஆங்காங்கே அலங்கரிக்கின்றன.
இல்லத்தரசிகளின் இயல்பான பெருமையை வஞ்சப்புகழ்ச்சியாய் வர்ணிக்கிறது திருவள்ளூர் என்.சி.ஷ்ரீதரனின் கட்டுரை. அதனையே உணர்வுப்பூர்வமாக உணர்த்துகிறது கிரிஜா ராகவனின் கட்டுரை. சீதா ரவி, அபங்க சம்பிரதாய சந்த் மகான்களின் பக்தி மணத்தை தனது கட்டுரை மூலம் கமழ விட்டிருக்கிறார். விக்கிரமன், மூதறிஞர் ராஜாஜியுடனான தனது முதல் இரு சந்திப்புகளை முத்தாகப் படைத்துள்ளார். திருப்பூர் கிருஷ்ணன் தனது சிறுகதை மூலம் முத்திரை பதித்துள்ளார்.
கூட்டங்களை நடத்துவதில் உள்ள சிக்கல்களை சிரிக்க வைத்து, சிந்திக்க வைக்கும்படி எழுதியுள்ளார் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன். சாருகேசி, இந்திரா பார்த்தசாரதி உள்ளிட்ட பல படைப்பாளிகளின் படைப்புகளுடன் மலர்ந்துள்ளது அமுதசுரபி தீபாவளி மலர்.
ஓம் சக்தி- பக்.370; ரூ. 100.
ஆன்மிக மணம் கமழும் அழகிய தெய்வத் திருவுருவங்கள், அருளாளர்களின் வண்ணப்படங்கள், ஓம் சக்தி தீபாவளி மலரின் சிறப்பு. கவிக்கோ அப்துல் ரகுமானின் "யாருடைய வார்த்தை நான்?' கவிதையில் பறவைகள் இறைவனை வணங்க தூதர்களையும் வேதங்களையும் அனுப்ப வேண்டியதில்லை; அவை எந்த பேதமும் இல்லாமல் அதிகாலையிலேயே துதித்துப் பாடுகின்றன என்று சொல்லிச் செல்லும் கருத்து உற்றுநோக்கத் தக்கது. காசி ஆனந்தன், மரபின் மைந்தன் முத்தையா, புவியரசு, இன்குலாப், சிற்பி என கவிஞர்கள் பலர் தமது கவிதைகளால் சிந்திக்க வைத்துள்ளனர்.
விமலாரமணியின் "கண்ணெடுத்தாகிலும் காணீரோ?'
சிறுகதை, மிக இயல்பான சித்திரிப்பு. ராஜேஷ் குமார், பொன்னீலன், தோப்பில் முஹம்மது மீரான், அசோகமித்திரன், கி.ரா, மேலாண்மை பொன்னுசாமி போன்ற பல எழுத்தாளர்களின் முத்தான சிறுகதைகள் இந்த மலருக்கு அழகு செய்கின்றன.
ஆன்மிகம், கல்வி, கலை, அறிவியல், தொழில், சினிமா, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், பேட்டிகள் மலருக்கு அணி சேர்க்கின்றன. படிக்கத் தூண்டும் பயனுள்ள மலர்.
தினகரன் - பக்.336; ரூ.130.
பல்சுவை, வரலாறு, ஆன்மிகம், சினிமா, சிறுகதைகள், கவிதைகள் என மலர்ந்திருக்கிறது தினகரன் தீபாவளி மலர்.
இன்றைய யுவன் - யுவதிகளின் நேரத்தை அதிகமாகப் பங்குபோட்டுக்கொள்ளும் நவீன தொழில்நுட்பக் கருவிகளின் அறிமுகத்தில் இருந்து தொடங்குகிறது மலர். வீயெஸ்வியின் எம்.எஸ். பற்றிய அற்புதமான வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை பிரமாதமாக உள்ளது.
ஜெயமோகன், பட்டுக்கோட்டை பிரபாகர், பாவண்ணன் உள்ளிட்ட பலரின் கதைகள், பழனிபாரதி, யுகபாரதி உள்ளிட்ட பலரின் கவிதைகள் மனதைத் தொடுகின்றன.
நம்மூர் சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் ஹிந்தி சினிமாவில் கலக்கிக் கொண்டிருப்பது, உதவி இயக்குநர்களாகப் பணியாற்றாமல், குறும்படங்கள் மூலம் சினிமாவில் நுழைந்து வெற்றிபெற்று சாதனை படைப்பது பற்றிய சினிமா பக்கங்களும் கவர்கின்றன.
சத்தியமங்கலம் மல்லி, வசீகரிக்கும் வெளிநாட்டு உணவுகள், மணக்கும் மதுரையின் பீட்சா தோசை, சென்னையில் புராதன புறாச் சந்தை, 150 ஆண்டுகளுக்கு முன்பே நதிகள் இணைப்புக்குக் குரல் கொடுத்த சர் ஆர்தர் காட்டன் பற்றிய அபூர்வத் தகவல் என இதழ் முழுவதும் புதுப்புது தகவல்கள் இருக்கின்றன.
கோபுர தரிசனம் - பக்.396; ரூ.150.
விநாயகப் பெருமான் வேண்டும் வரம் தருவார் என்பதை எடுத்துக்கூறும் பி.ராஜனின் கட்டுரை அருமை. கண்ணதாசன், கவிஞர் வாலி கவிதைகள் சிறப்புச் சேர்க்கின்றன. காஞ்சிப் பெரியவர் அருளிய இரண்டு ஜனகர்களின் கதையில் நாம் அறிந்திராத பல்வேறு இதிகாச காலத் தகவல்கள் இருப்பது தனிச்சிறப்பு.
ராமாவதாரம் ஏன் நிகழ்ந்தது என்பதை சுதா சேஷையன் எளிமையாக விளக்கியுள்ளார். சுவாமி சிவானந்தர், சுகி.சிவம், மு.ஸ்ரீநிவாஸன், திருப்பூர் கிருஷ்ணன், ஜஸ்டிஸ் டி.எஸ்.அருணாசலம் ஆகியோரின் கட்டுரைகள் மனதைக் கவர்கின்றன.
கோயில்கள் குறித்த தகவல்களும், படங்களும் மலருக்கு அணி சேர்க்கின்றன.
கொல்லூர் மூகாம்பிகை குறித்து கவிஞர் இளந்தேவன் எழுதிய கவிதை, சிவனைப் போற்றி கவிஞர் பாரதி எழிலவன் எழுதிய கவிதை, பெருமாளின் தசாவதாரம் குறித்த விளக்கம் ஆகியவை நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன.
அமரர் கல்கி, நல்லி குப்புசாமி செட்டியாரின் கட்டுரைகள், இசை மேதை மகா வைத்தியநாதய்யர், ஜெயகாந்தன், சிவாஜி, எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்த கட்டுரைகள் வாசிப்புக்கான சுவாரஸ்யமான அம்சங்கள். மலரின் முகப்பிலும், இதர பகுதிகளிலும் ஓவியர் வேதாவின் ஓவியங்களும், பத்மவாசனின் தத்ரூபமான ஓவியங்களும் மலருக்கு அழகு சேர்க்கின்றன.
விஜயபாரதம் - பக்.510; ரூ.100.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சுவாமி தயானந்த சரஸ்வதி, நூற்றாண்டு காணும் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் வண்ணப்படங்களுடன் மிளிரும் இந்த மலர், அவர்களுக்கு சிறந்த அஞ்சலியாக அமைந்துள்ளது.
சுவாமி விமூர்த்தானந்தரின் நேர்காணல் மலரின் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.
பிரபல எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் உள்ளிட்ட பலரின் சிறுகதைகளுடன், அண்மையில் மறைந்த எழுத்தாளர் கெளதம நீலாம்பரனின் கடைசிக் கதையான "இலங்கை ராணி'யும் இடம்பெற்றுள்ளது.
பேராசிரியர் சரஸ்வதி ராமநாதனின் நகரத்தார் குறித்த கட்டுரை, தான் சந்தித்த மகான்கள் குறித்த இல.கணேசனின் கட்டுரை, ஆர்.பி.வி.எஸ்.மணியனின் கட்டுரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தஞ்சை வெ.கோபாலன், பி.என்.பரசுராமன், பத்மன், நரசய்யா, மா.கி.ரமணன் உள்ளிட்டோரின் கட்டுரைகளும் மலரில் மணம் வீசுகின்றன.
காங்டாங், மைசூரு, ஹம்பி, தலைக்காவிரி ஆகிய இடங்கள் தொடர்பான பயணக்கட்டுரைகளும், தோரணமலை, அந்தியூர் கால்நடைச் சந்தை, நட்டாற்றீஸ்வரர் கோயில் தொடர்பான கட்டுரைகளும் மலரின் பல்சுவையைக் கூட்டுகின்றன. நல் விருந்து.
லேடீஸ் ஸ்பெஷல் - பக்.256; ரூ.130.
பாக்கியம் ராமசாமி, திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்ட 22 பிரபல எழுத்தாளர்களின் சிறப்புச் சிறுகதைகள் "லேடீஸ் ஸ்பெஷல்' தீபாவளி மலருக்கு மகுடம் வைத்தாற்போல் அமைந்திருக்கின்றன. விக்கிரமன், புகைப்படக்கலைஞர் யோகா போன்றோர் எழுதியுள்ள கட்டுரைகள் மனதைக் கவர்கின்றன. எட்டுக் கவிதைகளில், நெல்லை ஆ.கணபதியின் "நிறமும் பொருளும் மாறுவதேன்', அமுதா பாலகிருஷ்ணன் எழுதிய "அப்துல் கலாம் கவிதை', நித்தியா எழுதிய இரு கவிதைகள் சிந்திக்க வைக்கின்றன. பெ.கி.பிரபாகரன், மேஜர் தாசன், டாக்டர் சி.ஆர்.மஞ்சுளா முதலானோர் எழுதியுள்ள பல கட்டுரைகள் மலருக்கு அழகு சேர்க்கின்றன. மேலும், இதிகாசம், புராணம், வரலாறு, இசை, ஓவியம், பயண அனுபவம் எனப் பல்சுவைக் கட்டுரைகள் அழகிய புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன. நகைச்சுவை துணுக்குகள் அத்தனையும் சிரிப்புத் தோரணங்கள். ஸ்ரீகாஞ்சி பெரியவர், ஸ்ரீபவானி அம்மன், ஸ்ரீதுர்காம்பிகை, ஸ்ரீபரீட்சை விநாயகர், ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் ஆகியோரின் வண்ணப்படங்கள் ஆன்மிக அன்பர்களுக்கு வரப்பிரசாதம்!
ஸ்ரீ சாயி மார்க்கம் - பக்.112; ரூ.100.
படிக்கப் படிக்க ஆத்மானந்தம் தரும் மலர். நாடெங்கும், ஏன் உலகின் பல பகுதிகளிலும், ஆங்காங்கே ஷீரடி சாயி நாதனின் ஆலயங்கள் எழும்பிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் பச்சை வண்ணத்தில் கண்ணைக் கவரும் மரகத சாயி பாபா தரிசன மையம் சென்னை மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளதை சாயி மார்க்கம் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. இத்துடன், சாயி பக்தர்களின் ஆன்மிக அனுபவங்களை சில கட்டுரைகள் மூலம் தெரிந்து கொண்டு பூரித்துப் போகிறோம். எழுத்தாளர் சிவசங்கரியின் தமிழ் மொழி பெயர்ப்பு கட்டுரை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. இக்காலத்திலும் சாயியின் லீலைகள், அனுக்கிரகம் நமக்கெல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அக்கட்டுரை ஏற்படுத்துகிறது. ஸ்ரீராம் எழுதியுள்ள வட இந்திய ஸ்தல யாத்திரை கட்டுரை, நாமும் துணிந்து வட இந்தியாவின் புனிதத் தலங்களுக்குச் சென்று வரலாமே என்ற ஆவலைத் தூண்டுகிறது. பல நல்ல விஷயங்களை உள்ளடக்கிய சாயி மார்க்கம் தீபாவளி மலர், சாயி பக்தர்களுக்கு மட்டுமின்றி, ஆன்மிக அன்பர்கள் அனைவருக்குமான நல்ல வழிகாட்டியாக விளங்கும் என்பது உறுதி.
சண்முக கவசம் - பக்.208; ரூ.100.
தமிழையும் முருகனையும் ஒப்பிடும் திருமுருக கிருபானந்த வாரியாரின் கட்டுரைத் தகவல்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன. ஸ்ரீ பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகளின் சண்முக கவசச் சிறப்பு மிக அருமை. பாலமுருகனடிமையின் "ஞானம் பெறலாம்,நலம் பெறலாம், மோன வீடு ஏறலாம்' என்கிற கட்டுரை பக்திப் பரவசமடையச் செய்கிறது.
எந்த வேளையும் கந்த வேளைத் துதிக்கத் தூண்டும், கவி மலர்கள் நிரம்பியுள்ளன. கண்ணதாசன், அரிமா இளங்கண்ணன், இரா கலியாணசுந்தரம், கே.சி.எஸ் அருணாசலம், பழநி இளங்கம்பன், புதுவயல் செல்லப்பன், குமரிச் செழியன், நெல்லை ஆ.கணபதி, ரமணன் ஆகியோரின் கவிதைகளும், கி.வாஜ, பரத்வாஜ ஸ்வாமிகள், தேர்தல் ஆணையத் தலைவர் தா.சந்திரசேகர்,கன்னலூர் மு.விவேகானந்தன், திரு இராமலிங்க ஸ்வாமிகளின் கட்டுரைகளும் சிறப்பு.
இறையன்பு, லேனா தமிழ்வாணன் கட்டுரைகள் மற்றும் தினமணி ஆசிரியர் திரு.
வைத்தியநாதன் ஆற்றிய உரையை "தினந்தோறும் பிரமிக்க வைக்கிறது திருக்குறள்' என்ற கட்டுரையாக்கியிருப்பது அருமை.
புண்ணிய தல யாத்திரை பற்றிய கட்டுரைகளில் ஏராளமான தகவல்கள் நிரம்பியிருக்கின்றன. படிக்க, பரவசமடைய இந்த சண்முக கவசம் தீபாவளி மலர் உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.