நூல் அரங்கம்

கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு - நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா; பக்.176; ரூ.159; தோழமை,

கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு - நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா; பக்.176; ரூ.159; தோழமை, சென்னை-78; )044-2366 2968.
 பிறரைச் சிரிக்க வைத்த நகைச்சுவைக் கலைஞர் சந்திரபாபுவின் வாழ்க்கை எந்த அளவுக்குச் சோகம் நிரம்பியது என்பதை நெஞ்சைத் தொடும் வகையில், இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் மு.ஞா.செ.இன்பா.
 அப்பழுக்கற்ற தேவாதி தேவர்களாக அவதாரம் எடுத்து நம் மக்களின் கனவிலும் நினைவிலும் வாழ்ந்த - வாழ்கின்ற நிழல் உலக ஒப்பனைக் கதாநாயகர்களின் முகமூடிகளைக் கிழித்தெறியவும் தவறவில்லை இந்த நூல்.
 ஓரளவுக்கு மேலோட்டமாக சந்திரபாபுவைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இந்த நூலில் உள்ள பல தகவல்கள் ஆச்சரியத்தையும், சில தகவல்கள் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும்.
 சந்திரபாபு எழுதி, நடித்து இரண்டாயிரம் அடிவரை வளர்ந்த "அப்துல்லா' என்ற திரைப்படம், பின்னர் எப்படி சிவாஜி நடிக்க "பாவமன்னிப்பு' என்ற பெயரில் வெளியானது என்பதையும், அந்தப் படத்தில்கூட மூலக்கதை சந்திரபாபு என்று டைட்டில் கிரடிட் கொடுக்கப்படாததையும் வலியுடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர்.
 தமிழ்த் திரையுலகின் தனிப்பெரும் சக்தியாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆரை சந்திரபாபு "மிஸ்டர் எம்.ஜி.ஆர்.' என்று பெயர் சொல்லித்தான் அழைப்பாராம். ஆனால் எம்.ஜி.ஆர். சந்திரபாபுவை "பாபு சார்...' என்றே அழைப்பாராம். இந்த காரணத்தாலேயே பிற்காலத்தில் தனது படங்களில் சந்திரபாபு இருப்பதைத் தவிர்த்தார் என்று கூறுகிறார் நூலாசிரியர்.
 எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாக வைத்து "மாடி வீட்டு ஏழை' என்ற படத்தை ஆரம்பித்தபோது மாடி வீட்டில் இருந்த சந்திரபாபு, பின்னர் ஏழையாகி, தன்னிடம் கால்ஷீட் கேட்டு வந்த கதாசிரியர் ஏ.எல்.நாராயணனிடம் கேட்ட கேள்வி: "சோறு போடுவீங்களா?'
 சந்திரபாபு என்ற மகத்தான கலைஞனின் வாழ்க்கையை நேர்கோட்டில் விவரிக்காமல், அப்போதிருந்த அரசியல், சினிமா சூழலையும் இணைத்தே விவரிக்கிறது இந்த நூல்.
 
 டூரிங்குக்கு மறுப்பு -பிரெடெரிக் எங்கெல்ஸ்; தமிழில் கே.ராமநாதன்; பக்.602; ரூ.380; அலைகள் வெளியீட்டகம், 9755, என்.எஸ். கிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம், சென்னை - 24.
 பொதுவுடைமை கருத்துக்கு எதிரான கருத்துகளை முன் வைத்தவர்கள் பலர். அவர்களில் ஒருவர் ஒய்கேன் டூரிங். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், உழைப்பு, உடைமை, ஊதியம் அல்லது கூலி குறித்து கார்ல் மார்க்ஸ் முன்வைத்த கருத்துகளுக்கு நேர் எதிரான கருத்துகளை டூரிங் கூறினார். இதை மறுத்துரைத்தும், மார்க்ஸின் கொள்கையை விரிவாக விளக்கும் வகையிலும் எங்கெல்ஸ் எழுதிய நூல்தான் டூரிங்குக்கு மறுப்பு. 1876-78 காலகட்டத்தில் நடைபெற்ற விவாதம்.
 இத்தகைய நூல்களை வெளியிடும்போது, கார்ல் மார்ஸின் அடிப்படைக் கொள்கை, இன்றைய பொருளாதாரச் சூழல், அதன் மோசடித்தன்மை ஆகியவற்றின் சுருக்கமான அறிமுகம் இல்லாமல் எடுத்த எடுப்பில் இந்த நூலுக்குள் வாசகனை நுழையவிட்டால், ஒன்று வாசகன் சலிப்படைவான், அல்லது தவறான கொள்கை ஈர்த்துவிடும். உதாரணமாக, "பொருளாதார இயக்கவிதிகள்: நிலவாடகை' என்ற அத்தியாயத்தில் டூரிங் குறிப்பிடும் 5 விதிகளும் இன்றைய தாராளமய கொள்கைக்குப் பொருந்துவன.
 முதலாளி, தொழிலாளி என்ற இடைவெளி இன்று பல்வேறு ஒப்பனைகளில் மறைந்து கிடக்கிறது. மக்களையும் பங்குதாரர்களாக - சொற்ப முதலாளிகளாக இடம்பெறச் செய்யும் தனியார்மய புரட்சி தலைவிரித்தாடும் இந்த வேளையில், எதிர்க் கருத்துகளால் ஈர்க்கப்படும் ஆபத்து அதிகம்.
 கார்ல் மார்க்ஸின் கொள்கைகள் குறித்து சிறிதளவு வாசிப்பு அனுபவத்துக்குப் பிறகே இந்த நூலை ஒருவர் படிக்க வேண்டும். படிக்க முடியும்.
 பொருளாதாரத்துறைப் பேராசிரியர்கள் தங்கள் மாணவர்களை இந்நூலின் குறிப்பிட்ட சில அத்தியாயங்களையாவது படிக்கச் செய்தல் வேண்டும். மொழிபெயர்ப்பாளரின் உழைப்பு பிரமிக்க
 வைக்கிறது.
 
 கற்றோர் போற்றும் கண்ணதாசன் - ஒரு தொகுப்பு -தொகுப்பாசிரியர் ஆர்.பி.சங்கரன்; பக்.228; ரூ.120; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 2682.
 கவியரசு கண்ணதாசனைப் பற்றிய 25 கட்டுரைகள் அடங்கிய நூல். 1968ஆம் ஆண்டு "வனவாசம்' நூல் வெளியீட்டு விழாவின்போது, கண்ணதாசனின் கவி ஆற்றல் குறித்தும், அரசியல் துணிவு பற்றியும் காமராஜர் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு, முதல் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. பாரதியின் நூற்றாண்டுவிழா காணுகின்ற ஆண்டில் (1981) கண்ணதாசன் மறைந்ததற்கு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். விடுத்த இரங்கல் செய்தியை இப்போது படித்தாலும் கண்கள் கலங்குகின்றன. கலை, இலக்கியம், அரசியல் எனப் பல துறைகளில் கண்ணதாசனுடன் கை கோர்த்துக் கொண்டு பவனி வந்த பெருமக்கள் பலர், கண்ணதாசனைப் பற்றிப் பல்வேறு காலகட்டங்களில் செய்த பதிவுகளை அழகிய நூலாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் ஆர்.பி.சங்கரன். இயக்குநர் ஸ்ரீதர், சிவாஜி கணேசன், வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன், தமிழறிஞர்கள் கா.அப்பாதுரை, மா.இராசமாணிக்கனார், அரசியல் பிரபலங்கள் கே.ஏ.மதியழகன், வைகோ போன்றோர் ஆற்றிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும் காணக் கிடைக்காதவை. பெற்றோருக்கு 8ஆவது பிள்ளையாகப் பிறந்த கண்ணதாசனின் 88ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளிவந்திருக்கும் சிறந்த நினைவுப் பெட்டகம்.
 
 திருவாசகம் சொற்பொருள் விளக்கம் - அ.ஜம்புலிங்கம்; பக்.488; ரூ.300; இந்துமதி பதிப்பகம், சிதம்பரம்-1; )04144-220980.
 மாணிக்கவாசகரால் அருளிச் செய்யப்பட்ட திருவாசகத்திற்கு உரை எழுதக்கூடாது என்று பழங்காலத்தில் ஒரு மரபு இருந்தது. ஆனால், அந்த மரபையும் மீறி பலர் உரை எழுதியுள்ளனர். அதற்குப் பிறகும் பல உரைகள் எழுந்தவண்ணம் உள்ளன. அந்த வரிசையில் இந்நூலும் ஒன்று.
 திருவாசகப் பதிகத் தொகை, திருவாசகத் தலங்கள், திருவாசகச் சிறப்பு, மாணிக்கவாசகர் காலம் போன்றவை முன்பகுதியில் தரப்பட்டுள்ளன. பாடல்களுக்கான உரை விளக்கம் செம்மையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், மாணிக்கவாசகர் காலம் பற்றி இதற்கு முன் பலரும் முன்வைத்த தவறான காலத்தையே இவரும் கிளிப்பிள்ளை போல (8ஆம் நூற்றாண்டு) கூறியுள்ளார். தற்போது வெளிவரும் நூல்கள் பலவும் படியெடுக்கப் படுபவையாகவே உள்ளன.
 மாணிக்கவாசகர் காலம் எது என்பதையும், அவர் மூவர் முதலிகளுக்கும் முன்னையவர் என்பதையும் தக்க சான்றுகளுடன் நுட்பமான ஆராய்ச்சியின் மூலம் மறைமலையடிகள், பாலூர் கண்ணப்ப முதலியார், மணக்கரை மாணிக்க அம்பலவாணன், புலவர் ந.ரா.முருகவேள், சிவப்பிரியா முதலிய பல ஆய்வறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். மாணிக்கவாசகரே தம் திருவாசகப் பாடல்களில் தம் காலம் பற்றித் தெள்ளத் தெளிவாகக் கூறியிருப்பதை, 2009 இல் வெளிவந்த டாக்டர் சிவப்பிரியாவின் தெளிந்த, ஆழ்ந்த, கடின உழைப்புடன் கூடிய ஆய்வு (இரு தொகுதிகள்) தெளிவுபடுத்துகிறது. மேற்கூறியவர்கள் நூல்களை இந்நூலாசிரியர் பார்க்கவில்லை - படிக்கவில்லை போலும்!
 மேலும், பாடல்களைத் தேடுவதிலும் சிரமப்பட வேண்டியுள்ளது. காரணம், பாட்டு முதற் குறிப்பகராதியும் சொல்லடைவும் இல்லாதது. இதுவே இந்நூலுக்கு மிகப்பெரிய குறை.
 
 கிருஷ்ணதேவராயர் - ஆர்.சி.சம்பத்; பக்.112; ரூ.90; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; )044 - 4200 9603.
 இந்த நூலைப் படிக்கும்போது மாணவர் பருவத்தில் வரலாறு படித்த நினைவுக்கு நிச்சயம் அழைத்துச் செல்லும். விஜயநகரப் பேரரசு உருவான வரலாற்றை மிகவும் அழகாக விவரிக்கிறது நூல்.
 மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து கன்னட, தெலுங்கு, தமிழக மக்களின் அன்பைப் பெற்றவர் கிருஷ்ணதேவராயர். வீரமும் கலையுணர்வும் ஒரு சேர அமைந்த ஒப்பற்ற மனிதர்.
 விஜயநகரப் பேரரசை வெவ்வேறு வம்சங்கள் ஆண்டன. பின்பு விஜயநகரப் பேரரசின் மன்னராக கிருஷ்ணதேவராயர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது அவர் முன் பல சவால்கள் நிறைந்திருந்தன. முதல் பத்து ஆண்டுகள் ரத்த மயமான காலங்களாக இருந்ததைப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
 படையெடுப்பு என்றால் வீரர்கள், ஆயுதங்கள் மட்டும் செல்வதில்லை. கூடவே பலவகையான ஆட்கள், வீரர்களுக்கு உதவ உணவு, மூட்டை முடிச்சு இத்யாதி என்று ஒரு நகரமே நகரும் என்பதை அறிய
 முடிகிறது.
 கைவிட்டுப் போன பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும் என அவருடைய தாய் கட்டளையிட்டாள் என்பதற்காக கலிங்கத்தின் மீது போர் தொடுத்து வெற்றி பெற்ற வரலாறும், படைகளை அணிவகுக்க வைப்பதிலும், அவற்றை இயங்கச் செய்வதிலும், இடையில் எதிர்படும் இடையூறுகளை அவர் தனது போர் நுட்ப அறிவால் வென்றெடுத்த யுக்திகளையும், கிரக நிலை சரியில்லை எனும்போது ஆட்சி அதிகாரத்தை அவருடைய குருவிடம் ஒப்படைத்த சம்பவங்களையும் பதிவு செய்திருப்பதும் அருமை.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com