நூல் அரங்கம்

தமிழில் நாடகம் பற்றிய நூல்கள் மிக அரிதாகவே வெளிவருகின்ற சூழலில், இந்திய நாடக அரங்கின் போக்கையே
நூல் அரங்கம்
Published on
Updated on
3 min read

பார்சி அரங்கு தோற்றமும் வளர்ச்சியும்- அரிமளம் சு.பத்மநாபன்; பக்.148; ரூ.140; காவ்யா பதிப்பகம், சென்னை-24; )044-2372 6882.
 தமிழில் நாடகம் பற்றிய நூல்கள் மிக அரிதாகவே வெளிவருகின்ற சூழலில், இந்திய நாடக அரங்கின் போக்கையே புரட்டிப் போட்ட பார்சி அரங்கின் வரலாறு குறித்த இந்த நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றே கூற வேண்டும்.
 இந்தியில் சோம்நாத் குப்தா எழுதிய இந்நூலை கேத்ரின் ஹன்சென் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க, அரிமளம் சு.பத்மநாபன் தமிழில் அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலாசிரியர் ஏற்கெனவே சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் களஞ்சியம் என்ற 1200 பக்கங்கள் கொண்ட பெரு நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 பார்சி அரங்கு என்பது பார்சி இன மக்களால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படும் நாடக அரங்குகள், பார்சி நாடக ஆசிரியர்கள், பார்சி நாடகங்கள், பார்சி மேடைகள், பார்சி நாடகக் கம்பெனிகள், பார்சி நடிகர்கள், பார்சி இயக்குநர்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய சொல்லாகும்.
 இந்திய அரங்கக் கலை வரலாற்றில் பிரித்துப் பார்க்க முடியாத வகையில் அதன் ஓர் அங்கமாக பார்சி அரங்கு தன்னை இந்தியமயமாக்கிக் கொண்ட தன்மையை விளக்குவதாகவே இந்த நூல் விளங்குகிறது.
 பார்சி நாடகக் கம்பெனிகளின் தமிழக வருகை பற்றியும் அதன் விளைவாகத் தமிழ் நாடக மேடைகளில் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றியும் பம்மல் சம்பந்த முதலியார் முக்கியமான பதிவுகளைத் தந்திருக்கிறார் என்பதிலிருந்தே பார்சி அரங்கின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
 புரோட்டோகால்ஸ் யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை - செர்கி நிலஸ்; ஆங்கிலம் வழி தமிழில்: ஆரூர் சலீம்; பக்.144; ரூ.100; அடையாளம், புத்தாநத்தம்; )04332 - 273444.
 1905 இல் ரஷ்ய மொழியில் செர்கி நிலஸ் எழுதிய இந்நூல், இன்றைய உலகமயச்சூழலில் நிகழ்ந்துள்ள மாற்றங்களுக்கான திட்டங்களை முன் வைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உலகம் முழுவதும் தங்களுடைய ஆதிக்கத்தை எப்படி நிறுவுவது? அந்த ஆதிக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள் எவை? மனிதர்களை எவ்விதம் கையாண்டு அடிமைப்படுத்துவது? என்று சியோன் யூதர்கள் வகுத்த செயல்முறைத் தந்திரங்கள் அடங்கிய இந்நூல், அக்காலத்தில் ஒரு ரகசிய அறிக்கையாகச் சுற்றுக்கு விடப்பட்டது.
 மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும், அமெரிக்கா போன்ற வல்லரசுகளும் உலகம் முழுவதையும் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர இப்போது என்னவெல்லாம் செய்கிறார்களோ - அதற்காக எப்படியெல்லாம் திட்டமிடுகிறார்களோ - அவற்றையெல்லாம் 110 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நூல் சொல்லியிருக்கிறது.
 உதாரணமாக, இனம், மதம், வர்க்கம் ஆகிவற்றுக்கிடையே சண்டையை மூட்ட வேண்டும்; பொம்மை அரசாங்கங்களை நிறுவி தங்களுக்குச் சாதகமானவர்களை ஆட்சியாளர்களாக நியமிக்க வேண்டும்; தீவிரவாதத்தின் பெயரால் மக்களைப் பயமுறுத்தி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்; உலகளாவிய உளவு வலைகளைப் பின்ன வேண்டும்; மூலதனத்தில் ஏகபோகத்தை நிலைநாட்ட வேண்டும்; நீண்டகாலத் தவணை உடைய வெளிநாட்டுக் கடன்களைக் கொடுத்து நாட்டைச் சுரண்ட வேண்டும்; வளர்ச்சியின் பெயரால் மக்களை ஏமாற்ற வேண்டும்; சிறு - குறு தொழில்களுக்கு வேட்டு வைத்து, பெரு நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பன போன்றவற்றைச் சொல்லலாம்.
 மக்களின் நல்வாழ்விற்காகப் போராடுகிறவர்கள், எவ்வளவு துல்லியமாக மக்களின் எதிரிகள் திட்டமிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் குறிப்பிடத்தக்க நூல்.
 மார்க்ஸ் எங்கெல்ஸ் மார்க்சியம் - வி.இ.லெனின்; பக்.216; ரூ.150; அலைகள் வெளியீட்டகம், சென்னை-24; )044- 2481 5474.
 1895 - 1922 காலகட்டத்தில் ரஷ்யப் புரட்சித்தலைவர் லெனின் எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு அவற்றைப் பற்றிய அறிமுகமாக இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது. மார்க்சியத்தின் சாரத்தை - உலக இயக்கப் போக்குகளின் அடிப்படைத் தன்மைகளை நூல் விளக்கிச் செல்கிறது. பொதுவுடமை இயக்கங்களின் வளர்ச்சிப் போக்கில் சந்திக்க நேரும் பிரச்னைகளைப் பற்றிப் பேசும் கட்டுரைகள், மார்க்சியத்தின் அடிப்படைகளை விளக்கும் கட்டுரைகள், 1917 இல் நிகழ்ந்த ரஷ்யப் புரட்சியின் பின்பு, அந்நாட்டின் பொருளாதாரம், அரசியல் ஆகியவை மாறிவிட்ட சூழ்நிலையில் இளைஞர் கழகங்களின் பங்கு பற்றி லெனின் ஆற்றிய உரை, காரல்மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் வரலாற்று முக்கியத்துவம் பற்றிச் சொல்லும் கட்டுரைகள் என விரிந்து செல்லும் இந்நூல், சமூக மாற்றத்தை விரும்புபவர்களுக்கு பயன்படும். மொழிபெயர்ப்பாளர் பற்றிய எந்தக் குறிப்பும் இந்நூலில் இல்லை.
 முதலுதவி- வாண்டுமாமா- பக்.296; ரூ.180; தனலட்சுமி பதிப்பகம், சென்னை-17; )044-2436 4243.
 இன்றைய அவசர உலகத்தில் விபத்துகள் சர்வசாதாரணமாகிவிட்டன. விபத்தில் சிக்கியவர்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்து இந்நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலோட்டமாகக் கருத்துகளைக் கூறாமல் முதலுதவியின் நோக்கம், கோட்பாடு என்பவை குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 காயம்பட்டவர்கள், தீக்காயம் அடைந்தவர்கள், சுயநினைவை இழந்தவர்கள், ரத்தக்கசிவு ஏற்பட்டவர்கள், விஷக்கடி போன்ற அனைத்து வகையான விபத்துகளுக்கான முதலுதவி சிகிச்சைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. சாதாரணத் தலைவலி தொடங்கி வெகு அரிதான விஷவாயு விபத்துகள் வரை விவரித்து, அதற்கான முதலுதவி முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
 சம்பவ இடத்தில் கிடைக்கும் பொருள்களை வைத்துக் கூட முதலுதவி செய்யலாம். தரையில் கிடக்கும் குச்சிகள், இடுப்பில் கட்டியிருக்கும் பெல்ட், அரைஞாண் கயிறு போன்ற பொருள்கள் கூட முதலுதவி செய்வதற்குப் பயன்படுகின்றன என்பதை விளக்கியுள்ளார்.
 முதலுதவி சிகிச்சை குறித்த படங்கள், ஓவியங்களும் இடம்பெற்றுள்ளதால், படிப்பவர்களால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். விபத்தில் சிக்கியவர்களுக்கு மட்டுமின்றி, முதலுதவி செய்பவர்களுக்கும் ஆபத்துகள் வரலாம் என்பதால் முதலுதவி செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் நூலின் தொடக்கத்திலேயே கூறப்பட்டுள்ளன.
 புத்தகத்தின் ஆசிரியர் மருத்துவப் பட்டம் பெற்றவர் அல்ல என்றாலும், முதலுதவி குறித்த ஆங்கில நூல்களைப் படித்து அதிலிருந்து முக்கியத் தகவல்களைத் திரட்டி தொகுத்து புத்தகமாக்கியுள்ளார். அனைவரின் வீட்டிலும் அவசியம் இடம் பெற வேண்டிய நூல்.
 இலக்கண விளக்கம் - (ஆறு தொகுதிகள்) கே.இராஜகோபாலாச்சாரியார்; எழுத்தியல்-பக்.104; ரூ.50; சொல்லியல்-பக்.128; ரூ.60; புணரியல்-பக்.224; ரூ.100; அணியியல்-பக்.272; ரூ.120; யாப்பியல்-பக்.304; ரூ.140; பொருளியல்-பக்.232; ரூ,100; கண்ணப்பன் பதிப்பகம், சென்னை-32; )044-2225 0905.
 இலக்கண விளக்கம் என்ற நூலை "குட்டித் தொல்காப்பியம்' என்றும் கூறுவர். இதை இயற்றியவர் திருவாரூர் வைத்தியநாத தேசிகர். 17ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல் இது. இதில் ஐந்திலக்கணங்களும் தெளிவுறக் கூறப்பட்டிருக்கின்றன. அதே பெயரில் வெளிவந்திருக்கும் இன்னொரு நூல் இது.
 "யாம் இந்நூலில் இலக்கணம் கூறிவரும் முறை புதியது. இம்முறையில் கற்பவர் சூத்திரங்களை மனப்பாடம் செய்யும் சிரமமின்றி, இலக்கணப் பயிற்சி பெற்றுப் பிழையற எழுதவும் இலக்கியங்களைப் படித்து அனுபவிக்கவும் கூடியவராவர்' என்று உறுதியாகக் கூறும் நூலாசிரியர் இராஜகோபாலாச்சாரியார், பல்லாண்டுகள் மாணவர்களுக்கு இலக்கிய - இலக்கணங்களைப் பயிற்றுவித்தவர். அவர் குறிப்பிட்டுள்ளபடியே எளிய முறையில் பயிற்சி அளிக்கும் விதத்தில் இந்நூல் அமைந்துள்ளது.
 எழுத்தியலில் ஐவகை இலக்கணங்கள், எழுத்தின் தொகையும் வகையும், எழுத்துகள் பிறக்கும் விதம், அளவு, அளபெடை, குறுக்கம், எழுத்துப்போலி போன்றவையும்; சொல்லியலில் நால்வகைச் சொற்களின் தன்மைகள், ஆகுபெயர், பொதுவினைகள், உறுப்பிலக்கணம், வழுவமைதி, அடைமொழி ஆகியவையும்; புணரியலில் எழுத்துகள் புணரும் விதமும்; அணியியலில் இருபதுக்கும் மேற்பட்ட அணிகளின் வகை விளக்கமும்; யாப்பியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை பற்றிய விளக்கமும்; செய்யுளியலில் ஐவகைப் பாக்கள், பாக்களின் இனம், இசைப்பாட்டு வகைகளும்; பொருளியலில் அகப்பொருள், களவியல், கற்பியல், புறப்பொருள் பற்றிய விளக்கங்களும் உள்ளன.
 பலருக்கும் எட்டிக்காயாகக் கசக்கும் இலக்கணம், இனி இனிக்கும் என்று கூறக்கூடிய வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com