கடித இலக்கியம்

கடித இலக்கியம்

கடித இலக்கியம் - இரா.காமராசு; பக்.320; ரூ.200; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
Published on

கடித இலக்கியம் - இரா.காமராசு; பக்.320; ரூ.200; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
செல்லிட பேசி அதிக அளவில் புழக்கத்தில் வந்த பிறகு உறவினர்களுக்கு, நண்பர்களுக்குக் கடிதம் எழுதுவது அடியோடு நின்றுபோய்விட்டது. கடிதம் எழுதுவதில் உள்ள சுகம், கடிதம் எப்போது வரும் என்ற காத்திருப்பு, கடிதம் வந்தபின் எழும் பல்வேறு உணர்வுகள் என இந்தத் தலைமுறையினரும், வருங்காலத் தலைமுறையினரும் இழந்த அனுபவங்கள், உணர்வுகள் அதிகம். அந்த அனுபவங்களை, உணர்வுகளை இந்நூல் தொட்டுக் காட்டுகிறது . 
பாரதியார் தன் மனைவிக்கு, பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்கு, தம்பி சி.விசுவநாதனுக்கு எழுதிய கடிதங்கள் இடம் பெற்றுள்ளன. ரசிகமணி டி.கே.சி., ராஜாஜிக்கு, தேசிகவிநாயகம் பிள்ளைக்கு, தனது மகள் நீலாவதிஅம்மைக்கு எழுதிய கடிதங்கள், எழுத்தாளர் 
கு.அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு, கி.ராஜநாராயணன் பாரததேவிக்கு, சுந்தர ராமசாமி அய்யனாருக்கு, வல்லிக்கண்ணன் சு.சமுத்திரத்துக்கு, பாரதிதாசனுக்கு வ.ரா., மு.கருணாநிதி ஆகியோர் எழுதிய கடிதங்கள் என சுவையான பல கடிதங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
பாரதியார் பரலி சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில், "தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது' என்று குறிப்பிட்டிருப்பது பாரதியாரின் தமிழ்ப்பற்றைக் காட்டுகிறது. 
புதுமைப்பித்தன் "எனதாருயிர் கண்ணாளுக்கு' என்று தொடங்கி அவருடைய மனைவிக்கு எழுதிய கடிதங்கள் அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கே அவர் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன. 19 வயதேயான கண்ணதாசன் பாரதிதாசனுக்கு எழுதிய கடிதத்தில் தன்னை "திருமகள்' மாதமிருமுறைப் பதிப்பின் கூட்டு ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். கடித இலக்கியம் பற்றி நூலாசிரியர் நூலின் தொடக்கத்தில் கூறியிருப்பது சிறப்பு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com