
திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை - இரா.இளங்குமரனார் (ஆறு தொகுதிகள்); தொகுதி-1, பக்.624, ரூ.500; தொகுதி-2, பக்.352, ரூ.300; தொகுதி-3, பக்.608, ரூ.500; தொகுதி-4, பக்.464, ரூ.350; தொகுதி-5, பக்.480, ரூ.400; தொகுதி-6, பக்.416, ரூ.350; ஆறு தொகுதிகள் மொத்தம் ரூ.2400; பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி-1; 04329-243245.
திருக்குறளுக்குப் பல்வேறு விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன - எழுதப்பட்டும் வருகின்றன. அவற்றுள் இரா. இளங்குமரனாரின் திருக்குறளுக்கான வாழ்வியல் விளக்கவுரை தனிச்சிறப்புப் பெற்றது. "திருக்குறள் நம் மறை' என ஆணித்தரமாகக்கூறும் இளங்குமரனாரின் ஆழங்காற்பட்ட புலமையை இத்தொகுதிகள் வெளிப்படுத்துகின்றன.
முப்பொருள் கூறிய திருவள்ளுவர் "வீடு' பற்றிக் கூறாமைக்கான விளக்கம்; ஆதி, பகவன், வாலறிவன், பரம்பரை ஆகிய சொற்களுக்கான விளக்கம் மிகவும் நுட்பமானவை. "மலர்மிசை ஏகினான்' என்பதற்கு மலரில் வீற்றிருக்கும் கடவுள் என்றே பலரும் பொருள் எழுதி வருகின்றனர். அச்சொல்லுக்கு தாயுமானவரின் "பண்ணேன் உனக்கான பூசை' என்ற பாடலை எடுத்துக்காட்டி, "மலர்மேல் நடந்தான் அல்லன்; மலர்மேல் இருந்தானும் அல்லன்; மலராகவே இருந்தான் அல்லனோ அவன்!' என்ற விளக்கம் அருமை.
திருக்குறளுக்குப் பொருள் முறையில் திருக்குறள் தரப்பட்டுள்ளது. "கற்றதனால் ஆய பயனென்கொல்' எனும் திருக்குறளுக்கான பொருள் முறை விளக்கம், "வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்/ கற்றதனால் ஆயபயன் என்கொல்?' என்று அமைகிறது. இப்படியே அனைத்துக் குறள்களுக்கும்.
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பெருங்கதை, தனிப்பாடல் திரட்டு மற்றும் ஒளவையார், வள்ளலார், தாயுமானவர் பாடல்களை மேற்கோள்காட்டி ஒப்பியல் முறையிலும், திறனாய்வியல் முறையிலும் திருக்குறளை விளக்கியுள்ளது, பல நூல்கள் பயின்ற அனுபவத்தைத் தருகிறது. பிழையில்லாமல், வேற்றுமொழிக் கலப்பில்லாமல், செந்தமிழில் திருக்குறளைப் பயில இவ்வரிய தொகுதிகள் உறுதுணையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.