பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி

பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி (கால வரிசையில்ஆவணப் பதிவுகள்) - பதிப்பாசிரியர்: சீனி.விசுவநாதன்; மொழிபெயர்ப்பு: கி.அ.சச்சிதானந்தம், இரா.சுப்பராயலு ; பக்.416; ரூ.350
பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி

பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி (கால வரிசையில்ஆவணப் பதிவுகள்) - பதிப்பாசிரியர்: சீனி.விசுவநாதன்; மொழிபெயர்ப்பு: கி.அ.சச்சிதானந்தம், இரா.சுப்பராயலு ; பக்.416; ரூ.350 ; வெளியீடு: சீனி.விசுவநாதன், 5/2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி.நகர், சென்னை-35.
 மகாகவி பாரதி ஒரு பத்திரிகையாளராகவும், தேசவிடுதலை என்ற இலட்சியத்துடன் ஓர் அரசியல் செயற்பாட்டாளராகவும் இயங்கி வந்திருக்கிறார். அவர் விடுதலை வேட்கையுடன் நடத்திய கூட்டங்கள், ஆற்றிய சொற்பொழிவுகள், "இந்தியா' பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் ஆங்கிலேய ஆட்சியாளரைக் கோபமடையச் செய்தன. அவரைக் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்ற நினைக்க வைத்தன. எனினும் பாரதி நிலைகுலைந்துவிடவில்லை. நண்பர்கள், தேச பக்தர்களின் ஆலோசனைப்படி புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்து அங்கிருந்து "இந்தியா' பத்திரிகை மூலம் தனது பணியைத் தொடர்ந்திருக்கிறார்.
 பாரதியின் செயல்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தடுக்கும் நோக்கத்துடன் பல்வேறு அரசாணைகள், கடிதங்கள், காவல்துறை அறிக்கைகள், ரகசிய குறிப்புகள் மூலமாக செய்து கொண்ட கருத்துப்பரிமாற்றங்களின் தொகுப்பாக (1907-1909) இந்நூல் மலர்ந்திருக்கிறது.
 அரசின் இத்தகைய செயல்பாடுகளுக்கு அக்காலத்தில் நடந்த பல நிகழ்வுகள் காரணமாக இருந்திருக்கின்றன. " படிப்பவர்களுக்கு சில அறிமுக வார்த்தைகள்' என்ற தலைப்பின் கீழ்அந்த நிகழ்வுகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
 "பஞ்சாபி' பத்திரிகையின் ஜஸ்வந்த்ராய், அட்வளே ஆகியோருக்குச் சிறைத்தண்டனை, விபினசந்த பாலர் கைது, 1907 -இல் லாலாலஜபதிராய் நாடு கடத்தப்பட்டது, வங்கப் பிரிவினையை எதிர்த்த போராட்டத்தில் சுரேந்திர நாத் பானர்ஜிக்குச் சிறைத்தண்டனை, தூத்துக்குடி பொதுகூட்டத்தில் பாரதியார் தலைமை தாங்கி பேசியது, 1908 இல் தடையை மீறி வ.உ.சி., சுப்பிரமணிய சிவா கூட்டம் நடத்தி பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டது, திருநெல்வேலி கலவரம், துப்பாக்கிச்சூடு, நெல்லை மாவட்ட ஆட்சியர் வின்ச் துரையின் கொடுங்கோன்மைப் போக்கு குறித்து பாரதி வெளியிட்ட கார்ட்டூன், பிரிட்டிஷ் ஆட்சியாளரால் கொண்டு வரப்பட்ட புதிய அச்சுச் சட்டம் என பல சுதந்திரப் போராட்ட கால நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. பாரதி குறித்த அரிய ஆவணம். சிறந்த முயற்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com