பாரதியின் செல்லம்மாள்
By DIN | Published On : 07th January 2019 01:33 AM | Last Updated : 07th January 2019 01:33 AM | அ+அ அ- |

பாரதியின் செல்லம்மாள்-சி.வெய்கை முத்து; பக்.176; ரூ.150; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17. ) 044-24314347.
செல்லம்மாள் பிறந்த கடையத்தில் ஆசிரியராகப் பணியாற்றியபோது கிடைத்த அனுபவம், அங்குள்ள சான்றோர்களிடம் கேட்டறிந்த தகவல் மூலம் இந்தப் படைப்பைத் தந்துள்ளார் நூலாசிரியர். மகாகவியின் வாழ்க்கையில் ஆதார சுருதியாக இருந்தவர் செல்லம்மாள். ஏறத்தாழ 24 ஆண்டுகளே அவர்களுடைய மணவாழ்க்கை. அதிலும் அவர்கள் சில சூழ்நிலை காரணமாக அவ்வப்போது பிரிந்திருந்தார்கள். அவர்கள் சேர்ந்திருந்த காலத்தின் செம்மை பற்றியும், பாரதியின் வாழ்வில் செல்லம்மாள் ஆற்றிய முக்கியமான பங்கை பற்றியும் நூலாசிரியர் அழகாக எடுத்துரைக்கிறார்.
பாரதியின் ஒரு பழக்கம் எப்படி செல்லம்மாளால் கண்டிக்கப்பட்டு, சரி செய்யப்பட்டது என்ற பதிவு மிகுந்த கவனத்துடன் கையாளப்பட்டுள்ளது. பாரதியின் ஞானத்தை அவரது எழுத்துகளில் காண்கிறோம். செல்லம்மாளின் ஞானத்தை அவர் எழுதிய பாரதியார் சரித்திரத்தில் காணலாம். "பாரதியார் என் பொருட்டு பிறந்தவர் அல்ல; இந்த உலகுக்கு ஞானம் போதிக்க வந்தவர்' என்ற வரிகள் அவரது ஆற்றலை உணர்த்தும்.
பொருளற்ற நிலையிலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காது செல்லம்மாள் இருந்ததை, ராஜன் செட்டியாரிடம் தன் வீட்டு நாற்காலியை அவர் விற்ற நிகழ்விலிருந்து அறிகிறோம். பராசக்தி நமக்கு தந்த கொடை பாரதி. செல்லம்மாளோ பாரதியின் இன்பங்களுக்கு காரணமாகவும் துன்பங்களுக்குத் தோளாகவும் வாழ்ந்தவர்.
"நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலேயே சேவகனாய்' என்று கண்ணனைப் பாடுவார் பாரதி. அது, செல்லம்மாளுக்கும் பொருந்தும் என்பதை பாரதி அன்பர்கள் இந்த நூலின் வழியாகத் தெரிந்து கொள்ளலாம். பாரதி இலக்கியத்துக்கு இந்நூல் அரிய புதுவரவு.