ஸ்ரீபாஷ்யம்- ராமாநுஜரின் பிரம்மசூத்திர விளக்கவுரை

ஸ்ரீபாஷ்யம்- ராமாநுஜரின் பிரம்மசூத்திர விளக்கவுரை - ஸ்வாமி; பக்.752; ரூ.600; ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை-35; 044- 2431 3646.
ஸ்ரீபாஷ்யம்- ராமாநுஜரின் பிரம்மசூத்திர விளக்கவுரை
Published on
Updated on
1 min read

ஸ்ரீபாஷ்யம்- ராமாநுஜரின் பிரம்மசூத்திர விளக்கவுரை - ஸ்வாமி; பக்.752; ரூ.600; ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை-35; 044- 2431 3646.
 பிரம்மசூத்ரம் என்கிற நூலை பாதராயணர் தொகுத்தது என்று கூறும் மரபு உள்ளது. வேத வியாசர் அருளியதே பிரம்ம சூத்ரம்; ஸ்ரீமந் நாராயணனே வியாசராக அவதரித்து பிரம்மசூத்ரத்தை அருளிச் செய்தார் என்றும் கூறப்படுகிறது. வேத-உபநிஷத்துக்கள் என்னும் ஞானப் பாற்கடலைக் கடைந்து பிரம்ம சூத்ரம் என்கிற அமிருதத்தைப் பெற்று, வியாசர் நமக்களித்தார் என்போர் உளர்.
 ராமாநுஜரின் பிரம்ம சூத்ர உரை "ஸ்ரீபாஷ்யம்' என்று அறியப்படுகிறது. சரஸ்வதி தேவியே ராமாநுஜரின் உரைக்கு "ஸ்ரீபாஷ்யம்' எனப் பெயரிட்டதாக நம்பப்படுகிறது.
 அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த அரிய நூலுக்குத் தற்காலத்திலும் பல உரைகள் உள்ளன. இது போன்ற நூல்கள் வேத-வேதாந்தப் பயிற்சியில் உள்ளவர்கள் இடையே புழங்கி வந்தன. அச்சுப் புத்தகங்கள் பெருகிவிட்ட தற்காலத்தில், ஹிந்து தத்துவ மரபை அனைத்துத் தரப்பு மக்களும் அறிந்து கொள்ள இவை உதவுகின்றன.
 மிகவும் சிக்கலான வேதாந்தக் கருத்துகளை எளிமையான முறையில் விளக்க முற்படுவது பிரம்மசூத்ரம். ஒரு சிந்தனைப் பொருளைக் கருவாக வைத்து, அதைப் பகுத்து ஆராய்ந்து, மாற்றுக் கருத்துகளை மறுத்து, தனது இறுதிக் கொள்கையை நிறுவுகிறார் ராமாநுஜர்.
 விஷய வாக்கியம், சம்சயம் (சந்தேகம்), பூர்வ பக்ஷம் என்கிற முந்தைய தத்துவ விளக்கம், ஆúக்ஷபம் என்கிற முந்தைய தத்துவ மறுப்பு, சித்தாந்தம் என்கிற தனது கொள்கையை நிறுவுதல் என்கிற வகையில் ராமாநுஜர் கையாள்கிறார். ஸ்ரீபாஷ்யம் வைணவ மரபில் சிறப்பான இடம் பெற்றது.
 ஆதிசங்கரருக்குப் பிற்பட்ட காலத்தவரான ராமாநுஜர், முன்பு நிலவிய ஐயங்களில் தெளிந்து, சூன்ய வாதத்தை மறுத்து ஸ்ரீபாஷ்யம் இயற்றினார்.
 அதற்கு இக்காலத்துக்கு ஏற்ற விதத்தில் உரை எழுதியுள்ளார் ஸ்வாமி. பாரம்பரிய முறையில் இவற்றைத் தொகுப்பதுடன், ஒவ்வொரு பாகத்தின் இறுதியில் கருத்துச் சுருக்கத்தை அளித்துள்ளார்.
 ராமாநுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கையை நிறுவுகிறது ஸ்ரீபாஷ்யம். ஸ்வாமி இயற்றியிருக்கும் இந்த உரை நூல், வேதாந்த தத்துவ மரபை அறிந்து கொள்ளும் நாட்டம் உடையவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com