

பூர்ணிமா.காம் - பட்டிமன்றம் ராஜா; பக்.184; ரூ.130; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; ) 044- 2436 4243.
வங்கிப் பணியாளராக இருந்த ராஜா, பட்டிமன்றப் பேச்சாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், திரைப்பட நடிகர் என்ற பன்முகத் திறன் படைத்தவர். மதுரை அருகே உள்ள சிறிய கிராமமான கீழமாத்தூரில் பிறந்து வளர்ந்தவர். தனது வாழ்க்கை அனுபவங்களை "மங்கையர் மலர்' இதழில் தொடராக எழுதினார். அதனுடைய நூல் வடிவம் இது.
இளம் வயதில் மின்சார விளக்கு இல்லாத வீட்டில் மிகவும் கஷ்டப்பட்டு படித்து தனது முயற்சியினால் முன்னேறிய நூலாசிரியர், தனது வாழ்க்கை அனுபவங்களை மிகவும் சுவையாக இந்நூலில் சித்தரித்துள்ளார்.
சாலமன் பாப்பையாவினால் பட்டிமன்றப் பேச்சாளராக அறிமுகப்படுத்தப்பட்ட அவர், தனது பட்டிமன்ற அனுபவங்களை நிறையக் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்தாலும், படப்பிடிப்பின்போது நிற்கக் கூட நேரம் இல்லாமல் வேலை செய்யும் கேட்டரிங் பையனின் கஷ்டம்தான் அவர் கண்களில் படுகிறது. ஸ்ரேயா உள்ளிட்ட பிரபல நடிகைகளுடன் நடித்திருந்தாலும் "மிகமோசமான புழுக்கத்தையெல்லாம் வாழ்க்கையில் அனுபவித்த' நடிகைகளின் துயரமே அவர் சிந்தனையில் உறுத்துகிறது.
திரைப்படங்களில் நடித்து எல்லாருக்கும் தெரிகிறவராக புகழ்பெற்றாலும், "தமிழ்நாடு இன்னமும் சிந்தனையை, சிறந்த அறிவாற்றலை விட சினிமாவைப் பெரிசா மதிக்குதேங்கிற எண்ணதுல தலையைக் குனிஞ்சுக்கிற' மனப்பான்மை நூலாசிரியரிடம் இருக்கிறது.
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகால தமிழக கிராம, நகர வாழ்க்கையை மிக அருமையாகச் சொல்லும் நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.