செஹ்மத் அழைக்கிறாள்- ஹரீந்தர் சிக்கா
By எம்.ஏ. சுசீலா | Published On : 18th November 2019 03:26 AM | Last Updated : 18th November 2019 03:26 AM | அ+அ அ- |

செஹ்மத் அழைக்கிறாள்- ஹரீந்தர் சிக்கா; தமிழில்: எம்.ஏ. சுசீலா; பக்.239; ரூ.300;
நற்றிணை பதிப்பகம் பிரைவேட் லிமிடெட், 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005.
புதுதில்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இந்தியக் கடற்படை லெஃப்டினண்ட் காமண்டர் ஹரீந்தர் சிக்கா. "செஹ்மத் அழைக்கிறாள்'
என்பது இவரது முதல் நூல்.
தேஜஸ்வரி சிங்- ஹிதாயத்கான் தம்பதிக்குப் பிறந்த ஒரே குழந்தை செஹ்மத். செல்வாக்கு மிக்க வியாபாரி, நாட்டுப்பற்று மிக்க குடிமகன், காஷ்மீரிய உளவாளி என பன்முகங்கள் கொண்டவர் ஹிதாயத் கான். ஒரு கட்டத்தில் ஹிதாயத்கான் புற்றுநோய்ப் பாதிப்புக்கு ஆளாக, அவருக்கு மாற்றாக இருக்கட்டும் என்று உளவுப் பணிக்கான பயிற்சி அவரது மகள் செஹ்மத்துக்கு அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் தந்தையின்
உளவுப் பணியைத் தொடர, பாகிஸ்தானிய ராணுவ வீரருக்கு மணமுடித்து அனுப்புகின்றனர். விசுவாசம் மிக்க முன்னாள் உளவாளியின் மகளாக, வாழ்வின் பாதியாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் ராணுவ வீரரின் மனைவியாக அவளின் வாழ்வு என்ன ஆகிறது என்பதை வெகு சுவாரஸ்யமாக விவரிக்கிறது இந்த நூல்.
1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் மிகுந்த ஒரு கால கட்டத்தில் உயிரைப் பணயம் வைத்து நாட்டைப் புரட்டிப் போடும் தகவல்களை மிக துணிச்சலாக கடத்தி வருகிறாள் இந்திய உளவாளி செஹ்மத். இந்த நாவல், உளவு வேலையில் ஈடுபடும் ஒரு பெண் குறித்த துப்பறியும் நாவல் மட்டுமல்ல, இந்திய- பாகிஸ்தான் போரில் முகம் தெரியாமல் போன ஒரு கதாநாயகியின் வீர வரலாறு என்றும் கூறலாம்.