

அறுபதுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1960 -1970) - அ.பிச்சை; பக்.424; ரூ.430; கபிலன் பதிப்பகம், 30, பி.கே.எம்.நகர், கருப்பாயூரணி, மதுரை - 625020.
1960 -1970 காலகட்டத்தில் தமிழில் வெளிவந்த கவிதை நூல்கள், கவிதை விமர்சன நூல்கள், சிறுகதை நூல்கள், சிறுகதை திறனாய்வு நூல்கள், நாவல்கள், நாவல்கள் பற்றிய விமர்சனங்கள், நாடக நூல்கள், இதழ்கள், திரைப்படங்கள், பயண நூல்கள், வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாறு நூல்கள். அறிவியல் நூல்கள், முக்கிய இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள் அனைத்தைப் பற்றியும் அறிமுகவும், எளிமையான விமர்சனமாகவும் எழுதப்பட்டுள்ள நூல்.
மரபுக் கவிதைகளின் செல்வாக்கு மேலோங்கி இருந்த அக்காலகட்டத்தில் சி.சு.செல்லப்பா, ந.பிச்சமூர்த்தி, தி.சோ.வேணுகோபாலன், பிரமிள் உள்ளிட்ட புதுக்கவிதை முன்னோடிகளின் கவிதை நூல்கள் வெளிவந்தன. தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதிய ஜெயகாந்தனின் "யுகசந்தி', "சுயதரிசனம்', கு.ப.ராஜகோபாலனின் "சிறிது வெளிச்சம்' 1970- இல் வெளிவந்த குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுப்புகளாகும்.
நா.பார்த்தசாரதி, அகிலன் உள்பட பலர் எழுதிய ஜனரஞ்சக நாவல்கள் வெளிவந்த அதே காலகட்டத்தில்தான் "ஒரு புளிய மரத்தின் கதை', "மலரும் சருகும்', "அம்மா வந்தாள்', "மோகமுள்', "சாயாவனம்', "பள்ளிகொண்டபுரம்', "தலைமுறைகள்', "புத்ர', "சட்டிசுட்டதடா' ஆகிய நாவல்களும் வெளிவந்து தமிழ் நாவல் உலகில் தடம் பதித்தன.
க.கைலாசபதியின் "தமிழ் நாவல் இலக்கியம்' பற்றிய குறிப்பிடத்தக்க நூலும் இக்காலகட்டத்தில்தான் வெளிவந்தது.
இதேபோன்று தமிழில் வெளிவந்த நாடக நூல்கள், நாடகங்களைப் பற்றிய விமர்சனங்கள், திரைப்படங்கள், திரைப்பட ஆய்வுகள், சிற்றிதழ்கள், திறனாய்வு நூல்கள், வரலாற்று நூல்கள், குறிப்பிடத்தக்க இலக்கிய நிகழ்வுகள் என தமிழ் இலக்கிய உலகில் நிகழ்ந்த பதிவுகளைப் பற்றிய களஞ்சியமாக இந்நூல் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.