கண்டதும்... கேட்டதும்
By DIN | Published On : 08th February 2021 10:23 AM | Last Updated : 08th February 2021 10:23 AM | அ+அ அ- |

கண்டதும்... கேட்டதும் - விஜயலட்சுமி மாசிலாமணி; பக்.144; ரூ.70; விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை-91; )044- 2258 0474.
உலகமெங்கும் பெண்களின் நிலை ஆண்களின் நிலையைக் காட்டிலும் கீழானதாகவே இருக்கிறது. இந்நிலை மாற, பெண்கள் தானும் உயர்ந்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் உயர்த்த வேண்டும், ஓர் ஆசிரியரைப் போல. உலகின் பல நாடுகளில் உள்ள பெண்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
நூலாசிரியர் பல நாடுகளுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களின் அடிப்படையில், அந்நாடுகளில் தான் கண்டவற்றையும், கேட்டவற்றையும் ஆதாரமாகக் கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் பெண்கள்நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்நூலில் எடுத்துரைத்துள்ளார்.
அமெரிக்காவில் ஆண்,பெண் வித்தியாசம் பார்த்து வேலை கொடுக்கப்படுவதில்லை. இத்தாலியில் ஓர் ஆணும் பெண்ணும் நன்றாகப் பழகிய பின்னரே திருமணம் செய்து கொள்கிறார்கள். லிபியாவில் ஓர் ஆண் நான்கைந்து பெண்களை மணம் செய்து கொள்வான். சவுதி அரேபியாவில் இரவில் பெண்கள் எவ்வளவு நகைகளையும் அணிந்து பயமில்லாமல் தெருவில் நடந்து செல்லலாம்; ஆனால் அந்தப் பெண்ணுடன் அந்தப் பெண்ணின் கணவனோ, அப்பாவோ, தம்பியோ, அண்ணனோ செல்ல வேண்டும். பெண்களின் வாழ்நிலை குறித்த இத்தகைய தகவல்கள் நூல் முழுக்க உள்ளன.
இந்தியா, இலங்கை, பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில் இருந்து வேலைக்காக வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் பெண்கள் அடிமைகளாக அவதிப்பட நேரிடுவதை பல பெண்களைச் சந்தித்துத் தெரிந்து கொண்டது, கேள்விப்பட்டதன் அடிப்படையில் விவரித்திருக்கிறார்.
வளைகுடா நாடுகளில் பெண்கள் படும் துன்பங்களில் இருந்து அவர்களை மீட்க அங்குள்ள புலம் பெயர்ந்தோர்களின் சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மனு கொடுப்பதில் நூலாசிரியர் பங்கும் இருந்திருப்பது, பெண்களின்நிலை மேம்பட அவருக்குள்ள அக்கறையை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.