காலா பாணி

காலா பாணி - நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை; மு. ராஜேந்திரன்; பக்.536; ரூ. 650; அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி-604408.
காலா பாணி
Published on
Updated on
1 min read

காலா பாணி - நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை; மு. ராஜேந்திரன்; பக்.536; ரூ. 650; அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி-604408.
 சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு முகம் தெரியாத தீவில் இறக்கிவிடப்படுவதுதான் காலா பாணி. நூலாசிரியர் ராஜேந்திரனின் இந்த "காலா பாணி', நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை.
 1801- இல் சுமார் ஆறு மாதங்கள் நடந்த காளையார்கோவில் போரை நாட்டின் முதல் சுதந்திரப் போர் என நிறுவ முடிந்தாலும்கூட இன்னமும் உரிய இடம் அல்லது பெருமை அதற்கு வழங்கப்படவில்லை.
 காளையார்கோவில் போரை முன்வைத்து ஆசிரியர் எழுதிய "1801' நாவலின் தொடர்ச்சி அல்லது அதன் ஒரு பகுதிதான் "காலா பாணி' நாவல் என்று கொள்ளலாம். இரு நூறு ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மன்னரும், நாட்டின் முதல் புரட்சித் திலகம் வேலு நாச்சியாரின் மருமகனுமான வேங்கை பெரிய உடையணத் தேவன் மற்றும் அவர் கூட்டாளிகள் 72 பேர் நாடு கடத்தப்பட்ட கதைதான் இந்த நாவல்.
 பெரிய உடையணத் தேவன் கைது செய்யப்பட்டதில் தொடங்கி, திருமயம் கோட்டையிலிருந்து தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு, துறைமுகத்தில் கப்பலேற்றி, பினாங்கிற்குக் கடத்தப்பட்டு, அங்கே அவர்கள் மாண்ட துயரக் கதையைச் சிறப்பாக எழுதிச் செல்கிறார் ஆசிரியர். வேங்கை உடையணத் தேவனும் குழுவும் நாடு கடத்தப்பட, அவருடைய உறவுகள் படும்பாடுகள் எழுதப்பட்டுள்ள விதம் சிறப்பு.
 கடலுக்கு அப்பால் நடந்த கதையின் சில பகுதிகள் மட்டும் வரலாறும் புனைவுமாகக் கலந்திருக்கிறது. நாவலாசிரியர் நாவல் சம்பந்தப்பட்ட வரலாற்றிடங்களை எல்லாம் நேரில் சென்று பார்த்து நாவலைச் செறிவூட்டியுள்ளார்.
 உடையணத் தேவனின் மனைவியும் மற்றொரு வீரமங்கையுமான மருதாத்தாள் பாத்திரத்தை மேலும் புனைவுகள் சேர்த்து, நாவலின் செயற்படு நாயகியாக வலுப்படுத்தியிருக்கலாம். எந்தவொரு வரலாறு என்றாலும் நெடுகிலும் மேஜர் ஜேம்ஸ் வெல்ஷ்களும் கிறிஸ்டியானாக்களும் ஆங்காங்கே இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
 நாவல் செல்லும் தடத்திலேயே அன்றைய தமிழகத்தின், தமிழர்களின் வாழ்க்கைச் சூழல், பிரிட்டிஷாரின் நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகள் என பிறவற்றையும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
 வேங்கை உடையணத் தேவனைப் போல தமிழர் வரலாற்றில் இன்னும் பலர் அறியப்படாமலும் பதியப்படாமலும் இருக்கிறார்கள். இந்நூலின் ஆசிரியரைப் போல வேட்கையுடன் பலரும் முயன்று தேட வேண்டும். "காலா பாணி'யைப் போல நிறைய நாவல்கள், வரலாற்றுப் பதிவுகள் வெளி வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com