குடந்தைப் பகுதி சித்தர்கள்
By DIN | Published On : 26th July 2021 01:42 PM | Last Updated : 26th July 2021 01:42 PM | அ+அ அ- |

குடந்தைப் பகுதி சித்தர்கள் - இரா.கண்ணன்;பக்.380; ரூ.250; இரா.கண்ணன், 7/1445, வள்ளலார் தெரு, குருமூர்த்தி நகர், பிள்ளையாம்பேட்டை, அம்மாசத்திரம் அஞ்சல், தஞ்சாவூர் மாவட்டம் ; )0435 - 2413539.
தென்னாட்டில் திருக்கோயில்கள் அதிகமிருப்பது போலவே சித்தர்கள் சமாதிநிலை அடைந்த அதிஷ்டானங்களும் அதிகம் உள்ளன. "கோயில் நகரம்' என அறியப்படும் கும்பகோணம் நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ள முப்பத்தெட்டு சித்தர்களின் அதிஷ்டானங்கள் பற்றியும் அந்த சித்தர்கள் நிகழ்த்திய அற்புதச் செயல்கள் குறித்தும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
நாடறிந்த சித்தர்களான திருமூலர், பட்டினத்தார், பாடகச்சேரி சுவாமிகள், போதேந்திரர், ஸ்ரீதர ஐயாவாள் போன்றவர்களோடு நாம் அதிகம் அறிந்திராத மூட்டை சுவாமிகள், கத்தரிக்காய் சித்தர், புடலங்காய் சித்தர், மேட்டூர் சித்தர், ஆட்டுக்குட்டி சித்தர் போன்ற பலரைப் பற்றியும் ஏராளமான புதிய செய்திகள் இந்நூலில் உள்ளன.
பெரும்பாலான சித்தர்கள் கல்லைப் பொன்னாக்குவது, தீரா நோயைக் குணப்படுத்துவது, பாம்பு தீண்டி இறந்தவனை உயிர்ப்பிப்பது என்று இருந்து கொண்டிருந்தாலும் சில சித்தர்களின் செயல்கள் வியப்பளிக்கின்றன.
மதங்கொண்ட யானையை மூலிகைச் செடி கொண்டு அடக்கிய ஆட்டுக்குட்டி சித்தர், கட்டிய கணவனையே மகனாகப் பாவித்து துறவு மேற்கொண்ட பத்மாவதி தாயார் போன்றோரது செயல்களும் வியப்பை ஏற்படுத்துகின்றன.
கும்பகோணத்தில் இருந்த மெளனசுவாமிகளை அன்னிபெசண்ட் அம்மையாரும் சுவாமி விவேகானந்தரும் சந்தித்தது, ஆடுதுறை சைதன்ய சிவம் மதுரை உக்கிரபாண்டி தேவரின் குழந்தைக்கு வடலூர் வள்ளலார் நினைவாக ராமலிங்கம்என பெயர் சூட்டியது (அவரே பின்னர் முத்துராமலிங்கத் தேவர் ஆனார்) போன்றவை சுவையான செய்திகள்.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்கள் குறித்தும் இப்படிப்பட்ட தொகுப்பு நூல்கள் வர வேண்டும்.