சங்க இலக்கியத்தில் மக்கள் - விலங்கு பறவைப் பெயர்கள்

சங்க இலக்கியத்தில் மக்கள் - விலங்கு பறவைப் பெயர்கள்
Updated on
1 min read

சங்க இலக்கியத்தில் மக்கள் - விலங்கு பறவைப் பெயர்கள் - துரை ரவிக்குமார்;  பக்.  390;  ரூ. 400, காவ்யா, சென்னை - 24;  044-23726882.

சங்க இலக்கியங்களில் தமிழர் வாழ்வை - வரலாற்றைக் கூறும் எண்ணற்ற  தகவல்களும் தரவுகளும் நூலில் விரவிக் கிடக்கின்றன. மக்கள் - விலங்கு - பறவைப் பெயர்களை மட்டும் தேடிக் கண்டுபிடித்து,  ஏற்கெனவே வெளியான அறிஞர்களின் நூல்களையும் துணைக் கொண்டு ஆய்ந்தறிந்து நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். 

அறியாத சொற்களை விளக்கத்துடன் அறிமுகப்படுத்துகிறார். பரதவரின் மற்றொரு பெயர் நுளையர், கிணை என்பது ஒருவிதப் பறை, இதைக் கொட்டுவோர் கிணைஞர்கள் எனப்பட்டனர், நச்சுதல் - விரும்புதல்,  உழுவை - புலி, வெளில் - அணில், பசுவின் பெயர்கள் என ஆ, ஆன், கறவை, சேதா, மூதா, பெற்றம், நாகு, காளைக்குப் பகடு, விடை, எருது, ஏறு... குரங்கில்தான் எத்தனை வகை, எத்தனை பெயர்கள்!

பெண்டு என்ற சொல் மனைவி, அம்மா, தலைவி, பரத்தை, மகள், கொற்றவை, செவிலி, வயதானவள் போன்றோரைப் பொதுப்படக் குறித்திருக்கிறது. விலங்குதல் - தடுத்தல், குறுக்கிடுதல். விலங்குமலை - குறுக்கிடும் மலை. விலங்கு - குறுக்காக வளரும் உயிரி. விலங்கு அதன் உடலமைப்பைக் கொண்டே இந்தப் பெயர் பெற்றுள்ளது என்கிறார் ஆசிரியர்.  

இந்தியாவில் 3,500 பறவையினங்கள் இருப்பதாக சலீம் அலி குறிப்பிட்டபோதிலும், சங்க இலக்கியங்களில் 60 பறவைகள் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளதாகவும்  நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நூலில் "லி' என்ற எழுத்து இல்லாமல் இருப்பதைச் சரி செய்திருக்கலாம்.  நூலைப் படிப்பவர்கள் பழந்தமிழ்ச் சொற்களை மீளப் புழக்கத்தில் கொண்டுவர முடியுமானால் அதுவே தமிழுக்குச் செய்யும் சிறப்பு. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com