உத்தவ கீதை

உத்தவ கீதை
Updated on
1 min read

உத்தவ கீதை - தொகுப்புரை: கே.எஸ்.சந்திரசேகரன், வி.மோகன்; பக்.192;   ரூ.130;  சி.பி.ஆர்.பப்ளிகேஷன்ஸ், சென்னை-18; 044 - 4852 9990.
வியாசர் தனது மனம் அமைதியடைய எழுதிய புராணம் ஸ்ரீமத் பாகவதம். இதில் பதினோராம் ஸ்கந்தத்தில் தனது பக்தரும் சிற்றப்பாவின் மகனுமாகிய உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணன் உபதேசித்ததுதான் உத்தவ கீதை. அவதார நோக்கம்முடிந்து வைகுண்டம் திரும்புவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் தயாரான நிலையில்  அவரை விட்டுப் பிரிய முடியாது கலங்கிய உத்தவருக்கு,   பகவத்கீதையில் அர்ச்சுனனுக்கு தான் எடுத்துரைத்த கர்மயோகம், பக்தியோகம் உள்ளிட்ட அனைத்து யோகங்களின் தத்துவங்களையும் முதிர்ந்த அனுபவமிக்க அறிவுரைகளாக  ஸ்ரீ கிருஷ்ணர் அப்போது அருளினார்.  ஸ்ரீமத் பாகவதத்தில் பதினொன்றாவது ஸ்கந்தத்தில் ஏழாவது அத்தியாயத்திலிருந்து இருபத்து ஒன்பது அத்தியாயங்கள் வரையிலான  விஷயங்களாக இது அமைந்துள்ளது. 
 இந்த கீதையில் அவதூத தத்தாத்ரேயர் பூமி, வாயு, ஆகாயம், சந்திரன், சூரியன், புறா இவற்றிடமிருந்து கற்ற ஞானம் விளக்கப்படுகிறது.  அதுபோல மலைப்பாம்பு, கடல், விட்டில் பூச்சி, தேனி, தேன் எடுப்பவர், மான், மீன், பிங்களை என்னும் விலைமகள் இவர்களிடமிருந்து பெற வேண்டிய ஞானம் பற்றியும் எடுத்துரைக்கப்படுகிறது. 
ஆத்மனின் உண்மை நிலை, ஸாதுக்களின் சங்கமம், பக்தி, தியானம், யோக சித்திகள், பகவானின் பெருமைகள், தர்மங்கள், வாழ்க்கைமுறைகள், பிரபஞ்ச தத்துவங்கள் , முக்குணங்களின் அம்சங்கள், கூடா நட்பு, உபாஸனர் மார்க்கங்கள், ஞான யோகம், ஆத்மானந்தத்தை அடைய எளிய வழி போன்ற விஷயங்கள்  பல்வேறு தலைப்புகளில் பொருத்தமான கதைகளுடன் இடம் பெற்றுள்ளன. 
தொகுப்பாசிரியர்கள் விரிவாகவும் விளக்கமாகவும் எளிய உரைநடையில் இந்நூலைத் தந்துள்ளனர். 
  மானிட வாழ்க்கையில் அமைதியும் ஆத்ம லாபமும் பெற விரும்புவோருக்கு இந்த உத்தவ கீதை ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்கும் என்பது மிகையன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com