ஜான் பென்னிகுவிக் (முல்லைப் பெரியாறும் முடிவுறா சர்ச்சையும்); ஜெகாதா; பக். 240; ரூ.200; செல்லப்பா பதிப்பகம், மதுரை-1; 94860 09826.
தென் தமிழகத்தின் முக்கிய நீராதாரமான முல்லைப் பெரியாறு அணையை ஆங்கிலேய பொறியாளர் பென்னி குவிக் கட்டிய வரலாறே இந்நூல். ராணுவத்தில் லெப்டினென்ட், பொதுப்பணித் துறையில் பொறியாளராகப் பணியாற்றிய அவர், இங்கிலாந்தில் உள்ள உள்ள தனது சொத்துகளை விற்று அணையைக் கட்டியது ஏன், எதிர்கொண்ட சவால்கள் உள்ளிட்டவை நினைவலைகளாகத் தடம் பதிக்கின்றன.
முல்லைப் பெரியாறு என்றதுமே பென்னிகுவிக் நினைவுக்கு வந்தாலும், அணை கட்டப்படுவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் ராமநாதபுரம் சீமை மன்னர் ரியல் முத்துராமலிங்க சேதுபதியும், அவரது அமைச்சர் முத்திருளப்ப பிள்ளையும்தான் என்பது பலரும் அறியாத தகவல். நூற்றாண்டைக் கடந்தும் பென்னி குவிக்கை மறக்காத தென் மாவட்ட தமிழர்கள் இன்றும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது, தேனியில் சுற்றுலாத் தலமாகவே மாறிவிட்ட பென்னி குவிக் மணிமண்டபம் என அவரது பெருமையை பெருமிதம் தழுவச் சொல்லும் நூல், லண்டனில் சிலை அமைக்கப்படும் என்கிற தமிழக அரசின் முத்தாய்ப்பான அறிவிப்புடன் நிறைவு பெறுகிறது.
இதுதவிர, அணையின் நீர்மட்டத்தை உயர்த்துமாறு தமிழகம் வலியுறுத்தும் கோரிக்கைகள், நீர்மட்டத்தைக் குறைப்பதற்கு கேரள அரசு செய்யும் முயற்சிகள், சட்டப் போராட்டங்கள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. நதிநீர் பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகள் குறித்தும் தெரிந்துகொள்ள விரும்புவோர் தவறாமல் வாசிக்க வேண்டிய ஆவணமாகத் திகழ்கிறது இந்நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.