

வ.உ. சிதம்பரனாரின் தமிழ்ப் பணிகள் - மா.ரா. அரசு; பக். 312; ரூ. 300; பேரா. மா.ரா. அரசு நினைவு அறக்கட்டளை - முல்லை பதிப்பகம், சென்னை - 40; 9840358301.
விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் மற்றொரு முகமான அவருடைய தமிழ்ப் பணிகளை விரிவாக வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது இந்த நூல்.
வ.உ.சி. காலத் தமிழ்ச் சூழல், உரைநடைப் பணிகள், பதிப்புப் பணிகள், படைப்பிலக்கியங்கள், இதழியல் தொடர்புகள் எனப் பகுத்துக் கொண்டு அவர் எழுத்துகளை ஆராய்கிறது நூல்.
வ.உ.சி.யை நாட்டுப்பற்றாளராக அறிந்த பலருக்கும்கூட வ.உ.சி.யின் இலக்கிய ஈடுபாடும் பயிற்சியும் உழைப்பும் மொழியுணர்வும் தெரிந்திருப்பதில்லை. அந்த வகையில் இந்த நூலில்
வ.உ.சி.யின் முழுப் பரிமாணத்தையும் வாசகர் முன் நிறுத்துகிறார் ஆசிரியர்.
வடசொற்களை அடியோடு களைவதற்கான வழிமுறைகளை விளக்கும் வ.உ.சி., அவருடைய மொழிபெயர்ப்பு நூல்களில் தந்துள்ள புதுச் சொல்லாக்கங்கள் பற்றியும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பாக, பாரதியாருக்கும் வ.உ.சி.க்கும் இடையே நடைபெற்ற விவாதங்களும் இதுபற்றித் தேடி முழுமையாகப் படிக்கத் தூண்டுவன.
கட்டுரைகள் பற்றிக் குறிப்பிடும்போது, வ.உ.சி. எழுதி, கடைசியாக வெளிவந்த கட்டுரையான "உலகமும் கடவுளும்' தினமணியில் 17.1.1936}இல் பிரசுரமான தகவல் உவகை கொள்ள வைப்பது. தனித் தமிழ் உருவாக்கத்தில் சாம, பேத, தான, தண்டத்தை பொறுத்தல், பிரித்தல், ஈதல், ஒறுத்தல் எனப் பெயர்த்ததில் வ.உ.சி.யின் ஆழம் வெளிப்படுகிறது. அவரது இதழியல் தொடர்புகள் இயலில் கிடைக்கின்றன. நூலில் இணைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளும் சேர்க்கப்பட்டிருப்பது சிறப்பு.
கழுகுப் பார்வையில் வ.உ.சி. பற்றிய முழுமையான சித்திரத்தைத் தரும் இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நூலின் ஆசிரியர் (அண்மையில் மறைந்த) மா.ரா. அரசுவின் பேருழைப்பு காணக் கிடைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.