நடுவே கடல் (உலகின் சாளரங்களைத் திறக்கும் கதைகள்) - அ.முத்துலிங்கம் (தொகுப்பு- அருண்மொழி நங்கை); பக். 160; ரூ.150; விஜயா பதிப்பகம், கோவை; 0422- 2382614.
பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் மனைவி அருண்மொழி நங்கை தொகுத்திருக்கும் நூல் இது.
கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கு விஜயா வாசகர் வட்டத்தின் சார்பில் 2022-ஆம் ஆண்டில் கி.ரா.விருது வழங்கப்பட்டதையடுத்து, அவர் எழுதிய கதைகளில் சிறந்த 13 கதைகள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஈழத் தமிழர் குறித்தே எண்ணற்ற நூல்களை எழுதியுள்ள அ.முத்துலிங்கத்தின் வெவ்வேறு நாடுகளின் பண்பாடு, சூழல் குறித்த கதைகள் இடம்பெற்றுள்ளன.
'குதம்பேவின் தந்தம்' எனும் கதையில் யானையைப் பார்த்து தன்னை செதுக்கும் மனிதர்கள், 'கறுப்பு அணில்' எனும் கதையில் அணிலைப் பார்த்து தனது வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்ளும் மனிதன்.... என்று கதைகள் ஒவ்வொன்றும் ஒரு விஷயத்தை தெளிவாக்குகிறது.
கதைகளை நகைச்சுவைக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் எழுதுவோர் மத்தியில், முத்துலிங்கத்தின் கதைகள் சற்றே மாறுபட்டுள்ளன.
பிரச்னைகளின் மத்தியில் மாற்றி வாழவும், எதிர்நீச்சல் கொண்டு சிறகடிக்க தூண்டும் வகையிலும் இந்தக் கதைகளின் முடிவுகள் இருக்கின்றன. கதைகள் வாசிப்போருக்கு இந்த நூல் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.