ஆழினி
By DIN | Published On : 13th June 2022 01:02 PM | Last Updated : 13th June 2022 01:02 PM | அ+அ அ- |

ஆழினி - சொ.நே.அறிவுமதி, பக்.388, ரூ.400, எழிலினி பதிப்பகம், சென்னை-8.
குழம்பு வைக்க வாங்கி வந்த மீன்களில் ஒன்று குட்டி கடற்கன்னியாகி நின்று, தன் காதலனுடன் சேர்த்து வைக்குமாறு சங்கத் தமிழில் முறையிட்டால்...? என்று அதிரவைக்கும் அழகிய கற்பனையை கருவாகக் கொண்டு தொடங்குகிறது கதை.
ஆழினி எனும் அந்த கடற்கன்னியுடன், வலையில் சிக்கிப் பிரிந்த ஆழியன் எனும் காதலனை நிலத்தில் கண்டுபிடித்து சேர்த்து வைப்பதற்காக புவனன், பரதன், புவனனின் காதலி நந்தினி உள்ளிட்டோர் முன்னெடுக்கும் முயற்சிகள், சாகசங்கள், மாயாஜாலங்கள் என வியப்பும் நகைப்புமாக விறுவிறுப்பாக நகர்கிறது கதை.
இழையோடும் நகைச்சுவை முழுவதையும் சங்கத் தமிழ் மீது கட்டமைத்து இருப்பது நாவலாசிரியையின் மொழிப் புலமை, ஆளுமைத் திறத்தை வெளிப்படுத்துகிறது.
ஆழினி பேசும் சங்கத் தமிழை, பிற பாத்திரங்களைப் போல, எதிர்கொள்ள முடியாமல் வாசகர்களும் திகைக்கக் கூடும்.
அதற்காக ஆழினியின் சங்ககாலப் பேச்சுத் தமிழ், இன்றைய பேச்சுத் தமிழ் வழக்குக்கொப்ப புரியும் வகையில் மாற்றப்பட்டு அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது சிறப்பு. தான் பேசும் தமிழ் புரியாமல் விழிப்பதைக் கண்டு "தாம் தமிழ் அறியலரா நண்ப!' என ஆழினி கேட்பது புவனனிடம் மட்டுமல்ல; நம்மிடமும்தான்.
காலமாற்றத்தில் எவ்வளவு தொன்மை வாய்ந்த சொற்கள் வழக்கொழிந்து போயிருக்கின்றன; சொற்பொருள் திரிபு பெற்றிருக்கின்றன என்பதை அறிய வரும்போது மனம் கனக்கிறது. சங்ககாலச் சொற்களை மீட்டெடுத்து தமிழுக்குச் சிறப்புச் செய்த நாவலாசிரியையின் முயற்சி போற்றுதலுக்குரியது. ஆராதிக்கப்பட வேண்டிய அரிய நூல்.