செவ்விலக்கியச் சொல்லாய்வுகள்

செவ்விலக்கியச் சொல்லாய்வுகள்

செவ்விலக்கியச் சொல்லாய்வுகள் - வாணி அறிவாளன்; பக்.144; ரூ.150; அருண் அகில் பதிப்பகம், சென்னை-29; 044 -2374 4568.
பழந்தமிழ் இலக்கியங்களில்  வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில சொற்கள் குறித்த விரிவான ஆய்வு நூல் இது.  
தொல்காப்பிய முதல் அதிகாரத்தின் முதல் இயலான நூன்மரபு  என்பது சரியா? நூல் மரபு என்று அதைப் புரிந்து கொண்டால் என்ன பொருள் தரும்?  என்பன போன்ற வினாக்களுக்கு ஆய்வு நோக்கில் இந்நூல் விடையளிக்கிறது, 'தொல்காப்பிய முதல் இயல் நூன்மரபு அன்று. நூல் மரபே' என்ற முதல் கட்டுரை.
கேண்மியா, சென்மியா என்று பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சொற்களில் உள்ள 'மியா' பற்றி ஆராயும் கட்டுரை, திணை என்பது மக்கள் வாழ்ந்த நிலம் என்பதைத் தாண்டி, மக்களுக்கே உரிய  அகவாழ்வையும், புறவாழ்வையும் விளக்கும் இயல்களுக்கு முறையே அகத்திணையியல், புறத்திணையியல் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று கூறும் கட்டுரையும், அதிகாரம் என்ற சொல்லானது, இலக்கண நூல்களிலும், அறநூல்களிலும் நூற்பகுப்பிற்கான பெயராகக் குறிப்பிடப்பட்டது; ஆனால் அது ஊழ் என்ற பொருள் உள்பட 22 பொருள்களை உடையது என்று ஆராயும் கட்டுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.  நீலக்கல்லை குறிக்க மத்தக மணி என்ற சொல்லை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தினார்  என்கிறார் நூலாசிரியர். இதேபோன்று ஈரங்கொல்லி, சிலம்பு ஆகிய சொற்களுக்கான ஆய்வுகளும் இந்நூலில் உள்ளன. எயினர் என்ற சொல் உணர்த்தும் எயினர் இனக்குழு சமூகத்தின் வாழ்க்கை குறித்த ஆய்வு,  குறிஞ்சி நிலம், முல்லை நிலம்   ஆகியவற்றுக்கான ஒற்றுமை, வேற்றுமை குறித்த விளக்கம் என  அரிய ஆய்வுகள் அடங்கிய சிறந்த நூல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com