வள்ளுவர் ஈன்ற முப்பால் தமிழகத்தில் பன்முக நோக்கும் போக்கும்
By DIN | Published On : 02nd May 2022 11:09 AM | Last Updated : 02nd May 2022 11:09 AM | அ+அ அ- |

வள்ளுவர் ஈன்ற முப்பால் தமிழகத்தில் பன்முக நோக்கும் போக்கும்- பேராசிரியர் தி. முருகரத்தனம்; பக். 150; ரூ. 150; தமிழ்ச் சோலை, மதுரை - 625 021.
தமிழில் அறம், பொருள், இன்பம் என்று கூறப்படும் முப்பாலுக்கும், வட மொழியில் தர்மார்த்தகாம மோட்சம் என்று கூறப்படும் அறம், பொருள், இன்பம், வீடு இவற்றுக்கும் இடையிலான ஒற்றுமையையும், வேற்றுமையையும் ஆராயும் 'தென்தமிழ் முப்பால் மரபும் வடமொழி நாற்பால் மரபும்' கட்டுரையில் தொடங்கி, தமிழ் இலக்கண- இலக்கியங்களில் உறுதிப் பொருள்கள், வள்ளுவரின் எழு பிறப்பு எழுப்பும் குழப்பம், இம்மையும் மறுமையும் - இன்மையும் உண்மையும் உள்ளிட்ட பதினொரு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
திருக்குறளின் உரைகளிலும் உள்ள முரண்களை, குறிப்பாக இளம்பூரணர்- நச்சினார்க்கினியர் ஆகியோரின் உரைகளுக்கிடையே அமைந்துள்ள வேறுபாடுகளை ஆசிரியர் ஒரு கட்டுரையில் சுட்டுகிறார்.
'இளம்பூரணர், அறம் பொருள் இன்பம் வீடு' எனும் நாற்கோட்பாட்டை தமிழர் மரபான அகத்திணை, புறத்திணைகளில் பொருத்துகிறார். ஆனால், நச்சினார்க்கினியர் நாற்பால் கருத்தியலில் தமிழ்த்திணை கருத்தினைத் திணிக்கிறார்' என்று கூறுகிறார் நூலாசிரியர்.
திருக்குறளின் முதல் 10 பத்துக்களும் (அதிகாரங்கள்) பாயிரம் என்று வழங்கப்படுகின்றன. இப்பாயிரம் வரைந்தவர் வள்ளுவர் அல்லர் என்ற கருத்தை வ.உ.சி. தொடங்கி பலரும் முன்வைக்கின்றனர். அது குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளார் ஆசிரியர்.
திருக்குறள் குறித்த ஆய்வுத் தொகுப்பாக இருந்தாலும், தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் முதலிய நூல்களின் கருத்துகளை மேற்கோள்களாகப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.