தோழர் ப. ஜீவானந்தம் - வாழ்க்கை வரலாறு - ப்ரியாபாலு; பக். 144; ரூ.130; ஜீவா பதிப்பகம், சென்னை -17; ✆ 99520 79787.
ஜீவானந்தம் என்ற ஜீவாவின் பிறப்பு தொடங்கி மறைவு வரை அவருடைய அரசியல், சமூக சீர்திருத்தங்கள், அரசியல் போராட்டங்கள், ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள், சிறைத் தண்டனைகள் என அத்தனை அம்சங்களையும் சிறப்பாக நூலாசிரியர் தொகுத்துள்ளார்.
குமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பிறந்த ஜீவானந்தத்தின் இயற்பெயர் சொரிமுத்து. அவர், சிறுவனாக இருந்தபோது தாழ்த்தப்பட்ட நண்பன் மாணிக்கத்துடன் ஆலயப் பிரவேசம் செய்து ஊரார் எதிர்ப்பைப் பெற்று, ஊரைவிட்டு வெளியேறி பொதுவாழ்க்கையில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியின் கொள்கைகளில் தன்னை ஈடுபடுத்தி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். சிராவயலில் ஆசிரமம் நடத்தி காந்திஜியோடு தொடர்பில் இருந்தார்.
ஜாதிரீதியாக மனிதர்களை வகைப்படுத்துவதில், காந்தியின் கருத்தை ஜீவா ஏற்க மறுக்கவே பெரியார் ஈ.வெ.ரா.வின் சமூக நீதி கொள்கையையும் ஏற்று பயணித்தார் ஜீவானந்தம்.
1932-ஜனவரியில் காங்கிரஸ்காரராக சிறை சென்ற ஜீவா நவம்பரில் ஒரு கம்யூனிஸ்ட் வாதியாக திரும்பினார். பின்னர், பொதுவுடமை இயக்கத்தில் தன்னை முதன்மைப்படுத்திக்கொண்டது, தாம்பரத்தில் குடிசையில் தங்கி இருந்தது என ஜீவாவின் வாழ்வியல் நகர்வுகள் அனைத்தும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1963-இல் அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் இறந்தது, தன் இறப்புக்கு முன் தான் இருக்குமிடத்தை மனைவி பத்மாவதிக்கும், பெருந்தலைவர் காமராஜருக்கும் சொல்லிவிடும்படி கூறிவிட்டு மீண்டும் கண்மூடி மறைந்தது போன்ற தகவல்கள் உயிர்ப்பை தரும் பதிவாக உள்ளன. பொதுவாழ்வில் தூய்மை, எளிமையைக் கடைப்பிடித்த ஜீவானந்தத்தின் வாழ்வியல் நடைமுறைகளை இன்றைய அரசியல்வாதிகள் வாசிக்க வேண்டியது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.