இந்திய இலக்கிய சிற்பிகள் - கோவை ஞானி; பக்.112; ரூ.50; சாகித்திய அகாதெமி, சென்னை-18; ✆ 044- 2431 1741.
கி.பழனிசாமி எனும் இயற்பெயர் கொண்டவர் 'கோவை ஞானி'. இப்பெயர் வந்தது எப்படி? அவரே அதற்கு விளக்கம் தருகிறார்:
'நண்பர் துரைசாமியும் நானும் தினசரி ஒரு கடிதம் எழுதுவது என்பது முடிவு. நான் தொடர்ந்து எழுதினேன். நண்பர் நிறுத்திவிட்டார். ஆனால் அவரின் புனைப்பெயரான ஞானியை நீயே வைத்துக்கொள்' என்று கூறிவிட்டார் . அன்றிலிருந்து 'கோவை ஞானி' ஆனேன்.
வானம்பாடி கவிதை நூல் குறித்து ஆய்வை மேற்கொண்ட ஜே.மஞ்சுளாதேவி அவரின் நண்பராகி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் 'கோவை ஞானி' எனும் நூலைப் படைத்துள்ளார்.
கோவை சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் 28 ஆண்டுகள் தமிழாசிரியர்; பார்வை குறைபாடு காரணமாக, பணியில் இருந்து ஓய்வு பெற்றதையும், வானம்பாடி கவிதை நூலில் இவரின் பங்களிப்பையும், 'களம்' என்ற பெயரில் இலக்கியக் கூட்டங்களை நடத்தி சிறந்த நூல்களை அறிமுகம் செய்ததையும் 'தமிழ் நேயம்' இதழில் 'அகமும் புறம்' தலைப்பில் தொடர்ந்து எழுதியதையும் நூலாசிரியர் பதிவிட்டுள்ளார்.
பரிசுகள் பெறுவதை எதிர்த்து எழுதிவந்த அவருக்கு அமெரிக்காவின் 'விளக்கு' நண்பர்கள் புதுமைப்பித்தன் நினைவுப் பரிசை இவருக்கு அறிவித்தனர். இந்தப் பரிசைப் பெறுவதா? வேண்டாமா? என்ற போராட்டத்துக்கு இடையில் பரிசை பெற்று தமிழின் ஆக்கத்துக்குப் பயன்படுத்துவது என முடிவு செய்தார். அதன்படியே நடந்துகொண்டார் எனவும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
'தமிழிலக்கியத்தினுள் மார்க்சியம் சார்ந்த திறனாய்வை கொண்டுவந்த பெருமை இவருக்குண்டு என்று கூறும் நூலாசிரியர், இவரது இலக்கிய ஆளுமை- மார்க்சிய மெய்யியல் மட்டுமின்றி நெகிழ்ச்சியையும்- அற உணர்வு சார்ந்த அவரின் முழு வாழ்வியலையும் இந்த நூலில் கொண்டுவர முயற்சித்தேன்' என்று கூறும் நூலாசிரியர், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இலக்கிய ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.